Powered By Blogger

வெள்ளி, 7 டிசம்பர், 2012


‘தொழில்நுட்ப வளர்ச்சியில் குஜராத் எப்போதும் முன்னோடியாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டும் நாள் இது’ என்று சாதாரணமாகத் துவங்கி, சட்டென்று காங்கிரசையும், தன்னை விமர்சிப்பவர்களைக் காரமாகவும் கிண்டலடித்தும் தன் தேர்தல் பிரசாரத்தில் முழங்குகிறார் நரேந்திர மோடி. மேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டும் பேசுகிறார். நடு நடுவே தண்ணீர் குடித்துக் கொள்கிறார்.

இவை அனைத்தையும் நான்கு வெவ்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டிருப்பவர்கள் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள் என்றால், டி.வி.யில் பார்ப்பதைப்போல அல்ல. நிஜமாக நேரில் பார்ப்பதைப்போல 3டியில் பார்க்கிறார்கள். எப்படி?

மோடி பயன்படுத்திக் கொண்டது நவீன 3டி ஹோலோகிராபிக் தொழில்நுட்பம். இங்கிலாந்தைச் சேர்ந்த மியூசன் என்ற நிறுவனம் 10 மில்லியன் டாலர் செலவில் காசுமணி எண்டர்பிரைசஸ் என்ற ஹைதராபாத் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை மோடிக்குத் தந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் பிரிட்டீஷ் நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்தியாவில் பயன்படுத்த லைசென்ஸ் பெற்றோம். செயல்படுத்த வாய்ப்புத் தேடியபோது மோடியின் அலுவலகத்திலிருந்து பேசினார்கள். புதிய தொழில்நட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்தார் மோடி" என்கிறார், இதன் இயக்குநர் மணிசங்கர். மோடியின் இந்தத் தேர்தல் பிரசாரத்தை ஒளிப்பதிவு செய்தவர், தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள யு.கே. செந்தில்குமார்.

ஹோலோகிராப் தொழில்நட்பம் இதற்கு முன் இணையதளத்தில் உள்ள பைபர் சேனல்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. தற்போது மோடியின் பிரசாரம் செயற்கைக்கோள் உதவியுடன் சாத்தியமாகி உள்ளது. காந்தி நகரில் உள்ள ஸ்டுடியோவிலிருந்து  3டி தொழில்நுட்பத்தில் மோடி பேசியதைப் பார்க்க,  ஸ்பெஷல் கண்ணாடியெல்லாம் தேவை இல்லை.

தொழில்நுட்பத்தை மோடி தனது பேச்சுக்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது புதிதல்ல. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தொகுத்து வழங்கிய நேரலை நிகழ்ச்சியில் கூகுள் பிளஸ் ஹேங்க் அவுட் உதவியுடன் ஒரு டஜன் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தன் ரசிகர்களுடன் மோடி பேசினார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் செய்ய விரும்பும் மோடிக்கு ஹோலோகிராப் 3டி பெரிய வரம். ஓர் அரசியல்வாதி இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது உலகில் இதுவே முதன்முறை.

சரி, எதிர்க்கட்சிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும் 5 கோடி செலவு பிடிக்கும் என்று கேள்விப்பட்டோம். இது வீண் செலவு. 500 கோடிக்கு மேல் செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்கும் குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, இந்த நிதி எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்த தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தப் போவதாகக் கூறுகிறார்.

இதற்குப் பதிலடியாக காங்கிரசும் இந்தத் தொழில்நுடபத்தைப் பயன்படுத்துமா? ராகுல் காந்திக்கும் சோனியாவிற்கும் ஆசை இருந்தாலும் 3டியில் பிரசாரம் செய்ய முடியாது. காரணம், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை மோடி மட்டுமே இதைப் பயன்படுத்தும் விதமாக காப்புரிமை (patented) செய்யப்பட்டு உள்ளது.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் 3டி ஹோலோகிராப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மோடி தேர்தல் பிரசாரம் செய்ததை இளைஞர்கள் ஆர்வத்தோடு  பார்க்கிறார்கள்.

பின்குறிப்பு: நவம்பர் 25ம் தேதி ABP News - AC Nielsen வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு,  மீண்டும் மோடி இப்போதிருப்பதைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பார் எனத் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக