Powered By Blogger

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களை அவருடன் நெருக்கமாக இருந்த இருவர் இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்

எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்வதற்கு முன்பு காங்கிரஸ்காரராக இருந்தார் என்பது பலரும் அறிந்ததே. 1933களில் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராக அல்லாமல் அக்கட்சியின் உண்மை ஊழியனாக மட்டுமே இருந்த எம்.ஜி.ஆரை அக்கட்சிக்குள் இழுத்ததற்கு காந்தியின் கொள்கைகளே முதல் காரணம். என்றாலும் சுபாஷ் சந்திரபோஸூம் அவருக்கு மிகவும் பிடித்தமான தலைவராக இருந்ததுதான். அந்த காலகட்டங்களில் காங்கிரஸில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக கதர் ஆடைகளை அணிந்து வந்தார். அந்த காலகட்டங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைக்கு எதிராக மறியல் போராட்டம் நடைபெற்று வந்தபோது எம்.ஜி.ஆர்.  தனது பங்களிப்பை நல்கியவர். திரையில் குடிப்பழக்கம் உள்ள கதாபாத்திரங்களில்கூட நடிக்க விரும்பாததற்கு காரணம், இளமைக்காலம் தொட்டே அதன் எதிர்ப்பில் தீவிரமாக இருந்ததே.

அப்போது தனது 12வது வயதில், சென்னை வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் தனது தாயார், அண்ணன் சக்ரபாணியுடன் வசித்துவந்த எம்.ஜி.ஆர்., மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் நடத்திவந்த, ‘பதிபக்தி’ நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நாடகம் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்குவதாக அமைந்தது. அப்போது ஒரு சமயம் எம்.ஜி.ஆர். குடியிருந்த இல்லத்திற்கு முன்பு கள்ளுக்கடைகளுக்கு எதிராக மறியல் நடைபெற்றது. அந்த மறியலில் தானும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணனிடம், ‘நான் நாடகக் கொட்டகை வரை சென்றுவருகிறேன்’ என்று கூறி, மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் தம்பி எம்.ஜி.ஆர். வீடு திரும்பாததால், அண்ணன் சக்ரபாணி நாடகக் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அங்கு எம்.ஜி.ஆர். இல்லாதது கண்டு திடுக்கிட்டு, பயத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், வீட்டிற்கு அருகே இருந்த சாராயக்கடை முன்பு மறியலில் ஈடுபட்டிருந்த, காந்தி குல்லாய் அணிந்திருந்த ஏராளமான  காங்கிரஸ்காரர்களை போலீசார் வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்தக் கூட்டத்தில் குல்லாய் அணியாத  எம்.ஜி.ஆரை வேனில் கண்டதுதான்.

வேனில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் எம்.ஜி.ஆரும் ஏற்றப்பட்டு, காவல்நிலையம் நோக்கிப் புறப்பட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சக்ரபாணி, நேராக அங்கிருந்து யானைக்கவுனி காவல்நிலையம் நோக்கி ஓடினார். அங்கு, அந்த வேன் செல்லவில்லை என்று அறிந்து, பூக்கடை காவல்நிலையம் நோக்கி ஓடியுள்ளார். அங்கு அவர் சென்றபோது காவலர் ஒருவர், மூன்று சிறுவர்களை வெளியே தள்ளிக்கொண்டு வந்து, ‘ஒழுங்காக வீடு போய் சேருங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆர். இருந்தது கண்டு ஆறுதல் அடைந்த சக்ரபாணி, ஒருபுறம் வருத்தமும் ஆத்திரமும் அடைந்த நிலையில் எம்.ஜி.ஆரிடம் ‘ஏம்ப்பா இதுல எல்லாம் போய் தலையிடுற... உள்ளே உன்னை அடிச்சாங்களா, மூணுபேரை மட்டும் எப்படி விட்டாங்க? ‘என்று அடுக்கடுக்காய்  கேள்வி கேட்க... எம்.ஜி.ஆரோ மிகச் சாதாரணமாக அவரிடம் ‘இங்கே ஏன் வந்தீங்க... அம்மாவிற்கு தெரிந்துவிட்டதா?’ என்று கூற ‘பின்ன... நான் எங்கப்பா போறது, நீ செய்த இந்த வேலைக்கு?’ என்று கடிந்துகொண்டு, ‘உள்ளே என்னதான் நடந்தது?’  என்று கேட்டார்.

‘நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துவந்தாச்சு... அதில் முக்கியமானவர்களும் இருக்க, அதில் என்னைப் போன்ற சிறுவர்களைக் கண்டு ஏண்டா! நீங்களெல்லாம் சுதந்திரம் வாங்கித் தருபவர்களா? போங்கடா என்று தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு அனுப்பிவிட்டார்கள்’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். வீட்டிற்குச் சென்றபின்பு எம்.ஜி.ஆர். தாயாருக்கு விவரம் தெரியாததால், சக்ரபாணியும் விஷயத்தைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டார்.

நாடகங்களில் சிறுவயதுக் காலங்களில் நடித்துக்கொண்டிருந்த  எம்.ஜி.ஆருக்கு எப்படியும் காந்தியடிகளைச் சந்தித்து, அவரது ஆசியைப் பெற்றுவிடவேண்டும் என்பது ஆழ்மனக் கனவாக இருந்து வந்தது. அதற்கான பொன்னான நேரமும் கனிந்து வந்தது.  

அப்போது எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் நடித்துக்கொண்டிருந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையை விட்டு வெளியூர்களுக்கு நாடகங்கள் நடத்த புறப்பட்டது. அக்கம்பெனி காரைக்குடியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த சமயம், தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த காந்தியடிகள், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார்.  

விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர்., நாடகம் முடிந்த கையோடு அண்ணன் சக்ரபாணி மற்றும் கே.பி.கேசவன் உள்பட மேலும் இரு நாடக நடிகர்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தச் சமயம் பாகிஸ்தானில் குவெட்டா பூகம்பச் செய்தியின் காரணமாக பூகம்பத்தில் அவதிப்படுபவர்களுக்கு நிதியுவி வழங்குமாறு காந்தியடிகள்  கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பணம், பொருட்களை காந்தியடிகளிடம் கொடுத்தனர். பெண்கள், தங்களிடம் இருந்த வளையல்களையும், கம்மல்களையும் காந்தியிடம் கொடுத்தனர். சக்ரபாணி உட்பட உடன்  வந்திருந்த யாரிடமும் அப்போது எதுவும் இருக்கவில்லை. உடனே எம்.ஜி.ஆர்.,அன்று நாடகத்திற்காக, தான் பெற்று வைத்திருந்த  இரண்டு அணாவை காந்தியடிகளிடம் கொடுத்து, மகாத்மாவின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்று, தனது நீண்ட நாள் ஆவலை நிறை வேற்றிக்கொண்டார்.

இவ்வாறு தனது சிறுவயது முதலே நாட்டுப் பற்றையும் தேசத்தின் நலனையும் தன்னுள் பதித்துக்கொண்டு, நாட்டிற்காகப் பாடுபடும் மகாத்மா போன்ற தலைவர்களின் கரங்களுக்கு தன்னால் ஆன வலு சேர்க்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - சீனா யுத்தத்தின்போது யுத்தநிதி வழங்குமாறு பிரதமர் நேரு, வானொலியில் கேட்டுக்கொண்டவுடன் தனது பங்காக 75,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த மறுநாளே,  தனது முதல் தவணைப் பணமாக 25,000 ரூபாயை அப்போதைய முதல்வர் காமராஜரிடம் வழங்கினார். அதைப்  பெற்றுக்கொண்ட நேருவும் எம்.ஜி.ஆருக்கு கடிதம் அனுப்பி, அவரைப் பாராட்டினார்.

மீண்டும் 1965ல் இந்தியா-பாகிஸ்தான் போர். இதிலும் அந்நியத் தாக்குதலை முறியடிக்க தன் பங்காக பெங்களூர் லால்பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற  யுத்த நிதி வழங்கும் பிரமாண்ட  விழாவில் 10,000 ரூபாய் கொடுத்து, தனது நாட்டுப்பற்றை நிரூபித்தார். இவ்வாறு  தனது இளம்பருவத்திலிருந்தே  தேச நலனில் அக்கறைகொண்டு, தனது இறுதி மூச்சுவரை இம்மியளவும் பின்வாங்காது காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்களின்  ஆசியையும் பாராட்டுதல்களையும் பெற்ற எம்.ஜி.ஆருக்கு மிகப் பொருத்தமாக இந்திய அரசு, பாரத ரத்னா பட்டமளித்ததும் நினைவுகூரத்தக்கது.
எழுத்து: ஆர். கோவிந்தராஜ்


‘‘ஆகாதவங்களாயிருந்தாலும் நியூட்ரல்லே வெச்சுக்கணும்!’’

ஆர். சீனிவாசமூர்த்தி
(தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர். எழுத்தாளர். தற்போது வயது 82)

டைக்காலப்  பிரதமர்னு ஒரு பதவி அரசியல்  சட்டத்திலே இருக்கா?  அப்படி ஒருவர் இருந்து, அவர் கையெழுத்து போட்டா செல்லாதுன்னு எங்காவது இருக்கா?!’ என்று என்னைப் பார்த்து முதல்வர் எம்.ஜி.ஆர். கேட்டார்.

நான், ‘அண்ணா’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். பிரதமர் பதவியில் சரண்சிங் இருந்தார். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னை வர இருந்தார். அவருடைய பிரதமர் பதவி சில மாதங்கள்தான்   நீடிக்கும் என்ற நிலை. அவர் இடைக்காலப்  பிரதமர் என்றே கருதப்பட்டார். அழைக்கப்பட்டார்.

பிரதமர் சரண்சிங் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகள்  அனைத்தும் அரசு சார்பில் செய்யப்பட்டு வந்தன. சென்னை விமான நிலையத்தில் இருந்து எழும்பூர் பெரியார் திடல்வரை, பிரதமர் சரண்சிங் செல்லும் வழியில் 16 வரவேற்பு வளைவுகள் அமைக்கத் திட்டம். அஇஅதிமுக சார்பில் அதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்றன.

முதல்வர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, ‘அந்த  வரவேற்பு வளைவுகளில் சரண்சிங்கைப் பாராட்டியும் வாழ்த்தியும் வரவேற்றும் சில வாசகங்கள் இடம்பெற வேண்டும். அதை எழுதுங்கள்’ என்று கூறினார். நானும் அவற்றை எழுதிக் காண்பித்தேன். ‘ஆங்கிலத்திலும்  வேண்டும்’ என்றார். அதையும் எழுதிக் காண்பித்தேன். அவற்றைத் துணிப் பதாகைகளில் எழுதி, வரவேற்பு வளைவுகளில் பொருத்தவேண்டும். அதற்கான பணிகள், பந்தல் காண்டிராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இப்போதுபோல்  அப்போது Flex Board  தொழில்நுட்பம் இல்லை. கையால்தான்  எழுதவேண்டும். எழுதப்பட்ட துணி பேனர்கள் வரவேற்பு வளைவுகளில் மாட்டப்பட்டு விட்டன. ‘அதையெல்லாம் போய் பார்த்துவிட்டு வாங்க’ என்றார்.  நானும் அஇஅதிமுக கழகத் தலைமை நிலையப் பணியாளர்களும் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்.

மழை பெய்யத் தொடங்கியது. பேய் மழை. கீற்றுகளால் போடப்பட்ட வரவேற்பு வளைவுகள் நனைந்து, எழுதப்பட்ட துணிப் பதாகைகள் சாயம் போய்விட்டன. பந்தல் காண்டிராக்டர் மிகவும் பிரபலமானவர். சில லட்சம் ரூபாய்கள் பட்டியல் கொடுத்திருந்தார். மழை காரணமாக வரவேற்பு வளைவுகள்  சேதமாகிவிட்டனவே! எப்படி எம்.ஜி.ஆரிடம்  பணம் கேட்பது என்று அவருக்குப் பதைப்பு. எதுவானாலும் முதல்வரிடம் கூறிவிடுவோம் என்று தீர்மானித்து, மற்றவர்களின் வற்புறுத்தல் பேரில் பட்டியலை எடுத்துக்கொண்டு நானே சென்றேன்.

கலகலப்பாக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசினார். நான் விவரங்களைச் சொன்னேன். ‘வரவேற்பு வளைவுகளை நீங்கள்  பார்த்தீர்களா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நானே பார்த்தேன். 16 இடங்களில் வளைவுகள் போட்டுள்ளார்கள். ஆனால், மழையில் நனைந்துவிட்டது! சரண்சிங் வரும்போது மழை நீடிக்கும்போல தோன்றுகிறது!’ என்றேன்.

‘அதனால் என்ன? தலைமைக் கழகத்தில் சொல்லி, பணம் கொடுக்கச் சொல்லிவிடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். நான் சற்றுத் தயங்கியபடி, ‘ஒரு விஷயம் சொல்லணும்’ என்றேன். சகஜமான குரலில், ‘என்ன?’ என்றார். ‘இந்த சரண்சிங் ஆட்சி என்பது இடைக்கால ஏற்பாடு. இவரை வரவேற்று இத்தனை வளைவுகள் இவ்வளவு லட்சம் செலவழிக்க வேண்டுமா?’ என்றேன்.

அப்போதுதான் முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னார்: இடைக்காலப் பிரதமர்னு ஒரு பதவி அரசியல் சட்டத்திலே இருக்கா? சரண்சிங் கையெழுத்து போட்டா செல்லாது அப்படின்னு எங்காவது இருக்கா?  எத்தனை நாள் அவர் பிரதமர் என்பது அல்ல; அவர் பிரதமர். அந்தப் பதவிக்கு உள்ள சகல அதிகாரமும் அவருக்கு உண்டு. அவர் காரில் போகும்போது வரவேற்பு வளைவுகளைப் பார்த்து படிக்கப் போகிறாரா? இல்லை. ஆனால், மத்திய உளவுத் துறை இதைக் கவனிக்கும். வாசகங்களைக் குறிப்பெடுக்கும். அது பிரதமர் கவனத்துக்குப் போகக்கூடும். அதுதான் விஷயம்! இதில் சில லட்சம் செலவாகிறதேன்னு பார்க்கக்கூடாது. பிரதமர் என்றால் அதற்குரிய  மதிப்பைக் கொடுத்தே ஆகணும்’ என்றவர், சற்றுக் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ஆகாதவங்களாயிருந்தாலும் நியூட்ரல்லே வெச்சுக்கணும்’ என்றார். அவரது அபாரமான அணுகுமுறையைக் கண்டு பிரமித்து விட்டேன்.

எம்.ஜி.ஆர். போட்ட கணக்கு!

அனைத்திந்திய அண்ணா தி.மு. கழகத்துக்கு  ப.உ.சண்முகம் பொதுச் செயலாளராக ஆனது முதல், கட்சிக்கு  கட்டிடம் வாங்கவேண்டும் என்று அவர் எம்.ஜி.ஆரிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். எம்.ஜி.ஆர். பதவிக்கு வந்தபிறகு, ராமாவரம் தோட்டத்தில் அன்றாடம் அல்லது அடிக்கடி எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர் ப.உ.சண்முகம்.

இந்த நிலையில் சென்னை, அண்ணாசாலையில் ஒரு பழம் பெரும் தமிழ்ப் பத்திரிகை (சுதேசமித்ரன்)யின் சொத்துக்கள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் பரவியது. இதை ப.உ.ச. பிடித்துக்கொண்டு, எப்படியாவது அதனை வாங்கிவிட வேண்டும் என்று துடித்தார்.

எம்.ஜி.ஆர். எங்களைக் கூப்பிட்டு, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்து வருமாறு கூறினார். ஒரு பிரபலமான தேசியமய வங்கியில் உதவி பெற்று, ரஷ்யாவில் இருந்து அச்சு எந்திரம் வாங்கி இருக்கிறார்கள். பிறகு, அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இரண்டு மூன்று வருடங்கள் அந்த எந்திரம் துறைமுகத்திலேயே கிடந்த காரணத்தால் அபராதம், - இட வாடகை , வட்டி என  ஏராளமாக தொகை ஏறிவிட்டது. அதற்காக அந்த பத்திரிகையின் கட்டிடம், சொத்துக்களையும் அந்த வங்கி  கையகப்படுத்திக் கொண்டது.

செய்தி தெரிந்து அந்த வங்கியின் தலைமை நிர்வாகியை நான் சென்று சந்தித்து, விவரங்களைத் தெரிந்து கொண்டேன். ‘எம்.ஜி.ஆர். அவர்கள் (கட்சிக்காக) வாங்குவதாக இருந்தால் அதிகபட்ச சலுகைகள் தருவோம். எப்படியாவது எங்களுக்கு கடன் அசல் வசூல் ஆனால் போதும்’ என்றார் அந்த நிர்வாகி.

நான் முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, விவரங்களைத் தெரிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்துக் கூப்பிட்டு அனுப்பினார். ‘நமக்கு அந்த இடம் வேண்டாம். போய் சோல்லிவிடுங்கள். பிரதான சாலையில் கட்சிக்கு இடம் என்றாலும் பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும்! வேண்டாம்’ என்றார் எம்.ஜி.ஆர்.

விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை.  பிறகு, ‘அலை ஓசை’ பத்திரிகை - கட்டிடம் - எந்திரம் உட்பட விலைக்கு வருவதாகத் தகவல் வந்தது. ப.உ.ச. முழு மூச்சாக இறங்கிவிட்டார்.  வாங்கியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். ஏதோ ஒரு தொகை பேசப்பட்டது. பத்திரிகைத் துறையில் இருந்த ஒரு சிலரை விட்டு, கருத்து சேகரித்தார் எம்.ஜி.ஆர். (நான் அப்போது எந்த வேலையிலும் இல்லை. சில காரணங்களால் வீட்டில் இருந்தேன். சம்பளம் மட்டும் வந்துகொண்டு இருந்தது). அப்போது ப.உ.ச. ஒப்புக்கொண்ட தொகைக்கும் வேலூர் நாராயணன் கேட்ட தொகைக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்தது.

All India Anna DMK Exam Perarignar Anna Trust என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. என்றாலும் பேரம் முடியவில்லை. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ‘வேலூர் நாராயணனைப் போய் பார்த்து என்ன விஷயம் என்று விசாரித்துவிட்டு வாருங்கள்’. என்றார். நான் வேலூர் நாராயணனைப் பார்த்து, விவரங்களைக் கேட்டேன். ப.உ.ச. ஒப்புக்கொண்ட தொகைக்கும் வேலூர் நாராயணன் கேட்கும் தொகைக்கும் இடையே 7 லட்ச ரூபாய் வித்தியாசம் இருந்தது.

‘மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் விட்டது ஒரு லட்ச ரூபாய். அதை அஇஅதிமுக கொடுக்கவேண்டும்’ என்று வேலூர்  நாராயணன் பிடிவாதம் பிடித்தார். இந்த இரண்டு விஷயத்திலும் இருதரப்பும் பிடிவாதமாக இருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னார்: ‘ ஒரு காரியம் பண்ணுங்கள். 7 லட்ச ரூபாய் நான் ஏற்பாடு செய்கிறேன். அதை வேலூர் நாராயணன்கிட்டே கொடுங்கள். எலெக்ட்ரிக் கட்டணத்தை, ‘அண்ணா பத்திரிகையிலேர்ந்து கட்டச் சொல்லிவிடுங்கள்’ என்றார். நான் சொன்னேன்: ‘எல்லா வசதியும் இருக்கு. கட்டிடம், மெஷின் இருக்குன்னாலும் வேலூர் நாராயணன் கேட்கிற தொகை எப்படிப் பார்த்தாலும் அதிகம்தான். அந்த எந்திரம் காலம் கடந்தது. எதிர்காலத்தில் உபயோகப்படாது...’ என்று நான் இழுத்தேன்.

‘நீங்க 7 லட்ச ரூபாயைப் பார்க்கறீங்க.  நாம வாங்கலைன்னு வெச்சுக்குங்க.  வேறே யாராவது வாங்கினாலோ அல்லது வேலூர் நாராயணனே எப்படியாவது தொடர்ந்து நடத்தினாலும் நம்மைத்தானே திட்டிக்கிட்டு இருப்பாங்க. இதிலெல்லாம் கணக்குப் பார்க்கக் கூடாது. நமக்கு ஒரு எதிரின்னா, அவங்களை நம் நண்பனா ஆக்கிக்கணும். முடியலையா, அவங்க நம்ம மேலே பாயாம பார்த்துக்கணும். புரியுதா?’ என்றார் எம்.ஜி.ஆர்.

அந்த அளவு எம்.ஜி.ஆர். கணக்கு போடுவார். ஏனென்றால், அவர் யதார்த்தவாதி.

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்

இது 1973 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி.

மதுரையிலிருந்து வேன் மூலம் கோவை செல்கிறார் எம்.ஜி.ஆர்.  உடன், கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம். இருவரும் முக்கியமான விஷயமாக தனித்துப் பேசிக் கொண்டு வந்தனர். திண்டுக்கல் தாண்டி, ஒட்டன் சத்திரம். அந்த ஊரைத் தாண்டியதும் சாலையில் ஒருவர் கையைக் காட்டியதும்  ஒரு தோட்டத்திற்குள், ‘வேன்’ நுழைந்தது. பம்ப் செட், கிணறு, தென்னை மரங்கள். நடுவே ஜமுக்காளம் விரித்து,  சாப்பிட இலைபோடத் தயார் நிலை. கை, கால் கழுவிக்கொண்டு அமர்ந்தார்கள். கல்யாணசுந்தரம் சைவ உணவுக்காரர். அதற்காக விசேஷமாக கீரை, பாயசம் போன்ற அயிட்டங்கள். கல்யாண சுந்தரத்துக்கு பிரமிப்பு. ‘எப்படி இவ்வளவு ஏற்பாடுகள்?’ என்று கேட்டார். ‘இன்று காலை நாம் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஓர் உதவியாளர் குழு புறப்பட்டுவிட்டது. இன்னின்ன அயிட்டங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவர்கள் திண்டுக்கல் சென்று தகுந்த உணவகத்தைப் பிடித்து - உணவைத் தயார் செய்து - கொண்டுவந்து விட்டனர். சாப்பிட ஆள் நடமாட்டம்  அதிகம் இல்லாத இடத்தையும்  கண்டுபிடித்தனர்’ என்று சொல்லிய எம்.ஜி.ஆர். மேலும் கூறினார்:

‘உங்களுக்காக இன்று எல்லோருக்கும் சைவச்  சாப்பாடு’ என்று கண்சிமிட்டியவாறே எம்.ஜி.ஆர். கூறவும் கல்யாண சுந்தரம் மெதுவான குரலில், ‘வள்ளல் என்று தெரியாமலா அழைக்கிறார்கள்! ஆனால், இப்படி ஓர் உதவியாளர் படை கிடைத்ததே அதுதான் ஆச்சரியம்’ என்றார்.

நீங்கள் சாப்பிடவில்லை?

ஒரு பிரபல தொழில் அதிபர், பிரபல கல்வி நிறுவனங்களின்  தலைவர், முதல்வர் எம்.ஜி.ஆரைக் காண தோட்டத்துக்கு வந்தார். முன்னதாக அவரிடம் ‘காலையில் தோட்டத்துக்கு  வந்துவிடுங்கள். காலை டிபன் அங்கு சாப்பிடவேண்டும்’என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருந்தார்.  எம்.ஜி.ஆர்., மேல் மாடியிலிருந்து கீழே வருவதற்கு சற்று தாமதமானது. அந்தத் தொழில் அதிபர் வந்தார். அவரை டிபன் சாப்பிட அழைத்தார்கள். ‘சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறினார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். கீழே உள்ள அறைக்கு வந்ததும் அந்தத் தொழில் அதிபருக்கு அழைப்பு வந்தது.  உள்ளே போனார். ‘வாங்க! சாப்பிட்டீர்களா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘ஓ! சாப்பிட்டேனே’ என்றார் அந்தத் தொழில் அதிபர். ‘அப்படியா! என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘இட்லி, பொங்கல், தோசை, வடை’என்றார் தொழில் அதிபர்.  ‘நீங்கள் இங்கே சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இன்று காலை இங்கு இட்லி, கிச்சடி, பூரி, வடை இதுதான் மெனு’ என்றார் எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் சாப்பிட்டேன் என்று சொன்ன அந்தத் தொழில் அதிபர் சங்கடத்துடன்  மன்னிப்பு கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக