Powered By Blogger

சனி, 22 டிசம்பர், 2012


காவிரி. இந்த மூன்றெழுத்துச் சொல் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களது வாழ்வோடும், வரலாற்றோடும், பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்று. உலகிற்குத் தமிழர்களின் ஆற்றல்களை எடுத்துரைக்கும் பிரம்மாண்டமான கோயில்கள், இலக்கியங்கள், கலைகள் எல்லாம் காவிரிக்கரையில் இன்றும் சான்றுகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்த நதியையே தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு எதிர்கொண்ட துயரங்கள் இதுவரை வரலாறு கண்டிராதது.ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் என்று அறிவித்ததன் மூலம் தமிழ்நாட்டிற்கு அந்த நதி நீரில் உள்ள உரிமையை கர்நாடகம் நிராகரித்தது. உரிமையை அங்கீகரித்து கர்நாடகத்தைக் கண்டித்து வைத்திருக்க வேண்டிய உச்ச நீதிமன்றமோ, இரண்டு முதலமைச்சர்களும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று இடையில் ஒதுங்கிக் கொள்ளப் பார்த்தது.

இந்தச் சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர் வளத்துறைச் செயலர் துருவ விஜய் சிங் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். தமிழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 419 டி.எம்.சி காவிரி நீர் வழங்க ஆணையிடும் இந்தத் தீர்ப்பு, 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டும் அதனை இத்தனை காலம் அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன் வரவில்லை; இப்போதும் கூட எப்போது வெளியிடுவீர்கள் என உச்சநீதி மன்றம் கடிந்து கொண்டதற்குப் பின்னரே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டால் இந்த வெற்றியின் பரிமாணம் விளங்கும்.

இந்த வெற்றி எளிதில் கிடைத்து விடவில்லை. சற்றும் சளைக்காமல், சோர்ந்து விடாமல், அரசியல் பேரங்களுக்கு மயங்கிவிடாமல், நம்பிக்கையோடும், உறுதியோடும் தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி இது.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் நான்கு மாநில முதலமைச்சர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடிப் பேசித் தீர்வுகாண வேண்டும். பிரதமர்தான் அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். 2003க்குப் பின் அந்த ஆணையத்தின் கூட்டம் நடைபெறவே இல்லை. கூட்டத்தைக் கூட்டும்படி மே மாதத்திலும் பின் ஜூலை மாதத்திலும் முதல்வர் அனுப்பிய கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் அமைதி காத்தார். முதல்வர் உச்ச நீதிமன்றத்தை அணுக, உச்ச நீதி மன்றம் பிரதமரைக் கடிந்து கொண்ட பின்னர் செப்டம்பர் 19ம் தேதி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் அக்டோபர் 15 வரை வினாடிக்கு 9000 கன அடி நீர் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். கர்நாடகம் மறுத்தது.மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றார் முதல்வர். நீதிமன்றம் பிரதமரின் ஆணையை உறுதி செய்தது. ஆனால் அக்டோபர் 15 வரை தண்ணீர் திறந்து விட வேண்டிய கர்நாடகம், இடையிலேயே தண்ணீரை நிறுத்தியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் முதல்வர்.

வழக்குகள் வேண்டாம், பேசித் தீர்த்துக் கொள்ளலாம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் எழுந்த குரல்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சட்ட பூர்வமான முறையில் போராடி வெற்றி கண்ட முதல்வரைப் பாராட்டுகிறோம்.

இத்தனை பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா, அரசிதழில் வெளியிட்டாலும் தீர்ப்பை நிறைவேற்றுமா என்று சந்தேகம் ஏற்படுவது இயற்கை. தீர்ப்பின்படி காவிரி மேலாண்மைக் குழு (Cauvery Management Board) ஒன்று உருவாக்கப்படும். அது காவிரியில் உள்ள 8 அணைகளிலும் தனது ஆணைகளை நிறைவேற்றத் தனது பிரதிநிதிகளை நியமிக்கும். எனவே அணைகளின் நிர்வாகம் கர்நாடகத்தின் கையில் அல்ல, இந்த மேலாண்மைக் குழு வசம் இருக்கும். எனவெ நியாயம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வென்றது! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக