Powered By Blogger

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


கடந்த 40 வருடங்களாக செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன், கடந்த 1.6 மில்லியன்  ஆண்டுகளாக பூமியின் மேலும் அடித்தளங்களிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவற்றின் மூலமாக கனிம வளங்கள், நீர் வளங்கள், எண்ணெய் வளங்கள், நதியின் வாழ்க்கை வரலாறு, கடல் மற்றும் பாலைவனங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  முனைவர் சோம. இராமசாமி. அவர், நீர் நிலைகள் மற்றும் அவற்றைக் காக்கும் முறைகள் பற்றியும் கூறிய கருத்துக்களில் சில:

நதிகள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்போது அவை விட்டுச்சென்ற வழித்தடங்களில் முந்திரிப் பூ வடிவில் அங்குமிங்குமாக   புதையுண்ட குளங்கள் இருக்கும். இந்தக் குளங்களுக்கும் தற்போது அப்பகுதிகளில் ஓடும் நதிகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும் (Underground drainage link). இந்தக் கழிமுகக்குளங்கள் என்பது அருமையான வரப்பிரசாதம்.

நதிகள் உருவாகும்போதே நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம், எவ்வளவு வேகமாகப் பயணிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து விடும். நதிகளின் ஒரே குறிக்கோள், எவ்வளவு வேகமாக கடலை அடைய முடியுமோ அவ்வளவு வேகமாக அடைய வேண்டும் என்பதே. உயரமான மலைகளைக் கடந்து சமவெளிக்கு வரும்போது, நதியின் வேகம் குறையும். இதனை watch and walk face  என்று அழைப்பார்கள். கடலோரப் பகுதிகளை அடைந்த பின்னர், அலைகளின் தாக்கத்தால் தள்ளாடித் தள்ளாடி கடலில் நதிகள் சேரும். நதியின் வாழ்க்கையும் மனிதனின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.

உலகில் உள்ள பல டெல்டாக்களில் தமிழகத்தில் உள்ள டெல்டாக்களே அபூர்வமானவை. ஏனென்றால், அவை இயற்கையாகவே உருவானவை.வடசென்னை, பொன்னேரி, புதுக்கோட்டை வெள்ளாறு, மணமேல்குடி, சுந்தரபாண்டியங்குளம்,தேவகோட்டை மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

உலகில் எந்தப் பகுதியிலும் காண இயலாத டெல்டாதான் வைகை. இது ஏறக்குறைய 25,000 குளங்களை உருவாக்கி உள்ளது. பூமி மேலே எழும்புகிற காரணத்தாலும், கடல் உள்வாங்குகிற காரணத்தாலும் உருவான பல பிறை வடிவக் குளங்கள் எல்லாமே வைகை நதியுடன் இணைக்கப்பட்டதுதான். எனவே, வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த  அனைத்துக் குளங்களும் நிரம்பிவிடும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை:
அக்காலத்துக் கோயில்கள் நீர்த் தேக்கத்திற்கும், மழைநீர் சேகரிப்பிற்கும் நல்ல எடுத்துக்காட்டு.  மழைக்காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழைநீர்-கோபுரங்கள், மேல் மதில்கள், பிரகாரங்கள்  வழியாக பொற் தாமரைக்குளத்தினை வந்தடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிப்பிரகாரங்களில் விழும் மழைநீர், பக்தர்களின் கால் படுபவை. எனவே, அவை வெளியே அனுப்பப்படுகிறது. இவ்வாறு மழைநீர் சேகரிப்பின் மூலம் குளங்களை உருவாக்கலாம். இதுமட்டுமின்றி, கோயில்களைச் சுற்றி நந்தவனங்கள் காணப்படும்.அவற்றில் இருந்து வரும் நீரும் குளத்திலேயே விடப்படும். எனவே, அங்கு உள்ள நீர், மூலிகைத் தன்மை வாய்ந்ததாகவும் கருதப்பட்டு தெவீகத்தன்மையுடன் குளங்கள் காக்கப்பட்டன.

ஆனால், இன்று நந்தவனங்களும் இல்லை. அதனால்தான்  காலப்போக்கில் கண்மாய்கள் காணாமல் போய்விட்டன.எனினும் காளையார்கோயில், கண்டவராயன்பட்டி போன்ற பகுதிகளில் காணப்படும் தெப்பக்குளங்களில் 7 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வரத்துக் கால்வாய்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பராமரிக்க, செயற்கைக் கோள் படங்கள் மற்றும் அக்காலத்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட Hatchood map (for surveying) நமக்கு உதவும்.

குளங்களின் தன்மை, அங்குள்ள சுற்றுச்சுழல் போன்றவைகளை வைத்தே பெரும்பாலும் குளங்களுக்கு பறவைகள் வந்து செல்கின்றன. அவை சரியான முறையில்  பராமரிக்கப்பட்டால் சுற்றுலாவும் வளரும். கிராம மக்களின் வாழ்வும் செழிக்கும். மீன்வளர்ப்புக் குளங்கள் மேலாண்மைக்கு உதவும், எடுத்துக்காட்டாக, வைகை நதியில் மீன் வளர்ப்பு (VIFI aqua culture ).

நீர்நிலைகளின் உயிர் என்பது நம் கையில்தான் உள்ளது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி,   நீர்நிலைகளை நன்முறையில் பாதுகாக்க முடியும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக