Powered By Blogger

திங்கள், 22 அக்டோபர், 2012

மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?


மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?

நமக்கு நாமே
‘‘தேனியிலுள்ள ‘பிளாண்ட் எனர்ஜி நெட்வொர்க் (PEN)’ என்ற அலுவலகம் முழுவதும் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரம் மூலம் செயல்பட்டு வருகிறது. 2 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 சோலார் பேனல்கள் மூலம் இந்த அலுவலகத்தில் உள்ள 8 கணினிகள்,10 டியூப் லைட்டுகள்,4 மின்விசிறிகள் இயக்கப்படுகின்றன. 2 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள இந்த சோலார் பேனல்கள் 25 வருட உத்தரவாதம் உள்ளவை. 4 வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் சூழ்நிலை வரலாமே தவிர வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் வராது.

ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைக்க பேட்டரியுடன் 2,70,000 ரூபாய் செலவாகிறது. சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய அரசு மொத்தச் செலவில் 30% மானியம் வழங்குகிறது. வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப மின்சாரத்தின் அளவு குறையுமே தவிர முற்றிலும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை’’ என்கிறார், PEN  நிறுவனத்தின்நிறுவனர், பேராசிரியர் பழனியப்பன்.


பெரியார் வழி காட்டுகிறார்
தஞ்சாவூரிலுள்ள பெரியார் மணியம்மைபல்கலைக்கழகம் தனது மொத்த மின் தேவையில் 65 சதவிகிதத்தை, தானே உற்பத்தி செய்துகொள்கிறது. இங்கு வீணாகும் குப்பைகள்,கால்நடைக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி தொழில்நுட்ப முறையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இங்கு விறகிலிருந்தும் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வளாகம் முழுவதும் LED விளக்குகளும், சோலார் விளக்குகளும்,சோலார்  வாட்டர் ஹீட்டர்களும் மட்டுமேபயன்படுத்தப்படுகின்றன மற்ற  கல்லூரிகளும்,வணிக நிறுவனங்களும் இதனைப்பின்பற்றலாமே?
- சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


மின்சாரம் இல்லாத நேரத்திலும் நீர் இறைக்கலாம்
மின்சாரம் இல்லாவிட்டாலும் விவசாயிகள் நீர்ப்பாசனம் செய்ய உதவியாக ஜெருசலேம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஜெனிஃபர், நிஷா இருவரும் சிஸ்டம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். விவசாயிகள் பயன்படுத்துகிற சாதாரண மோட்டாரில் சோலார் பேனலுடன் இவர்கள் கண்டுபிடித்திருக்கும் சிப்பை இணைத்தால் மோட்டார் சுற்ற ஆரம்பிக்கும். இதனால் மின்சாரம் இல்லாமலே நீர்ப்பாசனம் செய்து கொள்ளலாம். சோலார் பேனலுடன் பேட்டரி பொருத்திக் கொண்டால் சூரிய ஒளி அதிகமிருக்கும் சமயங்களில் பேட்டரியில் சக்தி சேகரிக்கப்பட்டு விடும். இந்த சிப்புக்கு 600 ரூபாய் செலவாகும். சோலார் பேனல் அளவைப் பொறுத்து ரூபாய் 1,000 முதல் கிடைக்கும். பேட்டரி 3,000 ரூபாயிலிருந்து கிடைக்கும். இதனால் வருடம் முழுவதும் மின்சாரம் இன்றி நீர்ப்பாசனம் செய்ய முடியும்.
- இவள் பாரதி


சென்னையும் செய்யலாமே?
சூரிய சக்தி மற்றும் காற்றினைக் கொண்டு இயங்கும் தெரு விளக்குகள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த மின் விளக்குகள் சூரிய ஒளி இல்லாதபோது காற்றைக்கொண்டும், காற்றில்லாத போது சூரிய ஒளி கொண்டும் இயங்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள காற்றாலை மூலம் 300 வாட்  மின்சாரமும், சூரிய சக்தி மூலம் 90 வாட்  மின்சாரமும் உருவாக்க முடியும், இதனைப் பராமரிக்க பெரிய செலவு ஏதுமில்லை.

சென்னை நகரில் 111 உயர் கோபுர மின்விளக்குகள் உள்பட 2,16,116 தெருவிளக்குகள் உள்ளன. இதில் இந்த மின்விளக்குகளுக்கு மாநகராட்சி மின்கட்டணமாக ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வரை செலவு செய்கின்றது. சென்னை நகரிலும், நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சோடியம் விளக்கிற்கு மாற்றாகவும் இது போன்ற தெருவிளக்குகளைப் பயன்படுத்தினால்மின்சாரம் மிச்சமாகும், செலவும் குறையும்.
- என்.ஹரிபிரசாத்


மின்சாரம் இல்லாவிட்டாலும் செல்போன் சார்ஜ்
மின்சாரம் இல்லாத நேரத்தில் செல்போனுக்கு எப்படி சார்ஜ் போடுவது? ஜெருசலேம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த  வினோத், செந்தூர் செல்வம்  ஆகியோர் போர்ட்டபிள் சார்ஜரைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதை மின்சாரம் இருக்கும்போது சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பயணங்களிலோ, மின்சாரம் இல்லாத நேரங்களிலோ இந்த சார்ஜரைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக