Powered By Blogger

புதன், 10 அக்டோபர், 2012

கொள்கைக் காவலர் கருணாநிதி அவர்களுக்கு,


கொள்கைக் காவலர்  கருணாநிதி அவர்களுக்கு,

‘காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது.’

நினைவிருக்கிறதா இந்த வார்த்தைகள்? நெடுங்காலம் ஆகி விட்டது. என்றாலும் இன்றும் கூர்மையோடு இருக்கும் உங்கள் நினைவாற்றல் இதைச் சொன்னது யார் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. குழந்தைக்குத் தந்தையை அடையாளம் தெரியாமல் போகலாம். என்றானாலும் தந்தைக்குத் தன் குழந்தையைத் தெரியாமல் போகுமா? ஆம், இது நீங்கள் எழுதியதுதான். 1967ல் ஆட்சிக்குவரும் முன் ஆங்காங்கே காகிதப் பூ என்ற நாடகத்தை அரங்கேற்றி வந்தீர்களே... அதில் நீங்கள் எழுதிய வசனங்கள்தான் இவை.

அப்போது காங்கிரஸ் பணக்காரர்களின், பஸ் உரிமையாளர்களின், ஆலை அதிபர்களின், வணிகச் சக்கரவர்த்திகளின் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருக்கிறது எனக் கருதி அதை மேடை போட்டுத் தாக்கி வந்தீர்கள். அன்று உங்கள் கொள்கை சமதர்மம் என்றுதான் உறுதியாய் நம்பினோம். அன்று இளைஞர்களின் நம்பிக்கையை இழந்து விடாத கட்சியாகத்தான் இருந்தது கழகம்.

நாடக மேடைகளில் மட்டுமல்ல, ஆட்சிப் பீடத்திலும் சோஷலிசத்தில் நேசம் வைத்தவராகத்தான் அடையாளம் காட்டினீர்கள்.  அன்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் போக்குவரத்துத் துறையை அரசுடைமை ஆக்கினீர்கள். இந்திரா,  வங்கிகளை அரசுடைமைஆக்கியபோது அவரது கட்சியினரே அவரைக் கைவிட்ட போதும் அவரது அரசுக்கு ஆதரவளித்து அதை நிலைக்கச் செய்தீர்கள்.

காலங்கள் பல சென்ற பின்னும் காகிதப்பூ வண்ணமிழந்ததே தவிர, வாடிவிடவில்லை. தாராளமய யுகத்தில் கூட  சில தயக்கங்கள் உங்கள் மனசாட்சிக்கு இருந்தன. 2001ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக, வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்தில், முரசோலி மாறன், 2005ல் துவக்க வேண்டிய அன்னிய முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தள்ளி வைத்ததையும், ஏகாதிபத்தியங்களுக்கு இணக்கமான தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியதையும் வியந்தும் கடிந்தும் அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதியதை மறந்திருக்க மாட்டீர்கள். India’s Mr. Maran became the man to see at Doha, frustrating U.S and European efforts to get an agreement. He spent the first five days refusing to negotiate and the last day threatening to walk out of the talks. என்று, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (‡November  15, 2001) முதல் பக்கச் செய்தியாக எழுதியது என் நினைவில் நிழலாடுகிறது.

இன்று மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டே, அதற்கு எதிரான பந்த்தில் பங்கேற்றதைக் குறித்துப் பலர் பகடி பேசியபோதும் இன்னும் பழைய வாசனை, கழகத்திற்குள் பாக்கியிருக்கிறது என்றுதான் எண்ணிக் கொண்டேன்.

இதனுடைய நீட்சியாக, மம்தாவைப் போல, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நீங்கள் விலக்கிக் கொள்வதுதானே நியாயமாக இருக்கும்? ஆதரவை விலக்கிக் கொள்ளாவிட்டாலும் அமைச்சர்களை விலக்கிக் கொண்டிருக்கலாமே?

ஆனால் கொள்கை மாறுபாடு ஏற்பட்டால் ஒழிய, கூட்டணியிலிருந்து விலகுவது இல்லை என்று அறிவித்திருக்கிறீர்கள். இதற்கு அர்த்தம், அன்னிய முதலீடு என்ற கொள்கையில் மத்திய அரசுக்கும் உங்களுக்கும் மாறுபாடு இல்லை என்பதா? அப்படியானால் பந்த்தில் ஏன் பங்கேற்றீர்கள்? சரி, உங்கள் பொருளாதாரக் கொள்கைதான் என்ன? இன்று அப்படி ஏதேனும் ஒன்று உங்கள் கழகத்திற்கு உண்டா? இருந்தால் ஏங்கல்ஸ் மார்க்ஸ் போல விளக்க அறிக்கை எழுத வேண்டாம். கடிதத்திலாவது கோடிட்டுக் காட்டுங்கள்.

போகட்டும், பொருளாதாரத்தில் குழப்பம். அயலுறவு விஷயம் எப்படி? அங்கேயும் சம்மதம்தானா?. ஈழம் குறித்த மத்திய அரசின் கொள்கைக்கும் உங்கள் கொள்கைக்கும் மாறுபாடு இல்லையா? மாநாடு போட்டோமே என விவாதத்தை மடை திருப்பாதீர்கள். அந்த மாநாட்டில் எந்தத் தீர்மானமும் போடக்கூடாது என்று மேலிடத்திடமிருந்து தாக்கல்  வந்ததைக்கூட மாறுபடாமல், மனம் புழுங்காமல்தான் ஏற்றுக் கொண்டீர்களா?

 ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் என்ற கொள்கையும் உங்களுக்கு ஏற்புடையதுதானா? தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும் மத்திய அரசின்அணுகுமுறையையும் ஏற்கிறீர்களா?

பெட்ரோல் விலை உயர்ந்தபோது கசப்புணர்வுடன் நீடிக்கிறோம் என்று அறிவித்தீர்கள்(‘தினகரன்’ மே 30). டீசல் விலை உயர்வின்போது கொள்கை மாறுபாடு ஏற்பட்டால் ஒழிய, கூட்டணியிலிருந்து விலகுவது இல்லை என்கிறீர்கள். அன்று கசந்தது இன்று இனிக்கிறதே எப்படி?

காகிதப் பூ நாடகமா? இல்லை இதுதான் நாடகமா?

வேடங்களை விளங்கிக் கொள்ள முடியாத

இளந்தமிழன்புதியதலைமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக