Powered By Blogger

சனி, 27 அக்டோபர், 2012

காவிரி: உண்மை நிலை என்ன?



கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீர் ஹோகேனகலைத் தாண்டி, மேட்டூர் அணைக்கு வருகிறது. பின், ஈரோட்டின் வடக்கேயுள்ள கூடுதுறையில் பவானியைச் சேர்த்துக்கொண்டு நாமக்கல், கரூர் மாவட்டங்கள் வழியாக திருச்சி அருகேயுள்ள கல்லணையில் வந்து சற்று இளைப்பாறுகிறது. பின் தஞ்சாவூரை நோக்கி நடந்து, திருவாரூரைக் கடந்து, பூம்புகாரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

மேட்டூர் அணை
கர்நாடகத்தில் மழையின் காரணமாக நதியில் நீரின் அளவு அதிகரித்தபோது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12.185 கன அடி நீர் வந்தது. ஆனால் கர்நாடகம் எந்த முன்னறிவிப்புமின்றி நீரை நிறுத்தியதால் வரத்து குறைந்தது.

அணையில், 93.470 கன அடிநீர் இருந்தால்தான் அணையிலிருந்து  நீர் திறந்து விடப்படும். ஆனால் தற்போது அணையில் 70.580 கன அடி நீர் மட்டுமே இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இதே நாளில் அணையின் நீர் அளவு 82.70 கன அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீரைச் சார்ந்து சுமார் 14.93 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அங்குள்ள மின் நிலையங்களுக்கும் நீர் தேவைப்படுகிறது" என்கிறார், மேட்டூர் பகுதி சமூக ஆர்வலர் மு.அருண்குமார்.

-மேட்டூரிலிருந்து மு. கிருபாகரன்


பவானி கூடுதுறை
30 ஆயிரம் கன அடி தண்ணீர் தேவை. ஆனால் 15 ஆயிரம் கன அடி மட்டும் நீர்வரத்து இருந்து வருகிறது. என்றாலும் பாசனத்திற்கு 20 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது" என்கிறார், பொதுப்பணித்துறைப் பொறியாளர்.

சம்பா பயிருக்கு பருவம் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் அறுவடை காலமான ஜனவரி மாதம் வரை நீர் தேவைப்படும் இந்தப் பகுதியில் நெல் மட்டுமன்றி, மஞ்சள், கரும்பு போன்றவையும் முக்கியப் பயிர்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் தண்ணீர் கிடைத்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருக்கலாம். இப்போது இவை மட்டுமன்றி, ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படும் புஞ்சை நிலப் பயிர்களான நிலக்கடலை மற்றும் பயறு வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார், விவசாயி துரைசாமி.

-பவானி கூடுதுறையிலிருந்து ரா.விஜயகுமார்


கல்லணை
முதலாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய கல்லணைதான் காவிரி நீரைத் தமிழ்நாட்டில் கடைசியாகச் சேமித்து வைக்கும் இடம். இங்கிருந்துதான் டெல்டா பகுதிகளுக்கு வெண்ணாறு, கல்லணை என்ற இரண்டு கால்வாய்கள் வழியாக நீர்அனுப்பப்படுகிறது. வெண்ணாறு கால்வாய் 3.78 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கும், கல்லணைக் கால்வாய் ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கும் நீர் தருகின்றன. இதைத் தவிர காவிரியில் வெள்ளம் வரும்போது பாதுகாப்புக் கருதி உபரி நீரைக் கொள்ளிடத்திற்கு அனுப்ப உள்ளாறு என்று ஒரு வடிகால் இருக்கிறது. பொதுவாக ஜூன் -ஜூலையில் துவங்கி ஜனவரி வரை சலசலப்புடன் நீர் ஓடும் இந்தக் கால்வாய்களில் இப்போது நீர் அதிகம் இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது 20 சதவிகிதம் விவசாயம் மட்டுமே நடந்துள்ளது. வரும் ஜனவரி மாசம் வரைக்கும் தினம்  2 டி.எம்.சி.நீரைத் திறந்துவிட்டால்தான் பயிரும், வயலும் காஞ்சி போகாம ஓரளவுக்காவது முழுசா  விவசாயம் பார்க்க முடியும்" என்கிறார், ஆறுமுகம் என்ற விவசாயி.

அடுத்த மாதம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான அளவு மழை பெய்தாலும் அதனால் விவசாயத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்றுதான் பல விவசாயிகள் கூறுகிறார்கள்.


கடைமடைப் பகுதிகள்
விவசாய நிலங்களுக்கு 5 நாட்களுக்கு  நாளைக்கு ஒருமுறை என்று முறை வைத்துத் திறந்து விடுகிறார்கள். காவிரி தண்ணீர் வராதப்போய் நிலத்தடி நீரைப்பயன்படுத்திக்கலாம்னு பார்த்தா, நிலத்தடி நீர் குறைஞ்சிருக்கிறதுனால அதுவும் முடியலை. காவிரியில தொடர்ந்து ஆறு மாசம் நீரோடை இருந்தாதான் நிலத்தடியில நீர்த்தேக்கம்  ஏற்பட்டு மோட்டார் மூலமா இறைக்கலாம். அதுமட்டுமில்லாம, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணிநேரம் மின்சாரம் அறிவித்த அரசு இப்போ மூணு மணிநேரம் தான் கொடுக்கிறாங்க. மின்சாரமும் இல்லாம தண்ணீரும் இல்லாம 50 சதவிகித விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கு. மேலும் கர்நாடகா 30 ஆயிரம் கன அடி தண்ணீர் விட்டால்தான் காவிரி முடியும் இடமான கடைக்கோடி பூம்புகார் வரைக்கும் நீர் வந்து பாயும். கர்நாடகம் தண்ணீர் விடும்ங்கிற நம்பிக்கையிலதான் இப்போ நாற்று நட்டிருக்கோம். பயிர்களைக் காப்பாத்த முடியுமா, முடியாமப் போகுமான்னு கவலையாத்தானிருக்கு" என்கிறார், தங்கப்பன் என்னும் விவசாயி.

கல்லணை மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பூ.சர்பனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக