Powered By Blogger

புதன், 10 அக்டோபர், 2012

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட முடியாதா?


பொதுமக்களுக்கு  இடையூறு  இல்லாமல்  போராட  முடியாதா?
யுவன்

போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை அவதிக்குள்ளாக்குவது நியாயமா?

‘இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெள்ளிக்கிழமை காலை நடத்திய 20 நிமிடப் போராட்டம், இரண்டு மணி நேரத்திற்கு மேல் லயோலா கல்லூரியைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்தை முடக்கியது.’
- ‘தி ஹிண்டு’ 22 செப்டம்பர் 2012

இதைக் குறித்து அதே நாளில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளியாகி உள்ள செய்தி,

‘அலுவலகம் செல்பவர்களை இந்தப் போராட்டம் எப்படிப் பாதித்துள்ளது என்பதை தொலைக்காட்சி செய்தியாளரிடம் விவரித்துக் கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி, விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் சிலரால் அடித்து உதைக்கப்பட்டார். காவல்துறையின் கண்ணெதிரேயே இது நடந்தது. ஆனால் காவல்துறை, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு, இரண்டு நாள் கழித்து, திருமாவளவனின் உதவியாளர் இளஞ்சேகுவாரா என்பவரைக் கைது செய்திருக்கிறது.

செவ்வாயன்று மதியம், ஜன்னல்களில் சன் பிலிம் ஒட்டிய காரில் பயணம் செய்துகொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது போக்குவரத்துப் போலீசார் வழக்குப் பதிய முயன்றதை அடுத்து அவர் கோயம்பேட்டில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தின் அருகே சாலை மறியல் செய்தார்.’
- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 19 செப்டம்பர் 2012

‘செய்யாறில் உள்ள இரண்டு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டு நீதிமன்றத்தின் வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றப் பணியாளர்களோ, பொதுமக்களோ மதியம் வரை நீதிமன்றத்திற்குள் செல்ல இயலவில்லை.’
- ‘தி ஹிண்டு’ 22 செப்டம்பர் 2012

‘நடைமுறையிலுள்ள கட்டண விகிதங்களை ஏற்க மறுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டிலுள்ள ஆட்டோஓட்டுநர்கள், ஐந்தாவது நாளாக இன்றும் தங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.சனிக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பிரகாஷ் அந்தோனி என்ற பயணி, சென்ட்ரலில் இருந்து, நுங்கம்பாக்கம் செல்ல 300 கேட்கிறார்கள். இது அக்கிரமம் என்று தெரிவித்தார்.’
- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 22 செப்டம்பர் 2012  

இவையெல்லாம் கடந்த வாரத்தில் வெளியான செய்திகள். அதற்கு முந்திய வாரத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டங்களை அடுத்து இரு தினங்கள் அண்ணா சாலை மற்றும் அதன் கிளைச் சாலைகளில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது .

இதைப் போன்ற போராட்டங்கள் நடக்கும்போது அவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஒபாமாவோ, ராஜபக்ஷேயோ அல்ல. சர்சைக்குரிய திரைப்படம் உருவானதில் எந்தப் பங்குமற்ற ராஜபக்ஷேயின் வருகையை விரும்பாத அப்பாவிப் பொதுமக்கள்தான். நம்முடைய கை விரலைக் கொண்டே நம் கையைக் குத்திக்கொள்கிற அபத்தம் இது.

இரண்டு நீதிமன்றங்களை இணைக்கிற முடிவு முழுக்க முழுக்க நீதித்துறை எடுத்த முடிவு. மக்களா அந்த முடிவை எடுத்தார்கள்? அவர்களுக்குப் பங்கில்லாத ஒரு முடிவிற்காக ஏன் பொதுமக்கள் தண்டிக்கப்பட வேண்டும்?

போராடுவது ஜனநாயகம் எங்களுக்கு அளித்துள்ள உரிமை என்கிறார்கள் அரசியல் கட்சிகள். போராட்டங்களை நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளதைப் போல அந்தப் போராட்டங்களை விமர்சிக்கவும், அதனால் தங்களுக்கு ஏற்படும் அவதிகளை எடுத்துச் சொல்லவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு. அதற்காக அவர்களைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

போராட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்துவது ஓர் அரசியல் கலாசாரமாகவே ஆகி வருகிறதோ எனக் கவலை எழுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்த முடியாதா? சாலை மறியல், பேரணி, கல்வீச்சு இவற்றைத் தவிர வேறு போராட்ட முறைகளே கிடையாதா?

ராஜபக்ஷேயின் வருகை விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு நகருக்கு வருகிறார். அதற்கு சென்னையிலுள்ள சாலைகளில் போக்குவரத்தை முடக்குவதற்குப் பதிலாக, அந்த வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே அல்லது மம்தாவைப் போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கலாமே? குறைந்த பட்சம் சோனியா காந்தியையோ, பிரதமரையோ நேரில் சந்தித்துத் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கலாமே?

இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலைகளுக்கு உள்ளான சம்பவங்கள், மூன்றாண்டுகள் ஆன பின்னும் இன்னும் எல்லாத் தமிழர்கள் மனதிலும் ஆறாப் புண்ணாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு நீதி கேட்டு நாம் போராட வேண்டியது சர்வதேச அரங்கில். உலகம் அந்த அநியாயத்தை அறிந்து கொள்ளும்போது நிச்சயம் உரக்கக் குரல் எழுப்பும். ஆனால் நம் அரசியல்வாதிகளால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களிடம் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த அநியாயத்தை எடுத்துச் சொல்ல முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் தங்கள் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக்கொள்ள ரோடு ஷோக்கள் நடத்துவதிலேயே அக்கறை காட்டுகிறார்கள்.

வேலை நாட்களில் முக்கியச் சாலைகளில் பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க, வேலை நாட்களில் காலை 8:30 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சென்னைக் காவல்துறை அண்ணாசாலை, லயோலா கல்லூரி போன்ற பகுதிகளில் போராட்டம் நடத்த எப்படி அனுமதி அளித்தது என்பதுதான் விளங்காத புதிர்.

உணர்ச்சிமயமான போராட்டங்கள் குறித்தும் தமிழ் சமூகம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறதா என்பது குறித்தும் ‘புதிய தலைமுறை’ ஓர் உரத்த சிந்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. காண்க உரத்த சிந்தனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக