Powered By Blogger

திங்கள், 22 அக்டோபர், 2012

கிரிக்கெட்டின் அசல் வெற்றி


ஜூன் 23, 1979. லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் ப்ரூடென்ஷியல் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறார் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் க்ளைவ் லாயிட். மீண்டும் அதேபோன்ற ஒரு தருணத்தை தரிசிக்க மேற்கிந்தியத் தீவுகளுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இப்போது டி20 உலகக்கோப்பை போட்டி சாம்பியன் அணியில் இருக்கும் ஒரு வீரர் கூட 79ல் உலகக் கோப்பையை அந்த அணி வென்றபோது பிறந்திருக்கவில்லை. தற்போதைய அணியிலேயே வயதான வீரரான கிறிஸ் கெல் கூட மூன்று மாதங்கள் கழித்துதான் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

‘அந்தக் காலத்துலே கவாஸ்கர்லாம் ஆடுறப்போ...’ என்று பழம்பெருமை பேசும் பெருசுகளுக்கு வேண்டுமானால், வெஸ்ட் இண்டீஸ் அணி கனவுகளிலும் பயமுறுத்தும் கிரிக்கெட் அசுரனாக இருக்கலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் யானை தேய்ந்து எறும்பாய் மாறிய கதைதான். மேற்கிந்தியத் தீவுகளில் இப்போது கிரிக்கெட்டுக்கு மவுசு குறைந்துவிட்டது. இளைஞர்கள் கால்பந்து மோகம் கொண்டு அலைகிறார்கள். இதனால்தான் டி20 கோப்பையை வென்றதுமே அடக்கமாகப் பேசுகிறார் அவ்வணியின் தலைவர் டேரன் சம்மி. நாங்கள் மீண்டும் வந்துவிட்டதாக எல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. சரியான பாதைக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்."

டி20 போட்டிகளின் தொடக்கத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியினரைத் தவிர வேறு யாருமே நம்பியிருக்க வாய்ப்பில்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி. அயர்லாந்துடனான போட்டி மழையால் ரத்து. தட்டுத் தடுமாறி ரன்ரேட் அடிப்படையில்தான் சூப்பர் 8 சுற்றுக்கே முன்னேறினார்கள்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்தியதுமே மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி. நியூசிலாந்துடன் தட்டுத்தடுமாறி ‘டை’ செய்து, சூப்பர் ஓவரில் அதிர்ஷ்ட வெற்றி என்று மீண்டும் மெல்லத் தடுமாறியபடியேதான் அரையிறுதிக்கும் வந்தார்கள். அரையிறுதியில் வெற்றி தேவதை மேற்கிந்தியத் தீவுகளை நோக்கி கண்ணடித்தாள். எழுபத்தி நான்கு ரன்கள் வித்தியாசத்தில்பலமான ஆஸ்திரேலியாவை பந்தாடினார்கள். இறுதிப்போட்டியில் இமாலய பலத்துடன் இருந்த இலங்கையை வென்றிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் சூப்பர் எட் ரவுண்டில் இதே மேற்கிந்தியத் தீவுகளை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில்சூறையாடியிருந்தது இலங்கை. சொந்த ஊரில் இலங்கை அணி கோப்பை வெல்வதைக் காண வந்திருந்த முப்பத்தைந்தாயிரம் இலங்கை ரசிகர்களுக்கும் இதயம் வெடிக்குமளவுக்கு இருந்தது இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம். இறுதிப்போட்டி வரைக்கும் அந்த அணியை அழைத்துவந்த கிறிஸ் கெய்ல் படுமோசமாக சொதப்பியிருந்தார். இருபத்தியாறு பந்துகளில் மூன்றே மூன்று ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார். மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான போலார்ட் இரண்டு ரன்களில் அவுட். நட்சத்திரங்கள் வீழ்ந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இளம் வீரர்கள் ஒன்றிணைந்து இலங்கையை வீழ்த்தி, கோப்பையை வென்றிருக்கிறார்கள். குறிப்பாக இலங்கையின் இணையற்ற பவுலரான மலிங்காவை சுளுக்கெடுத்திருக்கிறார்கள். அவரது நான்கு ஓவர்களில் ஐம்பத்தி நான்கு ரன்களை விளாசித் தள்ளியிருக்கிறார்கள்.

இறுதிப் போட்டிக்கு முன்பாக கிறிஸ் கெய்ல் கோப்பையை வெல்வோம் என்று சொன்னபோது, அது வழக்கமாக சொல்வதுதான் என்று எல்லோரும் நினைத்தார்கள். இலங்கையை தவிடுபொடியாக்குவோம். அந்த அணியில் உலகத்தரமான வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் நாங்கள்தான் வெல்வோம். கோப்பை எங்களுக்குதான்" என்று நம்பிக்கையோடு கூறினார். அவரது நம்பிக்கை அவர் மீது மட்டுமல்ல, அவரோடு இருந்த இளைய வீரர்களின் மீதும் சேர்த்துதான்.

முந்தைய போட்டிகளில் மிரட்டிய வீரர் என்றாலும் கிறிஸ் கெய்ல் சாதாரணமானவர்தான். அவரை சுலபமாக வீழ்த்துவோம்" என்றார், இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே. இலங்கை அணியின் மொத்த வியூகமும் இறுதிப் போட்டியில் கெய்லை வீழ்த்துவதிலேயே இருந்தது. அந்த வியூகத்தில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளின் பதினோரு வீரர்களுமே, ‘கிறிஸ் கெய்ல்’தான் என்பதை அவர்கள் தோல்வி அடைந்தபின்னரே உணர்ந்தனர்.

மேற்கிந்திய அணிகள் பெற்றிருப்பது கூட்டுவெற்றி. ஒவ்வொரு வீரரும் தம் அணி சிறப்பானது என்று நிரூபிக்க உயிரைக் கொடுத்து விளையாடியிருக்கிறார்கள். நட்சத்திரங்களை நம்பித்தான் கிரிக்கெட் எனும் சமகால சம்பிரதாயத்தை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று மூன்று துறைகளிலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு விளையாடி வென்றிருக்கிறார்கள். மேற்கிந்தியத் தீவுகள் பெற்றிருக்கும் இந்த வெற்றி அவர்களுடைய வெற்றியல்ல. கிரிக்கெட்டின் நிஜமான வெற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக