Powered By Blogger

புதன், 10 அக்டோபர், 2012

அறிவியலைக் கையிலெடுப்போம் அடுத்தவர்க்கு கை கொடுப்போம்


அறிவியலைக் கையிலெடுப்போம் அடுத்தவர்க்கு கை கொடுப்போம்
வழிந்தோடும் நீரைத் தடுப்போம்!

இளம் விஞ்ஞானிகள்
அனிருத், நவீன்குமார்
ஸ்ரீஜெயேந்திரர் வித்யாலயா பள்ளி,மகாராஜாநகர், பாளையங்கோட்டை


தண்ணீர்த் தொட்டி நிரம்பி நீர் வழிந்தோடுவதைப் பார்த்தால் இவ்வளவு நீர்வீணாகிறதே என்று வருத்தமாக இருக்கும். பொதுவாக வழிந்தோடும் நீரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதற்கு ஏதாவது செய்யலாமே என்று தோன்றியபோது உருவானதுதான் தானியங்கி நீர்க்குழாய் திட்டம்"  என்கிறார்கள், பாளையங்கோட்டை மகாராஜாநகர் ஸ்ரீஜெயேந்திரர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனிருத் மற்றும் நவீன்குமார்.

ஆற்றலைச் சேமிக்கும் தானியங்கி நீர்க்குழாய் திட்டம் (Energy Saving Automatic Hydro Pump System) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இத்திட்டத்தைச் செய்து முடிக்க ஆர்க்கிமிடீஸ் தத்துவம் மற்றும் மிதப்பாற்றல் கொள்கை (Buoyancy) பெரிதும் எங்களுக்கு உதவியது. இன்னும் எங்கள் திட்டத்தை நவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்" என்கிறார்கள்.

தண்ணீர்த் தொட்டிகளில் பொருத்தினால் வழிந்தோடும் நீரைத் தடுக்க முடியும்.

வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.  ஒரு காற்றுப்புகாத பெட்டி, தண்ணீர் பைப், பிளாஸ்டிக் இன்சுலேட்டர் இவைகள் போதும். சுலபமாக உருவாக்கி விடலாம்.

இக்கருவியைக் கொண்டு வழிந்தோடும் நீரை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

இக்கருவி நீர் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வீணாகும்போது மோட்டாருக்குச் செல்லும் மின்சப்ளை தானாகவே நின்றுவிடும்.

சாதாரண நீர்த்தொட்டிகளில் கூட இதைப் பயன்படுத்த முடியும்.

சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)

 

கைகொடுக்கும் கழிவுநீர்

இளம் விஞ்ஞானிகள்
கலிஸ், தீபாபாரதியார் நூற்றாண்டு பள்ளி, உடுமலைப்பேட்டை

தற்போது நம் முன்னுள்ள முக்கியச் சவால் என்ன என்று பார்த்தால் நீர் மற்றும் எரிபொருள் தேவை. இதை அடிப்படையாக வைத்துதான் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி (recycle of used water and fire extinguisher) மற்றும் பயன்படுத்திய எண்ணெய் மறுசுழற்சி (recycle of used) என்ற 2 வடிவங்களையும் செய்தோம்" என்கின்றனர், திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு பள்ளி மாணவிகள்  கலிஸ் மற்றும் தீபா.

நாம்  தினசரி பயன்படுத்துகின்ற நீரை அதாவது சமையல் மற்றும் குளியலுக்குப் பயன்படுத்தும் நீரை வீணாக வெளியில் விட்டால் அது கொசுக்கள் தங்கி பல்கிப் பெருக வாய்ப்பாக அமையும். எனவே அந்த நீரை வீட்டுக்கு வெளியில் இரண்டு தொட்டிகள் அமைத்து அதில் விட வேண்டும். முதலாவது தொட்டியில் கூழாங்கற்கள், கரி, ஜல்லி, மணல், மூலிகைகள் போன்றவற்றினை இட்டு நிரப்ப வேண்டும். இது அந்தக் கழிவு நீரை சுத்திகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை இரண்டாவது தொட்டியில் சேமிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைச் சேமிக்க

வீட்டுத் தோட்டத்தில் செலவிட

வீட்டில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்தை தடுக்கக் கூட இந்த நீரைப் பயன்படுத்தலாம்.    
   
எவ்வாறு என்றால் நமது வீட்டில் துளையுடன் கூடிய குழாயை இணைக்க வேண்டும். சென்சார் அலாரமுடன் இணைந்த மோட்டாரை அதில் இணைக்க வேண்டும். தீயின் நாக்கு சென்சாரில் பட்டதும் மோட்டார் இயங்கி, துளையிடப்பட்ட குழாய் மூலம் நீர், வீட்டினுள் செலுத்தப்பட்டு தீ அணைக்கப்படும். பலத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்படும்.

செ. இளந்தமிழ் பாண்டியன் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


கண்காணிக்கும் எந்திரன்

இளம் விஞ்ஞானிகள்
பி.பூபதி நிசாந்த், சி.விவியன் ரிச்சர்ட்
மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, புதுக்கோட்டை

ஜப்பான் நாட்டில் பெரும்பாலான வேலைகள் தானியங்கி ரோபோக்களால் செய்யப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகள் பரிமாறவும், கண்காணிப்புப் பணிகளுக்கும் ரோபோ வாகனங்கள் பயன்படுகின்றன. இதுபோல் ஏன் இந்தியாவிலும் செய்யக்கூடாது என்று சிந்தித்தபோதுதான் இந்த ரோபோ வாகனத்தை உருவாக்கத் தோன்றியது. இதன் பெயர் ‘–Multi purpose line follower robo vehicle’ என்கின்றனர், புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பி.பூபதி நிசாந்த் மற்றும் சி.விவியன் ரிச்சர்ட்.

இந்த ரோபோ வாகனத்தில் கறுப்பு நிறத்தை உணரும் இரு சென்சார்கள் பொருத்தப்பட்டு சென்ட்ரல் போர்டுடன் (–Main chip) இணைக்கப்படுகிறது.

கண்காணிக்கப்பட வேண்டிய இடங்களில் ரோபோ வாகனத்திற்கான கருநிற வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

வாகனத்தின் மேற்பகுதியில் டார்ச் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கணினியுடன் இணைக்கப்படுகின்றன.

ரோபோவின் வடிவமைப்பு எளிய முறையில் உள்ளதால் இதற்கு குறைந்த திறனுடைய பேட்டரி போதுமானது.

தொழிற்சாலைகளில் மட்டுமல்லாமல், காடுகளில் விலங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், விவசாயத்துறையிலும் பயன்படும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது சிறப்பம்சமாகும்.

எம். ஆன்டோ அலோசியஸ் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


கட்டளை கேட்க! உயிரைக் காக்க!

இளம் விஞ்ஞானிகள்
எஸ். சுதர்சன், கே.கார்த்திகேயன்
ஸ்ரீமாதா மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்

விபத்துகள் ஏற்படுவதற்கு ஹெல்மெட் அணியாததும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் முக்கியப் பிரச்சினையாக இருப்பதால் இரண்டுக்கும்  தீர்வைத் தர வேண்டும் என்று இந்தக் கருவியைக் கண்டுபிடித்தோம்" என்கிறார்கள், கும்பகோணம் ஸ்ரீமாதா மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் எஸ். சுதர்சன் மற்றும் கே. கார்த்திகேயன்.

ஹெல்மெட்டில் இரண்டு IR சென்சார் (SENSOR), ஒரு கேஸ் சென்சார் (GAS SENSOR) இணைக்க வேண்டும். தகவல்களை அனுப்ப ஒரு டிரான்சிஸ்டரும் இவற்றை இயக்க ஒரு பேட்டரியும் தேவை. திரையானது (DISPLAY) வாகனத்தின் முகப்பில் இருக்கும். இதற்கான தகவல்களைப்பெற ஒரு ரிசீவரும் உண்டு. திரையிலிருந்து சரியான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே வாகனம் ஸ்டார்ட் ஆகும் வகையில் என்ஜினில் ஒரு கிட் பொருத்தப்பட்டுள்ளது.

நீங்கள் ஹெல்மெட்  (HELMET) அணியாமல் வண்டியை ஸ்டார்ட் செய்கிறீர் என்றால் திரையில், ‘ஹெல்மெட் அணியவும்’(WEAR HELMET) என்ற வாசகங்கள் தோன்றி, உங்கள் வாகனம் இயங்க அனுமதிக்காது.நீங்கள் ஹெல்மெட் அணிந்த பின்னரே ஸ்டார்ட் செய்ய இயலும்.

ஒருவேளை நீங்கள் சிறிது தூரம் சென்றபிறகு ஹெல்மெட்டைக் கழட்டினாலும் சில நிமிடங்களில் வாகனம் தானாகவே நின்று விடும்.

உங்கள் ஹெல்மெட்டின் முன்புறமுள்ள கேஸ் சென்சார் நீங்கள் மது அருந்தி இருந்தால் ஆல்கஹால் இருப்பதை உணர்ந்து திரையில், ‘நீங்கள் குடித்துள்ளீர்கள்’ (SORRY YOU DRUNK) என்று காண்பித்து, உங்கள் வாகனம் இயங்க அனுமதிக்காது.

இதனை இரு சக்கர வாகனத்தில் மட்டுமல்ல, காரிலும் (CAR) கூட பயன்படுத்தலாம். முன்பு கூறிய வகையில் ஹெல்மெட்டுக்குப் பதில், காரில் சீட் பெல்ட் (SEAT BELT)அணிந்தால்தான் வாகனம் இயங்கும். ஆல்கஹால் இருந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது.

சு. வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக