Powered By Blogger

வெள்ளி, 10 மே, 2013

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்
ஜவ்வாதுமலையிலிருந்து பூ.சர்பனா

சில்லறைக் காசுகளை அள்ளிவீசியதுபோல சிரித்தபடி சந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சின்னஞ்சிறு இளம்பெண்களின் கூட்டம். அளவுக்கு அதிகமாகப் பவுடர் பூசப்பட்ட முகம்... காதில், கழுத்தில் ஜொலிஜொலிக்கும் கம்மல்... நெக்லஸ் இன்ன பிற அழகிய நகைகள்... தலை நிறைய பூ... கிட்டத்தட்ட ஒரு மணப்பெண்ணைப் போன்ற அலங்காரம். ஆனால், மணம் முடிப்பதற்கான வயது இல்லை.  எல்லோருக்குமே கிட்டத்தட்ட 12 வயசிலிருந்து 15 வயசுக்குள்தான் இருக்கும்.

அதுவரை எங்குதான் காத்துக்கொண்டிருந்தார்களோ, 16 வயதிலிருந்து 20 வயதிற்குள் இருக்கும் சிறுவர்கள்/இளைஞர்கள் பதுங்குகுழிக்குள்ளிருந்து படை எடுத்து வருவதுபோல அந்த சின்னஞ்சிறு சிறுமிகளை நோக்கி பீடுநடை போட்டு வந்துகொண்டிருந்தார்கள். அந்தச் சின்னஞ்சிறு சிறுமிகளின் கண்களிலும் ஒருவித தேடல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

பதினேழு வயதுகூட நிரம்பியிருக்குமா தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. பதினான்கு வயது இருக்கலாம் அந்தச் சிறுமிக்கும். அவன், இவளைப் பார்த்து கண்ணசைக்கிறான். அவளும் அவனைப் பார்த்து கண்ணசைக்கிறாள். இரண்டு கண்களும் என்ன பேசுகின்றன என்று நமக்கு நன்றாகவே புரிகிறது. அவனுக்கு இவளைப் பிடித்துவிட்டது. அவன் இவளிடம் சம்மதம் கேட்கிறான். இவளும் கிரீன் சிக்னல் கொடுக்கிறாள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தச் சிறுவன் இவளை நோக்கி வர... அந்தச் சிறுமியும் அவனை நோக்கிப் பெருமகிழ்ச்சியோடு செல்கிறாள். அந்தச் சிறுமியோடு வந்த மற்ற சிறுமிகள் ஒருவிதப் பொறாமையுடன் கண் சிமிட்டி வழியனுப்புகிறார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் கரம்பற்றி அவனுடன் செல்கிறாள்.

இரண்டு  பேரும் 6 மாதமோ ஒரு வருடமோ திருமணம் செய்துகொள்ளாமல்  கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்வார்கள்.  அதன்பின் இந்தச் சின்னஞ்சிறுசுகள் விரும்பினால், திருமணம் செய்துகொள்வார்கள். பிடிக்கவில்லை என்றால், பிரிந்து விடுவார்கள். இவர்களுக்குப் பிடித்திருந்தால், திருமணம் செய்து வைக்கவும் பிடிக்கவில்லை என்றால், பிரித்து வைக்கவும் ஒரு  தலைவர்  இருக்கிறார். அவருக்கு வயது பதினைந்து.

இது ஏதோ அப்பா-அம்மா விளையாட்டு இல்லை. உண்மையாவே நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்.அதுவும் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் விஷயம். ‘புதிய தலைமுறை’ ஜவ்வாது மலைக்கு இந்த ஏப்ரல் மாதம் நான்கு முறை நேரில் சென்று கண்கூடாகக் கண்ட விஷயம்.

ஜவ்வாது மலையில் நடக்கும் கிராமச் சந்தைகளில் இளம் சிறுமிகள்  கல்யாணம் செய்துகொள்ளப்படாமலேயே ஆண்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும், குழந்தைத் திருமணங்கள் நிறைய நடக்கின்றன என்றும், 30 வயதிற்குள்ளாகவே விதவையான இளம் பெண்கள் வீட்டுக்கொருவர் இருக்கிறார்கள் என்றும் கிடைத்த தகவல்கள் உண்மைதானா எனப் புலனாய்வு செய்யக் களம் இறங்கியது ‘புதிய தலைமுறை’.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜவ்வாதுமலை. ஜவ்வாதுமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நம்மியம்பட்டு சந்தை. புதன்கிழமை மதியம் 1 மணி.

அங்கே நாம் பார்த்ததுதான் நீங்கள் முதல் மூன்று பத்திகளில் படித்த காட்சி. மனம் பதைக்க விஷயங்களைத் துருவத் தொடங்கினோம். யாரிடம் பேசத் தொடங்கினாலும், நாம் அயலூர்க்காரர்கள் என்றதும் குறுக்கெழுத்துப் போட்டியைப் பார்ப்பதுபோல் நம்மை மேலிருந்து கீழாகவும், வலமிருந்து இடமாகவும் பார்த்து விட்டு ஒரு டெரர் லுக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள்.

சந்தைக்கு வந்த ஓர் இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தோம். 23 வயதுகூட நிரம்பாத அந்தப் பெண்ணின். பெயர் மஞ்சுளா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன், மூன்று வயதே ஆன பெண் குழந்தை இவர்களுடன் சந்தைக்கு வந்திருந்தார்.  

எனக்கு பதிமூணு வயசிருக்கும். அப்போதான் இந்த நம்மியம்பட்டு சந்தைக்கு வந்தேன். வூட்டுல இருக்கிற பொண்ணு  வயசுக்கு வந்துட்டா அப்பா, அம்மா சந்தைக்கு அனுப்பி வுட்டுடுவாங்க. சந்தையில எங்களுக்கு யாரைப் புடிச்சிருக்கோ, அவங்கக்கூடப் போய் வாழுவோம். கொஞ்ச நாளு குடும்பம் நடத்துன பெறகு ரெண்டு பேருக்கும் பிடிச்சியிருந்தா, 6 மாசம் இல்லன்னா ஒரு வருஷம் கழிச்சி கட்டிக்குவோம். அப்படிப்  பிடிக்கலன்னா, கொழந்தை இருந்தாலும், வேணாம்னு சொல்லி கட்டின ஆம்பளைங்க அம்மா வூட்டுக்கே கூட்டிட்டு வந்து வுட்ருவாங்க. பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ஊரு நாட்டார்கிட்ட பஞ்சாயத்துக்குப் போனா மட்டுந்தான், கூட வாழ்ந்தவன் கிட்டேயிருந்து ஆயிரக்கணக்குல கொஞ்சம் பணம் கெடைக்கும். பையனைப் புடிக்கலன்னா பொண்ணுங்களும் பிரிஞ்சி வந்து, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்தான்.அதுக்கும் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க.ஆனா, இங்க வாழ்ந்து பார்த்துட்டு  பொண்ணு வேணாம்னு சொன்ன பசங்கதான் அதிகம்.

எங்கம்மாவும் நான் வயசுக்கு வந்தவுடனே இப்படித்தான் என்னையும் சந்தைக்கு அனுப்புச்சு. இங்கதான் வூட்டுக்காரர் சுப்பிரமணியத்தைப் பார்த்தேன். எனக்கும் அவருக்கும் புடிச்சுட்டதால அம்மாகிட்ட சொல்லிட்டு, அவரு வூட்டுல போயி குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.ஒரு வருசங் கழிச்சு, கர்ப்பமா ஆன பின்னாடிதான் நாட்டாரு முன்னால தாலி கட்டினாரு. அடுத்தடுத்து ரெண்டு  கொழந்தைங்களும் பொறந்துடுச்சு. எங்க வாழ்க்கை நல்லாத்தான் போக்கிட்டிருந்துச்சு. சில வருசத்துக்கு  முன்னாடி என் ஊட்டுக்காரரு என்ன நெனைச்சாரோ தெரியல... ‘உன்னைய  எனக்குப் புடிக்கல. ஒங்கம்மா வூட்டுக்கே போ’ன்னு  சொல்லி இடுப்புலயும், கையிலயும் இருந்த ரெண்டு கொழந்தைங்களோட என்னை அனுப்பி வச்சிட்டு, இப்போ வேற பொண்ணுகூட வாழ்ந்துட்டு இருக்காரு.

ஊரு நாட்டார்கிட்டப் போய் புகார் செஞ்சாலும் பையனுக்குப் புடிக்கலன்னா பிரிஞ்சிடச் சொல்லுவாங்க.அவங்க தீர்ப்பை மீறி போலீசுக்குப் போனா, ஊரைவுட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க. நான் படிக்காதவ. எந்த வெவரமும்  தெரியாது. அம்மா வூட்டுல இருந்துக்கிட்டு இந்த ரெண்டு கொழந்தைங்களையும் வெச்சுக்கிட்டு தினம் தினம் செத்துக்கிட்டிருக்கேன்கா. என்னை மாதிரியே  நிறையப் பொண்ணுங்க ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு வெளியில தெரியாம கிடக்கறாங்க.  எங்களுக்கு சொல்லிக்கற மாதிரி எந்த வருமானமும்  கெடையாது. நான் படிக்காததுனாலதான் இந்த நெலமைக்கு தள்ளப்பட்டிருக்கேன்னு மட்டும் புரியுது. எம்புள்ளையாவது படிச்சு, நல்லபடியா வரணும்னு வைராக்கியத்தோடு இப்போ பள்ளிக்கொடத்துல ஒண்ணாவது சேர்த்துவிட்டிருக்கேன். எனக்கு அம்மா மட்டுந்தான். அப்பா சின்ன வயசுலேயே சாராயம் குடிச்சே எறந்து போயிட்டாரு. இன்னும் எத்தனை நாளைக்கு உசுரோட இருந்து எம் புள்ளைங்களை காப்பாத்துவேன்னு தெரியல" என்று பெரியவேர்ப்பட்டு என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் மஞ்சுளா கண்ணீர் வடித்தார்.

படிக்கவேண்டிய வயதில் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுவிட்ட மஞ்சுளாவைப் போன்று இங்கு இன்னும் எத்தனை எத்தனை மஞ்சுளாக்கள்!  கொஞ்ச நேரத்துக்குமுன் நம் கண் முன்னாலே போன அந்தச் சிறுமியின் நிலைமையும் இப்படித்தான் ஆகிவிடுமோ என்று நினைத்தபோது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி மனதில் ஏற்பட்டது.

இவர்களுக்கெல்லாம் திருமணம் செய்துவைக்கும் நம்மியம்பட்டு  ஊர் நாட்டாரைச்  சந்திக்க அவரது வீட்டுக்குப் போனோம். நாட்டார்  வீட்டில் கண்ட காட்சி,  சந்தையைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம், அந்த நாட்டாமைக்கு வயது 14! நம்மை நோக்கி கம்பீரமாக வந்தார். அறிமுகமில்லாத நபர் என்று நம்மைப் பார்த்ததும் அவரது முகத்தில் கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நம்மிடம் பேசினார்.

நாலாவது வரைக்கும் படிச்சிருக்கேங்க. இப்போ எனக்கு 14 வயசாவுது.எங்க தாத்தாவுக்குப் பெறகு நான்தான் நாட்டாரா வரணும்னு 9 வயசுலேயே படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு, அடுத்த நாட்டாரா பட்டம் கட்டிட்டாங்க. எங்க தாத்தாவைப் போலவே 18 கிராமத்துக்கும் கடந்த 4 வருசமா நான்தான் நாட்டாரா இருந்துக்கிட்டு வர்றேன். இங்க ஊராட்சி மன்றத்தலைவருங்களவிட நாட்டாருங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகமுங்க. என் கட்டுப்பாட்டுல இருக்கற  ஊருல யாரு கல்யாணம் பண்ணினாலும் கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கி, என் கையால தாலி எடுத்துக் கொடுத்தா மட்டுமே   மாப்புள்ளை,  பொண்ணு  கழுத்துல தாலி கட்டுவாங்க. கல்யாணம் பண்ணிக்காம ஒண்ணா சேர்ந்து வாழும்போது, பையனுக்கும் பொண்ணுக்கும் புடிக்கலன்னா நான்தான் பஞ்சாயத்துப் பண்ணி பிரிச்சு வுடுவேன்" என்று 14 வயதே ஆன நம்மியம்பட்டு நாட்டார் செத்தியராஜ் நம்மிடம் பெருமையாகக் கூறிக்கொண்டிருக்க, அவரது அப்பா முத்துசாமி பேச்சைத் தொடர்ந்தார்... இந்த ஊரைப்  பொருத்தவரைக்கும் எம்புள்ளை பேச்சைத்தான்   எல்லாருமே கேப்பாங்க. அப்படி யாரு மீறினாலும் அவ்ளோதான். ஒதுக்கி வச்சிடுவோம்"  என்று தன்னுடைய நாட்டார் பெருமையை நிலை நாட்டினார். அவரிடம்  சந்தையில் கண்ட காட்சிகளைப் பற்றிக் கேட்டபோது,  இங்க பொண்ணு வயசுக்கு வந்த கொஞ்ச நாளுலேயே சந்தைக்குப் போயி மாப்புள்ளையைப் புடிச்சிக்குவா. கூடி வாழ்ந்து பார்த்துட்டு, கல்யாணம்  பண்ணிக்கறவங்களும் இருக்காங்க. புடிக்காம பிரிஞ்சு போறவங்களும்  இருக்காங்க. அப்படிப் பிரியறவங்கள்ல அதிகமா பொண்ணுங்களுக்குத்தான் பாதிப்பு. சில பொண்ணுங்க வேற கல்யாணம் செஞ்சுக்குவாங்க. இன்னும் சிலபேரு கொழந்தையை வெச்சுக்கிட்டு அம்மா வூட்டோடவே இருப்பாங்க. வாழாம பிரிஞ்சி போற எல்லாப் பிரச்சினைகளுமே பஞ்சாயத்துக்கு வராது.வாழ்ந்த பையன்கிட்ட இருந்து நஷ்டஈடு வாங்கணும்னு துணிச்சலா  எப்பவாவதுதான்  சில பொண்ணுங்க  வரும்ங்க. பையன்கிட்ட இருந்து 5,000 ரூபாய்  வரைக்கும்  நஷ்டஈடா  வாங்கிக் கொடுக்கறோம். சேர்ந்து  வாழப் புடிக்கலன்னா, அவங்களை கட்டாயப் படுத்தமாட்டோம்" என்கிறார்.

நம்மியம்பட்டில் புதன்கிழமை சந்தை என்றால், ஜமுனாமரத்தூரில்  வாரந்தோறும் திங்கட்கிழமை அதைவிட பெரிய சந்தை கூடுகிறது. ஜமுனாமரத்தூர் சந்தைக்குப்  பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம்.   பட்டறைக்காடு என்ற நிறுத்தத்தில் தங்களை மணப்பெண்போல ஜோடித்துக்கொண்டு நாலைந்து சிறுமிகள் ஏறினார்கள். அவர்களில்  சௌந்தரி என்ற சிறுமிக்கு  வயது 14 இருக்கலாம். அவளுடன் வந்த இன்னொரு சிறுமிக்கு 15 இருக்கும். இதைவிடக் கொடுமை, வயதுக்கு வந்து 2 மாதங்கள்கூட ஆகாத 12 வயதே ஆன அகிலா என்ற சிறுமியும் தாவணி கட்டிக்கொண்டு இவர்களுடன் சந்தைக்குச் செல்கிறாள் என்பதுதான்.  

ஜமுனாமரத்தூரில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், நம்முடன் பேசிக்கொண்டு வந்த சிறுமிகள், பையில் எடுத்து வந்த சிறுகண்ணாடியில் ஓரமாக நின்று தங்களை எப்படி இருக்கிறோம் என்று ஒருமுறை பார்த்துக்கொள்கிறார்கள். ‘என்ன வாங்கப் போறீங்க?’ என்று  கேட்டபடியே சந்தையில் நடந்தபோது, 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனைப் பார்த்தவுடன் நம்முடன் பேசிக் கொண்டிருந்த சௌந்தரி முகத்தில் ஒருவிதச் சிரிப்பும் பரபரப்பும்  தொற்றிக்கொண்டது. ‘யார் அது?’  என்று சௌந்தரியிடம் கேட்டபோது, முகத்தில் வெட்கம் பரவ தயங்கிப் பேச ஆரம்பிக்கிறாள்.  நான் அவருகூட அடுத்த மாசத்துல இருந்து வாழப்போறன்க்கா. இந்த ஜமுனாமரத்தூர் சந்தையிலதான் ரெண்டு பேரும் பார்த்தோம். இங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா போதும், அதுதான் கல்யாணம் பண்றதுக்குத் தகுதி. நான் போன வருசம்  வயசுக்கு வந்தேன். பிடிச்சுருந்தா வாழுவோம். இல்லன்னா பிரிஞ்சு, பிடிச்சவங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம். எத்தனை முறை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். எந்தத் தடையும் இல்ல" என்றவளை, வாழ்த்த மனமில்லாமல் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

என்னக்கா அப்படிப் பார்க்கறீங்க?" என்றாள். நீ பள்ளிக்கூடம் போயிருந்தா பத்தாவது படிச்சிக்கிட்டிருப்பல்ல?" என்று நாம் கேட்டதுதான் தாமதம்... அவள் முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது. தலைகுனிந்துகொண்டாள்.

சிலநேர அமைதிக்குப்பிறகு பேசத் தொடங்கினாள் சௌந்தரி, இங்க பள்ளிக்குடமே கெடையாதுக்கா. எங்க ஊருக்குப் போக ரோடு வசதி இல்ல. மலை மேல ஏறி, காட்டுவழியாத்தான் வூட்டுக்குப் போவோம். படிக்கப் போகணும்னா 8 மைலுக்கு  அப்பாலிருக்கற பட்டறைக்கட்டுக்குத் தான்க்கா நடந்து போவணும். அதுமட்டுமில்ல, நாங்களும் ஏதாவது காட்டு வேலைக்குப் போறதாலதான் சாப்பிடவே முடியுது. எங்களுக்கு மட்டும் படிக்கணும்னு ஆசையில்லையாக்கா?" என்று கூறியபோது அவள் குரல் கம்மியது.

படித்தவர்களும் இந்த வழக்கத்திலிருந்து விலகி விடவில்லை. ஆனால், அவர்கள் நோக்கம் வேறு. மேலமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர் சுரேஷ். படிப்பறிவே இல்லாமல் இருக்கும் இந்தக் கிராமத்தில் ப்ளஸ் டூ படித்தவர். ஆனாலும், இளம் வயதில் திருமணம் செய்துகொண்டவர். எனக்கு இப்போ 18 வயசாவுது. நான் போன வருசம் 12-ஆவது படிக்கும்போதே  வேற ஒரு ஸ்கூலில் 11-ஆவது  படிச்சிக்கிட்டிருந்த வித்யலட்சுமியை இந்தச் சந்தையிலதான் பார்த்து, வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன். எங்க ரெண்டு வீட்லயும் எந்த எதிர்ப்பும் காட்டல. 3 மாசம் என்கூட வாழ்ந்த பிறகு, வித்யாவுக்கு தாலி கட்டினேன். இப்போ அவளுக்கு 17 வயசாவுது.தாலி கட்டிக்கிட்டேதான் போய், 12-ஆவது வகுப்பு பரீட்சை எழுதிட்டு வந்தா. எங்க வீட்ல அவளை  11-ஆவது வகுப்போடவே படிப்பை நிறுத்தச் சொன்னாங்க. ஆனா, நிறையப்பேரு 12-ஆவது முடிச்சா பணம் வரும்னு சொன்னாங்க. அதுனாலதான் எம்பொண்டாட்டியை 12-ஆவது வரைக்கும் படிக்க வெச்சேன்" என்கிறார் சுரேஷ்.

பாதிரி கிராமத்தில் 5-ஆவது வரை அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அதன் தலைமையாசிரியர் கோவிந்தராசு கடந்த 10 வருடங்களாக ஜவ்வாதுமலையில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 230 கிராமங்களுக்கு மேல் உள்ள ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை வசிக்கறாங்க. இங்கு வாழ்பவர்களில் 95 சதவிகிதம் பேர் பழங்குடியின மக்கள்தான். தனியாரின் 3 நர்சரிப் பள்ளிகளும், அரசின் 68 துவக்கப்பள்ளிகளும், 24 நடுநிலைப்பள்ளிகளும், 3 உயர்நிலைப்பள்ளிகளும், தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் 3 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கிவருகின்றன. டவுன் பகுதியிலுள்ள கொஞ்சம் சிறுவர் சிறுமிகள் படிக்க, ஆர்வமுடன் வருகிறார்கள். மற்றபடி கிராமங்களில்இருக்கும் பிள்ளைகளில் கால்வாசிப் பேர்தான் படிக்கிறார்கள். கொஞ்சம் போக்குவரத்து வசதியுள்ள இடங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை துவக்க வேண்டும். மலைவாழ் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காகவே அரசு ஆயிரக் கணக்கில் உதவித்தொகைகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இம்மக்களுக்காக பல நல்ல திட்டங்களும் உள்ளன. ஆனால், யார் கேட்கிறார்கள்?

சந்தையில் பார்த்து பெண் பிள்ளைகளை பசங்க அழைத்துச் செல்லும் வழக்கம் காலங்காலமாக நம்மியம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் சந்தையில் நடைபெற்று வருகிறது. இது மலைவாழ் மக்களின் கலாசாரமாகவே மாறிவிட்டது. அப்படியே இவர்கள் பெண் குழந்தைகளை அழைத்துச் சென்றாலும் தாலி கட்டாமலேயே வாழ்ந்துவிட்டு, சிறுமி கருத்தரித்தால் மட்டுமே திருமணப் பேச்சை எடுக்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் சிறுவர்களும் குடும்பச்சுமை தாங்காமல் சாராயத்திற்கு அடிமையாகி சீக்கிரமே இறந்து போகிறார்கள். பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் திருமணமாகி, இளம் வயதில் சிறுமிகள் விதவையாகும் அவலம் இங்கு மட்டுமே நடக்கிறது. இதில் மலைவாழ் மக்கள் வருடத்தில் 6 மாதம் காடுகளில் மானாவாரியாகப் போடும் நெல், வரகு, சாமை, திணை போன்றவற்றையும் இயற்கையிலேயே விளையும் பலாப்பழம், மாம்பழம், புளி ஆகியவற்றையும் விற்றுத்தான் ஓரளவு வருமானம் தேடிக்கொள்கிறார்கள். வறுமையும் இவர்களை இறுக்கிப் பிரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சேவை செய்யவும் பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், பல தொண்டு நிறுவனங்கள் பணத்தைச் சுருட்டிக்கொள்கின்றன. மலைவாழ் மக்களுக்கு சேவையாற்றுவதில்லை. இதில் நேரடியாகவே அரசு தலையிட்டு, அக்கறையுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று அக்கறையுடன் பேசுகிறார், பாதிரி கிராமத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராசு.

ஜவ்வாதுமலையில் இருந்து வரும் அவல நிலைமை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜ பிங்ளேயுடன் பேசியது ‘புதிய தலைமுறை’  ஜவ்வாதுமலையில் நடக்கும் குழந்தைத் திருமணம், அங்குள்ள சந்தைகளில் சிறுமிகளை மனைவியாக அழைத்துச் செல்வது  பற்றி இதுவரை என் கவனத்திற்கு யாரும் கொண்டுவரவில்லை. அதிர்ச்சியான தகவலாக உள்ளது. பெற்றோர்களின் சம்மதம் இருப்பதனாலேயே சிறுமிகளுக்கு நடக்கும் இந்த இழிநிலையை யாரும் வெளியில் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்" என்று சொன்ன மாவட்ட ஆட்சியர், இந்தத் தகவலை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.கட்டாயம் இதுபற்றி விசாரணை  நடத்துகிறேன். இது உண்மையாக  இருக்குமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும், விழிப்புணர்வைக் கொடுத்து இளம் பெண்களைக் காப்பாற்றவும் செய்கிறோம்" என்று உறுதி அளித்தார். சமீபத்தில்கூட செய்யாறில் நடந்த குழந்தைத் திருமணத்தை மண்டபத்திற்கே சென்று, தடுத்து நிறுத்தி எப்ஐஆர் பதிவு செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

இந்த அவலத்தை மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல முயன்றோம். ஜவ்வாதுமலை திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம்  தொகுதியிலும், கலசப்பாக்கம் தொகுதியிலும்  அமைந்துள்ளது. பல வருடங்களாக தொடர்ந்து கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக  இருந்துவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை 3 முறை போனில் தொடர்புகொண்டு   இந்தப் பிரச்சினை பற்றி பேசியபோது, ‘பிசியாக இருக்கிறேன்’ என்று தொடர்பை  துண்டித்துவிட்டார். செங்கம் தொகுதி தேமுதிக  எம்எல்ஏ  சுரேஷ்குமாரை தொடர்புகொண்டதற்கு, அவரது செல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

பெண்களாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால், ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாசாரத்தில் அந்தச் சிறுமிகளின் எதிர்காலம் ஒவ்வொரு நாளும் பலியாகிக்கொண்டே இருக்கிறது.

இன்னும் மௌனமாகவே இருக்கப் போகிறோமா?


வீட்டுக்கொரு விதவை
இளம் வயது (குழந்தை வயசுன்னுதான் சொல்லணும்!) திருமணங்கள் நடக்கும் இதே மலைவாழ் கிராமங்களில்தான் 80 சதவிகிதத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக, குட்டக்கரை என்ற பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் வீட்டுக்கு வீடு இளம் விதவைகளும், 30 வயதிற்குள்ளாகவே கணவனை இழந்த முதிர்ந்த விதவைகளும் அதிகமாக இருக்கிறார்கள். சரியான வாகனப் போக்குவரத்து இல்லாத குட்டக்கரையிலிருந்து காட்டிற்குள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பாதிரி என்ற கிராமத்தைச் சென்றடைய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. அங்கே ஆண்களைப் பார்ப்பதற்கே அரிதாக இருந்தது. எங்கெங்கும் பெண்களாக மட்டுமே தென்பட்டார்கள். எதிர்பட்ட வசந்தாவிடம் பேசினோம்: எங்க ஊர்ல 60 வூடுங்க கிட்ட இருக்கு. அதுல வூட்டுக்கு ஒரு விதவைங்க இருக்கோம்.  அப்போ எனக்கு பதிமூணு வயசு இருக்கும்ங்க. சந்தைக்குப் போயிருந்தேன். அங்கதான் அவரைப் பார்த்தேன் அவருக்கு 16 வயசு. அவர்கூட போயி வாழ்ந்தேன். ஒரு வருசங்கழிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. ஆனா, எனக்கு கொழந்தை மட்டும் வயித்துல தங்கல. எட்டு மாசக் கொழந்தை, வயித்திலேயே செத்துப்போயிதான் பொறந்தது. எத்தனை முறை கர்ப்பம் ஆனாலும் என் கொழந்த, வயித்தில தங்காது. இந்த சோகம் ஒருபக்கம் என்னைக் கொன்னுக்கிட்டிருக்க" என்ற வசந்தாவால் அதற்குமேல் பேச முடியவில்லை. கண்களில் பீறிட்டு வரும் அழுகையை துடைத்துக் கொண்டு பேசினார்: என்ன காரணம்னே தெரியல. இருந்த என் புருசனும் படுத்த படுக்கையா இருந்து, 8 மாசத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாரு. எல்லாம் என் தலவிதி" என்றபடி அழுதார் வசந்தா.

குட்டக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான தும்பக்காடுக்குச் சென்றபோது வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலைகளில் தனித்தனியாக கட்டப்பட்டிருந்தது. அங்கும் இதேபோல்தான் வீட்டுக்கு ஒரு விதவை இருக்கிறார்கள்.

சின்ன வயசுலேயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.ஒரு குழந்தைக்கூட தங்கல. இங்கல்லாம் இப்படித்தான் எல்லோரும் புருஷன எழந்து, சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்குறோம். வீட்டு வீடு வாசப்படி இருக்கோ இல்லையோ, விதவைங்க இருப்பாங்க. எல்லாம் இந்தப் பாழப்போன சாராயம்தான். சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி, குடும்பச் சுமைய தாங்க முடியாத ஆம்பளங்க, குடிச்சுச் குடிச்சு கொடலு வெந்து செத்துக்கிட்டிருக்காங்க" என்று குமுறி வெடிக்கிறார், இளம் வயதிலேயே தன் கணவனை இழந்த ராணி.


குழந்தைத் திருமணம் கூடாது, ஏன்?
எனக்கு இப்போ  14 வயசிருக்கும். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வயசுக்கு வந்தப்பவே, என் ஊட்டுக்காரரு வூட்டுக்கு வாழ வந்துட்டேன்.கொஞ்ச நாளுலேயே ஒரு கொழந்தைக்கும் தாயானேன். என்னவோ தெரியல, பத்து மாசத்துல,கொழந்தை பொறக்கும்போதே செத்துப் பொறந்துச்சி.டாக்டருங்ககிட்ட ஏன்னு கேட்டதுக்கு, கொழந்தை வளர்ச்சியடைலன்னு சொல்லிட்டாங்க.அதுலயிருந்து இன்னும் எனக்கு கொழந்தைத் தங்கல" என்று கூறினாள் ரேவதி என்ற சிறுமி.

என் பெயர் அம்சா. எங்க ஊரு பழையப்புத்தூர். என் கணவர் பேரு சிவக்குமாருங்க" என்று சொன்ன அந்தச் சிறுமிக்கும் 15 வயதுதான். பார்ப்பதற்கே குழந்தைபோல் இருந்தாள். ஆனால், அவளது கையில் ஒரு குழந்தை, அவளது கையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு குழந்தை. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டதால, உடம்புரீதியா ரொம்பவே கஷ்டங்கள அனுபவிச்சேன். அதுவும் கொழந்தை பெத்துக்கும்போது உசுருப் போயித்தான் உசுரு வந்துச்சு" என்றாள்.

இந்தியாவில் 21 சதவிகிதக் குழந்தைகள்  போதிய வளர்ச்சியில்லாமல், குறைப் பிரசவமாகப் பிறப்பது குழந்தைத் திருமணங்களால்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கர்ப்பப்பை வளர்ச்சியடையாமலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், கர்ப்பப்பை புற்றுநோய்  உண்டாகும் அபாயம் உள்ளது.

18 வயது ஆவதற்கு முன்பு, சிறுமிகளின் இடுப்பு எலும்புகள் வளர்ச்சியில்லாமல் சின்னதாக இருக்கும். இந்நிலையில், குழந்தையாக இருக்கும் அவளே தாய்மையடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, நார்மல் வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்றெடுக்கும் பெண்களைவிட கூடுதல் வலியை அனுபவிப்பாள். மேலும் குடும்பப் பிரச்சினைகளையும் கணவனால் உடல்ரீதியான பிரச்சினைகளையும் சந்திப்பதால், சிறுமிகளுக்கு மன அழுத்தம் அதிகமாகும்" என்கிறார், மகப்பேறு மருத்துவர் டாக்டர். மாலாராஜ்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக