Powered By Blogger

வெள்ளி, 17 மே, 2013

வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று, வாரத்துக்கு ஐந்து கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை குப்பையில் கொட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், இந்தியா முழுக்க ஒரு வாரத்துக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையின் அளவு, சுமார் 52,000 டன் அளவில் இருக்கும். மாதத்துக்கு, வருடத்துக்கு எவ்வளவு டன் குப்பை கொட்டுகிறோம் என்று கால்குலேட்டர் கொண்டு நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இந்தப் பிளாஸ்டிக் கழிவை என்னதான் செய்வது? ஏற்கெனவே உபயோகித்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவது என்பது ஒரு திட்டம். மூன்று, நான்கு முறைகளுக்குமேல் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாது. தின் பிளாஸ்டிக் எனப்படும் இம்மாதிரியான பிளாஸ்டிக்கை கொண்டு, தார்ச்சாலைகளை அமைக்கும் திட்டம் சில காலத்துக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரு - மைசூர் இடையேயான சாலையில் இம்முறை பயன்படுத்தப்பட்டு, பெரும் வெற்றி அடைந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை 2011-12-இல் தொடங்கி, நம் ஊரகப் பகுதிகளில் இதுவரை 1,002 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் இம்முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டும் 1,000 கி.மீ. நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படப் போவதாக முதல்வர், சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். நகரப் பகுதிகளிலும்கூட இப்போது பிளாஸ்டிக் சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் மூலமாக உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகள், முறையாக மறு பயன்பாட்டிற்கு வருகின்றன. அதே நேரம் இதைக்கொண்டு அமைக்கும் சாலைகளும் தரம் வாய்ந்ததாக, நீண்ட காலத்துக்கு உழைக்கக் கூடியதாக இருக்கும். சிக்கனம் மற்றும் தரம் என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம்.

பிளாஸ்டிக் சாலைகளின் சிறப்பம்சங்கள் :
* தற்போதைய சாதாரணச் சாலைகளைவிட இரண்டிலிருந்து மூன்று மடங்குவரை அதிகம் உழைக்கும்.
* பள்ளங்களோ, விரிசலோ ஏற்படாது.
* மழையில் ஈரத்தை உறிஞ்சாது.
* பராமரிப்புச் செலவைக் குறைக்கும்.
*இதில் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக்கை எவ்வகையிலும் உபயோகப்படுத்த முடியாது என்பதால், எரித்து சாம்பலாக்கியோ அல்லது நிலத்தில் புதைத்தோதான் அகற்ற வேண்டியிருக்கும்.

1.5 டன் பிளாஸ்டிக்கை கொண்டு, சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கலாம். இந்தியா, வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாயை புதியதாக சாலைகள் அமைக்கவும், பழுது நீக்கவும் செலவிடுகிறது. மொத்தமாக சாலை பராமரிப்புச் செலவு மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாயை விழுங்குகிறது. பிளாஸ்டிக் சாலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் உழைக்கும் என்பதால், மொத்தச் சாலைகளுமே இவ்வாறு அமைக்கப்படுமாயின்,  வருடத்துக்கு நமக்கு மிச்சமாகும் தொகை, குறைந்தபட்சம் 33,000 கோடி ரூபாய்.

இந்த விஷயத்தில் தமிழகம் விழித்துக் கொண்டு விட்டது மகிழ்ச்சிதான். எல்லாவற்றையும் விட பிளாஸ்டிக்கை குப்பையில் போடும்போது, நமக்கு ஏற்படும் சிறு குற்றவுணர்ச்சி அறவே இருக்காது என்பதுதான் ஹைலைட். இந்த உணர்வினை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கவே முடியாது.

ஆனால், இதையே காரணம் காட்டி,  சாக்கென்று பிளாஸ்டிகை அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிடுவோமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக