Powered By Blogger

வெள்ளி, 17 மே, 2013

முட்டுக்கட்டை அகன்றது; தடை நீங்குமா?

இரண்டு வல்லுநர் குழுக்கள்; இரண்டு நீதிமன்றங்கள்; ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர்; இவர்கள் அனைவரும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள்: கூடங்குளம் அணுமின் உலை பாதுகாப்பானது, அங்கே மின் உற்பத்தியைத் துவக்கலாம் என.

இவர்கள் அனைவரும் துறை சார்ந்த வல்லுநர்கள். நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வரும் நிதானம் கொண்டவர்கள். ஆய்வு மனோபாவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இடிந்தகரை மக்கள் மீது தனிப்பட்ட விரோதம் கிடையாது. பரபரப்பு மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும், அரசியல் லாபம் பெற வேண்டும் என்ற விருப்பம் ஏதும் அவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தங்கள் துறையில் புகழோடு இருப்பவர்கள். சிலர் உலகின் கவனத்தைப் பெற்றவர்கள். நடுநிலையோடு சிந்திப்பவர்கள். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டவர்கள். இவர்களது சொற்களுக்குச் செவி மடுப்பதுதான் நல்லது.

தனது தலையங்கங்களில் தெரிவித்து வந்த கருத்துகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலித்திருப்பதைக் கண்டு, ‘புதிய தலைமுறை’ மகிழ்ச்சி கொள்கிறது. உணவு, உடை வீடு, காற்று, நீர் போல மின்சாரமும் ஓர் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது என்று,  ‘புதிய தலைமுறை’ 20 அக்டோபர் 2011 தேதியிட்ட தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதே போன்ற ஒரு கருத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் இடம் பெற்றுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது என்று அந்தத் தலையங்கத்தில் எழுதியிருந்தோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய நிபுணர்கள் குழு வழங்கியுள்ள 17 அம்சப் பரிந்துரைகளில், 11 நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் இயற்கைச் சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்பதையும் ஏற்று,  கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீர், காற்று ஆகியவற்றில் மாசு ஏற்படும் என்ற அச்சத்தை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதில் தவறேதும் நடக்கவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை எதிரொலித்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேண்டுமானால், மின்சாரம் தேவை என்பது ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம். புனல் மின்சாரம் தயாரிக்க, நம் நதிகளில் போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை. அனல் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் கரி, பெட்ரோல் போன்றவை வளி மண்டலத்தில் கரிப்படிவுகளை ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதலை விரைவுபடுத்தும். கதிரொளி கொண்டு மின்சாரம் தயாரிக்க, ஏராளமான இடமும் முதலீடும் தேவை. காற்று, ஆண்டின் எல்லா நாட்களிலும் கை கொடுக்காது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அணு மின்சாரம் என்பதை நிராகரிக்க இயலாது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நடைமுறை யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட ஓர் தீர்ப்பு. இப்போது மின் உற்பத்திக்கான முட்டுக்கட்டை நீங்கிவிட்டதையடுத்து, விரைவில் மின் உற்பத்தி துவங்க வேண்டும். அதில் கணிசமான அளவைத் தமிழகம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றால், மின்தடை நீங்காவிட்டாலும் தளர வாய்ப்புண்டு.

வெளிச்சம் பிறக்கட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக