Powered By Blogger

வெள்ளி, 17 மே, 2013

நியாயம் கிடைக்குமா?

இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவரும் மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. அவை அனைத்தும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மொத்தக் கூட்டுறவு பண்டக சாலை, பிரதம பண்டக சாலை உள்ளிட்ட சங்கங்களால் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில்  சுமார் 32 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள். உண்மை என்ன?

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பத்து குடும்பங்கள் உள்ளதென்றால், அவர்கள் யாரும் ரேஷன் அரிசி வாங்குவதில்லை. அவர்களின் குடும்ப அட்டைகளை வாங்கி, அங்கு வீட்டு வேலை செய்பவர்கள் அரிசி வாங்குகிறார்கள். ஒரு அட்டைக்கு இருபது கிலோ அரிசி என்றால், 5 அட்டைகளுக்கு 100 கிலோ அரிசி. அதை இரண்டு மூடைகளில் கட்டி ஆட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்கிறார்கள். அவர்களை மடக்கிப்பிடிக்கும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு  அதிகாரிகள், உடனே அரிசி கடத்தல் என்று கூறி, ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்கிறார்கள். இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி.

ரேஷன் கடைகளில், எடை குறைவு என்ற குற்றச்சாட்டு எல்லா இடங்களிலும் உள்ளது. இது நியாயம்தானா?

முன்பெல்லாம் கிடங்குகளில் அரிசியை மொத்தமாகக் கொட்டி, 50 கிலோ  மூட்டைகளாக எடைபோட்டு கடைகளுக்கு அனுப்புவார்கள். அதற்கு சீரமைக்கப்பட்ட (Standardised) மூட்டைகள் என்று பெயர். இப்போது சீரமைக்கப்பட்ட மூட்டைகள் எல்லாம் கிடையாது. 42 கிலோ, 39 கிலோ, 48 கிலோ என்றுதான் மூட்டைகள் வருகின்றன. அதனால், நிறைய இழப்பு வருகிறது. அதை ரேஷன் கடைக்காரர்தான் ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி என்றால், 20 கிலோ பைகளாகப் போட்டுக்கொடுத்துவிட்டால் பிரச்சினையே இருக்காது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் புளி, மிளகாய், பருப்பு போன்ற பொருட்களில் ஈரப்பதம் குறையும். அதனால், எடை குறைகிறது. தராசில் நிறுக்கும்போது அரிசி சிதறுகிறது. மண்ணெண்ணெய் சிந்துகிறது. அதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது?" என்று கேட்கிறார், கிருஷ்ணமூர்த்தி.

முந்தைய திமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையின்போது பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஒரு பையில் போட்டு இலவசமாக வழங்கப் பட்டன. எஞ்சிய பைகள் அப்படியே கிடந்துபோயின. அந்த பாசிப்பருப்பு, முந்திரி எல்லாம் உளுத்துவிட்டன. இப்போது, அதற்கான பணத்தைக் கட்டுங்கள் என்று ஊழியர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாம். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்!

ஆயிரம் குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு ரேஷன் கடை என்றால், ஆயிரம் அட்டைகளுக்குமான பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், 750 அட்டைகளுக்கான ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முழுமையான விற்பனை கூடாது என்ற அதிகாரிகளின் மறைமுக உத்தரவு இருக்கிறது. எனவே, 25 சதவிகிதப் பொருட்கள் விற்காமல் இருக்கும். அதனால், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் என்ற அளவில் அடுத்த மாதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரிசியில் பிரச்சினை இல்லை. துவரம்பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்படுகிறது. எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறிவிடுகின்றனர். மக்களின் கோபத்துக்கு ஆளாவது நாங்கள்தான்" என்று புலம்புகிறார் விழுப்புரத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர் ஒருவர்.

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது. 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த அட்டைதாரர்களுக்கு 4 லிட்டராக குறைக்கப்பட்டுவிட்டது. அதனால், மக்கள் மல்லுக்கட்டுவது என்னவோ, ரேஷன் கடைக்காரர்களிடம்தான்.

மண்ணெண்ணெய் வேண்டுமென்று கேட்டால், கூடவே சோப்பு வாங்கினால்தான், மண்ணெண்ணெய் தருவோம் என்று எரிச்சலூட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் ரேஷன் கடைக்காரர்கள் மீது உள்ளது.

இப்போது சோப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயம், பொட்டுக்கடலை, டீத்தூள், வேர்க்கடலை போன்ற பொருட்களை விற்கும் வேலையும் எங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சோப்பில் நுரையே வராது. பெருங்காயம் கரையவே கரையாது. எப்படியாவது விற்க வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு. அதை விற்கவில்லை என்றால், அதற்கான பணத்தை நாங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் தலையில் கட்டியதை, நாங்கள் மக்கள் தலையில் கட்டுகிறோம். எங்கள் கையில் என்ன இருக்கிறது?" என்று பரிதாபமாகக் கேட்கிறார், மயிலாப்பூரில் ரேஷன் கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

மின்வெட்டு நிறைந்த தமிழகத்தில், எல்லா ரேஷன் கடைகளுக்கும் மின் தராசு வழங்கப்பட்டிருக்கிறது. மின்சாரமே இல்லாத நிலையில் மின் தராசை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? பொருள் வழங்கவில்லை என்றால், மக்கள் கொந்தளிக்கிறார்கள். எல்லா ரேஷன் கடைகளிலும் மேலதிகாரிகள் செல்போன் எண்கள் எழுதி வைக்கப்பட்டு இருப்பதால், மேலதிகாரிகளுக்கு உடனடியாக புகார்கள் பறக்கின்றன. ரேஷன் கடை ஊழியருக்கு ஆப்படிக்கப்படுகிறது.

திருப்பூர் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கடையில் வேலை செய்கிறேன். தினமும் மாலையில் கடையைப் பூட்டிவிட்டு, சாவியை திருப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன். காலையில் மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று சாவியை வாங்கிக்கொண்டு 15 கி.மீ. பயணம் செய்து கடைக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால், சற்று தாமதமாகி விட்டாலும் உடனே அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் போய்விடுகிறது. காலை ஒருகடை மாலை ஒரு கடை என 2 கடைகளை கவனிக்கிறேன். நாங்களும் மனிதர்கள்தானே?" என்கிறார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர்.

ரேஷன் கடைகளில் பழைய கோணிப்பைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. ஒரு கோணிப்பையின் விலை ரூ11.20. எலி கடித்த, குத்தூசி போட்டதால் கிழிந்த கோணிப்பைகளுக்கு 7-8 ரூபாய்தான். அதனால் ஏற்படும் பற்றாக்குறையை எங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு  ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. இன்ஸ்பெக்ஷன், ரெய்டு, வெரிஃபிகேஷன் என்ற பெயர்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், உணவுப்பிரிவு அதிகாரிகள் என பெரும் படையினர் நடத்திவரும் சோதனைகளுக்கு அளவே இல்லை என்று புலம்புகின்றனர், ரேஷன் கடை ஊழியர்கள்.

ஆயிரம் குடும்ப அட்டைகள் கொண்ட ஒவ்வொரு கடைக்கும் விற்பனையாளர், எடையாளர் என இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், பல கடைகளில் விற்பனையாளர் ஒருவர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. விற்பனையாளர்களாக உள்ள பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் மண்ணெண்ணெய் பீப்பாயைத் தூக்கி நகர்த்த முடியுமா? அரிசி மூட்டையைத் தூக்க முடியுமா? எனவே, இவர்களே ஓர் உதவியாளரை தினக்கூலி அடிப்படையில் நியமித்துக் கொள்கின்றனர். அவருக்கான ஊதியத்தை இவர்களே வழங்குகின்றனர். அதிகாரிகள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினரையும் இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், அவர் மீது மொட்டை பெட்டிஷன்கள் பறக்கும்.

தூசிகளுக்குள்ளே புழங்குவதால், ரேஷன் கடை ஊழியர்களில் பலருக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் வருகின்றன. அவர்களுக்கு அரசிடம் இருந்து எவ்வித மருத்துவ உதவியும் கிடையாது. அரசு ஊழியர்களுக்கு இணையாக மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று திமுக ஆட்சியின்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த முயற்சியும் இல்லை. பணி  நிரந்தரமும் ஓய்வுதியமும்கூட இல்லாமல்தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். பெண் ஊழியர்கள் பணியாற்றும் பல ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள்கூட கிடையாது.

ஆனாலும், இந்த வேலைக்கும்கூட கடும் போட்டி உள்ளது. சமீபத்தில் சுமார் நான்காயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர்.

டிகிரி படிச்சிட்டு விவசாயம் செய்தேன். தொடர்ச்சியாக நஷ்டம். இரண்டாண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். சும்மா இருப்பதற்கு இந்த வேலையாவது பார்க்கலாமே என்று முடிவு செய்தேன்" என்கிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த மதிவாணன்.

இலவச கிரைண்டர் -மிக்ஸி, இலவச வேட்டி சேலை, இலவச அரிசி, வெள்ள நிவாரணம் என அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் நாங்கள்தான். இந்தியாவிலேயே பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதில் எங்கள் பங்கு முக்கியமானது. அப்படிப்பட்ட எங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் என்ன? நியாய விலைக் கடை ஊழியர்களான எங்களுக்கு, அரசு நியாயம் வழங்குமா?" என்று கேட்கிறார், திருமங்கலத்தைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக