Powered By Blogger

வெள்ளி, 10 மே, 2013

‘ஐகிட்’ வாண்டு?

உங்கள் வீட்டிலும் இருக்கிறதா ஒரு, ‘ஐகிட்’ வாண்டு?
அப்படின்னா, நீங்கதான் அவசியம் இதைப் படிக்கணும்!
கீதா, யுவகிருஷ்ணா


நாலரை வயது நிலா, யூ.கே.ஜி. தேறி ஒன்றாம் வகுப்புக்குச் செல்கிறாள். அப்பாவின், ‘ஐபேட்’தான் அவளுடைய விளையாட்டுக் களம். ‘ஐபோன் அப்ளிகேஷன்’களாக கிடைக்கும் நூற்றுக்கணக்கான ‘கேம்’களை விளையாடி அலுத்துவிட்டாள். இந்தக் கோடை விடுமுறையைக் கழிக்க, ‘ஃபன்புக்’ வாங்கித்தரும்படி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். புதுசு புதுசாக வரும், ‘டச் ஸ்க்ரீன் கேட்ஜட்’களைப் பற்றி எப்படித் தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தைக்குத் தெரியவருகிறது என்று ஆச்சரியப்படுகிறார் அப்பா.

சாப்பிடும், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து மீதி நேரங்களில் டச் ஸ்க்ரீன் கருவியை நோண்டியபடியே இருக்கும் குழந்தைகளை செல்லமாக, ‘ஐகிட்ஸ்’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அயல்நாடுகளில். விஞ்ஞானிகள் இவர்களுக்கு, ‘டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ என்று புதுப்பெயர் சூட்டுகிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏன் டச் ஸ்க்ரீனை ரொம்பப் பிடிக்கிறது?

கம்ப்யூட்டரிலோ, டி.வி.யிலோ விளையாட வேண்டும் என்றால் கீபோர்டையோ, மவுஸையோ, ஜாஸ்டிக்கையோ எப்படிப் பிடிக்க வேண்டும்,  பயன்படுத்த வேண்டும் என்று தனியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். டச் ஸ்க்ரீன் கருவிகளுக்கு விரல்களே போதுமானவை. எழுத்துக்களாக போர் அடிக்காமல், கலர் கலர் காட்சிகளாக விரிவதுதான் டச் ஸ்க்ரீன் அப்ளிகேஷன்களின் அடிப்படைக் கவர்ச்சி. கற்பது தொடர்பான அப்ளிகேஷன்கள் கல்வி கற்பிக்கிறோம் என்கிற டீச்சர்த்தனமான அடாவடியாக இல்லாமல், விளையாட்டு போலவே நட்புப்  பாராட்டி, விஷூவலாக சொல்லிக் கொடுக்கிறது. தவறு செய்யும்போது திட்டாமல், மண்டையில் குட்டாமல், சரியாக எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக டி.வி., கம்ப்யூட்டர் மாதிரியாக இல்லாமல் இக்கருவிகளை, தானே கட்டுப்படுத்த முடிகிறது என்கிற அதிகாரம் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

அண்மையில் வெளியாகியுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தொடுதிரைக் கருவிகள் (ஸ்மார்ட் போன், டேப்லெட்) போன்றவை, குழந்தைகள் பல விஷயங்களை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு உதவும் என்று தெரிவிக்கிறது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். எனவே டேப்லெட், ஸ்மார்ட் போன் போன்றவற்றைக் கொடுத்தால் அந்தத் தொழில்நட்பத்தை பெரியவர்களைவிட விரைவாக கற்றுக் கொள்வார்கள். குறிப்பாக டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் இருக்கும் விளையாட்டுக்கள், காணொளிகள் போன்றவற்றை குழந்தை தொடத் தொட புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வந்த வண்ணம் இருந்தால், அது குழந்தையின் கற்கும் திறனை ஊக்குவிக்கிறது. இந்தத் தொடுதிரையுடன் அதிகமாகப் புழங்கும் குழந்தைகள், அதில் சொல்லப்படும் விஷயங்களை எளிதாக உள்வாங்கிக் கொள்கின்றன" என்கிறார், இந்தப் புதிய ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஹெதர் கிரிகோரியன்.
ஆனால், தொடுதிரைக் கருவிகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்கிறார்கள் உளவியலாளர்கள். சிறுவயது அனுபவங்கள்தான் குழந்தைகளின் வாழ்க்கைக்கான அஸ்திவாரம். தொடுதிரை கருவிகளைக் கொண்டு அறைக்குள் அடைந்துவிடும் குழந்தைகளுக்கு வெளியுலகைப் பற்றி என்ன பெரிய அனுபவம் கிடைத்துவிடும் என்பது இவர்களது முதன்மையான கேள்வி.

உளவியலாளர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் நல மருத்துவர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். ஜெயந்தினி, ‘தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அவசியம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். ஆனால், 5 வயதிற்குமுன் இதுபோன்ற விஷயங்களில் குழந்தைகளைப் பழக்குவதில் மருத்துவ ரீதியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. மூளையில் உள்ள நியூரான்களின்மேல் மெல்லிய உறை (axon) இருக்கும்.

5 வயதாகும்போதுதான் இவை முழுமையாக வளர்ச்சி அடையும். அதிக நேரம் கணினி, டி.வி. என்று மின் சாதனப் பொருட்களுடன் குழந்தை செலவிடும்போது, இந்த மெல்லிய உறையின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

சில குழந்தைகளுக்குப் பேசுவதில், புதிய விஷயங்களைக் கற்பதில் தாமதம் ஏற்படும். அப்படிப்பட்ட குழந்தை அதிக நேரம் டேப்ளட்டுகள், டச் ஸ்கிரீன்களுடன் இருந்தால் பேசுவது, கற்றுக் கொள்வது மேலும் தாமதமாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கம்ப்யூட்டருடனேயே அதிக நேரம் செலவிடும் குழந்தை, physical activities என்று சொல்லப்படும் உடல் ரீதியான செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் வளரும். இதனால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். Socialization எனப்படும் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவது, விளையாடுவது போன்ற விஷயங்களை இயல்பாக கற்றுக்கொள்ளாமல் தனிமையாக இருக்கும்.  மணிக்கணக்கில் காணொளியாகவே பார்த்து கற்கப் பழகும் குழந்தை, காலப்போக்கில் எதையும் காட்சிகளாக காட்டினால்தான் புரிந்து கொள்ளும்" என்கிறார்.

நம் கண்கள், தலையைத் திருப்பாமலேயே சாதாரணமாக வலப்பக்கம் 60 டிகிரி, இடப்பக்கம் 60 டிகிரி பார்க்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இளம் வயதில் நேர் பார்வையாக டி.வி., கணினி போன்றவற்றைப் பார்க்க கண்களைப் பழக்கப்படுத்தாவிட்டால், வளர்ந்த பிறகு விழிகளை நகர்த்துவது கூடப் பெரிய வேலையாகத் தோன்றும் என்கிறார்கள் சிலர்.

குழந்தைகளுக்கு தொடுதிரைக் கருவிகள் நல்லதா, கெட்டதா? தெரியலையேங்க!
 


தொடுதிரை எப்படி வேலை செய்கிறது?

‘தொட்டால் பூ மலரும்’. இது எம்.ஜி.ஆர். காலப் பாட்டு. ஆனால் செல்போன், ஏ.டி.எம். இயந்திரம், டேப்லெட் எனப்படும் பலவகைக் கணினி இப்படிப் பலவற்றைத் தொட்டால் உயிர் பெறும் என்பது இன்றைய அறிவியல் அற்புதம்.

எப்படி இது சாத்தியமாகிறது?

உங்கள் செல்போனின் முகம் போலிருக்கும் கண்ணாடித் திரையை இரண்டு அடுக்குகள் மூடி இருக்கின்றன. ஒன்று, தொடுவதை இயந்திரத்திற்கு உணர்த்தும் கடத்தி (conductive layer). மற்றொன்று, தடை/மாற்றம் ஏற்படுத்தும் உலோக அடுக்கு (Resistive metallic layer). இந்த இரு அடுக்குகளிடையே ஒரு சிறிய மிகச் சிறிய இடைவெளி. இந்த வெளியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் விரலால் அழுத்தியதும், இரண்டு அடுக்குகளும் அழுத்தப்பட்ட புள்ளியில் சந்திக்கின்றன. அதனால், மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தையும், அது எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கைபேசிக்குள் இருக்கும் கணினி கவனிக்கிறது. உடனே ஒரு டிரைவர் மூலம் அது கணியின் இயங்குதளத்திற்கு அது புரிந்துகொள்ளும் வகையில் தகவல் அனுப்புகிறது. நீங்கள் மேசைக்கணினியைப் பயன்படுத்தும்போது, மௌசை நகர்த்தும்போது அது ‘புரிந்து’ கொள்கிறதல்லவா? அதே போல்தான் இது.

இது ஒரு முறை. இன்னொரு வகைக் கருவிகளும் இருக்கின்றன. அவை capacitive என்ற முறையில் இயங்குகின்றன. இதன் அடிப்படை, எளிமையான ஓர் உண்மை. மனிதன் என்பவன், ஓர் உயிர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் பொறியாளர்கள் அவனை ஒரு ஒயர் என்றும் பார்க்கிறார்கள். அதாவது அவனாலும் மின்சாரத்தைக் கடத்த முடியும்.

செல்போனின் கண்ணாடித் திரைக்குமேல் மின்சாரத்தை சேமித்து வைத்திருக்கும் ஓர் அடுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் திரையைத் தொடும்போது, அந்த சேமித்து வைக்கப்பட்ட மின்சாரத்தில் கொஞ்சூண்டு உங்கள் விரல் வழியே கடத்தப்படுகிறது. அதனால், திரைமேல் உள்ள அடுக்கில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைகிறது. ஐய்யய்யோ, கையிருப்பு குறைஞ்சு போச்சே என்கிற தகவல், கருவியின் மூளைகளில் ஒளிந்துள்ள சர்க்யூட்களால் டிரைவர்களுக்கு, அதற்குப்பின் மேலே உள்ளது போல்தான். கணினி டிரைவர்கள் இயங்குதளத்தை இயக்க வேலை நடக்கிறது.

இந்தத் தொழில்நுட்பம் 1965-லேயே இ.ஏ.ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அது பிரபலமாகியிருப்பது அண்மைக்காலத்தில்தான்.

இன்னொரு சின்ன விஷயம், ஜான்சனுக்கு முன்பே இயற்கை இதைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. சான்று: தொட்டாற்சிணுங்கி என்று ஒரு செடி இருக்கிறதே, பார்த்திருக்கிறீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக