Powered By Blogger

வெள்ளி, 30 நவம்பர், 2012


அண்மைக் காலமாகச் செய்திகளில் அடிபடும் கறுப்புப் பணம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? எங்கு சேமிக்கப்படுகிறது?

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.6,000 கோடி கறுப்புப் பணத்தை 700 இந்தியர்கள் போட்டு வைத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாயின.இதற்கும் முன்னதாக, 2010-ஆம் ஆண்டிலேயே வாஷிங்டனில் உள்ள பன்னாட்டுக் கொள்கை மையத்தின் நிதி ஆராய்ச்சிப் பிரிவான ஜி.எஃப்.ஐ. (Global Financial Integrity) என்ற அமைப்பு இந்தியாவில் இருந்து ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 240 கோடி ரூபாய் சட்ட விரோதமாக வெளியேறுவதாக தகவல் வெளியிட்டது.

இந்திய அரசியலை, மக்களை ஆட்டிப்பார்க்கும் இந்தக் கறுப்புப் பணம் என்றால் என்ன?
வரி கட்டாமல் மறைக்கப்படும் பணமே, கறுப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணம். (கணக்கில் காட்டினால்தான் வரி கட்ட வேண்டுமே).

இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? இதன் ஊற்றுக் கண் என்ன?
லஞ்சம், வெளியில் தெரியாத கமிஷன், அரசாங்கத்திற்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குப் பொருட்கள் வாங்கும்போது நடக்கும் பேரம், அந்தப் பொருட்களின் விலையை இன்வாய்சில் கூடுதலாகக் காண்பித்து பெறும் உபரியான லாபம், ஹவாலா பணப் பரிமாற்றங்கள், வரி ஏய்ப்பு போன்ற குற்ற நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்து பதுக்கி வைக்கப்படும் பணமே கறுப்புப் பணம்.

இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு வெளியே சில வங்கிக் கணக்குகளில் போட்டு வைக்கிறார்கள். அந்த வங்கிக் கணக்குகள் பல நேரம் நேரிடையாக பணத்திற்கு உரிமை கொண்டாடுபவர்களின் பெயரில் இராது. புனைப் பெயர்கள், குறியீட்டுப் பெயர்கள், பெயர்களின் முதலெழுத்து இவற்றின் அடிப்படையில் அமைவது வழக்கம்.

இப்படிக் கணக்குகள் துவக்கிக்கொள்ள சில நாட்டு அரசுகள் வங்கிகளை அனுமதிக்கின்றன. கணக்கு துவக்கியுள்ளவர்களின் பெயர்களை ரகசியமாகக் காக்கின்றன. சுவிட்சர்லாந்து, மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மனி அருகேஉள்ள லீக்டான்ஸ்டைன் போன்ற நாடுகள் இதற்கு ஓர் உதாரணம். மொரிஷியஸ், ஐல் ஆஃப் மான், செயிண்ட்கிட்ஸ் போன்ற அரசுகள் போலி நிறுவனங்களைத் துவக்கி நடத்தவும் அனுமதிக்கின்றன. இவற்றை வரிப் (ஏய்ப்புக்கான) புகலிடங்கள் (Tax Havens) என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த அரசுகள் இதை ஏன் அனுமதிக்கின்றன?
இந்த நாடுகள் சிறிய நாடுகள்.இவற்றில் பல தீவுகள் அல்லது பனிபடர்ந்த மலைப் பிரதேச நாடுகள்.தொழில் துவக்கி நடத்துவதற்குரிய இயற்கை வளங்களோ, வேளாண்மையில் ஈடுபடுவதற்குரிய நிலப்பரப்போ, பருவ நிலையோ கொண்டிராதவை. இந்த நாடுகளின் பொருளாதாரம், வங்கி, சுற்றுலா, ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்து உள்ளன. பணக்கார நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, போன்ற பணக்கார நாடுகளுக்கு அருகில் இவை அமைந்திருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து முதலீட்டை ஈர்க்க இந்த நாடுகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. விளம்பரங்கள் மூலம் மற்ற நாடுகளின் கறுப்புப் பணத்தை தங்கள் வங்கிகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களைத் தேடுகின்றன. தேவையானால் நேரடியாகவே தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, முதலீட்டை பெற்றுக்கொள்கின்றன. முதலீடு செய்தவர்களுக்குப் பணம் தேவைப்படும்போது, இந்த வங்கிகளின் பிரதிநிதிகள் நேரடியாகவே அவர்களைச் சந்தித்து பணத்தை அளிக்கின்றன.

இப்போது உலகமெங்கும் இது போன்ற நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணக்கு வைத்திருப்போரின் பெயரை வெளியிட வேண்டும் என வற்புறுத்துகின்றன. ஜி.20 நாடுகள் வரி ஏய்ப்புப் புகலிட நாடுகளின் கறுப்புப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா இந்தப் பரிவர்த்தனைகளுக்கு எதிராக சட்டம் இயற்றியிருக்கிறது. ஜெர்மனி, சட்டம் இயற்ற உத்தேசித்திருக்கிறது. இதுகுறித்து பல நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இந்திய அரசு சொல்கிறது.

ஆனால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மேற்கு ஐரோப்பாவில் உள்ள லீக்டான்ஸ்டைன் போன்ற நாடுகளில் கறுப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவருகிறது. 2008-ஆம் ஆண்டில் இதுபற்றிய விவரங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டபிறகு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கி திரும்பவும் இந்தியாவுக்கே கொண்டு வருவதும் சாத்தியமாகியிருக்கிறது.

 2009-ல் மத்திய அரசு, பங்குச் சந்தைகளில் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம் (Participatory notes) முதலீடு செய்யும் முறையை அனுமதித்தது. வெளிநாட்டிலிருந்து நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்பவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது. இந்த வகையான பத்திரங்களில் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற கறுப்புப் பணத்துக்கு கடிவாளம் இடும் அமைப்புகள் இல்லையா? சில வகைகளில் இதைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் சில உதவும்.

கறுப்புப் பணத்துக்கு எதிரான ஒப்பந்தம்:
2003-ல் கறுப்புப் பணத்துக்கு எதிரான ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டது. அதில் இந்தியா உள்பட 140 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசு கேட்டால், சம்பந்தப்பட்ட நாடு அதை இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். 2004வரை ஆட்சியில் இருந்த பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. 2004-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி இதுவரையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய புலனாவுக் கழகம் (CBI)
தில்லி ஸ்பெஷல் போலீஸ் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. சமூகக் குற்றங்கள், பெரும் மோசடிகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றை சி.பி.ஐ. புலனாய்வு செய்யும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC)
அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிப்பதற்காக 1964-ல் உருவாக்கப்பட்ட அமைப்புதான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்படக்கூடிய இந்த அமைப்பில், லஞ்சம் குறித்து பொதுமக்கள் புகார் தரலாம். இந்த அமைப்பின் தலைவராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமிக்கிறது. ஆனால், இது ஒரு புலன் விசாரணை அமைப்பல்ல. தன்னிடம் வரும் புகார்களை விசாரிக்கும்படி சிபிஐயிடம் கூறலாம் அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுத்துறைக்குப் பரிந்துரைக்கலாம்.

மத்திய தணிக்கை அமைப்பு (CAG)
 மத்திய, மாநில அரசுகள், அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் வரவு-செலவுகளைத் தணிக்கை செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இதன் தலைவரை இந்திய குடியரசுத் தலைவரே நேரடியாக நியமிக்கிறார். ஊழல் நடந்திருப்பது தெரிந்தாலும், இந்த அமைப்பால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதன் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். நாடாளுமன்றக் குழு (பொதுக் கணக்குக் குழு) இந்த அறிக்கையைப் பரிசீலிக்கும். மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மாநிலச் சட்டமன்றங்களில் இதன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம்
பொதுத்துறை ஊழியர்கள் (Public Servant) ஊழல் செய்தால், அவர்களைத் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது ஊழல் தடுப்புச் சட்டம். அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் போன்றவர்கள் பொதுத்துறை ஊழியர்கள் என்று உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. ஆனால், இச்சட்டத்தின் 19-வது பிரிவு, பொதுத்துறை பணியாளர்கள் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் அவரை நீக்கும் அதிகாரம் கொண்டவர்களிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும் என்று பொடிவைத்துள்ளது.

லோக்பால், லோக் அயுக்த்
 1966-ல் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) ஊழலைத் தடுக்க மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் அயுக்த் மசோதா கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தது. 1969-ல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அது சட்டமாக வரவேண்டுமானால், மாநிலங்கள் அவையிலும் ஒப்புதல் பெறவேண்டும். 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011 எனப் பலமுறை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

லோக்அயுக்தா மசோதா இதுவரை 19 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC)
குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை விசாரிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருப்பார். குறிப்பிட்ட விவகாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிடவும், தேவையானால் வழக்குப் பதிவு செய்யவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)
 அரசுத் துறைகள் மற்றும் அரசு அமைப்புகளிடம் உள்ள ஆவணங்களையும், தகவல்களையும் சாமானிய மக்களும் பெறும் வகையில் 2006-ல் கொண்டு வரப்பட்டதுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றுகிறது. நாட்டின் பாதுகாப்பு போன்ற காரணங்களைக்காட்டி சில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த அமைப்புகளைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பெற முடியாது.

வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் (Tax Information Exchange Agreement)
கறுப்புப்பணத்தை அடியோடு வேரறுக்க இந்தியா, பஹாமா, பர்முடா, மோனாக்கோ, அர்ஜென்டினா, மார்ஷல் தீவுகள் உள்ளிட்ட 10 நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப்படி, 2011, ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து தன்னிடம் கணக்கு வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்களைப் பற்றிய தகவல்களை தவறாமல் வழங்க சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டது.

ஊழலை ஒழிக்க, கறுப்புப் பணத்தை தடுக்க நாட்டில் எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றிலுள்ள ஓட்டைகளைப் பெரிதாக்கி, குற்றவாளிகள் எப்படியோ தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

உலக அளவில் நடவடிக்கைகள்
அமெரிக்காவின் உலக நிதி ஒழுங்குநிலை (ஜி.எஃப்.ஐ.) அறிக்கைப்படி, 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டு காலத்தில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சட்டத்துக்குப் புறம்பான வழியில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாகக் கடத்தப்படும் அந்தப் பணம், லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, கமிஷன், குற்ற நடவடிக்கைகள் போன்ற முறைகேடுகள் மூலம் சம்பாதித்த பணம் என்கிறது அந்த அறிக்கை.

 2001-ல் நியூயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டபிறகு, பயங்கரவாதச் செயல்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று அமெரிக்கா சந்தேகப்பட்டது. கறுப்புப் பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நாடுகள் எந்தெந்த நாடுகளிலிருந்து இந்தப் பணம் வருகிறது போன்ற தகவல்களைத் தன்னிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா சட்டமியற்றியது. 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிஸ் வங்கியான UBS AG மீது அதனிடம் உள்ள 52 ஆயிரம் அமெரிக்கர்களின் கணக்கு பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டு வழக்குப் போட்டது. 2009-ஆம் ஆண்டு ஏப்ரலில் லண்டனில் கூடிய ஜி20 நாடுகள் கறுப்புப்பணத்தை வரவேற்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பது உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களைத் தயாரித்தன. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.  அதற்குப் பிறகு, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து பல கோடி டாலர்களை மீட்டன.

இந்தியா ஜி20 நாடுகளில் ஒன்றாக இருந்தபோதும், எந்த நாட்டோடும் வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் எதையும் இதுவரை செய்துகொள்ளவில்லை. 2009-க்குப் பிறகு மற்ற நாடுகள் துரிதமாகச் செயல்பட்டு தமக்குரிய பணத்தை மீட்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் செயலில் இறங்காமல் சாக்குப்போக்குச் சொல்லி வருகிறது.

இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கே திரும்பக் கொண்டுவந்தால், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

‘தமிழ்நாட்டில் இருந்த 39,200 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன’ என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தகவல். இதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள கண்மாய்கள், ஏரிகளின் தற்போதைய நிலைமை என்ன? ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்

ப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 31 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இந்தப் பருவத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட இது 26 சதவிகிதம் அதிகம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கிறார்கள். காரணம், சம்பா பயிருக்கு இன்னும் 70 நாட்களுக்கு நீர் வேண்டும். மேட்டூர் அணையின்  நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. தினம் ஒரு டி.எம்.சி. வீதம் நீர் திறந்து விட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கே வரும்.

எப்படி சம்பா நெல்லைக் காப்பாற்றி மகசூல் எடுக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். இந்த முறை நல்ல மழை பெய்கிறது, ஆனால், இந்த மழையை எங்களால் இப்போது மட்டும்தான் பயன்படுத்த முடியும். மழைநீரை சேமித்துவைத்துப் பயன்படுத்த எந்த வசதியுமில்லை. இந்த மழைநீர் வடிவதற்கான சரியான வடிகால்கள் இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அழுகும் அபாயமும் உள்ளது" என்கிறார், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி.

மத்திய, மாநில அரசுகள் பேசி கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைப் பெற்றுத் தராதா என்று மீண்டும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் ஏன் இந்த நிலை? நம்மால் மழை நீரை போதுமான அளவு சேமிக்க முடியாதது ஏன்?

மழை நீரை சேமிக்க நம்மிடம் இருந்த ஆறுகளும் ஏரிகளும் கண்மாய்களும் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. முன்பு மழைக்காலத்தில் கண்மாய்களில் சரியான முறையில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் ஆற்றுப்பாசனத்தை சார்ந்திராத  கடைமடைப் பகுதிகளில்கூட விவசாயம் நடைபெற்றன.  தமிழ்நாட்டில் இருந்த 39, 200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22% நீரை சேர்த்துவைக்க திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் (International Water management Institute - IWMI) இயக்குனரான பழனிச்சாமி.

தொடர்ந்து அவரே, தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறைவு என்பதால் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்மாய்கள் பரவலாக உள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளில் பெரும்பாலானோர் கண்மாய் பாசனத்தைத்தான் நம்பியுள்ளனர். கிராமங்கள் மட்டுமில்லாமல், நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நகரங்களில் அதிக அளவு மழை பெய்யும் போது, வடிகாலாக கண்மாய்கள் பயன்பட்டதால் நகரங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பின. ஆனால், தற்போது நகரங்களில் இருந்த கண்மாய்கள் குடியிருப்புப் பகுதிகளாகவும், பஸ் ஸ்டாண்டுகளாகவும் மாறியதன் விளைவு, சின்ன மழைக்குக்கூட நகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாகின்றன.

புவி வெப்பமடைந்து வருவதால், உலகின் பல பகுதிகளிலும் பருவ நிலை மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. வரும் காலத்தில் தமிழகத்தில் பருவ மழைக்காலம் குறையும். ஆனால், மழையின் அடர்த்தி 10% முதல் 15% வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக இருக்கும் பருவ மழைக்காலம் 32 நாட்களாகக் குறைவது மட்டுமின்றி, நாள் முழுதும் பெய்யக்கூடிய மழை அளவு, 2 மணி நேரத்தில் பெய்யும். இதனை சமாளிக்க நமது நீர்நிலைகள் தயாராக இல்லையெனில், வெள்ளம் ஏற்படுவதுடன், மழை நீரை சேமிக்க முடியாமல் போகும்.

வெப்பம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். கிணறுகளை வெட்டி, கிணற்றுப் பாசனம் செய்துவிடலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், கால்வாய்களில் இருந்து கண்மாய்களுக்குச் செல்லும் நீரோட்டம் தொடர்ந்தால்தான் நிலத்தடி நீர் அதிகரிக்கும். கிணறுகளில் நீர் கிடைக்கும். மொத்தத்தில் கண்மாய்கள் இல்லையெனில், பல இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க முன்வர வேண்டும்" என்றார் பழனிச்சாமி.

100 ஆண்டுகளாக தமிழகக் கண்மாய்கள்  சங்கிலித்தொடர் அமைப்பு கொண்டிருக்கின்றன. சங்கிலித்தொடரின் முதல் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கும். முதல் கண்மாய் நிரம்பியதும் உபரி நீர், கால்வாய் வழியாக அடுத்த கண்மாயில் பாயும். அந்தந்தப் பகுதிகளில் விழும் மழைநீர் அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் சேரும். இப்படியாக அனைத்துக் கண்மாய்களிலும் வரிசையாக நீர் நிரம்பி, கடைமடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். தற்போது கண்மாய்களை இணைக்கும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் சங்கிலித்தொடரும் அறுந்து போயுள்ளது.

முன்பு கண்மாய்களை அந்தந்தப் பகுதி விவசாயிகள் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பழக்கம் இருந்தது. அதற்கு வண்டல்மண் அள்ளுவது என்று பெயர். மழைக்காலத்திற்கு முன்பு கண்மாயில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணை மாட்டுவண்டிகளில் விவசாயிகள் அள்ளுவார்கள். இதனால், எந்தச் செலவுமின்றி கண்மாய்கள் தூர்வாரப்பட்டன, விவசாயிகளுக்கும் வண்டல் மண் கிடைத்தது. பின்னர், அரசு வண்டல் மண் அள்ளுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால், கண்மாய்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன"  என்கிறார், ஓய்வு பெற்ற நீரியல் மற்றும் வேளாண்மை பொறியாளரான இரா. வேங்கிடசாமி. 1959 – Tamilnadu minor mineral construction act - என்ற சட்டத்தின் வாயிலாக வண்டல் மண் அள்ளும் செயல்பாட்டில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறார் இவர்.

 வண்டல் மண் அள்ளச்செல்லும் ஒரு விவசாயி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கனிமவளத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும் என  அச்சட்டம் கூறுகிறது. சாதாரண ஒரு விவசாயி, வண்டல் மண் அள்ளுவதற்காக இத்தனை அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க முடியுமா?. வண்டல் மண்ணை அள்ளும் ஒரு விவசாயி, அதை தன் நிலத்தை வளப்படுத்த பயன்படுத்துவானே தவிர, வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவதில்லை. வண்டல் மண் அள்ளுவதில் அன்றே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தால், தற்போது வரை கண்மாய்கள் தூர்வாரப்பட்டிருக்கும், அரசுக்கும் செலவு குறைந்திருக்கும்" என்கிறார், இரா. வேங்கிடசாமி.

 இது மட்டுமின்றி, 1984ம் ஆண்டு வனத்துறையால் கொண்டுவரப்பட்ட சமூகக் காடுகள் திட்டமும் வண்டல் மண் அள்ள முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. விறகுத் தேவைக்காக மழையில்லாத காலங்களில் கண்மாய்களில் மலை வேம்பு போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. இவை பயன் தர 7, 8 ஆண்டுகளாகும். வளர்க்கப்படும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வண்டல் மண் அள்ள, விவசாயிகள் கண்மாயினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண் மேவிய கண்மாய்களின் நீர் தேக்கும் அளவும் குறைந்தது. நீர் தேக்கும் அளவு குறைந்ததால், கண்மாய்களில் 5  மாதங்களுக்குக்கூட நீர் தேங்குவதில்லை. இதனால், கண்மாயில் மீன் வளர்க்கும் தொழிலும் குறைந்துவிட்டது. கண்மாயில் மீன் வளர 3, 4 மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். கண்மாய்கள் நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

மாவட்டங்களின்   நிலை  என்ன?

மதுரை : கண்மாய்களில் கட்டிடம்

மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை இருக்கும் இடத்தில் உலகனேரி கண்மாய் இருந்தது. மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் அமைந்துள்ள இடம், முன்பு தல்லாகுளம் கண்மாய். இப்படி தமிழகம் முழுவதும் பல கண்மாய்கள் கட்டிடப்பகுதிகளாக மாறிவிட்டன.

 ஒரு நகரம் வளர்ந்தால், முதலில் பலியாவது அங்குள்ள கண்மாய்கள்தான். கண்மாய்கள் அழியும்போது, அதன் மூலம் பாசன வசதி பெற்ற விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. சில ஆண்டுகளில் கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்கள் பெரிய மழை பெய்ததும் முதலில் பாதிக்கப்படுகின்றன. காரணம், மழை நீர் வடிகாலாக முன்பு கண்மாய்கள் செயல்பட்டன. கண்மாய்கள் அழிக்கப்பட்டதால், நகர்ப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது மட்டுமின்றி, நிலத்தடி நீர் உப்பாக குடிப்பதற்கு லாயக்கற்றதாகிவிட்டது. கண்மாய்கள் இல்லாததன் முக்கியத்துவம் நமக்கு மழைக்காலங்களில் மட்டுமே புரிகிறது. தமிழக நகரங்களில் கழிவு நீர்ப்பாதைகளோ, மழைநீர் வடிகால் அமைப்போ முழுமையாக அமைக்கப்படவில்லை" என்கிறார் தானம்-வயலகம் அமைப்பின் திட்டத்தலைவரான கனகவல்லி.

தஞ்சாவூர் : தூர்ந்துபோன ஏரிகள்

சிறப்பான பாசனமுறை தமிழர்களின் பாசனமுறை, குறிப்பாக சோழர்களின் பாசனமுறை மேட்டுப்பகுதிகளுக்கும், கடைமடைப்பகுதிகளுக்கும் ஏரிப்பாசனமும், சமவெளிகளுக்கு ஆற்றுப்பாசனமும் அமைத்த சோழர்களின் பாசனமுறை வியப்புக்குரியது!

ஊர்ப்பெயர்களில் பொன்னேரி, நாங்குனேரி என ஏரியின் பெயர்களும், குருங்குளம், பரம்பிக்குளம் எனக் குளங்களின் பெயர்களும், காரைவாய்க்கால், ஆழிவாய்க்கால் என வாய்க்கால்களின் பெயர்களும், அடையாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் பெயர்களும் ஊர்களுக்கு சூட்டிய ஒரே இனம் தமிழ் இனமே! இதிலிருந்தே நமது முன்னோர்கள் பாசனமுறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை உணரமுடியும்.

காவிரி, கொள்ளிடத்தில் மட்டுமே 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதனைத் தேக்கிவைத்தாலே நமது பிரச்சினைகளில் பாதி குறைந்து விடும்" என்கிறார்,  தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் சாமி. நடராஜன். மேலும் தஞ்சை முழுவதும் 4,000 ஏரிகள் உள்ளன. குறிப்பாக பூதலூர் ஒன்றியத்தில் மட்டும் 100 ஏரிகள் உள்ளன. அவை எதுவுமே சரியாக தூர்வாரப்படாமல் இருக்கின்றன. மேலும், மழைநீர் வடிந்து ஓடும் வாய்க்கால்கள் இல்லை என்பதால், மழை நீரைத் தேக்கும் வாய்ப்பே இல்லை. மேலும் ஏரிகளை ஆக்கிரமித்து பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது திருச்சி-தஞ்சை  நெடுஞ்சாலையில் உள்ள, ‘காடா ஏரி" என்கிறார்.

1934ம் ஆண்டுவரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துமே ஏரிப்பாசனம் மட்டுமே செய்யப்பட்டன. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகாவில் மட்டுமே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஏரி அமைக்கப்பட்டு அங்கு  பாசனம் நடந்தது. 1978 வரையிலுமே ஏரிகளைக்கொண்டே பாசனம் நடந்து இருக்கிறது. ஆண்டுதோறும் ஏரி, குளங்கள் தூர்வார பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது, அது என்ன ஆகிறது என்றே தெரிவது இல்லை. இந்த ஆண்டும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு கண்ணந்தங்குடியில் சிங்கனேரியைத் தூர்வார 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது அந்த ஏரியும் இன்றுவரை  தூர்வாரப்படவில்லை. கக்கரை ஏரி, வெள்ளையங்கிரி ஏரி, கொக்கு வடிகால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் இப்போது  தூர்ந்து போய்விட்டன. பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிந்து போய்விட்டன" என்கிறார், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாறன்.

தமிழக அரசால் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது, ‘ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்’ சட்டம். இதன்படி அரசுக்குச் சொந்தமான ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஏரியிலும் ஆக்கிரமிப்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள பல ஏரிகளில் எல்லைகள் காணாமல் போயுள்ளன. இதனால், ஏரி நிலம் எவ்வளவு என்பதை பொதுப்பணித்துறையினரால் கணக்கிட முடிவதில்லை.

நெல்லை : நிரம்பாத குளங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 அணைகள், 2,249 குளங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பருவமழை பெய்தால், அதை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவிற்குப் போதுமான குளங்கள், நீர்நிலைகள் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்று மணல் அள்ள கெடுபிடி இறுகியுள்ளதால், தற்போது குளத்து மண்கள் விதிமுறைகளை மீறி அள்ளப்படுகின்றன. பல குளங்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு பெரிய பெரிய பள்ளங்களுடன் சிதைந்து காணப்படுகின்றன. இதனால், மண் வளம் அழிந்து வருவதுடன், மழைக்காலங்களில் குளங்கள் நிரம்புவதிலும் சிக்கல் ஏற்படுகின்றன. மேலும், பெரும்பாலான குளங்களில் கொள்ளளவை ஆழப்படுத்துதல், குளத்துக்கரையை உயர்த்துதல், ஓடைகளை சீரமைத்தல் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு வழக்கத்தைவிட  18 சதவிகிதம் மழை அதிகமாகப் பெய்துள்ளது. இந்தப் பருவத்தில் பெய்த மழையிலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குளங்கள் நிரம்பவில்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், வேந்தான் என்கிற குளத்தை ஆக்கிரமித்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்துக் குளங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் போதுமான குளங்கள், நீர்நிலைகள் இருப்பினும் பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால் பருவமழை நீரை  சேமிக்க, நீர் இருப்பின் தன்மை குறைவாகவே உள்ளது.

கண்மாய்கள் அழிகின்றன... பாசனம் குறைகின்றது

  • இந்தியாவில் 2,08,000 கண்மாய்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2.3 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.1991-2010 காலகட்டத்தில் சுமார் 27% கண்மாய்கள் இந்திய அளவில் அழிந்து போயுள்ளன.1960-2010 காலகட்டத்தில் கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் எண்ணிக்கை 45% குறைந்துள்ளது.
  • 1990ல் தமிழகத்தில் கண்மாய் பாசனம் மூலம் 5 லட்சத்து  30 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெற்றன. 2008ல் இந்தளவு, 4 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக குறைந்தது. 7.5 சதவிகிதம் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள  நீர் ஆதாரங்களின் மொத்த அளவு 46 ஆயிரத்து 540 மில்லியன் கியூபிக் மீட்டர். நீர்த் தேவை 57 ஆயிரத்து 725 மில்லியன் கியூபிக் மீட்டர். ஒட்டுமொத்தத் தேவையில் 24% சதவிகிதம் தண்ணீர்,  பற்றாக்குறையாக உள்ளது.

திண்டுக்கல் : குப்பைமேடான குளம்

கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் எனப் பல முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியது திண்டுக்கல் மாவட்டம். சிலுவத்தூர் ரோட்டிலுள்ள மேட்டுராசம்பட்டி குளம், தற்போது குப்பைமேடுபோல் காணப்பட்டாலும் 10 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள நீரைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர், இப்பகுதிவாழ் மக்கள். தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அக்குளத்தை துர்வாரும் முயற்சியில் ஈடுபட்டும், அங்கு குப்பைகளைக் கொட்டவேண்டாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

திண்டுக்கல்லின் மையப் பகுதியில் உள்ளது கோபாலசமுத்திரம் கண்மாய். பெயரில் சமுத்திரம் இருப்பதால், நிறைய நீர் இருக்கும் என்று எண்ணி விடவேண்டாம். வீட்டுக் குப்பைகள், கோயில் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் என அனைத்தும்  சங்கமம் ஆகும் இடம் இதுதான். இது தவிர ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இக்கண்மாய் நன்கு சுத்தமாக்கப்பட்டு, துர்வாரப்பட்டு, பராமரிக்கப்பட்டால் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உயரும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த வாரங்களில் பயங்கரமாக மழை பெய்தபோதிலும்கூட சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், நீர் தேங்கவே இல்லை. மாலை நேரங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இந்தக் கண்மாய் உள்ளது.

காஞ்சிபுரம் : ஏரிகளில் ஆக்கிரமிப்பு

ஏரிகளும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ள மாவட்டம் காஞ்சிபுரம். இந்த மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து துல்லியமாக கணக்கெடுக்க முடியாத நிலையில் உள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால், பல ஏரிகள் ஆக்கிரமிப்பு அபாயத்தில் உள்ளது. பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஆகிய நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள ஏரிகள்தான் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆத்தனஞ்சேரி (படப்பை) ஏரியை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த இடத்தை நில அளவை செய்து தரும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டும் சம்பந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நில அளவை செய்வதற்கு வருவாத் துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பொதுப்பணித்துறையால் ஏரி ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ‘நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனாலேயே பொதுப்பணித்துறையினர் தரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. நில அளவை செய்யாமல் ஏரி ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், பொதுப்பணித்துறைக்கென்ற தனியாக நில அளவையர்களை நியமித்தால், இந்தப் பிரச்சினை தீரலாம்’ என்று வருவாய்த்துறை தரப்பில் சொல்கிறார்கள்.

மற்ற மாநிலங்களின் நிலை எப்படி உள்ளது?

கண்மாய் போன்ற அமைப்புகள் அதிக அளவு காணப்படுவது தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால், அவர்களுக்கு நீர் சேமிக்கும் அவசியம் இல்லை. மேலும் வயல்களில் தேங்கும் நீரை வெளியேற்றுவதுதான் அவர்களுக்கும் முக்கியமான வேலை. சமீபகாலமாக சிறிய குட்டைகள் அமைத்து, மீன் வளர்க்கும் தொழில் அங்கு வளர்ந்து வருகிறது. கூடிய விரைவில் வட மாநில விவசாயிகள், தென் மாநில விவசாயிகளுக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவர்" என்கிறார் பழனிச்சாமி.

தீர்வுகள் என்ன?
  • Žபோர்க்கால அடிப்படையில் கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும். கண்மாய் சங்கிலித் தொடர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • கண்மாய்களைப் போலவே கால்வாய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீர் இடையூறு இல்லாமல் பாயும் வகையில் கால்வாய்களை அமைக்க வேண்டும்.
  • Ž கண்மாய்களுக்கென  ‘Tank Authority’ என்ற தன்னாட்சி அமைப்பைத் தொடங்க வேண்டும். கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அந்த அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.
  • சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நீரைச் சேமிக்கும் பாசன முறைகளைப் பரவலாக்க வேண்டும். தேவையான அளவு மானியம் அளிப்பது மட்டுமின்றி, அதுகுறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.
  • Žநகர்ப்பகுதிகளில் தற்போது பாதி ஆக்கிரமிப்பில் இருக்கக் கூடிய கண்மாய்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் மழைநீர் வடிகாலாக மாற்ற வேண்டும்.
  • Žநீர் நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். செந்தில்குமார் மற்றும் சு. வீரமணி, சா. சின்னதுரை, கே. ஷங்கர் (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்) உதவியுடன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. ஏன்?

நியாயமாகப் பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன? ஆனால் இன்று தில்லியில் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இதுதான்: நீங்கள் தேர்தலுக்குத் தயாரா?

காரணங்கள் இல்லாமல் இல்லை. சென்ற வாரம் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை காங்கிரஸ் அறிவித்தது. குழுவின் தலைவர் ராகுல்காந்தி. அதாவது அவர்தான் 2014 தேர்தலில் காங்கிரசை வழிநடத்தப் போகிறார். இந்தக் குழுவின் கீழ் மூன்று துணைக்குழுக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டணிகளை உருவாக்க ஒன்று, தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒன்று, விளம்பரம் மற்றும் தகவல்தொடர்புக்காக ஒன்று. தேர்தல் பணிகளில் 27 தலைவர்களை இறக்கி விட்டிருக்கிறது காங்கிரஸ். அவர்களில் 11 பேர் மத்திய அமைச்சர்கள்.

இப்போதைக்கு காங்கிரசுக்கு நெருக்கமாக உள்ள இன்னொரு கட்சியான சமாஜ்வாதிக் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் 60ஐக் கைப்பற்றி விடவேண்டுமென துடிக்கிறது சமாஜ்வாதி. அப்படி 60 இடங்களை வென்றால்தான் முலாயம் சிங் யாதவின் பிரதமர் நாற்காலிக் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் கொஞ்சமேனும் ஏற்படும்.

2014க்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டால் நல்லது என்று சமாஜ்வாதிக் கட்சி கருதுகிறது. காரணம் அது உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. இன்னும் 18 மாதங்கள் கழித்துத் தேர்தல் என்றால் அது Anti Incumbency எனப்படும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்படும் மனக்குறையை சந்திக்க நேரிடும்.

இதே காரணத்திற்காக மம்தா பானர்ஜியும் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெற வேண்டும் என விரும்புகிறார். மத்திய அரசின் மீது அவரது கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்கு வெளியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவும் ஓர் முக்கியக் காரணம்.

அவரது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறுவது எளிதல்ல. அதற்குப் பல கட்சிகளின் ஆதரவு வேண்டும். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு தேவை. ஆனால் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பாஜக அதிக உற்சாகம் காட்டவில்லை. பார்க்கப்போனால் எல்லோருக்கும் முன்னதாக - செப்டம்பர் மாதமே- நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வந்துவிடும் எனப் பேசியவர் அத்வானி.

நித்தின் கட்கரி மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள் பாஜகவை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதிய தலைவரோடு தேர்தலைச் சந்திப்பதா அல்லது கட்கரி தலைமையிலேயே தேர்தலை எதிர்கொள்வதா என்பது அதன் முன்னிருக்கும் குழப்பம் நம்பர் 1. இரண்டாவது குழப்பம் பிரதமர் வேட்பாளர் என யாரைக் குறிப்பிடுவது என்பது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் விரும்புகிறார்கள். மற்ற மாநிலங்களை விட பல அம்சங்களில் குஜராத் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருப்பதால், குஜராத்தை உதாரணமாகக் காட்டி வளர்ச்சிக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க முடியும் என்பது அவர்களது வாதம். அண்மைக்காலமாக உலகின் கவனம் குஜராத் பக்கம் திரும்பியிருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 2002 குஜராத் மதக்கலவரத்திற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மோடியை ஓரம் கட்டி வைத்திருந்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பேவன், மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.‘இங்கிலாந்தின் தேசிய நலன்களைக் கருத்தில்கொண்டு இந்த சந்திப்பு நடந்தது’ என்று அவர் சொல்லியிருப்பதை மோடியின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் குஜராத் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவர் பெயரை அறிவித்தால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அனுபவம் வாய்ந்த  அத்வானி அல்லது அவரது ஆசி பெற்ற ஒருவரை முன்னிறுத்த வேண்டும் எனக் கருதுகிறார்கள். இந்தக் குழப்பங்கள் தீராமல் பாஜக களம் இறங்க விரும்பவில்லை.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பாஜகவிற்கு எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பிற கட்சிகளுக்கும் முக்கியம். ஏனெனில் கூட்டணி தொடர்வதா, வைத்துக்கொள்வதா என்ற முடிவுகளை அவை அதன் அடிப்படையிலேயே எடுக்க எண்ணுகின்றன. உதாரணமாக (ஐக்கிய) ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நித்திஷ் குமார், மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை விரும்பவில்லை. பாஜகவை தீண்டத்தகாத கட்சி என்று சொல்வது விநோதமாக இருக்கிறது" என்று தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி சொல்லியிருப்பது தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்னோ அவர் அதை ஆதரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

பாஜகவின் கூடாரத்தில் குழப்பம் நிலவும்போதே தேர்தலை நடத்திவிட வேண்டும் என காங்கிரஸ் நினைத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதை விரும்பவில்லை. மின் வெட்டு, டெங்கு, மழைக்கால அவதிகள் ஆகிய விஷயங்கள் ஆளும் கட்சிக்கு நல்ல பெயரைத் தரவில்லை. நாளை தேர்தல் வந்தால் இந்த விஷயங்கள் - குறிப்பாக மின் வெட்டு- அது ஆளும் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

மற்றொரு பெரிய கட்சியான திமுக இப்போது மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கிறது. என்றாலும் அது உற்சாகமாக இருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கட்சியில் நிலவி வரும் உட்பூசல் ஒரு காரணம். அண்மையில் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி பகிரங்கமாக விமர்சித்தது ஓர் உதாரணம். பழனி மாணிக்கம் கட்சித் தலைமையின் நிர்பந்தத்தால் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டார். ஆனால் தேர்தல் என்று வந்தால் வேட்பாளர் தேர்வில் இந்தக் குழு மோதல்கள் பிரதிபலிக்கும் என்பதால் தேர்தல் 2014ல் வருவதையே அது விரும்புகிறது.

முன்கூட்டியே தேர்தல் வந்தால், திமுகவின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அழகிரி போன்றவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அது உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தும் என்பது இன்னொரு காரணம்.

தேர்தல் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது இந்த இரண்டு கட்சிகளின் முன் உள்ள பிரச்சினை. கடந்த 20 ஆண்டுகளாக இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், சட்டமன்றத் தேர்தலின்போதும் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களைக் கேட்டுப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் அரசின் பல செயல்களுக்கான பழியை திமுக சந்திக்க வேண்டியிருப்பதாலும், காங்கிரஸ் பலவீனப்பட்டிருக்கும் நிலையில் அதனுடன் உறவைத் தொடர வேண்டுமா என்ற கேள்வி திமுகவினரிடையே இருக்கிறது. அதே நேரம் காங்கிரசின் உறவை உதறிவிடும் பட்சத்தில் வேறு யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடை காண்பதும் கடினமாக இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலை தேமுதிகவுடன் இணைந்து சந்தித்தது. ஆனால் யாரால் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற கேள்வியின் காரணமாக கூட்டணி உடைந்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேமுதிகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. அதன் காரணமாக, ஒருவேளை மும்முனைப் போட்டி ஏற்பட்டால் வாக்குகள் சிதறி, அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கடினமாகக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். சரி, வேறு யாருடன் கூட்டணி என்ற கேள்வியை அதிமுகவும் எதிர்கொள்கிறது என்கிறார்கள்.

இரண்டு கழகங்களும் கை விடுமானால் தமிழக காங்கிரசின் நிலை என்னவாகும் என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் அதை விடப் பெரிய பிரச்சினை உட்கட்சிப் பூசல். தமிழக காங்கிரசின் புதிய தலைவராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இன்னும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. தேர்தல் என்று வந்தால் உள்ளூர் வேட்பாளர்களைவிட ராகுல் காந்தியின் வசீகரத்தையே (charisma) தமிழகக் காங்கிரஸ் நம்ப வேண்டியிருக்கும்.

ராகுல் காந்திக்கு வாக்காளர்களைக் கவரும் வசீகரம் இருக்கிறதா? அவரது கடந்தகால செயல்பாடுகள், அதற்கு வாக்காளர்களிடமிருந்து கிடைத்த முடிவுகளைப் பார்த்தால் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

2010ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் 243 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இன்னொரு இந்தி பேசும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்2012ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலை காங்கிரஸ், ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. 403 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 28 இடங்களை மட்டுமே வென்றது. மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுக்குப் பின், நான்காவது இடம்தான் காங்கிரசிற்குக் கிடைத்தது. இத்தனைக்கும் உத்தரப்பிரதேசம் ராகுல்காந்தியின் முன்னோர்கள் செல்வாக்கோடு விளங்கிய பூர்வீக பூமி.

ஆனால் 15, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத, கட்சிக்கு முறையான காரியக் கமிட்டி, அலுவலர்கள் என்று எந்த அடிப்படையும் இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்தவர் ராகுல். பல ஆண்டுகளாக அம்மாநிலத்தின் பல தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்க முடியாத நிலையில் கடந்த தேர்தலில் வழக்கத்தைவிட 87 லட்சம் ஓட்டுகள் அதிகமாக காங்கிரசிற்கு கிடைத்தது." என்கிறார் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணி.

அரசியல் கட்சிகளை விடுங்கள், வாக்காளர்கள் தேர்தலுக்குத் தயாரா? அவர்கள் தேர்தல் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டும் இல்லை; வந்துவிட்டால் என்ற கவலையிலும் இல்லை. வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் முடிவுகளை தேர்தல் நாளன்று எடுப்பதில்லை. எடுக்கும் முடிவை ஆணித்தரமாக வெளியிடவும் தயங்குவதில்லை.
புதியதலைமுறை

வெள்ளி, 23 நவம்பர், 2012


எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் KYC (KNOW YOUR CUSTOMER) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அந்தந்த ஏஜென்சியில் கொடுக்க வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எதற்காக உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்  (KYC) என்று தெரிவித்துள்ளது?
அண்மையில் ஓர் இணைப்புக்கு ஆறு சிலிண்டர்கள் வரை மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும், அதற்கு மேற்பட்ட சிலிண்டர்களை  சந்தை விலையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதையும், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பதையும் கண்டறியவே இந்த விண்ணப்பம். ஒவ்வொரு ஏஜென்சியும் தங்களது வாடிக்கையாளரை அறிந்துகொள்ளவும், இந்த விண்ணப்பத்தை அளிக்கச் சொல்கின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒன்று ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒரே இணைப்பில் இரண்டு சிலிண்டர்கள் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது.


விண்ணப்பம் எங்கு வழங்கப்படுகிறது?
விண்ணப்பப் படிவங்கள் ஒவ்வொரு ஏஜென்சிக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவரவர் ஏஜென்சியிடமே பெற்றுக் கொள்ளலாம் அல்லது கீழ்க்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆதாரங்கள் என்னென்ன?
முகவரிச் சான்றுக்கு கீழ்க்கண்டவற்றில் ஒன்றை ஆதாரமாகக் கொடுத்தால்போதும்.

1. குடும்ப அட்டை 2. எலெக்ட்ரிசிட்டி பில் (கடைசி மூன்று மாத பில்)  3.டெலிபோன் பில் (கடைசி மூன்று மாத பில்) 4. பாஸ்போர்ட் 5. பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் 6. எல்.ஐ.சி. பாலிசி 7. வாக்காளர் அடையாள அட்டை 8. வீட்டு வாடகை ரசீது 9. பான்கார்டு 10. ஓட்டுநர் உரிமம் 11. வங்கிக் கணக்குப் புத்தகம்.

அடையாளச் சான்றுக்குக் கீழ்க்கண்டவற்றில் ஒன்றை ஆதாரமாகக் கொடுத்தால் போதும்.

1. பான்கார்டு 2. பாஸ்போர்ட் 3.வாக்காளர் அடையாள அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5 . மத்திய / மாநில அரசின் அடையாள அட்டை.

இவற்றுடன் சில முகவர்கள், முதன் முதலில் நீங்கள் எரிவாயு இணைப்புப் பெற்றபோது செலுத்திய டெபாசிட்டிற்கான ரசீதையும் கேட்கிறார்கள்.


எந்தத் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.?
நவம்பர் 15ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அடுத்த சிலிண்டர் வாங்குவதற்குள் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்துகொடுக்க வேண்டும். கடிதம் வரவில்லை என்றால்கூட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து கொடுக்கலாம்.


கொடுக்காவிட்டால் என்னாகும்?
ஒருவேளை உங்கள் கன்ஸ்யூமர் ஐடி பிளாக் ஆகியிருந்தால், உங்களுக்குத் தெரியாமல் போகலாம். அப்படி இருந்தால், அடுத்த சிலிண்டர் வராமல் போகலாம்.

இது குறித்து அனைத்திந்திய எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொருளாளர் டி.சாமிவேலு தெரிவிப்பதாவது, வருஷத்துக்கு மானியத்துக்கான சமையல் எல்.பி.ஜி.க்கு மட்டும் அரசுக்கு 42,000 கோடி ரூபாய் செலவாகுது. இதுல ஒரு குடும்பத்துல இருக்கிற ரெண்டு பேர் பேர்ல மானிய சிலிண்டர்களை வாங்குறது நிறையவே நடக்குது. செப்டம்பர் 10, 2009ல ஓர் அரசாணை பிறப்பிச்சிருக்காங்க. அதன்படி வீட்டுக்கு ஓர் இணைப்புதான் கொடுக்கணும். அதனால, கே.ஒய்.சி. விண்ணப்பத்தைக் கொடுத்து பூர்த்தி பண்ணித் தரச் சொல்லியிருக்கோம். இதுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இதுல முதல் கட்டமா, ஒரே முகவரியில இருக்கிற பல இணைப்புகளோட லிஸ்ட் எடுத்து அதை சரிபார்க்கிறோம். சில இடங்களில் ஒரே முகவரியில் பல குடும்பங்கள் குடியிருப்பாங்க. அவர்கள் 5ம் நம்பர் வீடு என்றால் 5A, 5B என்று முகவரி கொடுக்கணும். இவங்களை கம்ப்யூட்டர்ல லிஸ்ட் எடுத்து, அந்தந்த கேஸ் கம்பெனிகள்ல இருந்து கடிதம் அனுப்புவாங்க. அந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் கேஸ் ஏஜென்சியில கொடுத்தா, விண்ணப்பம் கொடுப்பாங்க. அதுல ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடுத்து, ஆதாரங்களை இணைச்சு பூர்த்தி பண்ணி ஓர் ஒரிஜினலையும், ரெண்டு ஜெராக்ஸையும் கேஸ் ஏஜென்சில கொடுக்கணும். ஒரு ஜெராக்ஸ்ல சீல் வெச்சுக் கொடுப்பாங்க. இதை, இந்த கே.ஒய்.சி. விண்ணப்பத்தைக் கொடுத்த பிறகு நேரடியா வந்து சரிபார்ப்பாங்க.

ஒரே வீட்டில் ஓர்  இணைப்பில் ரெண்டு சிலிண்டர் வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், ஒரே வீட்டுல இருக்கிற மனைவி பாரத் கேஸ்ல கனெக்ஷன் வெச்சிருந்தாங்கன்னா, கணவனோ, மாமியாரோ அல்லது வேறு உறுப்பினரோ இண்டேன்ல கனெக்ஷன் வெச்சுக்கிறதும் இருக்கு. இதைக் கண்டுபிடிக்க இண்ட்ரா ஆயில் கம்பெனி ஒரு லிஸ்ட் தயார் பண்ணிட்டு இருக்காங்க. அதாவது பாரத் கேஸ், இண்டேன் கேஸ், ஹெச்.பி.கேஸ் மூணு பேரும் சேர்ந்து ஒரே பெயர்ல இருக்கிற கனெக்ஷன், ஒரே முகவரியில இருக்கிற கனெக்ஷன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்க. இப்போ என் பேர சாமிவேலுன்னு கம்ப்யூட்டர்ல தட்டுனா, என்னோட டீட்டெயில் எல்லாம் வந்துடும். அதனால,வேற ஊர்லகூட கனெக்ஷன் இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவாங்க" என்றா

புதன், 7 நவம்பர், 2012

சோலார் மின் சக்தி


நமக்கு மின் தேவை மிக அதிகமாக உள்ள காலங்கள், விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்ய பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் வெப்பத்தின் கொடுமையைச் சமாளிக்க ஏப்ரல், மே மாதங்களிலும்தான். ஜூன் மாதம் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுக்கத் துவங்கிவிடும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தால்  விவசாயத்திற்கான மின் தேவை ஓரளவு குறைந்து விடும்.

நாம் இப்போது சார்ந்திருக்கும் மின் திட்டங்களான காற்றாலை,  நீர் மின்சாரம் போன்றவை மேற்குறிப்பிட்ட மின் தேவை அதிகமுள்ள நாட்களில் அதிகம் பயன் தராது. அனல் மின்சாரம் போன்றவை நிலக்கரியினை சார்ந்திருப்பதால் எவ்வளவு நாட்களுக்கு கை கொடுக்கும்? மேலும் நிலக்கரி இறக்குமதியில் ஏற்படும் குளறுபடிகள் மின் உற்பத்தியினைப் பாதிக்கும்.

சுற்றுப்புறச்சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அணுமின் திட்டம் போன்றவற்றிற்கு இனிவரும் காலங்களில் நிலங்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். ஒரே வழி, சூரிய சக்தியினால் கிடைக்கும் மின்சாரம்தான். தேவை அதிகமாக உள்ள நேரங்களில் இயற்கையே நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.

சோலார் மின் சக்தியை தற்போது மக்கள் பயன்படுத்தாதற்கான காரணங்கள்.

1.விலை:
இதன் உபகரணங்கள் விலை உயர்வாக உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்த முடியவில்லை.

2.சேகரிக்கும் பேட்டரி:
ஒவ்வொரு வருடமும் இதனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் இதன் விலையும் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் வண்ணம் உள்ளது.

3.மின்சாரம் கிடைக்கும்போது பயன்படுத்த முடியவில்லை.

4.தன்னிறைவு இல்லை. கிடைக்கும் மின்சாரத்தினை கலங்களில்  சேமிப்பதால் அதிகபட்சம்  சேமிக்க முடிவதில்லை. அதனால் மிக்சி, கிரைண்டர் போன்ற  சாதனங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. அதனால் மீண்டும் மின்சார வாரியத்தினை நாடும் சூழல் ஏற்படுகிறது. மேற்கண்ட காரணங்களால் பொதுமக்கள் சோலார் மின்சக்தியினை விரும்புவதில்லை.

அரசு மிகப் பெரிய சோலார் மின்கலங்கள் அமைப்பதில் உள்ள இடர்பாடுகள்:

1.இடப் பற்றாக்குறை: மின்கலங்கள் அமைப்பதற்கு பெரிய இடம் தேவைப்படும். அதற்கும் பொதுமக்களிடம் எதிர்ப்பு வரலாம்.

2.பாதுகாப்பு: இதனைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் மிக அதிக ஆட்கள் தேவைப்படுவர். அதனை நிர்வகிக்க தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டி வரும்.

3.முதலீடு: அரசு மிகப் பெரிய முதலீட்டினை செய்ய வேண்டி வரும். அதிலும் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் செயல்படுத்த நினைத்தாலும் விரைவாக இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமெனில் அரசு இயந்திரம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படவேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வளவும் இல்லாத ஒரு திட்டத்தினை சிந்தித்துப் பார்ப்போம்.

அனைத்து வீடுகளிலும் சோலார் மின்கலங்கள் அமைப்பது, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை முடிந்தவரை உடனடியாகப் பயன்படுத்துவது. அதாவது அந்த மின்சாரத்தினை சேகரித்து துணை மின்நிலையங்களுக்கு கொண்டுவந்து அவற்றினை தேவைப்படும் இடங்களுக்கு உடனே சப்ளை செய்வது.

ஒரு மணி நேரத்தில் 36 watt உற்பத்தி செய்யும் ஒரு தகடு இருபதாயிரம் ரூபாய் ஆகிறது. அதன் அளவு பதினாறு சதுர அடியாக உள்ளது. சாதாரணமாக ஒரு
சிறிய வீட்டின் அளவு ஆயிரத்து இருநூறு சதுர அடியாகும். அதில் நான்கில் ஒரு பகுதியான முன்னூறு சதுர அடியில் சூரிய மின்சாதனம் அமைத்தால் ஒரு சிறிய வீட்டில் கூட ஒரு மணி நேரத்தில் 720 watt மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது கிட்டத்தட்ட ஒரு நடுத்தர வீட்டின் அன்றாடத் தேவையினை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

இதனை உடனடியாக அவர்களே பயன்படுத்த முடியாமல் போவதற்குக் காரணம் மின்சாரம் பெரும்பாலும் இரவு நேரம்தான் தேவைப்படுகிறது. அதுவரை சேகரிக்கும் அளவுக்கு பேட்டரி அமைத்தால் மிகப்பெரும் முதலீடு தேவைப்படும். ஒவ்வொரு வருடமும் அதனை மாற்ற வேண்டிய சூழல் உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பயப்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இதனை இவ்வாறு செயல்படுத்தலாம்:

1.ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் முன்னூற்றி இருபது  சதுர அடியில் சோலார் மின்கலம் அமைப்பது. அங்கு கிட்டத்தட்ட எழுநூற்றி இருபது watt மின்சாரம் உற்பத்தி ஆகும்.

2.அந்த மின்சாரத்தினை ஒரு கம்பி மூலம், இப்போதுள்ள கம்பங்கள் துணைகொண்டு, மின் நிலையத்திற்கு கொண்டு வருவது.

3.அதனை மின்மாற்றியின் மூலம் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பிவைப்பது.

கட்டாயம் இரண்டு சிறிய வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இரண்டாயிரம் வீடுகள் கொண்ட சிறிய கிராமத்தில் கூட ஒரு மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒருலட்சம் வீடுகளை மின் உற்பத்தி நிலையங்களாக மாற்ற இயலும்.

இந்தக் கணக்கில் பார்க்கும்போது ஒரு மாவட்டத்தில் பகலில் ஒரு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் கிலோவாட் உற்பத்தி செய்ய இயலும்.

சரி, இதற்கான முதலீட்டை யார் செய்வது?

முதலீட்டை அந்த வீட்டுக்காரரே செய்ய வேண்டும். அதற்குத் தேவையான தொகையினை மானியம் என்ற பெயரில் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடனாக வழங்குவது. அந்தத் தொகையினை ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செலுத்துமாறு வசூலிப்பது. உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை ஒரு மீட்டர் கொண்டு அளவிடுவது. அந்த மின்சாரத்தின் அளவினை பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிலிருந்து கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையினை மட்டும் வசூல் செய்வது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது ஒவ்வொரு மனிதனும் மின் உற்பத்தியில் ஈடுபடுவதால் அரசின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும். உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சாரத்தில் கழித்துக் கொள்வார்கள் என்பதால் பெரிய வர்த்தகர்களும் மின் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். பகல் முழுவதும் சோலார் மின்சாரத்தினை விவசாயம் மற்றும் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் இரவில் அவர்களுக்கான தேவை குறையும். இரவு நேரங்களில் தேவைப்படும் மின்சாரத்தினை இப்போது கிடைக்கும் மின்திட்டங்களின் மூலமே பூர்த்தி செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தின் வெற்றி, தோல்வியினை அறிய ஏதேனும் ஒரு கிளை மின் நிலையத்தினை தேர்ந்தெடுத்து அங்கு சோதனை முயற்சியாக அரசாங்கமே முதலீடு செய்து திட்டத்தினை துவங்கலாம். முழுமையான வெற்றி சாத்தியம் எனும்போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்கு சட்டம் இயற்றிக் கண்காணித்ததுபோல் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும்  மின்சாரத் துறையினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்.

சாதகங்கள் :

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பல இடங்களில் இருந்து கிடைப்பதால் ஏதேனும் பழுது என்றாலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது.

மேலும் அந்தந்தத் துணை மின் நிலையங்களிலேயே பயன்படுத்தப்பட்டுவிடும் என்பதால் மிகப் பெரிய மின்தடம் அமைக்க வேண்டிய அவசியம் இராது.
Ž  
மிகப் பெரிய அளவில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுவதால் புவியின் வெப்பம் குறையும்.

மின் உற்பத்திக்கு கச்சாப் பொருள் எதுவும் தேவையில்லை என்பதால் அரசின் முதலீடு மீண்டும் மீண்டும் தேவைப்படாது.

கழிவுப்பொருள் எதுவும் இல்லை என்பதால் அதனை அகற்ற வேண்டிய அவசியம் இராது.