Powered By Blogger

வெள்ளி, 30 நவம்பர், 2012


‘தமிழ்நாட்டில் இருந்த 39,200 கண்மாய்களில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன’ என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தகவல். இதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள கண்மாய்கள், ஏரிகளின் தற்போதைய நிலைமை என்ன? ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்

ப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 31 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இந்தப் பருவத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட இது 26 சதவிகிதம் அதிகம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கிறார்கள். காரணம், சம்பா பயிருக்கு இன்னும் 70 நாட்களுக்கு நீர் வேண்டும். மேட்டூர் அணையின்  நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. தினம் ஒரு டி.எம்.சி. வீதம் நீர் திறந்து விட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கே வரும்.

எப்படி சம்பா நெல்லைக் காப்பாற்றி மகசூல் எடுக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். இந்த முறை நல்ல மழை பெய்கிறது, ஆனால், இந்த மழையை எங்களால் இப்போது மட்டும்தான் பயன்படுத்த முடியும். மழைநீரை சேமித்துவைத்துப் பயன்படுத்த எந்த வசதியுமில்லை. இந்த மழைநீர் வடிவதற்கான சரியான வடிகால்கள் இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அழுகும் அபாயமும் உள்ளது" என்கிறார், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி.

மத்திய, மாநில அரசுகள் பேசி கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைப் பெற்றுத் தராதா என்று மீண்டும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் ஏன் இந்த நிலை? நம்மால் மழை நீரை போதுமான அளவு சேமிக்க முடியாதது ஏன்?

மழை நீரை சேமிக்க நம்மிடம் இருந்த ஆறுகளும் ஏரிகளும் கண்மாய்களும் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. முன்பு மழைக்காலத்தில் கண்மாய்களில் சரியான முறையில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் ஆற்றுப்பாசனத்தை சார்ந்திராத  கடைமடைப் பகுதிகளில்கூட விவசாயம் நடைபெற்றன.  தமிழ்நாட்டில் இருந்த 39, 200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22% நீரை சேர்த்துவைக்க திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் (International Water management Institute - IWMI) இயக்குனரான பழனிச்சாமி.

தொடர்ந்து அவரே, தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறைவு என்பதால் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்மாய்கள் பரவலாக உள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளில் பெரும்பாலானோர் கண்மாய் பாசனத்தைத்தான் நம்பியுள்ளனர். கிராமங்கள் மட்டுமில்லாமல், நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நகரங்களில் அதிக அளவு மழை பெய்யும் போது, வடிகாலாக கண்மாய்கள் பயன்பட்டதால் நகரங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பின. ஆனால், தற்போது நகரங்களில் இருந்த கண்மாய்கள் குடியிருப்புப் பகுதிகளாகவும், பஸ் ஸ்டாண்டுகளாகவும் மாறியதன் விளைவு, சின்ன மழைக்குக்கூட நகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாகின்றன.

புவி வெப்பமடைந்து வருவதால், உலகின் பல பகுதிகளிலும் பருவ நிலை மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. வரும் காலத்தில் தமிழகத்தில் பருவ மழைக்காலம் குறையும். ஆனால், மழையின் அடர்த்தி 10% முதல் 15% வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக இருக்கும் பருவ மழைக்காலம் 32 நாட்களாகக் குறைவது மட்டுமின்றி, நாள் முழுதும் பெய்யக்கூடிய மழை அளவு, 2 மணி நேரத்தில் பெய்யும். இதனை சமாளிக்க நமது நீர்நிலைகள் தயாராக இல்லையெனில், வெள்ளம் ஏற்படுவதுடன், மழை நீரை சேமிக்க முடியாமல் போகும்.

வெப்பம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். கிணறுகளை வெட்டி, கிணற்றுப் பாசனம் செய்துவிடலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், கால்வாய்களில் இருந்து கண்மாய்களுக்குச் செல்லும் நீரோட்டம் தொடர்ந்தால்தான் நிலத்தடி நீர் அதிகரிக்கும். கிணறுகளில் நீர் கிடைக்கும். மொத்தத்தில் கண்மாய்கள் இல்லையெனில், பல இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க முன்வர வேண்டும்" என்றார் பழனிச்சாமி.

100 ஆண்டுகளாக தமிழகக் கண்மாய்கள்  சங்கிலித்தொடர் அமைப்பு கொண்டிருக்கின்றன. சங்கிலித்தொடரின் முதல் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கும். முதல் கண்மாய் நிரம்பியதும் உபரி நீர், கால்வாய் வழியாக அடுத்த கண்மாயில் பாயும். அந்தந்தப் பகுதிகளில் விழும் மழைநீர் அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் சேரும். இப்படியாக அனைத்துக் கண்மாய்களிலும் வரிசையாக நீர் நிரம்பி, கடைமடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். தற்போது கண்மாய்களை இணைக்கும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் சங்கிலித்தொடரும் அறுந்து போயுள்ளது.

முன்பு கண்மாய்களை அந்தந்தப் பகுதி விவசாயிகள் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பழக்கம் இருந்தது. அதற்கு வண்டல்மண் அள்ளுவது என்று பெயர். மழைக்காலத்திற்கு முன்பு கண்மாயில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணை மாட்டுவண்டிகளில் விவசாயிகள் அள்ளுவார்கள். இதனால், எந்தச் செலவுமின்றி கண்மாய்கள் தூர்வாரப்பட்டன, விவசாயிகளுக்கும் வண்டல் மண் கிடைத்தது. பின்னர், அரசு வண்டல் மண் அள்ளுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால், கண்மாய்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன"  என்கிறார், ஓய்வு பெற்ற நீரியல் மற்றும் வேளாண்மை பொறியாளரான இரா. வேங்கிடசாமி. 1959 – Tamilnadu minor mineral construction act - என்ற சட்டத்தின் வாயிலாக வண்டல் மண் அள்ளும் செயல்பாட்டில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறார் இவர்.

 வண்டல் மண் அள்ளச்செல்லும் ஒரு விவசாயி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கனிமவளத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும் என  அச்சட்டம் கூறுகிறது. சாதாரண ஒரு விவசாயி, வண்டல் மண் அள்ளுவதற்காக இத்தனை அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க முடியுமா?. வண்டல் மண்ணை அள்ளும் ஒரு விவசாயி, அதை தன் நிலத்தை வளப்படுத்த பயன்படுத்துவானே தவிர, வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவதில்லை. வண்டல் மண் அள்ளுவதில் அன்றே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தால், தற்போது வரை கண்மாய்கள் தூர்வாரப்பட்டிருக்கும், அரசுக்கும் செலவு குறைந்திருக்கும்" என்கிறார், இரா. வேங்கிடசாமி.

 இது மட்டுமின்றி, 1984ம் ஆண்டு வனத்துறையால் கொண்டுவரப்பட்ட சமூகக் காடுகள் திட்டமும் வண்டல் மண் அள்ள முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. விறகுத் தேவைக்காக மழையில்லாத காலங்களில் கண்மாய்களில் மலை வேம்பு போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. இவை பயன் தர 7, 8 ஆண்டுகளாகும். வளர்க்கப்படும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வண்டல் மண் அள்ள, விவசாயிகள் கண்மாயினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண் மேவிய கண்மாய்களின் நீர் தேக்கும் அளவும் குறைந்தது. நீர் தேக்கும் அளவு குறைந்ததால், கண்மாய்களில் 5  மாதங்களுக்குக்கூட நீர் தேங்குவதில்லை. இதனால், கண்மாயில் மீன் வளர்க்கும் தொழிலும் குறைந்துவிட்டது. கண்மாயில் மீன் வளர 3, 4 மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். கண்மாய்கள் நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

மாவட்டங்களின்   நிலை  என்ன?

மதுரை : கண்மாய்களில் கட்டிடம்

மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை இருக்கும் இடத்தில் உலகனேரி கண்மாய் இருந்தது. மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் அமைந்துள்ள இடம், முன்பு தல்லாகுளம் கண்மாய். இப்படி தமிழகம் முழுவதும் பல கண்மாய்கள் கட்டிடப்பகுதிகளாக மாறிவிட்டன.

 ஒரு நகரம் வளர்ந்தால், முதலில் பலியாவது அங்குள்ள கண்மாய்கள்தான். கண்மாய்கள் அழியும்போது, அதன் மூலம் பாசன வசதி பெற்ற விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. சில ஆண்டுகளில் கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்கள் பெரிய மழை பெய்ததும் முதலில் பாதிக்கப்படுகின்றன. காரணம், மழை நீர் வடிகாலாக முன்பு கண்மாய்கள் செயல்பட்டன. கண்மாய்கள் அழிக்கப்பட்டதால், நகர்ப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது மட்டுமின்றி, நிலத்தடி நீர் உப்பாக குடிப்பதற்கு லாயக்கற்றதாகிவிட்டது. கண்மாய்கள் இல்லாததன் முக்கியத்துவம் நமக்கு மழைக்காலங்களில் மட்டுமே புரிகிறது. தமிழக நகரங்களில் கழிவு நீர்ப்பாதைகளோ, மழைநீர் வடிகால் அமைப்போ முழுமையாக அமைக்கப்படவில்லை" என்கிறார் தானம்-வயலகம் அமைப்பின் திட்டத்தலைவரான கனகவல்லி.

தஞ்சாவூர் : தூர்ந்துபோன ஏரிகள்

சிறப்பான பாசனமுறை தமிழர்களின் பாசனமுறை, குறிப்பாக சோழர்களின் பாசனமுறை மேட்டுப்பகுதிகளுக்கும், கடைமடைப்பகுதிகளுக்கும் ஏரிப்பாசனமும், சமவெளிகளுக்கு ஆற்றுப்பாசனமும் அமைத்த சோழர்களின் பாசனமுறை வியப்புக்குரியது!

ஊர்ப்பெயர்களில் பொன்னேரி, நாங்குனேரி என ஏரியின் பெயர்களும், குருங்குளம், பரம்பிக்குளம் எனக் குளங்களின் பெயர்களும், காரைவாய்க்கால், ஆழிவாய்க்கால் என வாய்க்கால்களின் பெயர்களும், அடையாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் பெயர்களும் ஊர்களுக்கு சூட்டிய ஒரே இனம் தமிழ் இனமே! இதிலிருந்தே நமது முன்னோர்கள் பாசனமுறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை உணரமுடியும்.

காவிரி, கொள்ளிடத்தில் மட்டுமே 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதனைத் தேக்கிவைத்தாலே நமது பிரச்சினைகளில் பாதி குறைந்து விடும்" என்கிறார்,  தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் சாமி. நடராஜன். மேலும் தஞ்சை முழுவதும் 4,000 ஏரிகள் உள்ளன. குறிப்பாக பூதலூர் ஒன்றியத்தில் மட்டும் 100 ஏரிகள் உள்ளன. அவை எதுவுமே சரியாக தூர்வாரப்படாமல் இருக்கின்றன. மேலும், மழைநீர் வடிந்து ஓடும் வாய்க்கால்கள் இல்லை என்பதால், மழை நீரைத் தேக்கும் வாய்ப்பே இல்லை. மேலும் ஏரிகளை ஆக்கிரமித்து பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது திருச்சி-தஞ்சை  நெடுஞ்சாலையில் உள்ள, ‘காடா ஏரி" என்கிறார்.

1934ம் ஆண்டுவரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துமே ஏரிப்பாசனம் மட்டுமே செய்யப்பட்டன. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகாவில் மட்டுமே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஏரி அமைக்கப்பட்டு அங்கு  பாசனம் நடந்தது. 1978 வரையிலுமே ஏரிகளைக்கொண்டே பாசனம் நடந்து இருக்கிறது. ஆண்டுதோறும் ஏரி, குளங்கள் தூர்வார பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது, அது என்ன ஆகிறது என்றே தெரிவது இல்லை. இந்த ஆண்டும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு கண்ணந்தங்குடியில் சிங்கனேரியைத் தூர்வார 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது அந்த ஏரியும் இன்றுவரை  தூர்வாரப்படவில்லை. கக்கரை ஏரி, வெள்ளையங்கிரி ஏரி, கொக்கு வடிகால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் இப்போது  தூர்ந்து போய்விட்டன. பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிந்து போய்விட்டன" என்கிறார், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாறன்.

தமிழக அரசால் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது, ‘ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்’ சட்டம். இதன்படி அரசுக்குச் சொந்தமான ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஏரியிலும் ஆக்கிரமிப்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள பல ஏரிகளில் எல்லைகள் காணாமல் போயுள்ளன. இதனால், ஏரி நிலம் எவ்வளவு என்பதை பொதுப்பணித்துறையினரால் கணக்கிட முடிவதில்லை.

நெல்லை : நிரம்பாத குளங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 அணைகள், 2,249 குளங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பருவமழை பெய்தால், அதை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவிற்குப் போதுமான குளங்கள், நீர்நிலைகள் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்று மணல் அள்ள கெடுபிடி இறுகியுள்ளதால், தற்போது குளத்து மண்கள் விதிமுறைகளை மீறி அள்ளப்படுகின்றன. பல குளங்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு பெரிய பெரிய பள்ளங்களுடன் சிதைந்து காணப்படுகின்றன. இதனால், மண் வளம் அழிந்து வருவதுடன், மழைக்காலங்களில் குளங்கள் நிரம்புவதிலும் சிக்கல் ஏற்படுகின்றன. மேலும், பெரும்பாலான குளங்களில் கொள்ளளவை ஆழப்படுத்துதல், குளத்துக்கரையை உயர்த்துதல், ஓடைகளை சீரமைத்தல் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு வழக்கத்தைவிட  18 சதவிகிதம் மழை அதிகமாகப் பெய்துள்ளது. இந்தப் பருவத்தில் பெய்த மழையிலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குளங்கள் நிரம்பவில்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், வேந்தான் என்கிற குளத்தை ஆக்கிரமித்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்துக் குளங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் போதுமான குளங்கள், நீர்நிலைகள் இருப்பினும் பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால் பருவமழை நீரை  சேமிக்க, நீர் இருப்பின் தன்மை குறைவாகவே உள்ளது.

கண்மாய்கள் அழிகின்றன... பாசனம் குறைகின்றது

  • இந்தியாவில் 2,08,000 கண்மாய்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2.3 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.1991-2010 காலகட்டத்தில் சுமார் 27% கண்மாய்கள் இந்திய அளவில் அழிந்து போயுள்ளன.1960-2010 காலகட்டத்தில் கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் எண்ணிக்கை 45% குறைந்துள்ளது.
  • 1990ல் தமிழகத்தில் கண்மாய் பாசனம் மூலம் 5 லட்சத்து  30 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெற்றன. 2008ல் இந்தளவு, 4 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக குறைந்தது. 7.5 சதவிகிதம் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள  நீர் ஆதாரங்களின் மொத்த அளவு 46 ஆயிரத்து 540 மில்லியன் கியூபிக் மீட்டர். நீர்த் தேவை 57 ஆயிரத்து 725 மில்லியன் கியூபிக் மீட்டர். ஒட்டுமொத்தத் தேவையில் 24% சதவிகிதம் தண்ணீர்,  பற்றாக்குறையாக உள்ளது.

திண்டுக்கல் : குப்பைமேடான குளம்

கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் எனப் பல முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியது திண்டுக்கல் மாவட்டம். சிலுவத்தூர் ரோட்டிலுள்ள மேட்டுராசம்பட்டி குளம், தற்போது குப்பைமேடுபோல் காணப்பட்டாலும் 10 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள நீரைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர், இப்பகுதிவாழ் மக்கள். தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அக்குளத்தை துர்வாரும் முயற்சியில் ஈடுபட்டும், அங்கு குப்பைகளைக் கொட்டவேண்டாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

திண்டுக்கல்லின் மையப் பகுதியில் உள்ளது கோபாலசமுத்திரம் கண்மாய். பெயரில் சமுத்திரம் இருப்பதால், நிறைய நீர் இருக்கும் என்று எண்ணி விடவேண்டாம். வீட்டுக் குப்பைகள், கோயில் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் என அனைத்தும்  சங்கமம் ஆகும் இடம் இதுதான். இது தவிர ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இக்கண்மாய் நன்கு சுத்தமாக்கப்பட்டு, துர்வாரப்பட்டு, பராமரிக்கப்பட்டால் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உயரும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த வாரங்களில் பயங்கரமாக மழை பெய்தபோதிலும்கூட சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், நீர் தேங்கவே இல்லை. மாலை நேரங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இந்தக் கண்மாய் உள்ளது.

காஞ்சிபுரம் : ஏரிகளில் ஆக்கிரமிப்பு

ஏரிகளும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ள மாவட்டம் காஞ்சிபுரம். இந்த மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து துல்லியமாக கணக்கெடுக்க முடியாத நிலையில் உள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால், பல ஏரிகள் ஆக்கிரமிப்பு அபாயத்தில் உள்ளது. பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஆகிய நகரப் பகுதிகளை ஒட்டியுள்ள ஏரிகள்தான் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆத்தனஞ்சேரி (படப்பை) ஏரியை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த இடத்தை நில அளவை செய்து தரும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டும் சம்பந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நில அளவை செய்வதற்கு வருவாத் துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பொதுப்பணித்துறையால் ஏரி ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ‘நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனாலேயே பொதுப்பணித்துறையினர் தரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. நில அளவை செய்யாமல் ஏரி ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், பொதுப்பணித்துறைக்கென்ற தனியாக நில அளவையர்களை நியமித்தால், இந்தப் பிரச்சினை தீரலாம்’ என்று வருவாய்த்துறை தரப்பில் சொல்கிறார்கள்.

மற்ற மாநிலங்களின் நிலை எப்படி உள்ளது?

கண்மாய் போன்ற அமைப்புகள் அதிக அளவு காணப்படுவது தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால், அவர்களுக்கு நீர் சேமிக்கும் அவசியம் இல்லை. மேலும் வயல்களில் தேங்கும் நீரை வெளியேற்றுவதுதான் அவர்களுக்கும் முக்கியமான வேலை. சமீபகாலமாக சிறிய குட்டைகள் அமைத்து, மீன் வளர்க்கும் தொழில் அங்கு வளர்ந்து வருகிறது. கூடிய விரைவில் வட மாநில விவசாயிகள், தென் மாநில விவசாயிகளுக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவர்" என்கிறார் பழனிச்சாமி.

தீர்வுகள் என்ன?
  • Žபோர்க்கால அடிப்படையில் கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும். கண்மாய் சங்கிலித் தொடர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • கண்மாய்களைப் போலவே கால்வாய்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீர் இடையூறு இல்லாமல் பாயும் வகையில் கால்வாய்களை அமைக்க வேண்டும்.
  • Ž கண்மாய்களுக்கென  ‘Tank Authority’ என்ற தன்னாட்சி அமைப்பைத் தொடங்க வேண்டும். கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அந்த அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.
  • சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நீரைச் சேமிக்கும் பாசன முறைகளைப் பரவலாக்க வேண்டும். தேவையான அளவு மானியம் அளிப்பது மட்டுமின்றி, அதுகுறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.
  • Žநகர்ப்பகுதிகளில் தற்போது பாதி ஆக்கிரமிப்பில் இருக்கக் கூடிய கண்மாய்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் மழைநீர் வடிகாலாக மாற்ற வேண்டும்.
  • Žநீர் நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். செந்தில்குமார் மற்றும் சு. வீரமணி, சா. சின்னதுரை, கே. ஷங்கர் (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்) உதவியுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக