Powered By Blogger

புதன், 7 நவம்பர், 2012

சோலார் மின் சக்தி


நமக்கு மின் தேவை மிக அதிகமாக உள்ள காலங்கள், விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்ய பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் வெப்பத்தின் கொடுமையைச் சமாளிக்க ஏப்ரல், மே மாதங்களிலும்தான். ஜூன் மாதம் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுக்கத் துவங்கிவிடும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தால்  விவசாயத்திற்கான மின் தேவை ஓரளவு குறைந்து விடும்.

நாம் இப்போது சார்ந்திருக்கும் மின் திட்டங்களான காற்றாலை,  நீர் மின்சாரம் போன்றவை மேற்குறிப்பிட்ட மின் தேவை அதிகமுள்ள நாட்களில் அதிகம் பயன் தராது. அனல் மின்சாரம் போன்றவை நிலக்கரியினை சார்ந்திருப்பதால் எவ்வளவு நாட்களுக்கு கை கொடுக்கும்? மேலும் நிலக்கரி இறக்குமதியில் ஏற்படும் குளறுபடிகள் மின் உற்பத்தியினைப் பாதிக்கும்.

சுற்றுப்புறச்சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அணுமின் திட்டம் போன்றவற்றிற்கு இனிவரும் காலங்களில் நிலங்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். ஒரே வழி, சூரிய சக்தியினால் கிடைக்கும் மின்சாரம்தான். தேவை அதிகமாக உள்ள நேரங்களில் இயற்கையே நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.

சோலார் மின் சக்தியை தற்போது மக்கள் பயன்படுத்தாதற்கான காரணங்கள்.

1.விலை:
இதன் உபகரணங்கள் விலை உயர்வாக உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்த முடியவில்லை.

2.சேகரிக்கும் பேட்டரி:
ஒவ்வொரு வருடமும் இதனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் இதன் விலையும் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் வண்ணம் உள்ளது.

3.மின்சாரம் கிடைக்கும்போது பயன்படுத்த முடியவில்லை.

4.தன்னிறைவு இல்லை. கிடைக்கும் மின்சாரத்தினை கலங்களில்  சேமிப்பதால் அதிகபட்சம்  சேமிக்க முடிவதில்லை. அதனால் மிக்சி, கிரைண்டர் போன்ற  சாதனங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. அதனால் மீண்டும் மின்சார வாரியத்தினை நாடும் சூழல் ஏற்படுகிறது. மேற்கண்ட காரணங்களால் பொதுமக்கள் சோலார் மின்சக்தியினை விரும்புவதில்லை.

அரசு மிகப் பெரிய சோலார் மின்கலங்கள் அமைப்பதில் உள்ள இடர்பாடுகள்:

1.இடப் பற்றாக்குறை: மின்கலங்கள் அமைப்பதற்கு பெரிய இடம் தேவைப்படும். அதற்கும் பொதுமக்களிடம் எதிர்ப்பு வரலாம்.

2.பாதுகாப்பு: இதனைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் மிக அதிக ஆட்கள் தேவைப்படுவர். அதனை நிர்வகிக்க தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டி வரும்.

3.முதலீடு: அரசு மிகப் பெரிய முதலீட்டினை செய்ய வேண்டி வரும். அதிலும் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் செயல்படுத்த நினைத்தாலும் விரைவாக இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமெனில் அரசு இயந்திரம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படவேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வளவும் இல்லாத ஒரு திட்டத்தினை சிந்தித்துப் பார்ப்போம்.

அனைத்து வீடுகளிலும் சோலார் மின்கலங்கள் அமைப்பது, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை முடிந்தவரை உடனடியாகப் பயன்படுத்துவது. அதாவது அந்த மின்சாரத்தினை சேகரித்து துணை மின்நிலையங்களுக்கு கொண்டுவந்து அவற்றினை தேவைப்படும் இடங்களுக்கு உடனே சப்ளை செய்வது.

ஒரு மணி நேரத்தில் 36 watt உற்பத்தி செய்யும் ஒரு தகடு இருபதாயிரம் ரூபாய் ஆகிறது. அதன் அளவு பதினாறு சதுர அடியாக உள்ளது. சாதாரணமாக ஒரு
சிறிய வீட்டின் அளவு ஆயிரத்து இருநூறு சதுர அடியாகும். அதில் நான்கில் ஒரு பகுதியான முன்னூறு சதுர அடியில் சூரிய மின்சாதனம் அமைத்தால் ஒரு சிறிய வீட்டில் கூட ஒரு மணி நேரத்தில் 720 watt மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது கிட்டத்தட்ட ஒரு நடுத்தர வீட்டின் அன்றாடத் தேவையினை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

இதனை உடனடியாக அவர்களே பயன்படுத்த முடியாமல் போவதற்குக் காரணம் மின்சாரம் பெரும்பாலும் இரவு நேரம்தான் தேவைப்படுகிறது. அதுவரை சேகரிக்கும் அளவுக்கு பேட்டரி அமைத்தால் மிகப்பெரும் முதலீடு தேவைப்படும். ஒவ்வொரு வருடமும் அதனை மாற்ற வேண்டிய சூழல் உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பயப்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இதனை இவ்வாறு செயல்படுத்தலாம்:

1.ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் முன்னூற்றி இருபது  சதுர அடியில் சோலார் மின்கலம் அமைப்பது. அங்கு கிட்டத்தட்ட எழுநூற்றி இருபது watt மின்சாரம் உற்பத்தி ஆகும்.

2.அந்த மின்சாரத்தினை ஒரு கம்பி மூலம், இப்போதுள்ள கம்பங்கள் துணைகொண்டு, மின் நிலையத்திற்கு கொண்டு வருவது.

3.அதனை மின்மாற்றியின் மூலம் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பிவைப்பது.

கட்டாயம் இரண்டு சிறிய வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இரண்டாயிரம் வீடுகள் கொண்ட சிறிய கிராமத்தில் கூட ஒரு மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒருலட்சம் வீடுகளை மின் உற்பத்தி நிலையங்களாக மாற்ற இயலும்.

இந்தக் கணக்கில் பார்க்கும்போது ஒரு மாவட்டத்தில் பகலில் ஒரு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் கிலோவாட் உற்பத்தி செய்ய இயலும்.

சரி, இதற்கான முதலீட்டை யார் செய்வது?

முதலீட்டை அந்த வீட்டுக்காரரே செய்ய வேண்டும். அதற்குத் தேவையான தொகையினை மானியம் என்ற பெயரில் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடனாக வழங்குவது. அந்தத் தொகையினை ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செலுத்துமாறு வசூலிப்பது. உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை ஒரு மீட்டர் கொண்டு அளவிடுவது. அந்த மின்சாரத்தின் அளவினை பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிலிருந்து கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையினை மட்டும் வசூல் செய்வது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது ஒவ்வொரு மனிதனும் மின் உற்பத்தியில் ஈடுபடுவதால் அரசின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும். உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சாரத்தில் கழித்துக் கொள்வார்கள் என்பதால் பெரிய வர்த்தகர்களும் மின் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். பகல் முழுவதும் சோலார் மின்சாரத்தினை விவசாயம் மற்றும் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் இரவில் அவர்களுக்கான தேவை குறையும். இரவு நேரங்களில் தேவைப்படும் மின்சாரத்தினை இப்போது கிடைக்கும் மின்திட்டங்களின் மூலமே பூர்த்தி செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தின் வெற்றி, தோல்வியினை அறிய ஏதேனும் ஒரு கிளை மின் நிலையத்தினை தேர்ந்தெடுத்து அங்கு சோதனை முயற்சியாக அரசாங்கமே முதலீடு செய்து திட்டத்தினை துவங்கலாம். முழுமையான வெற்றி சாத்தியம் எனும்போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்கு சட்டம் இயற்றிக் கண்காணித்ததுபோல் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும்  மின்சாரத் துறையினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்.

சாதகங்கள் :

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பல இடங்களில் இருந்து கிடைப்பதால் ஏதேனும் பழுது என்றாலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது.

மேலும் அந்தந்தத் துணை மின் நிலையங்களிலேயே பயன்படுத்தப்பட்டுவிடும் என்பதால் மிகப் பெரிய மின்தடம் அமைக்க வேண்டிய அவசியம் இராது.
Ž  
மிகப் பெரிய அளவில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுவதால் புவியின் வெப்பம் குறையும்.

மின் உற்பத்திக்கு கச்சாப் பொருள் எதுவும் தேவையில்லை என்பதால் அரசின் முதலீடு மீண்டும் மீண்டும் தேவைப்படாது.

கழிவுப்பொருள் எதுவும் இல்லை என்பதால் அதனை அகற்ற வேண்டிய அவசியம் இராது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக