Powered By Blogger

வெள்ளி, 30 நவம்பர், 2012


நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. ஏன்?

நியாயமாகப் பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன? ஆனால் இன்று தில்லியில் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இதுதான்: நீங்கள் தேர்தலுக்குத் தயாரா?

காரணங்கள் இல்லாமல் இல்லை. சென்ற வாரம் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை காங்கிரஸ் அறிவித்தது. குழுவின் தலைவர் ராகுல்காந்தி. அதாவது அவர்தான் 2014 தேர்தலில் காங்கிரசை வழிநடத்தப் போகிறார். இந்தக் குழுவின் கீழ் மூன்று துணைக்குழுக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டணிகளை உருவாக்க ஒன்று, தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒன்று, விளம்பரம் மற்றும் தகவல்தொடர்புக்காக ஒன்று. தேர்தல் பணிகளில் 27 தலைவர்களை இறக்கி விட்டிருக்கிறது காங்கிரஸ். அவர்களில் 11 பேர் மத்திய அமைச்சர்கள்.

இப்போதைக்கு காங்கிரசுக்கு நெருக்கமாக உள்ள இன்னொரு கட்சியான சமாஜ்வாதிக் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் 60ஐக் கைப்பற்றி விடவேண்டுமென துடிக்கிறது சமாஜ்வாதி. அப்படி 60 இடங்களை வென்றால்தான் முலாயம் சிங் யாதவின் பிரதமர் நாற்காலிக் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் கொஞ்சமேனும் ஏற்படும்.

2014க்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டால் நல்லது என்று சமாஜ்வாதிக் கட்சி கருதுகிறது. காரணம் அது உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. இன்னும் 18 மாதங்கள் கழித்துத் தேர்தல் என்றால் அது Anti Incumbency எனப்படும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்படும் மனக்குறையை சந்திக்க நேரிடும்.

இதே காரணத்திற்காக மம்தா பானர்ஜியும் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெற வேண்டும் என விரும்புகிறார். மத்திய அரசின் மீது அவரது கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்கு வெளியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவும் ஓர் முக்கியக் காரணம்.

அவரது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறுவது எளிதல்ல. அதற்குப் பல கட்சிகளின் ஆதரவு வேண்டும். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு தேவை. ஆனால் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பாஜக அதிக உற்சாகம் காட்டவில்லை. பார்க்கப்போனால் எல்லோருக்கும் முன்னதாக - செப்டம்பர் மாதமே- நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வந்துவிடும் எனப் பேசியவர் அத்வானி.

நித்தின் கட்கரி மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள் பாஜகவை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதிய தலைவரோடு தேர்தலைச் சந்திப்பதா அல்லது கட்கரி தலைமையிலேயே தேர்தலை எதிர்கொள்வதா என்பது அதன் முன்னிருக்கும் குழப்பம் நம்பர் 1. இரண்டாவது குழப்பம் பிரதமர் வேட்பாளர் என யாரைக் குறிப்பிடுவது என்பது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் விரும்புகிறார்கள். மற்ற மாநிலங்களை விட பல அம்சங்களில் குஜராத் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருப்பதால், குஜராத்தை உதாரணமாகக் காட்டி வளர்ச்சிக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க முடியும் என்பது அவர்களது வாதம். அண்மைக்காலமாக உலகின் கவனம் குஜராத் பக்கம் திரும்பியிருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 2002 குஜராத் மதக்கலவரத்திற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மோடியை ஓரம் கட்டி வைத்திருந்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பேவன், மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.‘இங்கிலாந்தின் தேசிய நலன்களைக் கருத்தில்கொண்டு இந்த சந்திப்பு நடந்தது’ என்று அவர் சொல்லியிருப்பதை மோடியின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் குஜராத் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவர் பெயரை அறிவித்தால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அனுபவம் வாய்ந்த  அத்வானி அல்லது அவரது ஆசி பெற்ற ஒருவரை முன்னிறுத்த வேண்டும் எனக் கருதுகிறார்கள். இந்தக் குழப்பங்கள் தீராமல் பாஜக களம் இறங்க விரும்பவில்லை.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பாஜகவிற்கு எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பிற கட்சிகளுக்கும் முக்கியம். ஏனெனில் கூட்டணி தொடர்வதா, வைத்துக்கொள்வதா என்ற முடிவுகளை அவை அதன் அடிப்படையிலேயே எடுக்க எண்ணுகின்றன. உதாரணமாக (ஐக்கிய) ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நித்திஷ் குமார், மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை விரும்பவில்லை. பாஜகவை தீண்டத்தகாத கட்சி என்று சொல்வது விநோதமாக இருக்கிறது" என்று தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி சொல்லியிருப்பது தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்னோ அவர் அதை ஆதரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

பாஜகவின் கூடாரத்தில் குழப்பம் நிலவும்போதே தேர்தலை நடத்திவிட வேண்டும் என காங்கிரஸ் நினைத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதை விரும்பவில்லை. மின் வெட்டு, டெங்கு, மழைக்கால அவதிகள் ஆகிய விஷயங்கள் ஆளும் கட்சிக்கு நல்ல பெயரைத் தரவில்லை. நாளை தேர்தல் வந்தால் இந்த விஷயங்கள் - குறிப்பாக மின் வெட்டு- அது ஆளும் கட்சிக்கு எதிராகத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

மற்றொரு பெரிய கட்சியான திமுக இப்போது மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கிறது. என்றாலும் அது உற்சாகமாக இருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கட்சியில் நிலவி வரும் உட்பூசல் ஒரு காரணம். அண்மையில் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி பகிரங்கமாக விமர்சித்தது ஓர் உதாரணம். பழனி மாணிக்கம் கட்சித் தலைமையின் நிர்பந்தத்தால் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டார். ஆனால் தேர்தல் என்று வந்தால் வேட்பாளர் தேர்வில் இந்தக் குழு மோதல்கள் பிரதிபலிக்கும் என்பதால் தேர்தல் 2014ல் வருவதையே அது விரும்புகிறது.

முன்கூட்டியே தேர்தல் வந்தால், திமுகவின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அழகிரி போன்றவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அது உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தும் என்பது இன்னொரு காரணம்.

தேர்தல் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது இந்த இரண்டு கட்சிகளின் முன் உள்ள பிரச்சினை. கடந்த 20 ஆண்டுகளாக இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், சட்டமன்றத் தேர்தலின்போதும் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களைக் கேட்டுப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு 5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் அரசின் பல செயல்களுக்கான பழியை திமுக சந்திக்க வேண்டியிருப்பதாலும், காங்கிரஸ் பலவீனப்பட்டிருக்கும் நிலையில் அதனுடன் உறவைத் தொடர வேண்டுமா என்ற கேள்வி திமுகவினரிடையே இருக்கிறது. அதே நேரம் காங்கிரசின் உறவை உதறிவிடும் பட்சத்தில் வேறு யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடை காண்பதும் கடினமாக இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலை தேமுதிகவுடன் இணைந்து சந்தித்தது. ஆனால் யாரால் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற கேள்வியின் காரணமாக கூட்டணி உடைந்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேமுதிகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. அதன் காரணமாக, ஒருவேளை மும்முனைப் போட்டி ஏற்பட்டால் வாக்குகள் சிதறி, அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கடினமாகக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். சரி, வேறு யாருடன் கூட்டணி என்ற கேள்வியை அதிமுகவும் எதிர்கொள்கிறது என்கிறார்கள்.

இரண்டு கழகங்களும் கை விடுமானால் தமிழக காங்கிரசின் நிலை என்னவாகும் என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் அதை விடப் பெரிய பிரச்சினை உட்கட்சிப் பூசல். தமிழக காங்கிரசின் புதிய தலைவராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இன்னும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. தேர்தல் என்று வந்தால் உள்ளூர் வேட்பாளர்களைவிட ராகுல் காந்தியின் வசீகரத்தையே (charisma) தமிழகக் காங்கிரஸ் நம்ப வேண்டியிருக்கும்.

ராகுல் காந்திக்கு வாக்காளர்களைக் கவரும் வசீகரம் இருக்கிறதா? அவரது கடந்தகால செயல்பாடுகள், அதற்கு வாக்காளர்களிடமிருந்து கிடைத்த முடிவுகளைப் பார்த்தால் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

2010ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் 243 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இன்னொரு இந்தி பேசும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்2012ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலை காங்கிரஸ், ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. 403 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 28 இடங்களை மட்டுமே வென்றது. மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுக்குப் பின், நான்காவது இடம்தான் காங்கிரசிற்குக் கிடைத்தது. இத்தனைக்கும் உத்தரப்பிரதேசம் ராகுல்காந்தியின் முன்னோர்கள் செல்வாக்கோடு விளங்கிய பூர்வீக பூமி.

ஆனால் 15, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத, கட்சிக்கு முறையான காரியக் கமிட்டி, அலுவலர்கள் என்று எந்த அடிப்படையும் இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்தவர் ராகுல். பல ஆண்டுகளாக அம்மாநிலத்தின் பல தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்க முடியாத நிலையில் கடந்த தேர்தலில் வழக்கத்தைவிட 87 லட்சம் ஓட்டுகள் அதிகமாக காங்கிரசிற்கு கிடைத்தது." என்கிறார் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணி.

அரசியல் கட்சிகளை விடுங்கள், வாக்காளர்கள் தேர்தலுக்குத் தயாரா? அவர்கள் தேர்தல் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டும் இல்லை; வந்துவிட்டால் என்ற கவலையிலும் இல்லை. வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் முடிவுகளை தேர்தல் நாளன்று எடுப்பதில்லை. எடுக்கும் முடிவை ஆணித்தரமாக வெளியிடவும் தயங்குவதில்லை.
புதியதலைமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக