Powered By Blogger

சனி, 27 அக்டோபர், 2012

பவர் கட்... பளிச் ஐடியாக்கள்!


பகலில் லைட்டை அணைங்க!
உங்க ஊரு; எங்க ஊரு என்று தமிழகம் முழுவதும் பல ஊர்கள்ல இரவில் தெருவிளக்கு எரியுதோ, இல்லையோ மின் ஊழியர்களின் கவனக் குறைவால் பட்டப் பகலில் தெருவிளக்குகள் எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதை  முதல்ல குறைக்கணும். குண்டு பல்புகளைப் பயன்படுத்தினா அதிக மின்சாரம்செலவாகும்; சி.எஃப்.எல். விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரம் குறைவாகத்தான் செலவாகும்னு அரசாங்கம் சொல்லுது. இதையே கொஞ்சம் கட்டாயப்படுத்தினா, கண்டிப்பா மின்சாரத்தைச்சேமிக்க முடியும்" என்கிறார், தென்சென்னையைச் சேர்ந்த எம். ராஜேந்திரன்.


மானிட்டரை ஆஃப் செய்யுங்கள்!
தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல் இப்போது எல்லா இடங்களிலும் கணினிப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவோர் வீட்டில் இருப்பவர்களானாலும், தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், பணிக்கு இடையே சற்று ஓய்வு எடுக்கும்போது மானிட்டரை மட்டுமாவது சுவிட்ச் ஆஃப் செய்யலாம். இந்த வகையிலும் மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், வீட்டில் அனைவரும் தனித்தனி அறைகளில் தூங்காமல் ஒரே அறையில் தூங்குவது, பிடித்த பாடல்களைக் கேட்க அதிக மின்சாரத்தைஉறிஞ்சும் ஹோம் தியேட்டர் பயன்படுத்தாமல் இருப்பது, குடும்ப விழாக்களில் மின் அலங்காரத்தைக் குறைப்பது போன்றவை கைகொடுக்கும்" என்கிறார், குளித்தலையைச் சேர்ந்த பாலாமணி கார்த்திகேயன்.


மின் நுகர்வை வரையறைப்படுத்தலாமே!
இவ்வளவு மின்சாரம்தான் உபயோகிக்க முடியும் என்ற வரையறை வகுக்க வேண்டும்.  அதாவது ஒருவர் சராசரியாக கடந்த 6 மாத மின் பயன்பாட்டின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொண்டால், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அவர் 140 யூனிட் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  இந்த 140 யூனிட் மின்சாரத்தைஅவரது தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்துகொண்டு உபயோகிக்கலாம். மாதம் ஒன்றுக்கு 140 யூனிட் மின்சாரத்திற்கு மேல் அவர் பயன்படுத்தும் பட்சத்தில்,அவர் பயன்படுத்தும் அதிகப்படியான மின்சாரத்திற்கு மானியம் இல்லா மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒருவேளை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அளவை விட குறைவாகப் பயன்படுத்தியிருப்பின், அடுத்த மாத அளவுடன் சேர்த்து அதனைப் பயன்படுத்த வரையறை செய்யலாம். அதேபோல யு.பி.எஸ். என்பது மின் உற்பத்திச் சாதனம் இல்லை. மின்தேக்கிச் சாதனம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விளக்கு எரிக்கவே மின்சாரம் இல்லாதபோது, அனைத்து வீடுகளிலும் யு.பி.எஸ். பயன்படுத்துவதைத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். பத்து லட்ச ரூபாய் மதிப்பிற்கு மேலாகக் கட்டப்படும் ஒவ்வொரு கட்டடத்திற்கும் (குடியிருப்பு, தொழில் நிறுவனங்கள் எதுவானாலும்) சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று யோசனை தருகிறார் நத்தம், இரா.சு.மதிமாறன்.


மின்மாற்றியை பராமரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான மின்மாற்றிகள்  (டிரான்ஸ்ஃபார்மர்கள்) மூலம்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றிகள் இயங்குவதற்கு ஒரு வகையான ஆயில் ஊற்றப்படுகிறது. இந்த ஆயிலை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியாகவேண்டும் (இருசக்கர வாகனங்களுக்கு குறிப்பிட்ட கி.மீ. ஓடியதும் ஆயில் மாற்றுவோமே... அதுபோல!). ஆனால், இந்த ஆயில் முறையாக மாற்றப்படுவதில்லை. இதன்மூலம் ஒரு மின்மாற்றியில்5 சதவிகித மின் இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றியை முறையாகப் பராமரித்தாலே மின்சாரத்தைச் சேமிக்க முடியும்" என்கிறார், நல்லூரைச் சேர்ந்த ஜவஹர்.


ஜீரோ வாட்ஸ்க்கும் வாட்ஸ் உண்டு!
நிறைய பேர் மின்சாரத்தை சிக்கனமா செலவழிக்கிறேன் பேர்வழின்னு, குளியல் அறை, பூஜை அறை, டாய்லெட்டுன்னு சகல இடங்கள்ல ஜீரோ வாட்ஸ் பல்பை பயன்படுத்திட்டு இருக்காங்க. ஜீரோ வாட்ஸ்னா, மீட்டர் என்ன ஓடவா போகுதுன்னு நினைச்சிக்கிட்டு நாள் முழுவதும் இந்த லைட் வீடுகள்ல எரிஞ்சிக்கிட்டே இருக்கும். ஆனா, ஜீரோ வாட்ஸ் பல்பு ஒன்று எரிய 15 வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படுது. இது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு வீட்டுக்கு மூணு ஜீரோ வாட்ஸ் பல்பு தொடர்ந்து எரிஞ்சுதுன்னா 45 வாட்ஸ் மின்சாரம் செலவாகும். அப்படின்னா ஒரு நாளைக்கு, ஒரு மாசத்துக்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகுதுன்னு கணக்குப் பாருங்க. தலை சுத்தும். அதனால ஜீரோ வாட்ஸ் பல்பு கூட அளவா பயன்படுத்தினா, அதுவே மின்சார சிக்கனம்தான்" என்கிறார், திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார்.


சூரிய மின்சாரத்தைக் கட்டாயமாக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தின் பெரும்பகுதியை, தொழில் நிறுவனங்களும், உற்பத்திக்கூடங்களும்தான்  பயன்படுத்துகின்றன. தொழில் நிறுவனங்களின் அபரிமிதனமான பெருக்கத்தின் காரணமாகவே தற்போது மின்பற்றாக்குறை நிலவுகிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும், உற்பத்திக்கூடங்களும் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் 75 சதவிகிதத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் சோலார் பேனல் பொருத்தி அவர்களாகவே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதைச் செயல்படுத்த அரசு சார்பில் மானியமும் அளிக்கலாம். மழைநீர் சேகரிப்பை அரசு எப்படி கட்டாயமாக்கியதோ அதேபோல், தொழிற்கூடங்களுக்கு சோலார் பேனல் இணைப்பைக் கட்டாயமாக்கினால் மின் பற்றாக்குறையை தவிர்க்கலாம்" என்கிறார், திருச்சியைச் சேர்ந்த  சதீஷ்குமார்.

தொகுப்பு : என். சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக