Powered By Blogger

புதன், 10 அக்டோபர், 2012

சீர்திருத்தம் தேசத்தைப் பலி கொடுக்கும்!


சீர்திருத்தம் தேசத்தைப் பலி கொடுக்கும்!
விசித்திரமான முரணாகத்தான் இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் வால்மார்ட்டிற்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதே நாளன்று (செப்டம்பர்-14) அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க் நகரில் வால்மார்ட்டிற்கு கதவுகள் சாத்தப்பட்டன. சிறிய சில்லறை வர்த்தகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று அந்நிய முதலீட்டின் ஆதரவாளர்கள் சொன்ன அதே வெள்ளிக்கிழமையன்று அட்லாண்டிக்சிட்டிஸ் என்ற இணைய செய்தித்தாள், ‘பரவும் மரணம்: அருகிலுள்ள சிறிய வர்த்தக நிறுவனங்களை வால்மார்ட் விரட்டியடித்தது  எப்படி?’ என்ற திகைப்பூட்டும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது. பல வாரங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 30ம் தேதியன்று, பத்தாயிரம் மக்கள் அமெரிக்காவின் பணக்கார நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வீதிகளில், ‘வால்மார்ட் = வறுமை’ என்று முழக்கமிட்டுக்கொண்டு சென்றார்கள். ஜூன் 1-ம் தேதி நூற்றுக்கணக்கானவர்கள் வாஷிங்டன் டிசி வால்மார்ட் முன் திரண்டு, ‘வால்மார்ட் வேண்டாம் என்று சொல்லுவோம்’ எனப் போராட்டம் நடத்தினார்கள்.

ஏன் வால்மார்ட்டைக் குறிவைக்க வேண்டும்? அது உலகின் மிகசக்தி வாய்ந்த சில்லறை வர்த்தக  நிறுவனம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஐ.மு.கூட்டணி அனுமதி தருவதற்கு நிறைய மெனக்கிட்டவர்கள். இங்குள்ளவர்கள் வால்மார்ட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அது எங்கு பிறந்ததோ அந்த அமெரிக்காவில் அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது .

வால்மார்ட் மீது ஏன் இந்த வெறுப்பு? வால்மார்ட் முழு வர்த்தகத்தை நாசப்படுத்தி விடுகிறது என்று நியூயார்க் தொழிற்சங்கங்களும் மக்களும் கூறுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் அதையேதான் சொல்கிறார்கள். வால்மார்ட்டிற்கு இதயமோ, தார்மீக நெறிகளோ கிடையாது என்று அவர்கள் குரலெழுப்புகிறார்கள். அமெரிக்க அரசியல்வாதிகள் நம் ஐ.மு.கூ. அரசியல்வாதிகளைப் போலத்தான். பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குத் தடைவிதிப்பது என்று கடந்த மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி முடிவெடுத்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக வால்மார்ட் தனது கட்டிடத்திற்கான அனுமதியைப் பெற்றது. 2ஜி உரிமம் வழங்குவதற்கான கெடு தேதி விஷயம் நினைவிற்கு வருகிறதா?

சில்லறை வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரிடம் வால்மார்ட் கருணையோடு நடந்துகொள்ளும் என்றும் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்றும் ஐ.மு.கூ. சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நடந்தது அதற்கு நேர் எதிராக இருக்கிறது. சிகாகோவிலுள்ள ஆஸ்ட்டின் நகர்ப்புறப் பகுதியில் வால்மார்ட் 2006ம்ஆண்டு அடியெடுத்து வைத்தது. 2008க்குள் அங்கிருந்த 306 சிறிய கடைகளில் 82 கடைகள் மூடப்பட்டுவிட்டன என்று, ‘அட்லாண்டிக்சிட்டீஸ்’ கட்டுரை சொல்கிறது. வால்மார்ட் உள்ள பகுதிகளில் 35 முதல் 60 சதவிகிதம் கடைகள் மூடப்படுவதாக, ‘எகனாமிக் டெவலெப்மெண்ட்’  என்ற காலாண்டிதழ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. வேலைகளைப் பொருத்தவரை அது இரண்டு பேருக்கு வேலை கொடுத்தால் ஏற்கெனவே வேலையில் இருக்கும் மூன்று பேரை வீட்டிற்கு அனுப்புகிறது. எனவே வேலைகளை அது உருவாக்கும் என்ற வாதமும் பொய்யானது.

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது ஒரு கெட்டிக்காரப் புளுகு. எப்படி என்று பார்ப்போம். வால்மார்ட் விலைபொருட்களை விளைந்தவுடன் சந்தை விலையில்  வாங்குவதோ, பணம் கொடுப்பதோ இல்லை. அடுத்த ஆண்டு வரப்போகும் மகசூலை இந்த ஆண்டே முன்கூட்டியே ஒரு விலை நிர்ணயித்து வாங்க ஏற்பாடு செய்துகொள்கிறது.

ஜனவரி 2007ல் இருந்ததைவிட ஏப்ரல் 2008ல் அமெரிக்க மற்றும் உலகச் சந்தைகளில் அரிசியின் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. அதற்குக் காரணம் அரிசியின் கையிருப்பு குறைவாக இருந்தது அல்ல என, ‘யு.எஸ்.ஏ. டுடே’ (ஏப்ரல் 23, 2008) தெரிவித்துள்ளது. அதற்குக் காரணம் சாம்ஸ் கிளப் என்ற வால்மார்ட்டின் மொத்த வியாபாரத்தைக் கவனிக்கும் பிரிவு தன் கையிருப்பில் வைத்திருந்த ஏராளமான அரிசியை நல்ல விலைக்கு விற்பதாக விலைகளை உயர்த்தியதுதான்.

2007 துவக்கத்தில் இருந்ததைவிட 2008 ஏப்ரலில் கோதுமை விலை நான்கு டாலரிலிருந்து பதினான்கு டாலராக உயர்ந்துள்ளது. முன்கூட்டியே விலை நிர்ணயித்து வால்மார்ட் வாங்கியதால் அமெரிக்க விவசாயிகளுக்கு நஷ்டம், வால்மார்ட்டிற்கு லாபம்.

அமெரிக்க விவசாயிகளுக்கு வால்மார்ட் நல்ல விலை தருகிறது என்றால் அமெரிக்க அரசு, அதன் மக்கள்தொகையில் இரண்டு சதவிகிதமே உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏன் இருநூறு கோடி டாலர் அளவிற்கு மானியம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்."

(செப்டம்பர் 20ம் தேதி, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்).
நன்றி: ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக