Powered By Blogger

திங்கள், 22 அக்டோபர், 2012

அண்டை மாநிலங்களிலிருந்து வாங்க முடியாதா?


அண்டை மாநிலங்களிலிருந்து வாங்க முடியாதா?

இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மின் மிகை மாநிலங்கள். இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், திரிபுரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும்7 யூனியன் பிரதேசங்களில் தில்லி, நாகர் ஹவேலி ஆகியவற்றில்தான் மின்சாரம் மிகையாக உள்ளது, அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றிலும் மின்பற்றாக்குறை நிலவுகிறது.

மின் விநியோகத்திற்காக இந்தியா 5 மண்டலங்களாகப் (grid) பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொதுத் தொகுப்பிலிருந்து தென்னிந்திய கிரிட் மூலம் மின்சாரம் பெறுகிறது. ஆனால் அதன் உள்கட்டமைப்பு பழைமையானதாகவும் பலவீனமாகவும் உள்ளது. மொத்தமாகவே 2,000 மெகாவாட் வரைதான் அதில் மின்சாரம் எடுத்து வர முடியும். கடந்த ஆண்டு குஜராத்திலிருந்து தினம் 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஏற்பாடு செய்தது. ஆனால் 235 மெகாவாட்தான் எடுத்துவர முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று மின்சாரம்.

இவ்வளவு வெயில் கொளுத்துகிறதே, சூரிய சக்தியைப் பயன்படுத்தி நமக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியாதா?
ஜவஹர்லால் நேரு சூரிய மின் திட்டத்தின் கீழ் முதல் மின் உற்பத்தி நிலையம், தனியார் துறையில் தமிழ்நாட்டில்தான், மயிலாடுதுறையில் ஜூன் 2011ல் துவக்கப்பட்டது. அது ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்திற்குக் கொடுக்கிறது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி 20 முதல் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஒரு சதுர கி.மீ. நிலம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலத்தின் தேவை அதிகமாக இருப்பதாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க இயலாது. குஜராத்தில் நீர்ப்பாசனக் கால்வாய்களை சிமெண்ட் பலகைகளால் மூடி, அந்த இடத்தை சூரிய மின்சார உற்பத்தி செய்கிறார்கள். அதைப் போல ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.

காற்றாலை?
உலகில் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது (அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை முதல் நாலு இடங்களைப் பெறுகின்றன). 2001ல் இருந்ததைவிட 2011ல் 10 மடங்கு அதிகமாக நாம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்கிறோம். இந்தத் துறை ஆண்டுக்கு 20 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் ஆண்டு முழுதும் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியாது. எல்லா இடங்களிலும் காற்றலைகளை நிறுவ முடியாது.

தெரியுமா?
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள உ.பி.யை விட, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மகாராஷ்டிரத்தை விட தனிநபர்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம். ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் பயன்படுத்தும் மின்சாரம் (கிலோவாட்களில்) கேரளம் 536.78,  கர்நாடகம் 873.05, ஆந்திரம் 1013.74, தமிழ்நாடு 1210.81

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக