Powered By Blogger

சனி, 27 அக்டோபர், 2012

அச்சம் தவிர்


டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால், தற்காத்துக் கொள்வது எப்படி?

மீண்டும் தமிழகத்தை மிரட்டத் துவங்கியிருக்கிறது டெங்கு.

அக்டோபர் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில், திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சாம்ஜி சாலமன் ராஜா என்ற 26 வயது இளைஞர் இறந்து போனார். சனிக்கிழமையன்று திருவேற்காடு சக்திவேல் நகரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் சுதாகர்,  ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் மரணமடைந்தார். வேலூரைச் சேர்ந்த அபர்ணா என்ற 5ம் வகுப்பு மாணவி, சேர்ப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார், கதிரவன், கடையநல்லூர் அருகே முதலியார்பட்டியில் 10ம் வகுப்பு மாணவி சுமதி, திருப்பூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் மூவர், காஞ்சிபுரத்தில் ஏழு வயதுக் குழந்தை பவுசியா எனப் பலர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியானதாக செய்திகள் வெளியாகின.

தஞ்சாவூரில் 10, நாகையில் 12, புதுக்கோட்டையில் 15, திருவாரூரில் 4, மதுரையில் 4 குழந்தைகள், வேலூரில் 7 (இதில் ஒரே நாளில் 2 பேர்), சென்னையில் 34 என்று டெங்கு பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.  

டெங்கு காய்ச்சலுக்குப் பலியாவோர் பற்றிய தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் நெல்லை, மதுரை, வேலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று தனிப் பிரிவு துவக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் என்று காவிரி டெல்டா முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் சுகாதார ஆய்வாளர்களின் கண்காணிப்பில் கொண்டு வரப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனைக்கும் டெங்கு சிகிச்சைக்கும் தனிப் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

சென்னை நகரத்தில் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தாலும்  சென்னையிலுள்ள   பல்வேறு பகுதிகளைச்  சேர்ந்த 100க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு  சிகிச்சை  வேண்டி  தனியார்  மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ‘அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமானதுதான்’ என்று அக்டோபர் 13ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநகராட்சி ஆணையர், அதை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் கடந்த திங்களன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, ‘டெங்கு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

அரசியல் டெங்கு

இதற்கிடையில் டெங்கு காய்ச்சலை வைத்து அரசியல் நடத்தவும் அரசியல்வாதிகள் முயற்சித்துவருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ‘தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது காய்ச்சல் தீவிரமாகப் பரவி உயிரிழப்பு இருப்பதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளார்’ என்று கூறினார். டெங்கு காய்ச்சலால் 1,000 பேருக்கு மேல் இறந்திருப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகிறார்.

ஆனால் அதே வெள்ளிக்கிழமை சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ‘மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதிகாரபூர்வமாக 31 பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. இது மற்ற மாநிலங்களைவிட அதிகம். இதுவரையிலும் 30 ஆயிரம் பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மைதான். தில்லியில் கடந்த சிலதினங்களில் 400 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் 20 கேஸ்கள் வருகின்றன. கடந்த சனிக்கிழமை மட்டும் 30 கேஸ்கள் பதிவாகின. டெங்கு காய்ச்சல் ஆந்திராவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 400 பேர் டெங்குவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் தில்லியில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

தமிழக அரசு மட்டுமல்ல, கருணாநிதியின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் ஆளும் தில்லியிலும் டெங்கு மரணங்கள் மறைக்கப்படுகின்றன. அங்கு இதுவரை ஒரே ஒருவர்தான் டெங்குவிற்குப் பலியானதாக தில்லி அரசு சொல்கிறது.

மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதி சொல்வது போல், தமிழக அரசின் பணிகளை ஆய்வு செய்ய வரவில்லை. தென் மாநிலங்களில் ஒட்டுமொத்த சுகாதார நிலை குறித்து நடந்த ஒரு கூட்டத்தில்  கலந்துகொள்ள வந்திருந்தார்.

சென்னை வந்த குலாம் நபி ஆசாத் டெங்குவிலிருந்து தப்பிக்க ஒரு யோசனை தெரிவித்துள்ளார். ‘குறைந்தபட்சம் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை பள்ளிக் குழந்தைகள் உடல் முழுவதும் மூடும் வகையில் முழுக்கை சட்டை, பேண்ட் அணிய பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அறிவுறுத்த வேண்டும். இதனால் கொசுக்கள் கடிப்பது கட்டுப்படுத்தப்படும். கல்வி அமைச்சர் இதை ஒரு வழிகாட்டியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பெரியவர்களும் உடை விஷயத்தில் இதைப் பின்பற்றலாம். மாநிலத்தில் மின் வெட்டு அதிகமாக உள்ளதால் கிடைத்த நேரத்தில், இடத்தில் தண்ணீர் சேமித்து வைக்கிறார்கள். இதுவும் கொசு உற்பத்திக்கு காரணம்’ என்கிறார் ஆசாத்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?      அது எப்படிப் பரவுகிறது?    

டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை. மற்ற கொசுக்களைப் போல் அல்லாமல் பகலில் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை.பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நம் ரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. அது நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கும்.

ஏடஸ் கொசுவின் வாழ்நாள் இரண்டு வாரங்கள் மட்டுமே. இந்த 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள் வரை இடும். உலர்வான சூழல் இருந்தால் 9 மாதங்கள் வரை இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதன்பிறகு அதற்குத் தகுந்த சுத்தமான நீர், உணவு கிடைத்தால் குஞ்சுகளாகப் பொரிக்கும். ஒரு கொசுவில் டெங்கு வைரஸ் இருந்தால் அதிலிருந்து வரும் முட்டை, குஞ்சு என்று அதன் மூலம் பெருகும் அனைத்துக் கொசுவிலும் இந்த வைரஸ் இருக்கும்

டெங்கு காய்ச்சல் உயிர்க்கொல்லியா?

டெங்கு காய்ச்சல் அத்தனை பயங்கரமான உயிர்க் கொல்லியா என்ற கேள்வியை குளோபல் மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர். மதுபாஷிணியிடம் கேட்டபோது, முதலில் இந்த அளவிற்கு பயப்படத் தேவையே இல்லை. டெங்கு காய்ச்சல் எல்லா காய்ச்சலையும் போலவேதான் முதல் 2 நாட்கள் இருக்கும். பாராசிட்டமால் மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. இதிலேயே 99 சதவிகிதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மயக்கம், வாந்தி (இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்) ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சேர்ந்தும் வரலாம்" என்றார்.

2009ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் டெங்கு காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரித்தது. 1.சிக்கலில்லாத சாதாரணக் காய்ச்சல்.  2. ரத்தக் கசிவு உள்ள தீவிரக் காய்ச்சல்.

டெங்குவினால் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்குப் பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே சரியாகிவிடும்.பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இந்தக் காய்ச்சல்தான்.

2வது வகையில் ரத்த அழுத்தம் குறையும். உடனே மருத்துவ ஆலோசனை வேண்டும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இதுதான் ஆபத்தானது. நம் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை தட்டணுக்கள் உள்ளன. இந்தத் தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டணுக்கள் 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும்போதே நாங்கள் உடலில் தட்டணுக்களைச் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என்று தெரிந்தால் முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அதனால் எந்தப் பலனும் கிடையாது. தேவை இல்லாதபோது செலுத்தும் தட்டணுக்கள் அழிந்து போய்விடுமே தவிர உடலில் தங்காது" என்கிறார், டாக்டர். மதுபாஷிணி.

அம்மை, போலியோ இவற்றுக்கெல்லாம் தடுப்பு மருந்து (வாக்சின்) கொடுப்பதுபோல இதற்கு தடுப்பு மருந்து கிடையாதா?

நான்கு வகை டெங்கு வைரஸ்கள் இருக்கின்றன. ஒருமுறை நம்மைப் பாதித்த வைரஸ் மீண்டும் நம்மைத் தாக்கினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், நம் உடல் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுவிடும். ஆனால் அதே சமயம் அந்த எதிர்ப்பு சக்தி மற்ற மூன்று வைரஸ்களைப் பொறுத்தவரை பலனளிக்காது. ஒரு முறை பாதிக்கப்பட்டவர் இரண்டாம் முறை பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் தீவிரமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆன்ட்டிபயாட்டிக்கள்?

ஆன்ட்டிபயாட்டிக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. தேவையில்லாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் அதைச் சாப்பிடுகிறார்கள். சிலர் வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது இரண்டுமே மிகத் தவறு. வலி நிவாரணிகள் ரத்தத் தட்டணுக்களைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் டெங்கு காய்ச்சலுக்கு    என்ன செய்வது?

காய்ச்சல், உடல்வலி இருந்தால் 2 நாட்கள் பாராசிட்டமால்மாத்திரைகளை சாப்பிடுங்கள். நிறைய திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் குறையவில்லை என்றால், டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்த அளவிற்கு பீதியடையத் தேவையில்லை.  ஏனெனில், டெங்கு காய்ச்சலினால் இறப்பவர்கள் ஒரு சதவிகிதம் பேர்தான்.

இந்த நோய் ஏற்படாமல் எப்படித் தடுப்பது?

சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் ஹெட் டாங்க் மூடி, ஏர் கூலர், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், தேங்கிய நீரில் கொசு மருந்து அடித்து வையுங்கள். குலாம் நபி ஆசாத் சொல்லும் முழுக்கைச் சட்டை கூட ஒரு பயனுள்ளயோசனைதான்.
              
உலகம் முழுவதும்

ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஐந்து முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது. 1960ல் இருந்ததை விட 2010ல் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு நகர்மயமாதல் உள்ளிட்ட பல காரணங்கள். புவி வெப்பமயமாதல் ஒரு காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘கடந்த ஆண்டு முதல் டெங்குவின் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாததே முக்கியக் காரணம்’ என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைபொதுநல மருத்துவர் டாக்டர். ஜே.பாரத். ‘கொசு உற்பத்தியை முற்றிலும் ஒழிப்பதால்மட்டுமே டெங்குவைத் தடுக்க இயலும்’ என்கிறார் அவர்.

என்ன செய்வது?
  • டெங்குவிற்கென்று பிரத்யேக சிகிச்சை கிடையாது.
  • காய்ச்சல், உடல் வலி என்று டெங்குவிற்கான அறிகுறிகள் இருந்தால் முதல் 2 நாட்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுங்கள்.
  • காய்ச்சல் குறையவில்லை என்றால், டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
  • கண்டிப்பாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சாப்பிடக் கூடாது. வலி நிவாரணிகளையும் தவிர்க்க  வேண்டும். இதனால் ரத்தத் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு.
  • நிறைய திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை

  • சுத்தமான நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், எந்தவிதத்திலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
  • நீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், ஏர் கூலர், ஹெட் டாங்க் மூடி, சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘‘ஏழாண்டுகளாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறவில்லை’’எம்.சிவராஜ், பொதுச் செயலாளர், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துவார்கள். இது எல்லாமாவட்டங்களிலும் கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஒன்று. இதில் மாவட்ட சுகாதாரப் பணியாளர் துறையைச் சேர்ந்த 2 இயக்குனர்கள் கலந்துகொள்வார்கள். தங்கள் மாவட்டத்தில் இந்தப்   பருவத்தில் எந்த மாதிரியான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது, அப்படி இருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஓர் ஆய்வறிக்கையைக் கொடுப்பார்கள். இந்த ஆய்வறிக்கை கிராமப்புறங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று மாதம் ஒருமுறை எடுக்கும் விவரங்கள், நகராட்சிகளில் நகராட்சி நல அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று எடுக்கும் விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வுக் கூட்டம் நடக்கவில்லை. அந்தந்தப் பருவத்திற்கு குறிப்பிட்ட பகுதியில் என்ன மாதிரியான தொற்று நோய்கள் வரும் என்பதை ஆய்வு செய்து பருவ நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தப் பிரச்சினையே வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக