Powered By Blogger

சனி, 15 டிசம்பர், 2012


சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றும் 23 வயதுப்  பெண் ஒருவர், தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டுத் திரும்ப பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது என்ற செய்தி, கடந்த வாரம் எல்லா ஊடகங்களிலும் வெளியானது. அதைப் படித்த நாம் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தோம். அனுதாபத்தில் கசிந்தோம்.

இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் பெண்கள் மீதான வன்முறை என நம்மில் பலர் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் மீதான எல்லா வன்முறைகளும் இப்படி அப்பட்டமாக, வெளிப்படையாக நடத்தப்படுவதில்லை.

வீட்டிலும் வீதியிலும் அலுவலகத்திலும் பெண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொற்களாலும் செயல்களாலும் எதிர்கொள்ளும் வன்முறை நம் சமூகத்தில் வெளியே தெரியாமல் அன்றாடம் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப உறவுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும்  வன்முறை என்பது இங்கே இயல்பானதாகவே கருதப்படுகிறது என்பதுதான். மாப்பிள்ளை அடிக்கிறார் என்று வீட்டுக்கு வரும் பெண்ணிடம் ‘ஆம்பிளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். தொலைக்காட்சிகளைத் திறந்தால்... தினம் ஏதாவது ஒரு தொடரில் ஏதேனும் ஓர் ஆண், அப்பாவோ, அண்ணனோ, கணவனோ, காதலனோ, ஒரு பெண்ணை அறைந்து கொண்டிருப்பதைக் காணலாம். நம் தமிழ் சினிமாக்கள், இன்னும் ஒருபடி மேலே. அதில் கதாநாயகியின் கன்னத்தில் கதாநாயகன் அறைந்ததும் பெரும்பாலும் அடுத்த காட்சி டூயட்தான். அதாவது அந்த வன்முறையைப் பெண் இயல்பாக எடுத்துக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல அவனோடு கொஞ்சத் தயாராகிவிட வேண்டும்.

இதை தமிழ்க் கலாசாரம் என்று கண்ணகி காலத்திலிருந்து கற்பித்து வந்திருக்கிறோம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் பதிவாகி உள்ள குடும்ப வன்முறை வழக்குகளில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணா  திரத், மக்களவையில் அளித்த தகவல்படி  தேசிய குற்றப் பதிவு பீரோ சென்ற வருடம் 9,431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ‡NFHS - 3  அறிக்கையின் படி இந்தியாவில் 30.4 சதவிகித  திருமணமான பெண்கள் தங்களது 15 முதல் 49 வயது வரை உடல், பாலியல், உணர்வு சார்ந்த வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதிலும் கணவனிடம் இருந்து முதல் அறையை திருமணமான முதல் ஐந்து வருடங்களுக்குள் அவர்கள் பெற்று விடும் ‘பாக்கியம்’ உடையவர்களாம்.

இதுபோலான வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க 2005ம் வருடம்  குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பெண்கள் மீது எத்தகைய வன்முறையும் நடைபெறாமல் இருக்கும் தொலைநோக்குப் பார்வையோடு உருவானதுதான். அக்காக்கள், தங்கைகள், அம்மாக்கள் (தத்தெடுத்துக் கொண்டவர்கள் என்றாலும் கூட)  வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், அவர்கள் ஒரு  பாதுகாப்பு அதிகாரியை அணுகலாம் என்று அச்சட்டம் சொல்கிறது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களின் உறைவிடமும் மிக முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் நிஜமாகப் பாதிக்கப்படும் பல பெண்களுக்குத் தெரிவதில்லை என்பதே உண்மை.

ஆனால், சட்டங்களும் நீதி மன்றங்களும் மட்டுமே நம் பெண்களைப் பாதுகாத்து விடுமா? சமூகத்தின் பொதுப் புத்தி மாறாமல், பங்கேற்பு இல்லாமல் பெண்கள் மீதான வன்முறையை முற்றிலும் நிறுத்திவிடமுடியாது. அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?  வாருங்கள் பேசுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக