Powered By Blogger

வெள்ளி, 7 டிசம்பர், 2012


கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேசப் போட்டிகளில் தமிழக தடகள வீரர்கள் கலந்துகொள்வதை அரிதாகவே பார்க்க முடிகிறது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு தமிழருக்குக் கூட கிடைக்கவில்லை. ஒருபக்கம் கேரளாவும் ஆந்திராவும் விளையாட்டுத்துறையில் வீரநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் நம் தமிழக வீரர்கள், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கே தத்தளிக்கும் நிலைதான் நீடிக்கிறது. உண்மையிலேயே நம்மிடம் திறமையான இளைஞர்கள் இல்லையா?

இருக்கிறார்கள். ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்தும் இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் கடைசி வாரத்தில் லக்னோவில் தேசிய ஜூனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் நம்முடைய 90 இளம் தடகள வீரர்கள் கலந்துகொண்டு 45 பதக்கங்களை வென்று ஊர் திரும்பியுள்ளனர். இப்போட்டியில் பல தேசிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர் இந்த ஜூனியர்கள். கடந்த சில வருடங்களில் இது சிறப்பான பதக்க வேட்டை. பதக்கம் வென்ற பல இளம் வீரர்கள் மிகக் கடுமையான சூழல்களிலிருந்து வந்து சாதித்துள்ளனர்.

விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் காண மிக முக்கியமான முதற்படி... திறமைகளைக் கண்டறிவது. அதற்குப் பிறகுதான் திட்டமிடுதல், பயிற்சி கொடுத்தல், போட்டிகளுக்குத் தயார் செய்வது எல்லாமே! இதோ நம் கண் முன்னே 45 பேர் பதக்கங்களை வென்று அடுத்த உச்சம் தொடக் காத்திருக்கிறார்கள். அவர்களை நாம் என்ன செய்ய போகிறோம்? அவர்கள் மேலும் மேலும் முன்னேறி சர்வதேச அளவில் மிளிர என்ன செய்யப் போகிறோம்?  ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பலரும் பதக்கம் வென்று திரும்புவதும் பின் அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறதுதான். ஆனால் விளையாட்டுத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற நாம் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து அறிந்துகொள்ள விளையாட்டு வீரர்களையும் சில பயிற்சியாளர்களையும் விளையாட்டுத்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரையும் சந்தித்தோம். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

பதக்கம் வென்று திரும்பியிருக்கிற இவர்களுக்கு இதுவரைக்கும் எந்தப் பாராட்டோ, பரிசுத்தொகையோ அறிவிக்கப்படவில்லை. இது வாடிக்கையாக நடப்பதுதான் என மனதை தேற்றிக்கொண்டோம். ஆனால் லக்னோ போட்டிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட 131 இளம் வீரர்களில் 90 பேர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். மீதி 40 பேர் ஏன் லக்னோ செல்லவில்லை என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை.

இது குறித்து விசாரித்தோம். லக்னோ போட்டி தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான் பலருக்கும் இது குறித்த அறிவிப்புக் கடிதமே போய் சேர்ந்திருக்கிறது. பல வீரர்களுக்கு இந்தக் கடிதமே போய்ச் சேரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு இந்தப் பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகளையும் நம்முடைய விளையாட்டுத்துறை செய்துதரவில்லை என்றும், அவர்களாகவே கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து லக்னோவிற்கு செல்கிற ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பெருங்கூட்டத்தோடு கூட்டமாகப் பயணித்தே சென்று சேர்ந்திருப்பதும் தெரியவருகிறது.

போட்டிகளில் கலந்துகொள்ளச் சென்ற வீரர்களுக்கு உணவுக்காக வழங்கப்பட்ட தொகை பத்து நாட்களுக்கு வெறும் 1,600 ரூபாய்தான்! பத்து நாட்களுக்கு ஒரு விளையாட்டு வீரனுக்கு இந்த சொற்பத் தொகை போதுமானதாக இருக்குமா என்ன?

லக்னோவில் நடந்த போட்டிகளில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் 15,000 ரூபாய் பரிசுத் தொகையை உடனடியாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. லக்னோ போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீரரும் தங்களுடைய ஊரிலிருந்து லக்னோ சென்று அங்கே விளையாடி திரும்புகிற வரைக்கும் போக்குவரத்து தொடங்கி சகல உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறது அம்மாநில அரசு.

போட்டி மைதானத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே சென்று முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் கேரள வீரர்கள். பதக்கங்களை வென்று திரும்பிய இந்த விளையாட்டு வீரர்களுக்கு பாலக்காட்டிலும், எர்ணாகுளத்திலும் மகத்தான வரவேற்பையும் கொடுத்து அசத்தியுள்ளனர். அங்கே விளையாட்டும் வீரர்களும் சர்வதேச அளவுக்கு வளர்வதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக நடைபெறுகிறது.

அதுபோகட்டும்... தமிழகத்தின் இந்த இளம் வீரர்களை நல்லபடியாகக் கவனித்து திறமையான சீனியர் வீரர்களாக மாற்றுவதற்காக நம் அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சில மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம்.

இவர்களுக்கு பரிசு, பாராட்டு குறித்து எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படும்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார், எஸ்டிஏடியின் ஜெனரல் மேனேஜரான ராசாத்தி.

நம்முடைய தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவரான வால்டர் தேவாரத்தையும் சந்தித்தோம். அவரிடம் இந்தக் குழந்தைகளுக்கென ஏதாவது வருங்கால திட்டங்கள் இருக்கிறதா என்பது குறித்துக் கேட்டோம்.

அதற்காகத்தான் ஃப்யூச்சர் சாம்பியன்ஸ் ப்ரோகிராம் என்கிற ஒன்று ஏற்கெனவே இருக்கிறதே! அதோடு இவர்கள் நம்முடைய ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க இயலும். இந்தியன் கேம்புக்கு தேர்வானால் உணவு, உடை, உறைவிடம் எல்லாமே இலவசம்தானே. அதுபோக ஆண்டுதோறும் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம். சீனியர் வீரர்களாக ஆகிவிட்டால் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் ஒருலட்ச ரூபாய் பரிசுகூட கொடுக்கப்படுகிறதே! இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்?, ஜூனியர்கள் நிறையப் பயிற்சி செய்தாலே போதும்" என்றார்.

அட ஆமாம்ல... இவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அரசுதான் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறதே... அதோடு விளையாட்டு விடுதிகளை நடத்துகிறதே... இதற்குமேல் என்னதான் செய்யவேண்டும் என்கிற கேள்விகள் நம்மிடமும் எழுந்தன. அதே சமயம் இத்தனையும் இருந்தும் ஏன் நம்மால் ஒலிம்பிக்கிற்கு ஒற்றை ஆளைக்கூட அனுப்பமுடியவில்லை? சில பயிற்சியாளர்களை சந்தித்துப்பேசினோம்.

தற்போது ஜூனியர் போட்டிகளில் வென்ற இந்த வீரர்கள் அடுத்த ஆண்டுதான் ஸ்காலர்ஷிப்புக்காக விண்ணப்பிக்க இயலும். அந்த விண்ணப்பங்கள் அதற்கடுத்த ஆண்டுதான் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

அதுவும் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? மாதம் ஆயிரம் ரூபாய்தான்! ஒரு சர்வதேச சாம்பியனை உருவாக்க இந்தத் தொகை போதுமானதாக இருக்குமா? அதோடு நம்முடைய விளையாட்டு விடுதிகளிலிருந்து உருவாகி வந்த ஒரே ஒரு சாம்பியனை உங்களால் காட்ட முடியுமா? சொல்லப்போனால் நம்முடைய விளையாட்டு விடுதிகள் உருப்படியான விளையாட்டு வீரனையும் ஒன்றுக்கும் உதவாதவனாக மாற்றிவிடும் அபாயகரமான இடங்களாகவே உள்ளன" என்று வருத்ததோடு பேசினார், பெயர் வெளியிடவேண்டாம் என மறுத்துவிட்ட ஒரு தடகளப் பயிற்சியாளர்.

அரசின் செயல்பாடுகளும் திட்டமிடலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சரி, என்னதான் செய்வது? இந்தக் குழந்தைகளை சரியாக வளர்த்து எப்படித்தான் சாம்பியன்களாக உருவாக்குவது?

ஒரு சர்வதேச சாம்பியனை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. பத்து வயதிலிருந்தே அவனை தயார் செய்ய வேண்டும். பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். அவனுடைய உணவுப்பழக்க வழக்கங்களிலிருந்து பயிற்சி, படிப்பு எனப் பலதையும் திட்டமிடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் நம்மால் உருப்படியான ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க இயலும்" என்கிறார், ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன். இன்று தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படி உருவாகியுள்ள தடகள வீராங்கனையான காயத்ரியை உருவாக்கியவர், பயிற்சியாளர் நாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் குழந்தையின் பெற்றோர், பயிற்சியாளரோடு பேசி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடவேண்டும். பொருளாதார ரீதியில் என்ன உதவி வேண்டும், பயிற்சியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்ப நம்முடைய அரசும் விளையாட்டுத்துறையும் உதவ வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தக் குழந்தைகளில் பத்து பேரையாவது ஒலிம்பிக்வரை அழைத்துச்செல்ல இயலும், இல்லையென்றால் படிப்பை காரணம் காட்டி பாதிப் பேர், வறுமையால் மீதிப் பேர் என ஒருவர் கூட தேறிவர முடியாமல் போகலாம். அதோடு தடகள விளையாட்டில் இருக்கிற வெவ்வேறு விளையாட்டுகளில் எது உகந்தது என்பதைக் கண்டறிதல், அதற்கேற்ப பயிற்சிகளை தீர்மானித்தல் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என்கிறார், தடகளப் பயிற்சியாளர் ராஜன்.

ஒரு பக்கம் அரசின் அலட்சியப்போக்கு தொடர்ந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கிளப்புகள் இந்த ஜூனியர்களில் திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து உதவுகின்றன.

செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியின் உதவியோடு நடக்கிற ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி 150க்கும் மேற்பட்ட இளம் வீரர்களுக்கு இலவசமாக  உணவு, உடை, இருப்பிடமும் தந்து இலவசமாகப் பயிற்சியளிக்கிறது. அதோடு அவர்களுடைய கல்விக்கும் உதவுகிறது. லக்னோவில் நடந்த போட்டியில் தமிழகம் வென்ற 45 பதக்கங்களில் இந்த அகாதெமியிலிருந்து மட்டுமே 20 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்கள் தவிர கார்ல் மார்க்ஸ் அகாதெமி, யுஎஸ்எஃப், ராயல் அத்லெடிக் கிளப் என இன்னும் ஏகப்பட்ட தனியார் அகாதெமிகள் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து உதவுகின்றன.

எச்பிசிஎல் நிறுவனம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓட்டப்பந்தய வீரர் அகஸ்டின் யேசுதாஸுக்கு கொடுத்து உதவுகிறது. நீளம் தாண்டுதல் வீரரான பிரேம்குமாரை வெளிநாட்டிற்கு அனுப்பி, பயிற்சி கொடுக்க மிட்டல் டிரஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னொரு தடகள வீராங்கனையான காயத்ரிக்கு கோல்ட் க்வஸ்ட் நிறுவனம் உதவுகிறது. ஆனால் இது போதாது என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். தமிழ்நாட்டில் இதுபோல உதவக்கூடிய தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும், ஜூனியர் லெவலிலேயே உதவிகள் கொடுத்தால் மட்டும்தான் நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

இந்த 45 வீரர்களும் வெவ்வேறு சூழல்களில் வறுமையோடு போராடி, சரியான உணவின்றி, போதிய மைதானங்கள், உபகரணங்களின்றி வெற்றி பெற்றவர்கள். இவர்களுக்கு இவை அனைத்தையும் மிகச் சரியாக அக்கறையோடு கொடுத்தால் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் இந்த 45 பேரில் நான்கு பேராவது கலந்துகொள்ளுவார்கள் என்பது உறுதி. தவறினால் அடுத்த முறையும் தமிழ்நாட்டிலிருந்து யாருமே இல்லையே என புலம்பத்தான் வேண்டியிருக்கும்.
 


சில நம்பிக்கை நாயகர்கள்!

இவர்தான் நம்பர் ஒன்!
ஒலிம்பிக்வரைக்கும் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படும் இளம் தடகள வீரர்களில் முதன்மையானவர் 19 வயது பிரேம்குமார். இந்திய அளவில் நீளம் தாண்டுதலில் சீனியர், ஜூனியர் எல்லாவற்றிலும் பிரேம்குமார்தான் நம்பர் ஒன். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்து , அம்மா சர்ச் ஒன்றில் சமையல் வேலை பார்த்து சம்பாதிக்க... வறுமையோடு போராடி இன்று தேசிய சாம்பியனாக வளர்ந்து நிற்கிறார் பிரேம்குமார். கடந்த பிப்ரவரியில் சீனாவில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பிலும், இலங்கையில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். லக்னோவில் நடந்த போட்டியிலும் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது மிட்டல் டிரஸ்ட் நிறுவனம் இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி, பயிற்சி செய்ய தேவையான ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்து தரவுள்ளது. 2014 காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய தடகளப் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்பதே இவருடைய தற்போதைய லட்சியம். சாதிக்க நினைப்பவனுக்கு வறுமையோ, வசதியோ ஒரு தடையல்ல என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் பிரேம்குமார்.

அதிரடி அக்ஷயா!
அக்ஷயாவுக்கு ஆதர்சன நாயகர் காலி ஃபியர்சன். 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் வென்ற ஆஸ்திரேலிய வீரர் அவர். அவரைப்போலவே அக்ஷயாவுக்கும் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஒலிம்பிக்வரை முன்னேற வேண்டும் என்கிற லட்சியமும் விடாமுயற்சியும் இருக்கின்றன. சென்னையில் 11ம் வகுப்பில் படிக்கும் அக்ஷயா, லக்னோவில் நடைபெற்ற  16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவின் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கொச்சியில் நடைபெற்ற தென்மண்டல தடகளப் போட்டியில் தடை தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக இப்போதே தயாராகி வருகிறார் அக்ஷயா. பயிற்சியாளரின் கண்டிப்பும் அப்பாவின் அக்கறையும் அம்மாவின் அன்பும்தான் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்கிறார் அக்ஷயா.

உருவாகிறார் ஓர் உசேன் போல்ட்!
அகஸ்டின் யேசுதாஸ், 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து சாதித்துவரும் இளம் வீரர். லக்னோ போட்டியில் 100 மீ. மற்றும் 200 மீ. என இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு இரண்டு தங்கங்களை வென்று திரும்பியுள்ளார். அப்பா ரயில்வேயில் சாதாரண கிளார்க், பெரிய வசதிகள் கிடையாது. பதினோறாம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டாக தொடங்கிய ஓட்டப்பந்தய ஆர்வம் இன்று தேசிய சாம்பியனாக மாற்றியிருக்கிறது. லயோலா கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கும் இவர், தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் தங்கமும் வெள்ளியுமாகக் குவித்து வருகிறார். தற்போது 10.79 விநாடிகளில் 100 மீ. ஓட்டத்தில் ஓடி சாதனை படைத்திருந்தாலும், இதைவிட இன்னும் மூன்று அல்லது நான்கு மைக்ரோ செகண்டுகள் குறைவாக ஓட முயற்சி செய்துவருவதாக சொல்கிறார். 2020 ஒலிம்பிக்தான் இவருடைய லட்சியமும். இவருக்கு எச்பிசில் நிறுவனம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஸ்காலர்ஷிப்பாக கொடுத்து உதவுகிறது. அந்த உதவியால்தான் தன்னால் இந்த அளவுக்கு வரமுடிந்திருக்கிறது என்கிறார்.

நிற்காத ஓட்டம்!
திருவண்ணாமலைக்கு அருகிலிருக்கும் அணுக்குமலை என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பிரியா. தினமும் பல கிலோமீட்டர்கள் நடந்துதான் வேட்டவலம் அரசுப் பள்ளிக்கு வந்து படிக்கிறார். விவசாயம் செய்யும் சாதாரணக் குடும்பம். இருந்தும் விளையாட்டின் மீது தீராத ஆர்வம். 11ம் வகுப்பு படிக்கும் பிரியாவுக்கு பி.டி.உஷாவைப் போல சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்பதே லட்சியம். அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியரும் உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசனும் கொடுத்த உத்வேகம்... தொடர்ந்து 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டார். பயிற்சி பெற பெரிய மைதானங்கள் கிடையாது, உபகரணங்கள் கிடையாது, போதிய டயட் எதுவுமே கிடையாது. இருந்தும் வெற்றி பெற வேண்டும் என்கிற நம்பிக்கையை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சாலைகளிலும், மலைகள் மீதும் தன் பயிற்சியை தொடர்கிறார் இந்த வீராங்கனை. லக்னோவில் நடைபெற்ற 1,000 மீட்டர் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பியுள்ளார். இதுவரை தேசிய அளவில் 6 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளார். முதலில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதே இவருடைய லட்சியம்.

வறுமை தடையல்ல
கோவையைச் சேர்ந்த நந்தினியின் அப்பா ஒரு டெம்போ டிரைவர். பெரிய வருமானமெல்லாம் இல்லை. கிடைக்கிற சொற்பப் பணத்தில் நந்தினியையும் தங்கையையும் படிக்க வைக்கிறார். ஐந்தாம்வகுப்பு படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வங்காட்டினார் நந்தினி.  தன்னுடைய கஷ்டங்கள் குறித்து கவலைப்படாமல் அவருடைய தந்தை சத்தியநாராயணன் முழு மனதோடு குழந்தைக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்திருக்கிறார். இதோ இப்போது லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் 5 மீட்டர் தூரம் தாண்டி, தங்கம் வென்று ஊர் திரும்பியிருக்கிறார். அவருடைய பெற்றோரும் பயிற்சியாளர் நந்தகுமாரும் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர். தற்போது 100 மீட்டர் ஹர்டுள்ஸ் மற்றும் நீளம் தாண்டுதலில் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நந்தினி, சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவேண்டும் என்கிற லட்சியத்தோடு பயிற்சி பெற்று வருகிறார்.

பெரில் ஹட்சன்!
ஆறடிக்கு மேல் இருப்பார் போலிருக்கிறது பெரில் ஹட்சன். இவ்வளவு உயரமான தடகள வீரர்கள் நமக்கு கிடைப்பதே அரிதிலும் அரிது. அதிலும் பெரில் ஹட்சன் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகிற இளம் வீராங்கனை. சென்னையின் நேரு விளையாட்டரங்கில் தினமும் மாலை நேரத்தில் கடும் பயிற்சியில் ஈடுபடுகிறார் பெரில். நான்காம் வகுப்பு படிக்கும்போதே, ‘நல்லா உயரமா இருக்கியே... நீ ஹை ஜம்ப்பில் கலந்துக்கோ’ எனப் பலரும் கூறியதைக் கேட்டு ஹைஜம்ப் விளையாடத் துவங்கினார். ஆனால் ஒன்பதாம் வகுப்பு வரை அதுதான் தொடர்ந்தது. அதில் பெரிய வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இவருடைய பயிற்சியாளர் ராஜன், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தினார். கைமேல் பலன். லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 400 மீ. தனிநபர் பிரிவில் தங்கம், 400 மீ. மெட்லி ரிலேவில் வெண்கலம் என அசத்தியிருக்கிறார். உசேன் போல்ட்தான் இவருக்கு ஆதர்சனம். சென்ற ஆண்டு போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வெள்ளி வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக