Powered By Blogger

வெள்ளி, 7 டிசம்பர், 2012


18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக வந்திருக்கிறது புது சட்டம். இந்தச் சட்டத்தின் பெயர் - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012. இந்தச் சட்டம் நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

 14 வயது வரையான குழந்தைகள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டால், அதற்கு ஏற்கெனவே சட்டம் இருக்கிறது. இப்போது அந்த வயதை 18 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குகிறார், கோவை வழக்கறிஞர் திவ்யா.

 18 வயதிற்குக் கீழிருக்கும் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவதைத் தடுக்கும் இந்தச் சட்டம் ஆண் குழந்தைகளையும் சேர்த்தே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் 52 சதவிகிதப் பாலியல் குற்றங்கள் 18 வயதிற்கு கீழிருக்கும் குழந்தைகள் மீதே  நடக்கின்றன. இதில் ஆண் குழந்தைகளின் சதவிகிதம் 20 ஆகவும், பெண் குழந்தைகளின் சதவிகிதம் 32 ஆகவும் இருக்கின்றன.

குழந்தைகளைத் தவறான நோக்கோடு அணுகினாலே இந்தச் சட்டம் அதையும் குற்றமாகவே பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான விஷயங்களைக் கூறினாலோ, உறுப்புகளைத் தொடச் செய்தாலோ, ஆபாசப் படங்களைக் காண்பித்தாலோ அதுவும் குற்றமே. குற்றம் நடந்திருக்கவேண்டும் என்பதில்லை, அதற்கான முயற்சி கூட குற்றமே.

குற்றம் நடந்தது என்று குழந்தை சொன்னாலே போதும்... அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கிற பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தான் உண்டு.

குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பெண் மருத்துவரே அந்தக் குழந்தையை பரிசோதிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உடன் செல்ல வேண்டும். அதேபோல் காவல்நிலையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரத்தில் இருப்பவர்களே வழக்கை விசாரிக்க வேண்டும்.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருட சிறைத்தண்டனையும், அதிகபட்சம் ஆயுள்தண்டனையும் வழங்கப்படும்.

இந்த வழக்கை சிறப்பு சிறுவர் சீர்திருத்த (Special Juvenile court) விசாரிக்கும். இதற்கென சிறப்பு வழக்கறிஞரும் அரசால் நியமிக்கப்பட்டிருப்பார்.

விரைவாக விசாரணை செய்து குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் குழந்தையின் வாக்குமூலத்தை நீதிமன்றம் வாங்கிவிட வேண்டும். வழக்கை ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

நீதிமன்ற அனுமதியின்றி ஊடகங்கள் வழக்குத் தொடர்பான விவரங்களை வெளியிடக் கூடாது என்று இந்தச் சட்டம் சில வரையறைகளையும் கூறியிருக்கிறது.


தாமதமாய் வந்த சட்டம்
1982ல் க்‡ˆ கொண்டு வந்த குழந்தைகள் உரிமைச்சட்டமானது 1989ல் இந்தியாவில் விவாதிக்கப்பட்டது. 1992ல் நடைமுறைக்கு வரவேண்டிய இந்தச் சட்டம் 20 வருடங்கள் கழித்து, இப்போதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது.  2011ல்     சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மே 2012ல் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு குழந்தைகள் தினமான நவம்பர் 14, 2012 அன்றிலிருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக