Powered By Blogger

வெள்ளி, 7 டிசம்பர், 2012

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கடும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.  துவக்க நாளன்று ருத்ராட்சம் அல்லது துளசி மணிகளால் ஆன  மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.  மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான  பேச்சுவார்த்தைகளை தவிர்த்தல் வேண்டும். தலை முடி, முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது.  ஒவ்வொரு நாளும்  அருகா மையில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.  கருப்பு, நீலம், காவி நிற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். 

முற்காலத்தில் சபரிமலைக்கு காடுகள் நிறைந்த பெருவழிப்பாதை வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே செல்ல முடியும்.   விலங்குகள் அதிகம் வசிக்கும் இவ்வழியில் வெள்ளை நிற ஆடை அணிந்தால் வெகு வெகு தூரம் வரை தெரியும் என்பதாலும் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த 
ஒளிச் சிதறல் கொண்ட கருப்பு, நீலம் நிற துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா  நதியை அடைய வெகு நாட்கள் ஆகும்.  எனவே, இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களை ஒரு புறமும், வழி உணவுக்கான பொருட்கள் மற்றொரு  புறமுமாக இருமுடி பையில் கட்டி எடுத்துச் சென்றனர்.  

பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்பது பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பெற்ற  இரு  அறைகள் கொண்ட பை ஆகும். மாலை அணிந்த நாள் முதல் தினம்தோறும் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகிய நெறிமுறைகளும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை தயார்படுத்த உதவும். இந்தப் பயணத்தின் முதல் பகுதி எருமேலியில் இருந்து  தொடங்கி அழுதா நதி வரை செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை அடைந்து புனிதமான கரிமலையை ஏறிக் கடக்க வேண்டும். 

அங்கிருந்து செறியனவட்டம், வலியனவட்டம் ஆகியவற்றை கடந்து முடிவில் பம்பா நதியைச் அடையலாம். தற்போது பெரும்பாலான  பக்தர்கள் வாகனங்கள் மூலம் மாற்று வழிகளில் பயணம் செய்து பம்பா நதிக்கரையை அடைகின்றனர். இதன் பிறகு  அனைவரும் சுமார் நான்கு கிலோ மீட்டார் தூரம் கடுமையான ஏற்றத்துடன் கூடிய நீலிமலையில் ஏறிக்கடந்து சபரிமலையை அடையலாம். முன்  காலத்தில் ஒற்றை வழிப்பாதையாக இருந்த இவ்வழி தற்போது மேம்படுத்தப்பட்டு இருபுறமும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அமைய பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக