Powered By Blogger

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


 டிசம்பர் 11, 2012

அடையாறிலிருந்து சி 51 எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தது. பாலவாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி அருகே பேருந்து சென்றபோது, நடத்துநர் செல்வராஜ் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த  10 கல்லூரி மாணவர்களிடம், ‘பாஸ் இருந்தால் காண்பியுங்கள், இல்லாவிட்டால் டிக்கெட் எடுங்கள்’ என்று கூறியுள்ளார்.  டிக்கெட் எடுக்க முடியாது  என்று ரகளை செய்த மாணவர்களை, பேருந்தை விட்டுக் கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளார் நடத்துநர். இதில் ஆத்திரம் அடைந்த 10 கல்லூரி மாணவர்களும் சேர்ந்து, செல்வராஜை கொடூரமாகத் தாக்கியுள்ளனர், இதில் அவருடைய கை எலும்பு முறிந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 நவம்பர் 23, 2012

நம்பியூரில் இருந்து  சத்தியமங்கலத்துக்குச் சென்றுகொண்டிருந்தது அந்த அரசு நகரப்பேருந்து.  பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் ஓட்டிக் கொண்டிருந்தார். பேருந்து ஊஞ்சப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகில் இருந்த ஒரு வீட்டுச் சுவரில் மோதி, நிலைதடுமாறி நின்றது. மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநர் செல்வராஜ், சிறிது நேரத்தில் இறந்து போனார். அவரது மாரடைப்புக்குக் காரணம், ஓய்வற்ற தொடர் பணிஅழுத்தம். அன்று கூட அவர்  பணி முடிந்த பிறகும் கூடுதலாக அடுத்த ஷிப்டும் தொடர்ந்து பேருந்தை இயக்கும்படி பணிக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 16, 2012

ஈரோட்டில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நவாப் ஜான் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். பேருந்து ஈரோடு அருகே கணபதிபாளையம் என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நவாப் ஜானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலியால் துடித்த அவர் வலியைப் பொருட்படுத்தாமல், பேருந்தை ஓரங்கட்டினார். வலியோடு பேருந்திலிருந்து கீழே இறங்கியவர் மயங்கி விழுந்தார்.  அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல்  இறந்தார்.

நவம்பர் 11, 2011

கவுந்தப்பாடி அரசு போக்குவரத்துக்கழகக் கிளையில் நகரப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த ஜேக்கப், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை ஓட்ட, இருக்கையில் அமர்ந்ததும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.  ஆனால், மருத்துவமனை செல்வதற்கு முன், வழியிலேயே ஜேக்கப்பின் உயிர் பிரிந்தது.

பணி நேரத்தில் தாக்கப்பட்ட மற்றும் உயிர் துறந்த சில அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களைப் பற்றிய தகவல்கள் இவை. இறந்தவர்கள் அனைவரும் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய பணிச்சூழலில் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கூறுகிறார்கள். ஏன் இந்த மன அழுத்தம்? காரணங்களை,‘புதிய தலைமுறை’ ஆராய்ந்தது. கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதோ அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களின்   மறுபக்கம்

இயந்திரங்களாக்ப்பட்டுவிட்ட ஓட்டுநர்கள்

தற்போது தமிழகத்திலுள்ள 20,500 அரசுப் பேருந்துகளை இயக்க 1.24 லட்சம் ஓட்டுநர்கள்  தேவை, ஆனால், ஓட்டுநர்களாகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை வெறும் 48,000 மட்டுமே. மீதமுள்ள 76,000 ஓட்டுநர்களின் பற்றாக்குறையால், அவர்களின் பணியையும் இப்போதுள்ள அரசுப் பேருந்து ஓட்டுநர்களே செய்துவருகின்றனர். பணியாளர் பற்றாக்குறை. இதன் காரணமாக  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இந்தத் தொடர் பணிச்சுமையால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக் குறைபாடுகள் ஏராளம்.

பொதுவா திருவண்ணாமலை டூ சென்னை மொத்தம் 190 கி.மீ. ஓரு நாளைக்கு இந்த ரூட்டில் ஒரு டிரைவர் 760 கி.மீ. தூரத்தை 21 மணிநேரத்தில் ஓட்டி முடிக்க வேண்டும் என்று எங்களுக்கு டார்கெட் இருக்கு. ஆனா, ஒரு டிரைவர் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் அல்லது 500 கி.மீ. தூரம் மட்டுமே பஸ்ஸை ஓட்டணும்னு மோட்டார் வாகன விதி இருக்கு. ஆட்கள் பற்றாக் குறையால் அந்த விதியை யாரும் இங்கே முறையா பின்பற்றுவதே கிடையாது. அதிகாரிகளின் வற்புறுத்தலால், நாங்கள் அரசு விதிகளுக்கு மாறாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் எங்களுக்குக் கிடைக்கும் இடைவெளி, அரைமணி நேரம் மட்டுமே, அந்த இடைவெளியிலும் பாதி நேரம் பயணிகளை  பஸ்ஸில் ஏத்துறதிலேயே சரியா போயிடும். ஒரு டீ குடிச்சிட்டு, மீண்டும் அடுத்த டிரிப் அடிக்க கிளம்பணும். இதுக்கு நடுவே இன்னொரு முக்கியமான விஷயம், எவ்வளவு கட்டுப்பாடாக வண்டியை ஓட்டினாலும் வண்டி ஒரு லிட்டர் டீசலுக்கு 4.5 முதல் 5 கி.மீ.க்கு மேல் கொடுக்காது. பஸ்களை  வடிவமைத்துக் கொடுத்த கம்பெனியே லிட்டருக்கு 5 கி.மீ. ஓட்டினாலே, அது அவங்களோட தயாரிப்புக்கு கிடைச்ச வெற்றினு சொல்றாங்க. ஆனால், நாங்கள் லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டியாக வேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடி தர்றாங்க. அவங்க சொல்றதை மறுத்து, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினால் உடனே மெமோ கொடுக்கறாங்க" என்கிறார், புறநகர்ப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்.

புறநகர்ப் பேருந்து ஓட்டுநர்களின் நிலைமை இப்படி இருக்க, இன்னொரு புறம் மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் நிலைமையோ இன்னும் மோசம். லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டவில்லை என்ற காரணத்தைக் கூறி, பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஓட்டுநர்கள் பயிற்சி ஓட்டுநர் பேருந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு,  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்போது, லிட்டருக்கு  6 கி.மீ. ஓட்டாத பட்சத்தில், பேருந்தை ஓட்டுவதற்குத் தகுதி இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இதனால், என்ன செய்வதென்று புரியாமல் திகிலுடன் தவித்துக் கிடக்கின்றனர் சில மூத்த மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள்.

நாங்க டியூட்டியில் போயிட்டு இருக்கும்போது, மதியஉணவு வேளை வந்துட்டா, அதிகாரிகள் சொல்ற ஓட்டலில்தான் வண்டியை நிறுத்திச் சாப்பிடணும். மீறி வேறு எந்த  ஓட்டலிலாவது சாப்பிட்டால், எங்க மேல நடவடிக்கை பாயும். அவங்க சொல்ற ஓட்டலில் நல்ல சாப்பாடு இருக்காது. இதனால், அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் எங்களைக் கடுமையாக, பாடாவதி ஓட்டலில் சாப்பாட்டுக்கு நிறுத்திவிட்டதாக சபிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயம், அந்தச் சாப்பாட்டை சாப்பிட்டு சிலநாட்களில் நாங்கள் வாந்தி, அஜீரணக் கோளாறு போன்ற சில பிரச்சினைகளில் துன்பப்பட்டது"  என்று மன வேதனையுடன் குமுறினார், சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் .

பாதுகாப்பை பலி கேட்கும் பராமரிப்பு

அரசு ஒருபுறம் புதிது புதிதாக நவீன ரகப் பேருந்துகளை வாங்கிக் குவித்தாலும் இங்கு காயலான் கடைப் பேருந்துகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், இங்கு முறையாகப் பேருந்துகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான். இத்தகைய பராமரிப்பில்லாத பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களின் மன அழுத்தம் சொல்லி மாளாது. தினமும் புலம்பல்களுடனே இவர்களது பயணம் தொடர்கிறது.

 ஓட்டுநர் ஷாஜகானுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு இது. நவம்பர் 21 அன்று கிருஷ்ணகிரி, பழைய பையனப்பள்ளியில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஷாஜகான் ஓட்டிச் சென்றார். சாலையில், எதிரே ஒரு பைக் வர, அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையோரம் இருந்த மண்திட்டின் மீது வலது பக்கம் சாய்ந்தபடியே பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின்  பக்கவாட்டுக் கதவின் தாழ்ப்பாள் சரியில்லாதால் கதவு தானாகத் திறந்துகொண்டது. அதன் வழியாக ஓட்டுநர் ஷாஜகான் நிலைதடுமாறி  சாலையில் விழுந்தபோது, அவர் ஓட்டிச் சென்ற பேருந்தின் பின்புற டயரே அவர் மீது ஏற, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது, தேசிய குற்ற ஆவணப் பதிவகம் (National Crime Records Bureau). அதன்படி  2011ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகளின் மூலம் மட்டுமே 1,317 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்களை ஒழுங்காகப் பராமரித்து டிரைவர்களின் பணி நேரத்தையும் முறைப்படுத்தினாலே இதில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகளைத் தவிர்க்க முடியும்" என்கிறார், திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர்.  

டிரைவருக்குத்தான் பஸ்ஸில் உள்ள பழுதுகள் தெரியும். அதைப் பற்றி டெப்போவில் உள்ள லாக் ஷீட் புத்தகத்தில் எழுதி வைக்கவேண்டும். எழுதி வைக்கப்பட்ட குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படணும்.  சரி செய்யவில்லை என்றால், மீண்டும் எழுதணும். பஸ்ஸில் நட்டு, போல்டு  கழன்று விழுந்தால் கூட நாங்க அந்தப் புத்தகத்தில் எழுத வேண்டும். பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவு, சீட், என்ஜின் மேல்பாகம் என பல பாகங்களைக்  கயிறு மூலம் கட்டியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். மழைக் காலத்துல பஸ்ஸின் கண்ணாடியில் வழியும் தண்ணீரை விலக்கி விடும் வைப்பர் கருவி பெரும்பாலான வண்டியில் இயங்குவது இல்லை. சில பஸ்கள் மழையில் ஒழுகுவது கூட உண்டு. சில பஸ்களில் ஷட்டர்கள் கிழிந்திருக்கும். ‘என்னயா பஸ் வெச்சிருக்கீங்க?’ என்று எங்களைத்தான் பயணிகள் விமர்சனம் செய்வார்கள். இத்தகைய நெருக்கடிகளுக்கு நடுவில்தான் நாங்கள் பஸ்களை இயக்கிக் கொண்டிருக்கிறோம்" - இது சென்னையில் நாம் சந்தித்த சில மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் புலம்பல் தொகுப்பு.

நரகத்தில் நடத்துநர்கள்

ஓட்டுநர்களின் நிலை அப்படி என்றால், நடத்துநர்களின் நிலையும் நெருக்கடிகளில் தத்தளிக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் நகரப் பேருந்தின் கண்டக்டர்களாக இருப்பதும் நரகத்தில் இருப்பதும் ஒன்றுதான்" என்கிறார், சென்னையில் நடத்துநராகப் பணிபுரியும் பிச்சையப்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரே தொடர்ந்து, சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 3,200 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பஸ்களை பயன்படுத்துகின்றனர். பீக் அவர்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  எள் போட்டால் எண்ணெயாகும் அந்தக் கூட்ட நெரிசலில் நீந்திச் சென்று டிக்கெட் தருவதும் ஒரு வகையில் சர்க்கஸில் ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணுவது போலத்தான். அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்" என்கிறார் அவர்.   

தொடர்ந்து அவரே, புதிதாகப் பணியமர்த்தப் பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் சரியாக டியூட்டி கொடுக்க மாட்டாங்க. பணி ஆணை கிடைத்தவுடன் 220 பணி நாட்கள் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பணி நிரந்தரம் செய்வார்கள். எங்களுக்கு இவர்கள் டியூட்டி தராததால் எங்களது  220 பணி நாட்கள் நிறைவு என்பது தள்ளிப் போகும். இதனால், எங்களது பணி நிரந்தரமும் தள்ளிப் போகும்.

 விடியற்காலை ஐந்து மணிக்கு டியூட்டிக்கு வந்துவிடு என்று நேரக் காப்பாளர் முதல்நாள் சொல்லிவிடுவார். ஆனால் காலையில் போனால் பஸ் இல்லை, டிரைவர் இல்லை என்று கூறி வேறு ஒரு நேரம் சொல்லி, அந்த நேரத்திற்கு வரச்சொல்லுவாங்க. இதனால், எங்க சொந்த வேலைகளைக் கூட சரியா செய்ய முடியாத நிலைமையில் இருக்கோம்.

காலேஜ் பசங்க பஸ்ஸில் ஏறும்போது, உள்ளே இடம் இருந்தாலும், படிக்கட்டுலே நின்னுக்கிட்டு இருப்பாங்க. ‘உள்ளே போங்கப்பா’ என்று எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டாங்க, படிகளிலே பயணம் செய்வார்கள். சில பேரு ஓடுற பஸ்ஸில் இறங்கி, ஏறி சர்க்கஸ் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் எங்க ரத்த அழுத்தம் எகிறும். பையனைக் கடிந்து கொள்ளவும் முடியாது. அது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரச்சினையாகிவிடும்" என்கிறார் பிச்சையப்பன்.

சில்லறைப் பிரச்சினை

பேருந்தில் நடத்துநருக்கும் பயணிக்கும் இடையில் நடக்கிற ‘சில்லறை மோதல்’ சகஜமானது. இதுகுறித்து மாநகரப் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறியது: காலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகம் இருக்கும்போது, சில பயணிகள் ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு நூறு ரூபாய் கொடுப்பார்கள். அதுக்கு நேரம் எடுத்துக்கும். ரெண்டு மூணு பேருக்குச் சில்லறை கொடுத்து முடிவதற்குள்  அடுத்த ஸ்டாப்பிங் வந்து,  சில பேரு டிக்கெட் வாங்காமலே இறங்கிடுவாங்க. இதனால்தான் சில்லறையா கொடுங்கனு கேக்குறோம் " என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இலவச மருத்துவம்!

அரசு போக்குவரத்துக்கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, உடல்நலக்குறைவு ஏதேனும் இருப்பின், அதற்கான இலவச மருத்துவ வசதி, பெருந்துறையில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின்கீழ் இயங்கும் ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இங்கு இலவச சிகிச்சை உண்டு. தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் இத்தகைய மருத்துவமனைகள் இருந்தால் இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது  எளிதாக இருக்கும் என்கிறார்கள் ஓட்டுநர்கள்.

45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்களின் உடல் தகுதியினை அறிந்துகொள்ள, முழு உடல் தகுதி பரிசோதனையும் இங்கு செய்யப்படுகின்றது. தமிழக அளவில் 1,300 ஓட்டுநர்கள் இங்கு வந்து பரிசோதனை மேற்கொண்டதில், 400 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மேல்சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமுறை அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் அசௌகர்யங்கள், தாமதங்கள் காரணமாக ஆத்திரம் பொங்கும்போது, அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல, அவர்கள் வெறும் கருவிகளாகக் கூட இருக்கலாம் என்பதையும் நிமிட நேரம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மன அழுத்தம் மறைந்துகூடப் போகலாம்!

போதுமான பணியாளர்கள் இல்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (CITU) பொதுச் செயலாளர் அன்பழகன், இதுகுறித்துக் கூறும்போது, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தனியார் கையில் இருந்த சில பஸ் கம்பெனிகளை அரசுடைமையாக்கி, 214 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்டது அரசு போக்குவரத்துத் துறை. பல தொழிலாளர்களின் கடுமையான உழைப்பினால் இன்று அது 21,207 பஸ்களாக (31.03.2012 நிலவரப்படி) உயர்ந்திருக்கு.

01.01.1972ம் ஆண்டு பட்டாபிராமன் கமிட்டியும், 1991ம் ஆண்டு தில்லைநாயகம் கமிட்டியும் போக்குவரத்துத் துறையில் அமல்படுத்த வேண்டிய பல முக்கியமான அம்சங்களை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அதில் 100 பஸ்களுக்கு 750 பேர் பணி செய்ய வேண்டும். அதில் 250 டிரைவர்கள், 250 கண்டக்டர்கள் மற்றும் 250 தொழில்நுட்பப் பணியாளர்கள் என்கிற கணக்கில் இருக்க வேண்டும்.  

ஆனால், தற்போதைய நிலையில் 100 பஸ்களுக்கு 100 தொழில்நுட்பப் பணியாளர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதிலும் இரவு நேரப் பணியில் கூடுதல் பஸ்களை பழுது பார்ப்பதினால், அவசரத்தில் சரியான முறையில் பஸ்களை பராமரிப்பு செய்ய முடியாமல் போகின்றது. தற்போது உள்ள பஸ்களின் எண்ணிக்கையைப் பொருத்து கணக்கிட்டுப் பார்த்தால், 27,500 தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவை.

சென்னை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் 80 கி.மீ. ஓட்டச் சொல்லும்போது, அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் 80 கி.மீ. அடையாத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அதிகாரிகள் நிர்ணயிக்கும் டார்கெட் தொகையை கலெக்‌ஷனில் கொண்டுவரா விட்டால் தினப்படிகள் குறைத்துக் கொடுக்கப்படுன்றன.

மேலும் கூடுதல் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, அதற்குரிய சம்பளம் பாதியாகவே வழங்கப்படுகின்றன. 900 கி.மீ. செல்லும் பஸ்களில் 3 டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும், ஆனால், தற்போது 2 டிரைவர்கள் மட்டுமே பஸ்ஸினை இயக்குகின்றனர்.

மேலும் கண்டக்டர்களே டிரைவர்களாகப் பணிபுரியும் அவலநிலையும் அரங்கேறி வருகிறது. பண்டிகை நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் பஸ்ஸை இயக்கி வருகின்றனர். இருக்கின்ற பஸ்களை இயக்கப் போதிய ஆட்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், புதிய வழித்தடங்களில் அரசால் விடப்பட்டுள்ள பஸ்களை எப்படி இயக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. முறையான பராமரிப்புடன், போதுமான ஆட்களை தேர்வு செய்வதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்" என்கிறார் அன்பழகன்.

ஓய்வின்மையும் உடல்நலப்  பிரச்சினைகளும்...

தொடர்ந்து பணி புரிவதால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஓட்டுநர்களின் பணித்திறன் குறைவதோடு, அவர்கள் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். அது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர். செந்தில்குமார் கூறுகையில், பொதுவா ஒரு மனிதன் சராசரியா 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்போதுதான் அவர் நல்ல உடல்நலத்துடனும் மன ஒருமையுடனும் விளங்க முடியும். டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதற்கான சூழல் அமைவதில்லை. இப்போது அவங்க தூங்குற சில மணிநேரத் தூக்கம் போதுமானதா இல்லை. இந்தத் தூக்கமின்மை அவர்களுக்குப் பல்வேறு உடல் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. இதனால், கண் சோர்வு, உடல் சோர்வு, மனச் சோர்வு ஏற்படும். டிரைவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓய்வு அறையில் அவர்கள் தூங்காமல் பஸ்ஸுக்குள்ளே தூங்குவாங்க. அந்த மாதிரி சமயத்தில் நன்றாகத் தூங்கமுடியாது. இரவு நேரங்களில் பஸ்ஸை ஓட்டும்போது, எதிரே வரும் வண்டிகளில் வெளிப்படும் ஒளிகளை, அவர்களின் கண்கள் நேரடியாகப் பார்க்கும்போது,  கண் பார்வை எரிச்சல் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க ஆன்டி கிளார் கிளாஸ் (Anti Glare Glass) அணிந்துகொண்டு பஸ்ஸை இயக்கினால், இது மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சாலையோரத்தில் தரமற்ற ஓட்டல்களில் சாப்பிடும்போது, அஜீரணக் கோளாறு, தேவையற்ற கொழுப்பு சேர்ந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கோடைக் காலத்தில் வேர்வையினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். பஸ்ஸை இயக்கும் டிரைவர் 8 மணி நேரத்திற்குமேல் பஸ்ஸை ஓட்டக் கூடாது, அதையும் மீறி தொடர்ந்து பஸ்ஸை ஓட்டினால் கடுமையான மாரடைப்பு Massive Heart Attack) ஏற்பட்டு இறக்க நேரிடும். அவர்களுக்கு முறையான  தூக்கமும், சீரான இடைவெளியில் புத்தாக்கப் பயிற்சியும், மன அழுத்த நீக்கப் பயிற்சியும் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு ஏற்படும் உடல்  சம்பந்தமான  பிரச்சினைகளை தவிர்க்க முடியும்" என்கிறார்.

‘‘விரைவில் 14,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

பணிச்சுமை பிரச்சினைகளால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது குறித்து மண்டல மேலாளர் ஒருவரிடம் கேட்டோம். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் கூறியவை : ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை சில காலமாகவே இருந்து வருகிறது. போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால், விழாக் காலங்களில் கூடுதல் பணி பார்க்கச் சொல்லவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படுகின்றது. பணிச்சுமை எல்லா நாட்களிலும் இருக்கிறது போன்ற குற்றச் சாட்டுகள், அனைத்து மண்டலங்களிலும் இருப்பதில்லை. ஒரு சில மண்டலங்களில் நிர்வாகக் குறைபாட்டினால் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகின்றது. முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கின்ற நிலை தொழிலாளர்களிடம் அதிகமாக உள்ளது. இதனால், விடுப்பு எடுத்த தொழிலாளர்களின் பணியை, மற்ற தொழிலாளர்கள் செய்ய வேண்டிய நெருக்கடி. மேலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மனச் சோர்வுகளில் இருந்து விடுபட, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் இயற்கை உணவு முறைகளின் அவசியத்தைப் பற்றியும் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் பணியாளர்களுக்கான உணவும் நல்ல முறையில்தான் கிளை அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களிடமிருந்து அதிகப் பணி வாங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை. சிறிதளவு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் மட்டுமே இந்தப் பணிச்சுமை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்குத் தீர்வாக, விரைவில் 14,000 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பணி இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன" என்கிறார். அதைச் சீக்கிரமா செய்யுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக