Powered By Blogger

சனி, 15 டிசம்பர், 2012


கடந்த திமுக ஆட்சியில் பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு,  ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’  தொடங்கப்பட்டது. அடுத்து ஆட்சி மாறியவுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம்  ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்" என்ற பெயரில் அந்தத் திட்டம் சில புதிய மாற்றங்களுடன் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.   இந்த விரிவாக்கத்தில்  1,016 வகையான சிகிச்சை முறைகளும், 23 முக்கிய பரிசோதனைகளும், 113 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இதன்மூலம் ஒரு பயனாளிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சில முக்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் இந்தத் திட்டத்திற்கென வரையறுக்கப்பட்ட தொகையையும் தாண்டி செலவாவதால் இந்தத் தொகையை நோயாளிகளே ஏற்கும் நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த தமிழக அரசு சில முக்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் கூடுதலாய் ஆகும் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த 2ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ், 1,64,365 பயனாளிகளுக்கு 384 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகள்,  எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை,  காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை, ஏழை எளிய  நோயாளிகளே ஏற்கும் நிலைமை உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இத்தகைய ஏழை, எளிய நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக ஏற்படும் கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில் ஒரு சிறப்புத் தொகுப்பு நிதி, அதாவது Corpus Fund ஒன்று உருவாக்கப்படும். இந்தச் சிறப்புத் தொகுப்பு நிதிக்கு முதற்கட்டமாக  10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதையும்; இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையிலிருந்து இந்தச் சிறப்புத் தொகுப்பு நிதிக்காக  ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதையும்  பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டும் அதிகம் செலவாவதேன்?
பொதுவாக ஒரு சாதாரண அறுவைச் சிகிச்சை செய்யும்போது குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள்தான் சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால், மாற்று அறுவைச் சிகிச்சை என்று வரும்போது, அதற்கென்று அனுபவமும் திறமையும்  வாய்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் (Surgeons), மயக்கவியல் நிபுணர்கள் (Anaesthetists) என ஒரு திறமை வாய்ந்த குழு, சிகிச்சையை மேற்கொள்கிறது. உதாரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தவரையில் தானம் பெறப்படும் சிறுநீரகத்தை (Donor) அறுவைச் சிகிச்சை செய்து எடுப்பதற்கு ஒரு குழு, அதை நோயாளிக்கு பொருத்துவதற்கு (Recipient) ஒரு குழு என இரண்டு குழுக்களாக செயல்படுவது அவசியமாகிறது.

மேலும் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் செய்வதற்கான நேரமும் அதிகம். குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 7 அல்லது 8 மணிநேரங்கள் ஆகின்றன. அதற்கு மேல் ஆகும் சிகிச்சைகளும் இருக்கின்றன. எனவே, இந்தச் சிகிச்சைகளின்போது பயன்படுத்தப் படும் கருவிகளுக்கான (Ventilator, Boyle’s Apparatus, Catheters  போன்றவை) செலவுகளும் அதிகம் பிடிக்கின்றன. மேலும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னரும் நீண்டநாள் கண்காணிப்பு தேவைப்படுகிறது.  அதற்குத் தேவைப்படுகின்ற மருந்துகளும் செலவு பிடிக்கின்றன. உதாரணமாக சைக்ளோஸ்போரின் (Cyclosporine) அல்லது டாக்ரோலிமஸ் (Tacrolimus) ஆகிய மருந்துகளில் ஒன்று கண்டிப்பாக பரிந்துரைக்கப்படும். இவை ஒரு குப்பி 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை செலவாகும் (ஒரு குப்பி 3 வாரங்கள் வரை வரும்). இவை தவிர அஸாதியோப்ரைன் (Azathioprine),Monoclonal Antibodies மற்றும் ஸ்டீராய்டுகளும் (Steroids) தேவைப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் வாழ்க்கை முழுவதும் உட்கொள்ள வேண்டிய மருந்துகளாகும். எனவே செலவுகள் எகிறுகின்றன.

இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதெப்படி?
இத்திட்டத்தின்கீழ் ஏழைப் பயனாளிகள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைக் கொண்டு தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்துகொள்ளலாம். மருத்துவமனையில் சேர்ந்த பின்பு அங்கு உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தால் அவர்கள் காப்பீட்டுத் திட்ட அலுவர்களிடம் உங்களின் தகவல்களைக் கொடுத்து, அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவார்கள். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதன் பின்னர் சிகிச்சைக்கான தொகையினை காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்கொள்ளும். நோயாளிகளிடமிருந்து எந்தத் தொகையும் வாங்கப்படுவதில்லை. வாங்கவும் கூடாது. சிகிச்சைகளுக்குப் பிந்தைய கண்காணிப்புக்கான மருந்துகளுக்கான தொகையும் காப்பீட்டின்கீழ் வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நோயாளிகளோ அவர்களின் உறவினர்களோ எதற்காகவும் அலைய வேண்டாம். நீங்கள் உங்கள் அடையாள அட்டையைக் கொடுத்தால் போதும். காப்பீடு பெறுவதற்கான  மற்ற நடைமுறைகளெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் கவனித்துக்கொள்ளும்.

அடையாள அட்டை பெறுவது எப்படி?
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் குடும்பங்களின் குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் 72,000 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும். குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமானத்திற்கான சான்றிதழ் (இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்) ஆகியவற்றுடன் தங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். அவரின் பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கெனப் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியரை சந்திக்க வேண்டும். அவர் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,  அதனுடன் சான்றிதழ்களை இணைத்துத் தரவேண்டும். அங்கு பயனாளி குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் பயனாளியின்  குடும்பம் பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக