Powered By Blogger

சனி, 15 டிசம்பர், 2012


த்திய அரசு, மக்களுக்கு வரும் புத்தாண்டில் ஒரு ‘பரிசு’ அளிக்கவிருக்கிறது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உணவு, உரம், முதியோர் ஓவூதியம், கல்வி, 100 நாள் வேலைத் திட்டம் இவற்றுக்கு இப்போது அளித்துக் கொண்டிருக்கும் மானியங்கள், உதவித் தொகைகள், இவற்றை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் திட்டம் ஒன்றை வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த உள்ளது. முதலில் ஆதார் அட்டையின் அடிப்படையில் 15 மாநிலங்களில் உள்ள 52 மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் 2013ம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க இது அமலுக்கு வந்துவிடும்.

மானியங்களுக்காக அரசு ஆண்டுதோறும் பெருந்தொகை செலவிட்டு வருகிறது, அதில் முறைகேடு நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு இந்த ஏற்பாடு என்கிறது அரசு.

நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பதுதான் கேள்வி.

இந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி 120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் 20 கோடிப் பேருக்கு மாத்திரமே ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்களில் 35 சதவிகிதம் அளவிற்குத்தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். மாதச் சம்பளம் பெறாத, முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ள பலருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. நாடு நெடுகிலும் 14,475  வங்கிக் கிளைகள்தான் கிராமப்புறங்களில் உள்ளன என்று ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது.  இந்த மாதிரியான சூழ்நிலையில் மானியங்களை வங்கிக் கணக்கில் நேரடியாக அளிப்பது சாத்தியமா?

இந்த மானியங்கள் எப்போது நம் கணக்கில் சேர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உர மானியத்திற்கு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முறையின்படி, ஒரு விவசாயி உரம் வாங்கிய பின் அந்த விற்பனையை உறுதி செய்துகொண்டு மானியத்தை உர நிறுவனத்திற்கு அளிக்கிறது அரசு. அதேபோன்ற நடைமுறை இங்கேயும் பின்பற்றப்பட்டால், நடுத்தரக் குடும்பங்கள் சிரமத்தை சந்திக்கும். ஏனெனில், இப்போது சில மானியங்கள் நாம் ஒன்றைப் பெறும்போதே நமக்குக் கிடைத்து விடுகின்றன. உதாரணமாக எரிவாயு உருளை நம் வீட்டில் டெலிவரி செய்யப்படும்போது மானிய விலையில்தான் டெலிவரி செய்யப்படுகிறது. அதைப்போல ரேஷனில் சர்க்கரை வாங்கும்போது அதை மானிய விலையில்தான் வாங்குகிறோம். ஆனால், புதிய முறையில் இவற்றை நாம் சந்தை விலையில் வாங்குவோம். பின் அந்தத் தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து நமது கணக்கிற்கு மானியம் அனுப்பி வைக்கப்படலாம். இதில் தாமதம் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை.

இவற்றையெல்லாம்விடக் கவலையளிப்பது வேறு இரண்டு அம்சங்கள். ஒன்று, மெல்ல மெல்ல மானியங்களை ஒழித்துக்கட்ட அரசு எண்ணுகிறதோ, இது அதற்கான முதல்படியோ என்ற சந்தேகம். இந்த சந்தேகத்திற்கு ஆதாரம், அண்மைக்காலமாக பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், மானியங்கள் அரசுக்குப் பெரும் சுமையாகி வருகின்றன, அவற்றை இனி அரசால் தாங்க முடியாது எனப் பேசி வருவது.

மற்றொன்று, இது 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் ‘ஓட்டுக்கு நோட்டு’ அளிக்கும் முயற்சியோ என்ற சந்தேகம். இதற்கான அடிப்படை, இன்னும் ஆதார் அட்டை முழுமையாகக் கொடுத்து முடியாத நிலையில், பெரும்பாலானோருக்கு வங்கிக்கணக்கு இல்லாத நிலையில் இந்தத் திட்டத்தை 2013க்குள் நாடு முழுக்க நடைமுறைப்படுத்த அரசு காட்டும் அவசரம்.

அரசியல் அவசரங்கள் அலங்கோலத்தில் முடிவதை நாடு அநேக முறை பார்த்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக