Powered By Blogger

சனி, 15 செப்டம்பர், 2012

இணைய மருத்துவர்.


இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை.
இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது.
இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல என்றும் வாதிடலாம்.
எப்படி இருந்தாலும் இ மருத்துவம் என்பது எதிர் கால நிதர்சனம் என்றே தோன்றுகிறது.அதாவது சர்வ சகஜமாக இணையம் மூலம் மருத்துவ ஆலோசனையை பெறும் நிலை உருவாகும்.
இப்போதே கூட இணையவாசிகளில் பலர் நோய் பாதிப்பு இருந்தாலோ அல்லது நோய்க்கூறுகள் தொடர்பான சந்தேகம் இருந்தாலோ தாங்களே மருத்துவ விவரங்களை கூகுல் மூலம் தேடிப்பார்க்கின்றனர்.முன்னோடி மருத்துவர்கள் சிலர் இணையதளம் மூலம் நோயாளிகளை சந்தித்து ஆலோசனை சொல்கின்றனர்.வெப்கேம் வருகையும் மேற்கொள்கின்றனர்.
இப்படி மெல்ல இ மருத்துவம் சாத்தியமாகலாம்.இந்த போக்கிற்கான அழகான உதாரணமாக சிம்கேட் இணையதளம் அமைந்துள்ளது.
சிம்கேட்டை நோய்க்கூறு தேடியந்திரம் என்றும் சொல்லலாம்.அல்லது மருத்துவ‌ கூகுல் என்றும் சொல்லலாம்.
கூகுல் எப்படி தகவல்களை குறிச்சொல் அடிப்படையில் தேடித்தருகிறதோ அதே போல இந்த தளம் நோய்க்கூறுகளின் அடிப்படையில் சிகிச்சைக்கான ஆலோசனையை வழங்குகிறது.
இன்று உங்களை சஞ்சலப்படுத்துவது என்ன என்று கேட்கும் இந்த தளத்தில் இணையவாசிகள் தங்களின் நோய்க்கூறுகளை டைப் செய்ய வேண்டும்.உதாரணத்திற்கு கை கால் வலி என்றோ அல்லது ஒயாத தலை வலி என்றோ டைப் செய்யலாம்.
ஆனால் கூகுல் போல உடனே பதில் சொல்லி விடாது.மாறாக இணையவாசிகள் தங்கள் உடல்நிலை பிரச்ச‌னை தொடர்பாக டைப் செய்த‌ நோய்க்கூறின் அடிப்படையில் தொடர்புடைய சில கேள்விகளை கேட்கும்.நீங்கள் ஆணா,பெண்ணா, உபாதை எத்தனை நாளாக இருக்கிறது,ஏற்கன‌வே மருத்துவ பிரச்ச‌னைகள் உண்டா என வரிசையாக கேள்விகள் கேட்கப்படும்.
கிட்டத்தட்ட ஒரு மருத்துவரிடம் நேரில் பேசும் போது அவர் எப்படி சில அடிப்படையான கேள்விகளை கேட்பாரோ அதே போல இந்த தேடியந்திரமும் பல கேள்விகளை கேட்டு உங்கள் கேள்விக்கான பதிலை சொல்கிறது.
தேடியந்திரம் தரும் பதில் நோய்க்கான சிகிச்சையாகவோ மருந்துகளுக்கான பரிந்துரையாகவோ இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்.இந்த தேடியந்திரம் உடனே மருத்துவரை பார்க்க வேண்டுமா வேண்டாமா என்ற ஆலோசனையை மட்டுமே வழங்குகிறது.
சில‌ நேரங்களில் சாதாரண உபாதைகளே கூட ஏதேனும் நோயாக இருக்குமோ என்ற அச்சத்தை கொடுக்கலாம் அல்லவா?அது போன்ற நேரங்களில் இந்த தளத்தை நாடினால் நீங்கள் சொல்லும் அம்சங்களை பரிசிலித்து கவலைப்பட ஏதும் இல்லை என்றோ அல்லது உடனடியாக மருத்துவரை பாருங்கள் என்றோ தேவைக்கேற்ப ஆலோசனையை வழங்குகிறது.மற்றபடி சிகிச்சையை மருத்துவரிடம் இருந்து தான் பெற வேண்டும்.
ஆனால் மருத்துவரை பார்க்க செல்வதற்கு முன் நம்மை வாட்டும் நோய்க்கூறின் தன்மை தொடர்பாக ஓரளவு தெளிவாக தெரிந்து கொண்டு விடலாம்.
தேவையில்லாமல் நோயை நினைத்து அஞ்சுபவர்களுக்கு,அதிலும் டாக்டரை பார்க்கலாமா வேண்டாமா என்று குழம்பி தவிப்பவர்களுக்கு இந்த தளம் தெளிவை தரக்கூடிய‌து.
எனவே நோக்கூறு பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர்களை நாட வேண்டுமா என தீர்மானிப்பதற்கு இந்த தேடிய்ந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.
அதற்கு முன் இந்த தேடியந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அதைவிட பயனுள்ளதாக இருக்கும்.
நோயாளிகள் நோய்க்கூறுகளை விவரிக்கும் போதே மருத்துவருக்கு என்ன நோய் என்பது தெரிந்துவிடும் அல்லவா?அதனடிப்படையில் சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த நோய்க்கூறுகள் என்றால் இந்த நோய் பாதிப்பாக இருக்கும் என பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் மருத்துவர்களுக்கு இருக்கிறது.மேலும் சூழல் நோயாளியின் தனமை கடந்த கால மருத்துவ வரலாறு போன்ற விவரங்களை ஆய்வு செய்து நோய் பாதிப்பை துல்லிய‌மாக கண்டறிகின்றனர்.
இந்த தகவல்களை எல்லாம் டேட்டாவாக கம்ப்யூட்டரிடம் சமர்பித்தால் அதில் உள்ள பொது தன்மைகளை அது கிரகித்து கொண்டு விடும் .இன்ன நோய்க்கூறாக‌ இருந்தால் இன்ன பாதிப்பாக இருக்கும் என்பதை அது கணக்கிட்டு விடும்.ஆனால் அதற்கு மூளையாக செய்லப்டகூடிய சாப்ட்வேர் தேவை.
அததகைய ஒரு சாப்ட்வேர் தான் இந்த தேடியந்திரத்தை இயக்குகிறது.நோயாளிகளின் கடந்த கால மருத்துவ கோப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களையும் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையையும் இந்த தேடியந்திரம் தனது தகவல் பெட்டகத்தில் கொண்டுள்ளது.அவற்றை கொண்டே இணையவாசிகள் தங்கள் நோய் உபாதையை தெரிவித்தால் அது என்னவாக எல்லாம் இருக்கலாம் என்னும் அனுமானத்தின் அடிப்படையில் கேள்விகளை கேட்டு அந்த அம்சங்களை கடந்த கால மருத்துவ கோப்புகளுடன் ஒப்பிட்டு ஆலோசனை வழங்குகிறது.
ஐபிஎம் நிறுவனம் வாட்சன் என்னும் பெயரில் இதே போன்ற மருத்துவாய்வு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.அதை விட சிற்ந்ததாக தங்கள் சாப்ட்வேர் இருப்பதாக இதனை உருவாக்கியுள்ள புளுபிரின்ட் ஹெல்த் நிறுவனம் தெரிவிக்கிறது.அதற்கு காரணம் கம்ப்யூட்டரின் ஆய்வு திறனோடு நோயாளிகள் தகவலையும் சேர்த்து ஆல‌சி ஆராய்வது தான் என்று சொல்கிறது.
அதனால் தான் எதிர்காலத்தில் இதில் தகவல்களை தேடும் நோயாளிகள் தங்கள் மருத்துவ முடிவையும் இதில் சம‌ர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.]
குறிப்பிட்ட நோய்க்கூறுகளை டைப் செய்து தேடிய நபர்கள் தங்களுக்கு மருத்துவர் அளீத்த சிகிச்சையை குறிப்பிட்டால் அந்த தகவலையும் இது தனது நினைவறயில் சேமித்து வைத்து கொள்ளும் .அடுத்த முறை யாரேனும் அதே நோய்கூறினை குறிப்பிடும் போது இந்த தகவலையும் சேர்த்து கொண்டு மேலும் பொருத்தமான பதிலை தரும்.
இது போன்ற‌ மருத்துவ தகவல்களின் அடிப்படையில் செயல்ப‌டக்கூடிய சாப்ட்வேர்களும் அதனை பயன்ப்டுத்தும் இணையதளங்களுமெ இ மருத்துவம் பற்றி கனவு காண வைக்கின்ற‌ன.
இணையதள முகவரி;http://symcat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக