Powered By Blogger

சனி, 29 செப்டம்பர், 2012


முதல் நூற்றாண்டின் வாசலில்...
கவிஞர் பா. விஜய்

இன்றிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்நோக்கி அழைத்துச் செல்லவிருக்கிறது இந்தத் தொடர். உலகில், இன்று பழையதாக இருக்கும் எதுவும் பழையதாகவே முடிந்து விடப் போவதில்லை. அதுவொருநாள் புதிய வடிவமெடுக்கும். இன்று புதியதாக இருக்கும் எதுவுமே புதியதாகவே இருந்துவிடப் போவதில்லை. அதுவொருநாள் பழைய வாசம் அடிக்கும்.

இன்று- விஞ்ஞானம், அறிவியல், பொருளாதாரம் என இம்மூன்றில் மட்டுமல்லாமல் உல்லாசம், உபரிச்செலவு, உற்சாக இரவு வாழ்க்கை என அத்தனையிலும் கொடிகட்டிப் பறக்கும் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் எனும் அமெரிக்க-ஐரோப்பிய வாழ்வியலை, இன்றைய பூகோள முறைப்படி ஆரம்பிக்கும் கடல் கொண்ட லெமூரிய கண்டத்தின் நுனிவாயிலான குமரிக்கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றனர் நம் மூதாதையர்களின் மூதாதையர்கள்.

இன்று இருக்கும் எல்லாம் அன்றும் இருந்திருக்கின்றன. இன்று நிகழும் யாவும் அன்றும் நிகழ்ந்திருக்கின்றன. இன்று செய்யப்படுபவைகள் அனைத்தும் அன்றும் செய்யப்பட்டிருக்கின்றன.

அன்றைய காலகட்டத்தை இன்றைக்குப் படம்பிடித்துக் காட்டுவது சங்ககாலப் புலவர்களின் இலக்கியங்கள்தான்.

மாமூலனார், கபிலர் போன்ற பெரும் புலவர்களும், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநானூறு, அகநானூறு போன்ற இலக்கியங்களும் இல்லாதிருப்பின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியல் மிகப்பெரிய கறுப்புப் பக்கங்களாகவே காலத்தின் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கும்.

இன்று வளர்ந்தவொரு வல்லரசு நாடு மற்றொரு வளரும் நாட்டின் மீது தொடுக்கின்ற யுத்தம் மூன்று வகையாகும். ஒன்று - நேரடி நவீன ஆயுத யுத்தம்! இரண்டு - உள்நாட்டு அரசியல் குழப்பத்தை விளைவித்து ஆட்சியை மாற்றும் அரசியல் யுத்தம்! மூன்று - ஒரு நாட்டின் பொருளாதாரச் சந்தையை உடைக்கும் யுத்தம்! இம்மூன்று யுத்தங்களும் அன்றும் செய்யப்பட்டிருக்கின்றன.

1800 ஆண்டுகளுக்கு முன், எவ்விதம் இருந்தது தமிழகம் என்பதை காட்சிப்படுத்த விழைந்திருக்கிறேன். தமிழகத்தின் பெரும்பகுதியை பெருங்காலம் ஆண்ட சோழ சாம்ராஜ்யமே இத்தொடரின் மையப்பொருள். நிலப்பரப்பு தாண்டி, கடல் கடந்து வாணிபமும் படையும் கொண்டு சென்ற சோழர்களின் அரசியலை உற்றறிய வைக்கும் உலா இது!

வரலாற்றின் யதார்த்தத்தைப் பதிவு செய்வதற்குப் பதிலாக வர்ணனைகளால் மிகைப்படுத்தி வளர்த்ததே அன்றுமுதல் இன்று வரை எழுத்தாளர்களின் பயணமாக இருந்திருக்கிறது. வரலாற்றின் கழுத்துக்கு ஆபரணம்போல் இருந்திருக்க வேண்டிய கற்பனை நயம் தூக்குக் கயிறாய் இறுக்கி வந்திருக்கிறது. விளைவு? நமது தொன்மைகளைக் கூட யுனஸ்கோ வந்து தொன்மை என்று முத்திரையிடப்பட வேண்டிய சூழல்! (யுனஸ்கோ வந்து முத்திரையிட்டால்தான் நாம் ஏற்போம் என்பது நம் மரபணு வழிநேர்ந்த மனத்தாழ்வு நிலை).

கி.பி. 2 முதல் 12 வரை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்யப் போகின்ற இந்தத் தொடர், ஒரு வரலாற்று ஆய்வேடாக மாறிவிட்டால் சரித்திரம் படிக்கிற மாணவர்களுக்காக என்று சுருங்கிவிடும். ஒரு சரித்திர நாவலாகிவிட்டால், சுவாரஸ்யக் கதை சொல்லும் பாங்கிற்குள் விழுந்துவிடும். இரண்டையும் இணைத்துக் கட்டமைக்கும் முயற்சிதான் கடும்போராட்டமாக இருந்தது.

ஆயிரம் ஆண்டுப் பயணத்தை, சோழர்காலத்தைச் சுற்றி சொல்லமுற்படுகையில் சரித்திரப் பதிவுப் பிழைகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் காலக் குழப்பங்கள், இலக்கியங்களில் வெளியாகும் தகவல்கள், இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்களாக நின்று மூளையைக் கடினப்படுத்தின. தமிழ் மன்னன் என்றதுமே நம் மனக்கண்களுக்கு முன்னால் வரும் உருவம் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் ராஜகேசரி, ராஜகம்பீர ராஜராஜசோழன் உருவம்தான். ஐநூறு கிலோ நகைகளை அங்கம் முழுக்கப் பூண்டு அடுக்குத் தமிழும் உவமையும் கொஞ்சப் பேசிய நாடக வடிவம் நிஜ சரித்திரத்தை விட நெடுந்தொலைவு விலகி நிற்கிறது.

நமது திரைமொழியும் உரைமொழியும் வரலாற்றை மிகைப்படுத்தியும் பிழைவு செய்துமே பெரும்பான்மையாகப் பங்களித்து இருக்கின்றன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைக்காவியத்தை நூறு முறைக்கும்மேல் பார்த்துப் பரவசித்திருக்கிறேன். கட்டபொம்மன் பேசும் கர்ஜனை தமிழ் கேட்டு அட்டைக்கத்தி ஏந்தி அறைகூவல் விடுத்து நடந்திருக்கிறேன். ஆனால் ஆய்வேடுகளை வாசிக்கையில் உண்மைக் கட்டபொம்முவிற்கு நான்கு வாக்கியங்கள் தமிழில் தொடர்ந்து பேசத் தெரியாது என்பதும் கட்டபொம்முவை விட ஜாக்சன் துறை தெளிவாகத் தமிழ் பேசுவார் என்பதும் அறிந்தபோது படம் சுருங்கியது. அதைவிட, கட்டபொம்முவின் தம்பியான துரை ஊமையாய்ப் பிறந்து ஏழுவித ஜாடையில் படை நடத்தும் ஆற்றல் பெற்றவர். ஊமை என்ற காரணத்தினால்தான் ஊமைத்துரை என்ற பெயரே அவருக்கு! ஆனால் திரைமொழியில் அவர், பக்கம் பக்கமாய் வசனம் பேசும் காட்சியைக் கண்டு உண்மை வரலாறு பரிகசிக்கிறது.

இவற்றை விளக்கினால் கூட, தமிழ்ப் பற்றில்லாதவன், தமிழர் வாழ்வின் பெருமை அறியாதவன் என்ற அட்டவணைக்குள் நம்மை அடைப்போர் அதிகம் இருப்பர். இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு தமிழர்களின் யதார்த்த வாழ்வியலை, மிகைப்படுத்தப்படாத வரலாற்றைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இத்தொடருடைய காரணம்.

இதற்கு முன்னால் நான் எழுதிய சரித்திரக் காவியங்கள் வேறு, இந்தத் தொடர் வேறு! சொல் அலங்கார சூத்திரத்தைத் தேடி அலைந்து வார்த்தைப் பிரயோக வளையங்களில் வாசகர்களை வியப்பில் வீழ்த்த செய்யப்படுவது அல்ல இது! இந்தத் தொடர் கூடுமானவரையில் நமது தொன்மையை ஒரு நேரடி ஒளிபரப்பாய் செய்ய முற்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே தமிழ் வீரத்தின் பெருமை பற்றிப் பேசும் போது சற்று ஏறி இறங்கிவிடுகிறது என் பேனா! (இதுவும் கவிஞர்களின் மரபணு வழி வந்த குணாதிசயம்தான்).

அதேபோல், நான் எழுதப் புகுந்த களம் பிரம்மாண்டமானது. இந்த பிரம்மாண்டத்தை பலர் பகுதி பகுதிகளாக தொகுத்திருக்கிறார்கள். நான் சற்று முழுமையாக்க முயற்சித்திருக்கிறேன், அவ்வளவுதான். இதிலும் பல தகவல்கள் சரித்திரச் சம்பவங்கள் விடுபட்டு நிற்கலாம். என் கண்பார்வைக்குக் கிடைத்திருக்கின்ற கிட்டத்தட்ட நூற்றிஇருபது புத்தகங்கள் வாயிலாக இந்தத் தொடரினைத் துவக்குகிறேன். சம்பவங்கள் எதுவும் விடுபட்டுப் போயின் எழுதி அனுப்புங்கள். சரித்திரம் என்ற சமுத்திரத்தை என் புகைப்படக்கருவியின் வில்லைக் கூர்மைக்குட்பட்ட பகுதியை மட்டும் படமெடுத்துத் தருகிறேன். ஒன்று உங்கள் கவனத்திற்கு... நிஜம் சிலசமயம் கசக்கவும் செய்யும், அதிசயிக்கவும் செய்யும்!

இந்தத் தொடருக்கு கடலலையென பாராட்டுகளும் கடுமைகூடிய விமர்சனங்களும் வருமென நான் எதிர்நோக்குகிறேன். இரண்டுமே வந்தால் இத்தொடர் வெற்றி!

துவக்கத்துடன்
பா.விஜய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக