Powered By Blogger

திங்கள், 17 செப்டம்பர், 2012


பெண்கள் மீதான இன்னொரு முக்கியமான காரணம், தெருவுக்குத் தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக். பெண்களிடம் தவறுதலாக நடந்துகொள்ளும் பெரும்பாலான ஆண்கள் போதையில் இருக்கிறார்கள்

புதியதலைமுறைரு பெண் தாக்கப்படும்போது அவள் ஹிம்சை, அஹிம்சை பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது’ என்று காந்தி சொன்ன வார்த்தைகளோடு ஆரம்பமாகிறது அந்தத் தீர்ப்பு. சமீபத்தில் மாங்காடு நீதிமன்றத்தில் நீதிபதி நாகமுத்து அளித்த அந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. தன்னிடம் தவறாக நடந்துகொண்ட தந்தையை தற்காப்பு கருதி குத்திய வழக்கில் அனுஜ் ஜெர்மி என்கிற அந்தப் பெண் நாற்பது நாட்கள் சிறையில் இருந்தார். தன் சொந்தத் தந்தை தன்னிடம் பாலியல் இச்சையோடு அணுகியதை எதிர்த்துப் போராடும்போது நடந்த இந்தச் சம்பவத்தை காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி நீதிபதி அணுகியிருந்ததைப் பார்க்கும்போது, சட்டம் பெண்களின் மனநிலையையும் அவர்களின் உலகம் சந்திக்கும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது எனத் தோன்றுகிறது.  இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘அந்தப் பெண்ணை கைது செய்திருக்கக் கூடாது’ என்றும் பரிந்துரைத்திருக்கிறார்.

இன்று பெண்கள், ஆண்களோடு சமதளத்தில் பணிபுரிந்தாலும் அவர்கள் சந்திக்கும் பாலியல் அராஜகங்கள் அளவில்லாதவை. அதே நேரம் இன்று பெண்கள் இது சம்பந்தமான  விஷயங்களைப் பொதுவெளியில் பேசவும்தயாராகி விட்டார்கள். பேசப்படாத இப்பகுதிகள் பேசப்படுவதை மிக முக்கியமான ஒரு வெளிப்பாடாகக் கருத வேண்டும்.

பெண்கள் மீது, ‘domestic violence’ என்று சொல்லப்படும் குடும்ப வன்முறை காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. ‘குடும்பம்னா இதெல்லாம் சகஜம்’ என்று சொல்லிச் சொல்லியேபெண்கள் இதை சகித்துக் கொள்ளும் தியாக மனோபாவத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். சமீபத்தில் தன் கணவனைக் கொலை செய்த திருவேற்காட்டைச் சேர்ந்த பிருந்தா என்னும் பெண்ணின் உடைகளை அவர் மாமியார் காட்டும் அதிர்ச்சிகரமானபுகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாயின.

பிருந்தாவின் உடைகளில் எல்லாமே ரத்தக் கறைகளாக இருந்தன. உள்ளாடைகள் கிழிந்து இருந்தன. அவரை வீட்டுக்குள் நிர்வாணப்படுத்தியேதான் அவரது கணவர் வைத்திருந்தார் என்பது எத்தனை மிருகத்தனமான செயல். தூத்துக்குடியில் ராணுவத்தில் பணிபுரியும் சொந்த மாமாவைத் திருமணம் செய்த குரு ஈஸ்வரிக்கும் கிடைத்ததென்னவோ அவள் அழகை நம்பாத கணவன் போட்டுவிட்ட மொட்டைதான். இது போகவும் கணவனின் சகோதரன் தவறாக நடந்துகொண்டு விட்டு பழியை இவர் மேல் போட்டதால் ஊருக்கு வந்த கணவனால் ஆறு நாட்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பிறப்புறுப்பிலும் கண்களிலும் மிளகாத்தூள் போட்டு கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரச் சம்பவங்களை ஏன் மனித உரிமை மீறலாகச் சட்டம் கருதவில்லை என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

பிருந்தாவின் மாமியார் லட்சுமி, பிருந்தாவுக்கு ஆதரவாய் இருப்பதுபோல் மதுரையில் தன் இரண்டாவது மகள் மேல் பாலியல் வன்முறையைப் பிரயோகித்த கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்த உஷாராணியின் மாமனார் இல்லை.

சமீபத்தில் மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம்  உஷாராணி வழக்கு பற்றின அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அவரை விசாரிக்கவேயில்லை என்பதும்  உஷாராணியின் நடத்தை சம்பந்தமான அவரது மாமனாரின் குற்றச்சாட்டை அறிக்கையில் விசாரணையின்றி மேற்கோள் காட்டியிருப்பதும் துரதிர்ஷ்டவசமானது.  இதற்கு AIDWAஅமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அது மட்டுமல்ல, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் மம்தா  சர்மா, கர்நாடக டி.ஜி.பி., மத்தியப்பிரதேச தொழிற்துறை அமைச்சர், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பல அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்  கூட பெண்களின் உடைக்கும் நடத்தைக்கும் பாலியல் வன்முறைக்கும் தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறார்கள்.

" உடைதான் பாலியல் வன்முறைக்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சிறுகுழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதற்கு உடையைக் காரணம் சொல்வார்களா? ஆனால் இந்தச் சமூகத்தின் பொதுப் புத்தி பெண்ணின் மீது நடத்தப்படும் ஒரு வன்முறைக்கு அவளே காரணம் என்றுதான் தீர்மானிக்கும். அடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நடத்தை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைப்பார்கள். 1980களில் நடந்த மதுரா வழக்கில் பெண்கள் அமைப்புகள் போராடிய பிறகுதான் அந்த வழக்கு மறுபடி கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு இம்மாதிரியான வன்முறைச் சம்பவங்களில் பெண்ணின் நடத்தை பற்றின விஷயங்கள் பேசப்படக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. அதே சமயம் தொடர்ந்த போராட்டங்களால்தான் 2005ல் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மிகுந்த இழுபறிக்குப் பிறகே அந்தச் சட்டத்தின் விதிமுறைகள் இயற்றப்பட்டது என்று கொள்ளவேண்டும்" என்கிறார் உ.வாசுகி.

 "இன்றையச் சூழலில் பெண்கள் பிரச்சினைகளில் நீதிமன்றத்தின் பார்வையும் அணுகுமுறையும் மாறியுள்ளன" என்கிறார், வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன். "சரிகா ஷாமரணத்திற்குப் பிறகு இப்போது பெண்களுக்கான சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு நேரும் குடும்ப வன்முறைகளைப் பற்றி தைரியமாக வெளிக் கொண்டுவர வேண்டும். அப்படி அவர்கள் சொல்லும் போது அவர்கள் மீது படியும் சமூகத்தின் பார்வைகளை அவர்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்" என்கிறார் அவர்.    

இன்றைய காலகட்டத்திலும் திருமணம் என்கிற சடங்கின் மூலம் ஒரு பெண்  ஓர் அடிமையாய் எப்படி நடத்தப்படுகிறாள் என்பது பெண்கள்  யோசிக்க வேண்டிய ஒரு விஷயம். "திருமணம் என்கிற அமைப்பு பெண்ணின் மீது வன்முறையையும் அதிகாரத்தையும் செலுத்துகிறது என்பதால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றில்லை. அதில் ஜனநாயகத்தை உருவாக்குவதுதான் நல்ல தீர்வாக இருக்கும்" என்கிறார் உ.வாசுகி.

"பெண்கள் மீதான இன்னொரு முக்கியமான காரணம், தெருவுக்குத் தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக். பெண்களிடம் தவறுதலாக நடந்துகொள்ளும் பெரும்பாலான ஆண்கள் போதையில் இருக்கிறார்கள்" என்கிறார்,   பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மகளிர் காவல் அதிகாரி. தொடர்ந்து அடித்தட்டு மக்களிடையே ஆண்கள் குடித்துவிட்டு வருவதும் பெண்களை அடிப்பதும் சகஜமாகி விட்டது. வன்முறையைக்  கையிலெடுப்பதற்கு ஆண்களுக்கு பெரிய காரணங்களும் தேவைப்படுவதில்லை. குழம்பில் காரம் இல்லை, உப்பு இல்லை என்பது கூட காரணமாக உள்ளது.  

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பெண்கள் பாதிக்கப்படும்போது சமூகக் காரணங்களுக்காக அதை வெளியே சொல்லத் தயாராக   இல்லை . ஆனால் ஆரம்பக் கட்டங்களிலேயே சட்டரீதியிலான நடவடிக்கைகளை அவர்கள் தைரியமாக எடுக்க வேண்டும்.

சமூக ஆதரவு என்பது இம்மாதிரியான பெண்களுக்கு மிக அவசியத் தேவையாகிறது. இவர்கள் மீது ஒழுக்கம் கெட்டவர்கள் என்றெல்லாம் சமூகம் முத்திரை குத்தும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தான் வாழும் குடும்பச் சூழலிலேயே வன்முறையால் பாதிக்கப்படுவதை ஒரு பெண், பெண்ணாய் இருப்பதாலேயே சகித்துக்கொள்ள வேண்டும் என்கிற சமூகக் கட்டமைப்பே  எவ்வளவு வன்முறையானது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக