Powered By Blogger

சனி, 29 செப்டம்பர், 2012


‘இவர் வேலைக்கு ஆகமாட்டார். முன்பு போல இவரால் ஓடி ஆடி விளையாட இயலுமா? உடலில் பழைய வேகம் இருக்குமா? ஃபீல்டிங் பண்ணமுடியுமா? இவருக்குப் பதிலா இன்னொருவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். இது ஒரு எமோஷனல் முடிவு. கிரிக்கெட் வாரியத்துக்கு என்ன ஆச்சு?’ என்றெல்லாம் டிவியிலும் இணையதளங்களிலும் பேசிப் பேசி ஓய்ந்தனர் நம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும். இத்தனை சந்தேகங்களும் கேள்விகளும் கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருக்கும் யுவராஜ்சிங்கைப் பற்றிதான்.

யுவராஜ்சிங் இயல்பிலேயே போராட்ட குணமுடையவர். அதை அடிக்கடி மைதானங்களில் பார்க்க இயலும். சிக்கலான நேரங்களில் களமிறங்கி இந்தியாவுக்காக எத்தனையோ வெற்றிகளை நமக்களித்தவர். உலகக் கோப்பை வெற்றியில் யுவராஜின் பங்கு கணிசமானது. எல்லாம் சரி... ஆனால் இப்போ... என்னாச்சு?

கிட்டத்தட்ட ஒருவருடமாகிவிட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எமனோடு போராடி அந்தக் கொடிய நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். குணமாகிவிட்டது. அடுத்தது என்ன? உடனடியாக பயிற்சியைத் தொடங்கி... சில உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். தன்னால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்பதை நிரூபிக்கத் துடித்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கான வாய்ப்பைக் கொடுத்தது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம்  பிடித்தார். அங்குதான் கிளம்பியது... எல்லாம் சரி, ஆனால் இப்போ...

யுவராஜ் தன்னைப் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் சென்னையில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பதில் கொடுத்தார். இரண்டு ஓவர்கள் ஓரளவு நன்றாகப் பந்து வீசினார். ஒரு கேட்ச் பிடித்தார். 34 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு இமாலய சிக்சர்களும் அடங்கும்.

சென்னையில் அடித்த ஒவ்வொரு அடியும், அவரை சந்தேகத்தோடு பேசிய ஒவ்வொருவருடைய முகத்திலும் பளார் பளார் என சுளீரென விழுந்திருக்கும் என்பது உறுதி. இதோ டி20 உலகக் கோப்பை தொடங்கிவிட்டது. புதிய வேகம், புதிய உற்சாகம், புத்தம் புது துடிப்போடு களமிறங்கியுள்ளார் யுவராஜ். வாங்க யுவி! வந்து வெளுத்துக்கட்டுங்க... உங்களுடைய உற்சாகமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுக்கட்டும்.


யூவிகேன்!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, இன்னொரு காரியத்திலும் ஆக்டிவாக இருக்கிறார் யுவராஜ். அதுதான் யூவிகேன்! (YOUWECAN) இது யுவராஜ் சிங் அண்மையில் தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியும், கேன்சர் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். புற்றுநோயை முன்னரே கண்டறிவது, அதற்கான வழிமுறைகள் எனப் பல தகவல்களையும் தருகிற டாகுமெண்டரி ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் யுவராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக