Powered By Blogger

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நிரந்தரத் தீர்வு.

னது நாட்டில் மகிழ்ச்சியான மனிதன் யார் எனக் கண்டறிய உத்தரவிட்டான் அரசன். படை வீரர்களும் அதிகாரிகளும் பலரையும் சந்தித்து விசாரிக்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு மனக்குறை இருந்தது. வருமானம் போதவில்லை. குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்க அரசு உதவவில்லை. சொத்துப் பிரிவினையில் நியாயம் கிடைக்கவில்லை. தங்கள் பகுதியில் வாழ்க்கைத் தரம் உயர உரிய நடவடிக்கைகள் இல்லை. எவருமே நாட்டில் மகிழ்ச்சியாக இல்லையா என அரசன் அயற்சி அடைந்த நேரத்தில் புல்வெளியொன்றில் மாடுகளை மேய விட்டுக்கொண்டு, ஆற்றுநீரில் காலை நனைத்துக்கொண்டு அரச மரத்து இலையைக் குழலாகச் சுருட்டி  பீப்பி ஊதிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டான். பார்வைக்கு அவன் சந்தோஷமாக இருப்பதைப் போலத்தான் பட்டது. ‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போலிருக்கிறது?’ என்றான் அரசன். ‘ஆமாம். எனக்கென்ன குறை’ என்றான் சிறுவன். ‘நிறைய பணம் வைத்திருக்கிறாய் போல் இருக்கு? ‘சந்தோஷமாக இருக்கப் பணம் எதற்கு?’ ‘பணம் இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?’  ‘எனக்கு வேண்டும் உணவை இந்தப் பசுக்கள் கொடுக்கும். இந்த மரத்துக் கனிகள் கொடுக்கும். இந்தப் பசுங்கீரைகள் கொடுக்கும். நிலத்தில் புதைந்திருக்கும் கிழங்குகள் கொடுக்கும். ஆற்றில் நீந்தும் மீன்கள் கொடுக்கும். அதுவும் இல்லாமல் போனால் நதியில் ஓடும் நீரில் இரு கை அள்ளிக் குடித்தால் பசி அடங்கும். இயற்கை கொடுக்காத உணவையா உங்கள் பணம் கொடுத்துவிடும்?’ என்றான் சிறுவன்.

இயற்கை ஏராளமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் எல்லோருக்குமாக அது  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சார்ந்து வாழ்பவர்களை அது கைவிட்டதில்லை. அரசைச் சார்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஆனந்தமாக இருப்பதாகச் சொல்வதற்கில்லை.

தமிழக மீனவர்கள் ஓர் வாழும் உதாரணம். எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் மீனவர்கள் பலர் இலங்கைச் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை இதோ இதோ என அருகில் வந்து, வழக்கில் வாங்கப்படும் வாய்தாக்களால் தள்ளிப் போகிறது. தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இன்று கண்ணீரில் ஆழ்ந்திருக்கின்றன.

இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிருக்கிறது. ஆனால் தீர்வு ஏதும் கிடைப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசு இறுகிப் போன ஓர் நிலையை மேற்கொண்டிருப்பதுதான். அண்மைக்காலமாக அதன் அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. ‘இந்திய மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி வருவதாகவும் தங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும், அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, அந்தக் கொள்ளையைத் தடுக்கவே சிறைவாசம்’ என ஓர் இலங்கை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ‘சர்வதேசக் கடல் எல்லைக்கோடு கருத்துருவை, அனைத்து நாடுகளும் ஏற்று  அதற்கான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன. எனவே, தமிழக அரசோ அல்லது அம்மாநில மீனவர்களோ சர்வதேசக் கடல் எல்லையை மீற முடியாது’ என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

ஆனால் இரு நாட்டு மீனவர்களும் இயற்கையின் கொடை இருவருக்குமானது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடற்பகுதியை, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களும் 70 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்றை மீனவர் அமைப்புகள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அதை ஏற்க முடியாது என இலங்கை அமைச்சர் தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. ‘மீனவர் சங்கங்களின் செயல் திட்டம் ஏற்கப்பட்டால், இலங்கையின் வடக்குப்பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைத்ததாகி விடும். சிங்கள மீன்வளத் துறை அமைச்சர், இலங்கைத் தமிழ் மீனவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு என் மீது வரும்’ என்கிறார் அந்த அமைச்சர்.

ஏதோ இத்தனை நாள் இலங்கை அரசு வடபகுதித் தமிழர்களிடம் நியாயமாக நடந்துகொண்டதைப் போலவும் இப்போது கெட்ட பெயருக்கு அஞ்சுவதைப் போலவும் ஒலிக்கும் அவர் பேச்சு, ஆடு நனைகிறதே என அழுத ஓநாயை நினைவூட்டுகிறது.

மீனவர்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது மீனவர் துயரத்திற்கு ஓர் உடனடித் தீர்வு. கச்சத்தீவை திரும்பப் பெறுவதும், தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதும் அதற்கான உதவிகளை அளிப்பதும்தான் நிரந்தரத் தீர்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக