Powered By Blogger

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!


மின்கட்டணம் செலுத்துவதற்கோ, மின்சார வாரியத்திடம் புகார் தெரிவிப்பதற்கோ இனி நாம் மின்சார அலுவலகத்திற்கு ஓடவேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே அத்தனையும் செய்யும்படியான கருவி ஒன்றை மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

வ்வொரு வீட்டிலும் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்காளர் வீட்டிற்கு வருவார். மீட்டர் எவ்வளவு ஓடியிருக்கிறது என்பதை பார்த்து விட்டு, எவ்வளவு தொகை என்பதைக் குறித்துவிட்டு  செல்வார். அதைப் பார்த்துவிட்டு, மின்சார அலுவலகத்திற்குச்  சென்றால் அங்கே தெரு  நீளத்திற்கு வரிசை நிற்கும். அப்படி நின்று மின் கட்டணத்தைக் கட்ட வேண்டும். வீட்டில் வரும் மின் இணைப்பில் குறைந்த மின்னழுத்தம் இருக்கும். திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும். இதனை புகாராக பதிவு செய்ய வேண்டுமென்றாலும் மின்சார அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள புகார் நோட்டில் எழுதி வைக்க வேண்டும். அதை அவர்கள் பார்த்துவிட்டு எப்போது சரி செய்வார்கள் என்று நாள் கணக்கில் காத்திருக்கவேண்டும். இனி அப்படி மின்சார அலுவலகம் தேடி ஓடவும் வேண்டாம். இனி காத்திருக்கவும்  வேண்டாம். அதற்கென ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கின் மூலம் புதுவழி ஒன்றை, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் துறை மாணவிகளான கீதா, ரேவதி, யுவஸ்ரீ, வெண்ணிலா ஆகியோரடங்கிய குழு கண்டுபிடித்திருக்கிறது. இக்கருவிக்கு ‘ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் சிஸ்டம்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

மக்களுக்குப் பயன்படும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் திட்டம் - இவர்களது பி.இ. இறுதியாண்டு புராஜக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் கருவியில் ஒரு ஜி.எஸ்.எம்.சிம், மைக்ரோ கண்ட்ரோலர் சிப், எல்.சி.டி. டிஸ்ப்ளே மானிட்டர், ரிலே ஸ்விட்ச், பஸ்ஸர் அலாரம், மினி பேட்டரி போன்றவற்றைக் கொண்டு வடிவமைத்திருக்கிறோம். இக்கருவியை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மீட்டர் பெட்டியுடன் இணைத்திட வேண்டும். இதில் உள்ள ஜி.எஸ்.எம். சிம் நெட்வொர்க்கை இணைக்கும் விதமான சர்வர் ஒன்று, இ.பி. ஆபீஸில் நிறுவப்பட்டிருக்கும். இந்த இரண்டும்தான் இரண்டு இடங்களில் இருந்து, தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சாதனங்களாக வடிவமைத்திருக்கிறோம்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின்சார அளவீடு செய்யும் நேரம் வந்ததும், தானியங்கி முறையில் அலுவலகத்தில் இருக்கும் சர்வர், வீட்டில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மிற்கு மெஸேஜ் ஒன்றை அனுப்பி, கணக்கீடு எடுக்க கட்டளை அனுப்பும். இதனைப் பெற்றுக் கொண்ட அந்த சிம்,  மீட்டரில் எவ்வளவு யூனிட் ஓடியிருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கீடு செய்து அனுப்பும். அக்கணக்கீடைப் பெற்றுக் கொண்ட சர்வர், எத்தனை யூனிட் ஓடியிருக்கிறதோ, அதற்கான தொகையை கணக்கிட்டு, இவ்வளவு தொகையை, இந்த தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று எழுத்து வடிவிலான தகவலை அக்கருவிக்கு அனுப்பி விடும். அத்தகவலை பெற்றுக் கொண்ட மறுவினாடியே, அக்கருவியில் உள்ள பஸ்ஸர் அலாரம் வீட்டில் இருப்பவர்களை அலர்ட் செய்யும். அந்த தகவல் அக்கருவியில் இணைக்கப்பட்டிருக்கும் எல்.சி.டி. திரையில் தெரியும். எவ்வளவு யூனிட் செலவாகி இருக்கிறது? எவ்வளவு தொகை கட்டவேண்டும்? என்ன தேதிக்குள் கட்ட வேண்டும் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் இதில் தெரியும்.  இது மட்டுமின்றி, வீட்டின் உரிமையாளருடைய மொபைலுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டுவிடும்.

கிராமத்தில் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் பயன்படும் விதமாக வாய்ஸ் காலும் அனுப்பப்பட்டு  விடும். உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை இந்த சர்வரில் இணைத்துவிட்டால் போதும். கட்டணத்தை அதிலிருந்து செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதோர், இக்கருவியில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மினை ப்ரீபெய்டு முறையில், ஒரு குறிப்பிட்ட தொகையினை ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும். அதிலிருந்து இ.பி. பில் தானியங்கி முறையில் செலுத்தப்பட்டுவிடும். இக்கருவியின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ் கால் மூலம் பயனாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விடும்” என்கிறார் கீதா.

“வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, மின்சார இணைப்பில் பிரச்சினை இருந்தாலோ, பியூஸ் போனாலோ, குறைந்த மின்னழுத்தம் எனப்படும்  லோ வோல்டேஜ் இருந்தாலோ இந்தக் கருவியில் இருந்தே உங்களது புகாரைப் பதிவு செய்து விடலாம். இதற்கென தனித்தனியே நான்கு பட்டன்களை வடிவமைத்திருக்கிறோம். மின்சாரம் இல்லாதபோதும் புகாரை சர்வருக்கு அனுப்ப மினி பேட்டரியை இக்கருவியில் பொருத்தி இருக்கிறோம்.   பயனாளி ஒருவர் கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், தானியங்கி முறையில் மின்சாரத்தை இக்கருவி நிறுத்திவிடும். பயனாளர் எப்போது பணம் கட்டுகிறாரோ, கட்டிய மறுவினாடியே தானியங்கி முறையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். நம் மீட்டர் பெட்டியிலிருந்து நமக்குத் தெரியாமல் யாரேனும் திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் எடுக்க முடியாது. அப்படி யாரேனும் திருட்டுத்தனம் செய்ய முயன்றால், அதையும் இக்கருவி கண்டுபிடித்து, சர்வருக்கும், பயனாளரின் மொபைலுக்கும் உடனே தகவல் அனுப்பிவிடும். இதற்கான தயாரிப்புச் செலவு 2,500 ஆகும். அதிக அளவில் இக்கருவியை தயாரித்தால் செலவு 1,500 ஆக குறைத்து விடலாம்” என்கிறார் ரேவதி.

“இந்த வடிவமைப்பிற்கு எங்களது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்கான பேடண்ட் உரிமையை விரைவில் வாங்க இருக்கிறோம்.  நவம்பர் மாதம் பெங்களூருவில் ஆசிய அளவில் நடைபெற இருக்கும் ‘இன்னோவேட்டிவ் ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜி ஆசியா கான்பரன்ஸ்’-ல் பங்கேற்கப் போகிறோம். அது எங்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்” என்று மேலும் உற்சாகத்துடன் கூறி முடித்தார் ரேவதி.

பாண்டிச்சேரி பவர் கிரிட் அரசு நிறுவனத்தில் அடிஷனல் மேனேஜர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “அருமையான கண்டுபிடிப்பு இது. இன்னும் சிற்சில மாற்றங்களைச் செய்தால் போதும். நிச்சயம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துவிடலாம்” என்றார். “இந்தக் கண்டுபிடிப்பிற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும், நிச்சயம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும்” என்றார் இம்மாணவிகளின் ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக