Powered By Blogger

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

காணாமல் போன கச்சத்தீவு



பேரதிர்ச்சி.

இந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்து கிடக்கிறது தமிழ் மக்களது உணர்வுகள். அண்மைக்காலமாகத் தமிழக மீனவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் தொல்லைகளுக்கு ஒரு தீர்வாக அவர்கள் நம்பியிருப்பது  கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது. ஆனால் கச்சத்தீவு இந்தியாவிற்கு உரிமையானதே அல்ல என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது மத்திய அரசு. நமக்கு உரிமையானது அல்ல என்று மட்டும் சொல்லவில்லை, அது இலங்கைக்கு உரிமையானது என்றும் சொல்லி விட்டது.

இதை ஏதோ ஒரு கடை அல்லது இடை நிலை அதிகாரி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக வில்லை. உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தில் அது தெரிவித்திருக்கிறது.  கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்கிற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது என்று அது அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கருத்தை அது தெரிவித்துள்ள நேரமும் சூழலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி, இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து, ஒப்புதல் பெற்று அதற்கான  சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவு விஷயத்தில்  அப்படி ஏதும் செய்யப்படவில்லை.  1974-ஆம் ஆண்டு இந்திய அரசு வெறுமனே ஓர்  ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கைக்குத்  தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் பதில் சொல்லும் விதமாக மத்திய  அரசு இப்படி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றதாகவோ, அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகவோ மத்திய அரசால் எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாது. ஏனெனில் அப்படி ஓர் ஆவணமே இல்லை. ஒப்புதல் பெற்றிருந்தால்தானே  ஆவணம் இருக்கும். ஒப்புதலே பெறவில்லையே. எனவே வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, கச்சத்தீவு இந்தியப் பகுதிக்குள்ளேயே  இல்லை என்று. சொல்லிவிட்டால் வழக்கே இல்லாமல் போய்விடுமே என்பதற்காக மத்திய அரசு இப்படி ஓர் நிலை எடுத்திருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

1974-ஆம் ஆண்டு  இலங்கை அரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, 23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது இராமநாதபுரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த  மூக்கையா தேவர், ‘எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது’ என்று  ஆட்சேபம் தெரிவித்தார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதில் ரகசியப் பேரம் நடந்துள்ளது என்று அப்போது எதிர்க்கட்சியில் இருந்த வாஜ்பாய் குற்றம் சாட்டினார். மக்களவையில் இரா. செழியனும், மாநிலங்கள் அவையில் ராஜ்நாராயணன், எஸ்.எஸ்.மாரிசாமி, அப்துல் சமது ஆகியோரும் ஒப்பந்தத்தை விமர்சித்தனர். ஆனால் அப்போதெல்லாம்  கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு கச்சத்தீவு இந்தியாவினுடையது அல்ல என்று சொன்னாலும் இலங்கையைச் சேர்ந்தவர்களே  கச்சத்தீவு இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு அதனைப் பயன்படுத்த அவரோடு ஒப்பந்தம் செய்துகொண்டதற்கான ஆவணங்கள் உண்டு. ஆங்கிலேயர் ஆண்டபோது அவர்கள் மேற்கொண்ட நில அளவையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வே எண் 1250-ன் கீழ் அந்தத் தீவு வருவதாகக் குறித்து அதை கெஜட்டிலும் வெளியிட்டனர்.

உண்மை இப்படி இருக்க... கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது மாயை என்கிறது இந்திய அரசு. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் இந்த முயற்சியில் பாதிக்கப்படப்போவது இந்திய மீனவர்கள்தாம். மக்களைக் காக்க வேண்டிய அரசு, கடந்தகாலத் தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மக்களைக் கைவிடுவது என்கிற விசித்திரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக