Powered By Blogger

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?


மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத சரிவு. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி  68.80 ரூபாயாக ஆக வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பார்த்தால் சரிவு விகிதம் 21.12.

வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோருகின்றன. அதற்குப் பின் அரசியல் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் பதவி விலகுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து  விடாது.  இன்னும் சொல்லப் போனால் பிரச்சினை தீவிரமாகும். அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த  நேரத்தில் அதிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும்  என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

அதற்கு  முதலில் இந்த நெருக்கடிக்கான காரணங்கள் என்னவென்று தெரிய வேண்டும்.

அந்நிய முதலீடுகள் வெளியேறுகின்றன. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, ரயில் சரக்குக் கட்டணம் உயர்வு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள். இவற்றுடன் 25,000 கோடி ரூபாய் அளவு அதிக செலவு பிடிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.  

முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது.  உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்போடு ஒப்பீடு செய்துதான் இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனினும் அமெரிக்க டாலரை சர்வதேச நாடுகள் பொது கரன்சியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால்தான் அமெரிக்க டாலர் இந்த நாணய ஒப்பீடுகளில் முதலிடம் வகிக்கிறது.  இந்நிலையில் ஒரு டாலரை வாங்கவேண்டுமானால் எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதை வைத்து, ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. டாலரை வாங்குவதற்கு கூடுதல் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால்,  ரூபாய் மதிப்பு குறைந்தது என்று சொல்கிறோம். குறைவான ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க முடிந்தால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்கிறோம்.

2012 ஜனவரியில் 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை நாம் வாங்கினோம். 2013 ஏப்ரல் மாதம் 55 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்கினோம்.

நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரிப்பு

நாம் பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் டாலர்களின் தொகை குறைவாகவும் இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அதாவது அந்நியச் செலாவணியில் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இதனால் நடப்புக் கணக்கில் துண்டு விழுகிறது (Current Account Deficit). இது மேலும் மேலும் அதிகரித்தபடி உள்ளது.

நாம் அதிகபட்சமாக இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய். அதற்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதிகளுக்கு டாலர்களை அதிக அளவில் செலவிடுகிறோம். நமது ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துள்ளது. சென்ற ஜூலை மாதம்தான் 11 சதவிகிதம் அதிகரித்தது. பொதுவாக சர்வதேச மந்தநிலையின் காரணமாக  நமது ஏற்றுமதி குறைந்து, அதனால் டாலர் வரத்து குறைந்துவிட்டது. டாலர் வரத்து குறைந்தது, ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஃபெடரல்  ரிசர்வின் அறிவிப்பு

இரண்டாவதாக அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் முன்னதாக டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டிருந்தது. அங்கு பொருளாதாரம் மீட்சி அடைந்துவிடும் நிலையில், புழக்கத்தில் விட்டிருந்த டாலரை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள உத்தேசித்திருப்பதாக (Quantitative Easing) அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. டாலர் புழக்கம் குறையுமானால், அதன் மதிப்பு சந்தையில் உயரும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உலகின் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரிந்தது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

வெளியேறும் அந்நிய முதலீடுகள்

அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்கு புதிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துவிட்டது.

ஊக பேர வணிகர்களின் கைவரிசை

மேற்கூறிய காரணங்கள் தவிர, ஊக பேர வணிகர்கள் அந்நியச் செலாவணியில் புகுந்து விளையாடியதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பணச் சந்தையில் கணிசமான அளவு டாலர்களை பாய்ச்சிய பிறகும் நிலைமை சீரடையாமல் போனதற்கு ஊக பேர வணிகமும் ஒரு காரணம்.

‘மருந்தே நோய் முற்றிட காரணமானது’

ரிசர்வ் வங்கி பணப் புழக்கத்தைக் குறைத்து ஊக பேர வணிகத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. இதனால் வட்டி விகிதம் உயர்ந்தது. இது ஆரோக்கியமான தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பாதித்தது. அவர்களது வட்டிச் செலவினங்கள் அதிகரித்தன. இதனால் தொழில் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி 14.8.2013-இல் 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய கம்பெனிகள் தமது சொந்த மூலதனத்தைப் போல் 4 மடங்குவரை மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று முன்பு இருந்தது. இனி சொந்த மூலதனத்துக்குச் சமமான தொகையை மட்டுமே முதலீடு செய்யலாம் என அறிவித்தது.

இரண்டு, ஒரு குடிமகன் வெளிநாடுகளுக்கு ஒரு வருடத்தில் 2 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என்று இருந்ததை, 75,000 டாலர் வரை மட்டுமே அனுப்பலாம் என மாற்றியது.

இவை, டாலர்கள் வெளிநாடுகளுக்குப் போவதைக் குறைக்கவும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முறையான முடிவுகளே. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானவுடன் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்ததுதான் விநோதம். காரணம், அறிவிப்புகள் ஒரு தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும் பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இச்சட்டத்தை செயல்படுத்துவதற்குக் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நடப்புக் கணக்கு இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சத்தினால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்தது. திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அதை அறிமுகம் செய்வதற்கு இது சரியான தருணம் அல்ல என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்

அண்மையில் புதிதாக ஒரு காரணமும் சேர்ந்து கொண்டது. சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய செய்தியும் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சமும் ரூபாய் மதிப்பு சரியக் காரணமாய் இருந்தது.

விளைவுகள் என்ன? யாருக்குப் பாதிப்பு?
  • பொதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை; இறக்குமதியாளர்களுக்கு இழப்பு எற்படும். பணவீக்கமும் விலைவாசியும் உயரும்
  • இந்தியாவின் கச்சா எண்ணெ இறக்குமதிச் செலவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவு அதிகரிக்கும்.
  • வெளிநாடு சென்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம். உதாரணமாக, அமெரிக்காவில் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 45,000 டாலர் செலவு என்று வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்துக்கு முந்திய நிலவரப்படி அவருக்கு செலவு 25 லட்சம் ரூபாய் ஆகும். வங்கிக் கடன் இதனை அனுமதிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 31 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
  • வியாபார நிமித்தம் வெளிநாடுகள் செல்லும் பயணிகளுக்கும் அதே போல் செலவு அதிகமாகும்.
  • பணப் புழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் விளைவாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வீட்டுக் கடன்,  வாகனக் கடன், தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு வட்டி உயரும்.
  • இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரானிக்  சாதனங்களின் விலை உயரும்.
யாருக்கு நன்மை?
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும்  தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பும் டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால், குறைந்த டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு லாபம்.
தீர்வு என்ன?

அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 277 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலராக உள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வது அவசியம்தான். எனினும் அவசியம் ஏற்படும்போது, பணச் சந்தையில் தேவையான டாலர்களைப் பாய்ச்சி டாலர் மதிப்பைக் குறைத்து, ரூபாயின் மதிப்பைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடுகள் வரும்போது டாலர்கள் வரத்து அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு உயரும். அண்மையில் நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு  பல துறைகளில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான பலன் நம்மை வந்து அடைய கால அவகாசம் தேவை. எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை விரைந்து பரிசீலித்து, அரசின் முடிவுகளை வெளியிடவேண்டும். இது தொடர்பான அரசின் நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை அரசு முன்தேதியிட்டு மாற்றம் செய்யாது என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிக்குத் தேவை கூடுதல் சலுகைகள்

2009-இல் செய்ததுபோல், ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு சிறப்பு ஊக்குவிப்புகளை அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடவேண்டும். மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதம் சிறுதொழில்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை மட்டும் நம்பி இராமல், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் கஜகஸ்தான் போன்ற புதிய வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும்.

ஈரான் எண்ணெயை ரூபாய் கொடுத்து வாங்கலாம்

டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைத்திட ஈரானிடமிருந்து ரூபாய் கொடுத்து எண்ணெய் வாங்கலாம்.

பிரிக் நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அந்தந்த நாட்டு நாணயத்தில் மேற்கொள்வது என்று  கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ள விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும்.

சாவரின் பாண்டுகள்

கடந்த காலத்தில் செய்ததுபோல், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பையும் முதலீடுகளையும் டாலரில் திரட்டுவதற்கு ஏதுவாக  சாவரின் பாண்டுகளை வெளியிட வேண்டும். இதனால் தேச பக்தி நிறைந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பெற முடியும்.

நாம் எப்படி உதவ முடியும்?

இறக்குமதியைக் குறைப்பதற்கு நாம் உதவ முடியும். உதாரணமாக, மக்கள் வாரத்தில் ஒருநாள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பல அலுவலகங்களில் வீட்டிலிருந்து கணினி மூலம் வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை, அதன் இறக்குமதியைக் குறைக்க உதவலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள், ஓ.எம்.ஆர். போன்ற ஒரே பகுதியில் வசிக்கக் கூடும். அவர்கள் 4 பேர் இணைந்து ஒரே காரைப் பயன்படுத்தலாம். தலா ஒரு நாள் வாகனத்தை எடுப்பதன் மூலம்  பெட்ரோல் மட்டும் அல்லாமல் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்தலாம். போக்குவரத்து நெருக்கடியையும் இதனால் குறைக்க முடியும். சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

2. தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது.  இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி இறங்குகிறது. முதலீடு நோக்கில் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் விலை  ஸ்திரம் அடையும் வரை சில மாதங்களுக்காவது தள்ளிப் போடலாம். சமீபத்தில் தங்கம் விலை 1,000 ரூபாய் குறைந்தபோது, அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, நகைக் கடைக்கு வந்ததாக ஒரு பெண், தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்டிருப்பீர்கள்.

3. அயல்நாட்டில் இருக்கும் உறவினர்களை இந்தியாவில்  முதலீடு செய்யச்  சொல்லலாம். பல நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்.

இப்படியாக அவரவர் சக்திக்கு ஏற்ப உதவலாம். நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உந்துதலே முக்கியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக