Powered By Blogger

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வரலாற்றின் குரல்

ஒடுக்கப்பட்டவர்களிடம் பேரெழுச்சியை ஏற்படுத்திய மார்ட்டின் லூதர் கிங்கின் உரை நிகழ்த்தப்பட்ட பொன்விழாவைக் கடந்த  வாரம் அமெரிக்கா கொண்டாடியது.

பல படிகளைத் தாண்டித்தான் அந்த உயரத்தை அடைய முடியும். பயணம் சற்று நீண்டதுதான். என்றாலும் முடிவு இனிமையானது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள லிங்கன் நினைவகத்தின் படிகள் பலவற்றைக் கடந்து  மேலே போய்த் திரும்பிப்  பார்த்தால் தெரியும், சீவி வைத்த பிரம்மாண்டப் பென்சிலை போன்ற ஜார்ஜ் வாஷிங்டனுக்கான நினைவுத் தூணும் பொடாமாக் நதியில் அமைந்துள்ள நீரூற்றும் வசீகரமானவை. ஆனால்  அந்தப் படிகள் கண்ட வரலாறு துயரமும் எழுச்சியும் நிறைந்தவை.

50 ஆண்டுகளுக்கு முன் 28 ஆகஸ்ட் 1963-இல் இந்தப் படிகளில் நின்றுதான் மார்ட்டின் லூதர் கிங் அந்த எழுச்சிமிக்க  உரையை நிகழ்த்தினார். அந்த உரையைக் கேட்க நாடு முழுவதிலிருந்தும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

யார் அவர்கள்?

கறுப்பர்களுக்கென்று தனியே பிரித்து ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் படித்தவர்கள். உணவு விடுதிகளில் கறுப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மூலைகளில் அமர்ந்து உண்டவர்கள். தங்கள் ஊர்  நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள்.காதலித்த பெண்ணை/ஆணை மணந்துகொள்ள முடியாதவர்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் அருமைக் குழந்தைகள்  அடித்துத் துன்புறுத்தப்படுவதைக் காண நேர்ந்த துர்பாக்கியவான்கள். தங்களுக்கு உரிமையும் கௌரவமும் மறுக்கப்பட்ட  நிலையிலும் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் காப்பதற்காகப் போர் புரிந்த படை வீரர்கள்.

ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள்,  ஆசிரியர்கள், சுமை  தூக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், உருக்காலைத் தொழிலாளிகள் போன்ற வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறாத சாதாரணர்கள், டி.வி. நிகழ்ச்சிகளில் தலை காட்டாதவர்கள்,  ஒடுக்கப்பட்டவர்களும் சுதந்திர தாகம் கொண்டவர்களுமாக 2,50,000 பேர் தலைநகரத்தை நோக்கி பேரணியாகத் திரண்டார்கள். தங்கள் சொற்பக் கூலியில் மிச்சம் பிடித்த அல்லது பீராய்ந்த பணத்தைக் கொண்டு பஸ் ஏறி வந்தவர்கள், ஆங்காங்கு வாகனங்களில் ஓசி லிப்ட் கேட்டு வந்தவர்கள், ஏன் நடந்தே வந்தவர்கள் கூட உண்டு. பல கிராமங்களில் மொத்தக் கிராமமே திரண்டு வந்து உணவும் தண்ணீரும் கொடுத்து வழி அனுப்பி வைத்தது என ஒபாமா தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

அவ்வளவு பெரிய மக்கள் சக்தியைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். இனக் கலவரத்தை உண்டாக்கியிருக்க முடியும். உள்நாட்டுப் போரை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பிரார்த்தனை செய்தார் மார்ட்டின் லூதர் கிங். வன்முறை தவிர்த்த அறவழியில் போராட முடிவு செய்தார். அதற்கான நம்பிக்கையையும் மன உறுதியையும் ஆன்ம பலத்தையும் தந்தவர் ஓர் இந்திய ‘அரை நிர்வாணப் பக்கிரி’. அவர் பெயர் மகாத்மா காந்தி.  

மார்ட்டின் லூதர் கிங்கின் உரை ஓர் இயக்கத்தைத் துவக்கியது. அந்த இயக்கத்தின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இன ஒதுக்கல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டது. வாக்குரிமை அளிக்கப்பட்டது. கல்வியிலும் வேலையிலும் சம வாய்ப்பளிக்கப்பட்டது.  ‘ஊராட்சிகள் மாறின. மாநிலச்  சட்டமன்றங்கள் மாறின. நாடாளுமன்றங்கள் மாறின.ஏன் வெள்ளை மாளிகையும் மாறியது’ என ஒபாமா இதழ்க் கடையில் ஒரு புன்னகையை ஒளித்துக்கொண்டு சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டது.

குற்றாலச் சாரல் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூறல் விழத் தொடங்கிய நிமிடத்தில் உரையாற்ற வந்தார் ஒபாமா. அவருக்குமுன் மார்ட்டின் லூதர் கிங்கின் மகள் உணர்ச்சி பொங்க உரையாற்றி முடித்திருந்தார். கிங்கின் போராட்டத்தின்போது, உரிமை மணி ஊரங்கும் ஒலிக்கட்டும் எனச் சொல்லி மாதா கோயில் மணியை அடிப்பார்கள். அதை நினைவுகூரும் விதத்தில், அவர் ஒலித்த மணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அலபமாவில் ஒரு மாதா கோயிலில் இருந்த மணி அது. அந்த மாதா கோயில், வாஷிங்டனில் கிங் வரலாற்றுச் சிறப்பு உரை ஆற்றிய 15-ஆம் நாள், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஆனால் மணியைக் காப்பாற்றிப் பத்திரப்படுத்தி விட்டார்கள். கிங்கின் மகள் உரையாற்றிய பின் அந்த மணியை ஒரு சிறுமி ஒலித்தார்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்கிற மார்டின் லூதர் கிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தப்பட்ட 50-ஆம் ஆண்டு விழாவிற்கும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். அவர்களைப் போல பசியோடும் தாகத்தோடும் நெடுந்தூரம் நடந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல இவர்கள். ஒபாமாவின் உரையை ஐபேட் மூலம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

கிங்கின் அறப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு இல்லை என்றாலும்  தங்கள் குழந்தைகளுக்கு  உரிமை கிடைக்கும் என்கிற  நம்பிக்கையில் சிறைக்குப் போனார்கள். அவர்கள் அனுபவித்திராத உரிமைகளும் வாய்ப்புகளும் அவர்களது குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு அவர்கள் அனுபவித்த துன்பங்கள் தெரியாது என அவர் சொன்னபோது இந்தியாவில் இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அளித்த அந்த முகம் தெரியாத மூதாதையர்களை நினைத்து என் கண்கள் கசிந்தன. அந்த இருண்ட நாள்களில் இருந்த அந்த நம்பிக்கை, இந்தியாவே இன்று உனக்கு இருக்கிறதா?

கிங்கின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பது உண்மை. ஆனால் எல்லா அடித்தள மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ‘வேலை இல்லாதவர்களுக்குக் கனவுகள் இல்லை’ என்று ஒரு பதாகையைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

‘உணவு வாங்க சக்தி இல்லாதபோது ஒன்றாக உட்கார்ந்து உண்ணக் கிடைத்திருக்கும் உரிமையால் என்ன பயன்?’ என்று கேள்வி எழுப்பிய ஒபாமா, கிங்கின் கனவு திசை திருப்பப் பட்டுவிட்டது எனக் குறைபட்டுக் கொண்டார்.

‘உலகளவிலான போட்டியும் தொழில்நுட்பங்களும் நம் வேலைகளைக் கவர்ந்து சென்றுவிட்டன. நம் தொழிலாளர்கள் (தங்கள் உரிமைகளுக்காகப்) பேரம் பேசும் வலிமையை இழந்து விட்டார்கள்’ என்றார் ஒபாமா. இது இந்தியாவிற்கும் கச்சிதமாகப் பொருந்தும் உண்மை என்பதை ஸ்ரீபெரும்புதூரிலோ, சிறுசேரியிலோ போய் விசாரித்தால் புரிந்துகொள்ளலாம். பணத்தாசை நல்லது, பரிதாபப்படுவதால் பிரயோஜனமில்லை  எனச் சொல்லி சில சக்திகள் அடித்தள மக்களுக்கு அரசு நன்மைகள் செய்ய முற்படும்போது முட்டுக்கட்டைகள் போடுவதாக ஒபாமா குறைபட்டுக் கொண்டபோது ஆடம் ஸ்மித்தைப் பார்த்துக் கண்ணடித்துக் கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்திருப்பார் கார்ல் மார்க்ஸ்.

இன்று இந்தியாவிற்குத் தேவை, அமெரிக்காவை பொருளாதாரத்திலிருந்து மீட்ட பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்று  நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கென்னவோ இந்தியாவின் இன்றைய தேவை அதன்  மன உறுதியைத் தட்டியெழுப்பக் கூடிய ஒரு மார்ட்டின் லூதர் கிங் எனத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக