Powered By Blogger

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மாரிக்காலம் இன்னும் முழுமையாகக் கடந்துவிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்தியா, குறிப்பாகத் தென்மாநிலங்கள், நல்ல மழையைச் சந்தித்திருக்கின்றன. கர்நாடகத்தில் அபரிமிதமாகப் பெய்த மழை காரணமாகப் பல ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் நிறைந்து, காவிரியும் கொள்ளிடமும் வெள்ளப் பெருக்கைக் கண்டிருக்கின்றன.

வேளாண் பெருமக்கள், மிகுந்த நம்பிக்கையோடும் ஆவலோடும் கழனியில் சம்பா பயிரிட இறங்கி இருக்கிறார்கள். இந்தாண்டு பொங்கல் தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.

நீர் வரத்து கணிசமாக இருந்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரித்து மின்வெட்டு நீங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பத் துவங்குவதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினை மட்டுப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளத்திலும் நல்ல மழை பெய்ததன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையும் நிரம்பத் துவங்கியுள்ளது. அணை பலவீனமாக உள்ளது. அதனால் 134 அடிக்கு மேல் நிரப்ப முடியாது என விதாண்டாவாதம் புரிந்து கொண்டிருந்த கேரள அரசு அதைத் தற்காலிகமாக மறந்து நீர் நிரம்பட்டும், இடுக்கி அணையை இப்போது திறக்க வேண்டியதில்லை எனச் சொல்கிறது.

மனிதர்களின் அவநம்பிக்கை, மனச் சோர்வு, ஆணவம், சுயநலம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு, இதழ்க் கடையில் புன்னகையை ஒளித்துக் கொண்டு தன் இயல்புப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது இயற்கை.

என்றாலும் கடந்த காலம் நமக்களித்துச் சென்றுள்ள பாடங்களை நாம் மறந்துவிடலாகாது. கடந்த காலம் என்றால் ஏதோ நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை அல்ல. சென்ற வருடத்தை மனதில் ஒரு சில கணங்கள் உருட்டிப் பாருங்கள்.

சென்னையைத் தவிர எல்லா மாவட்டங்களும் வறட்சிப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. எல்லா நகரங்களிலும் குடிநீர்ப் பிரச்சினை. சிற்றூர்கள் கூட அதற்குத் தப்பவில்லை. 10 மணி நேரம், 12 மணி நேரம் என மின்வெட்டு வேறு கடுமையாகத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. வேளாண்மை, சிறு தொழில்கள், சிறு வணிகம் என வாழ்வாதாரங்கள் தத்தளித்து தவிப்பிற்குள்ளாயிற்று. விவசாயிகள் தற்கொலை குறித்த செய்திகள் வந்து நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தன. இந்த நெருக்கடியான நேரத்தில்  தமிழ் மக்களோடு உணர்வு ரீதியாக ஒன்றி நின்ற ‘புதிய தலைமுறை’ வார இதழ், பொங்கலுக்கெனெ சிறப்பிதழ் வெளியிடும் வழக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

நிகழ்ந்தவை அனைத்தும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இனி அது போன்ற நிலை ஒருபோதும் வர வேண்டாம் என பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஆனால் வெறும் பிரார்த்தனை  மட்டும் போதாது. மனித முயற்சிகளும் தேவை. நியாயமான மனித முயற்சிகளை தெய்வம் எப்போதும் வாழ்த்தும்.

தனிநபர்களாகிய நமக்கு முதலில் வேண்டியது விழிப்புணர்வு. நீரின் அருமை நமக்குப் புரிய வேண்டும். அதைச் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் செலவிடுவது என்பதை அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி, உணர்வு நிலையிலும் நாம் உணர வேண்டும்.

சமூகம் நீர்நிலைகளைப் பேணவும் காக்கவும் கற்க வேண்டும். நீர் மேலாண்மை என்பதை அறிவியல் இத்தனை வளர்ச்சி கண்டிராத காலங்களிலேயே மிகச் சீர்மையோடும் திறமையோடும் செய்து காட்டியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். தொண்டைமண்டலத்தில் உள்ள ஏரிகளை அவர்கள் பராமரித்த விதமும்,  ஊருக்கு ஓர் ஏரி என்ற கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதும் கண்ணெதிரே உள்ள சான்றுகள். நாம் குறைந்தபட்சம் நம்மூரில் உள்ள ஏரிகளைப் பராமரிக்கவும், பராமரிப்பதைக் கண்காணிக்கவும் முன்வர வேண்டும். அதற்காக உள்ளூர் அளவில் சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள் உருவாக வேண்டும்.

குறைந்தபட்சம் நம் வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவிப் பராமரிக்க முன்வர வேண்டும். மாரிக்காலத்திற்குப் பின் அதுதான் நமக்குப் பயனளிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் மழை கண்ட மகிழ்ச்சியில் மறந்துவிடலாகாது.

மேட்டூர் அணை நிரம்பி, கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 10  டிஎம்சி அளவு  நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இதைத் தவிர்த்திருக்க இயலுமா எனத் தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற உபரி நீரைக் கொண்டு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க வழிகள் உண்டா என்பதை அரசு ஆராய வேண்டும். மழை நீர் சேகரிப்பு, வீடு தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து கட்டாயப்படுத்த வேண்டும்.

நீர் இன்றி அமையாது உலகு என்றும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்றும் வள்ளுவன் எழுதி வைத்துவிட்டுப் போன வரிகள் வெற்று வார்த்தைகள் அல்ல.  அவை வாழ்வியலுக்கான மந்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக