Powered By Blogger

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

அரிசிக்கு ஆபத்து!

அரிசிக்கு ஆபத்து!

இந்திய மக்களுக்கு  உணவுப் பாதுகாப்பை  சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும் என்ற  நீண்டகால விருப்பம்  நிறைவேறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு மசோதா  நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் ஆதாயங்களை எதிர்பார்த்து அவசர அவசரமாக இம்மசோதா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்  சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக  விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  என்றுமில்லாத  அதிசயமாய் ஜெயலலிதாவின் ஆட்சேபங்கள் நியாயமானவை என்று கருணாநிதியும் ஆமோதித்துள்ளார். ஏன் இந்த எதிர்ப்பு?

இச்சட்டத்தால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைக் காட்டிலும் பாதிப்புகள் அதிகம் என்ற விமர்சனங்கள் சரிதானா?

இந்த மசோதா இப்போதுள்ள நிலையில் நிறைவேறினால்  தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசிக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் தனிச் சிறப்புடன் செயல்படுத்தப்படும் மாநிலம் தமிழ்நாடு. 20 கிலோ விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப் பல்வேறு உணவுப் பொருட்கள் பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான்.

இது கணிசமான பலன்களைக் கொடுத்திருக்கிறது.  நம் நாட்டில் உள்ள 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில்  35 சதவிகிதப் பெண்கள்  உடலில் சக்தியின்றி பலவீனமாக இருக்கிறார்கள். 5 வயதிற்குட்பட்ட  குழந்தைகளில் 43 சதவிகிதம் பேர், அவர்கள்  வயதுக்குரிய  உடல் எடையைவிடக் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் தமிழகப் பெண்களும் குழந்தைகளும் இந்த நிலையில் இல்லை.

வடஇந்திய மாநிலங்களைவிட தமிழகத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே உள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடும்போது உடல் வலு குன்றிய பெண்கள் பீகாரில்  45 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  44 சதவிகிதம், ஜார்க்கண்ட்டில் 43 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 42 சதவிகிதம். மற்ற மாநிலங்களில்  உள்ள பெண்களில்  ஏறக்குறைய  பாதிப் பேர் உடல் வலு குறைந்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை கால்வாசிக்கும் சற்றே அதிகமாக 28 சதவிகிதமாக  இருக்கிறது.  அதேபோன்று வயதுக்கேற்ப உடல் எடை கொண்டிராத குறைந்த குழந்தைகள்  பீகாரில்  55 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  47 சதவிகிதம், மேகாலயாவில்  48 சதவிகிதம், மத்தியப்பிரதேசத்தில்  60 சதவிகிதம் என்றிருக்கையில்   தமிழ்நாட்டில் இது  30 சதவிகிதம்தான்  (இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் கிருஷ்ண தீர்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவை). தமிழ்நாட்டின் இந்த மேம்பட்ட நிலைக்கு தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவற்றின் பங்கு கணிசமானது.  

ஆகவேதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு மத்திய அரசு உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டமோ இதற்கு நேர்மாறாக, ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல முறையில் நடந்துகொண்டிருக்கும்  பொது விநியோகத் திட்டத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 2 ஆட்சி துவங்கி 100 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், பல 100 நாட்கள் கடந்த பிறகும் அச்சட்டம் கொண்டுவரப்படவில்லை. இப்போது அதன் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அவசரம் காட்டப்படுகிறது. மக்களின் உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட வேண்டும். ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவற்கு மூன்று வார காலத்திற்கு முன்பாக, அதை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மத்திய அரசு. தற்போது அதை சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இப்படி அவசர கதியில் கொண்டுவரப்படும் சட்டத்தால்  தமிழகத்திற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் சில :

தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில், இச்சட்டத்தால் சுமார் ஒரு லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வரும்போது பொதுவிநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும்.

தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசின் சட்டம் முன்னுரிமைக் குடும்பங்கள் என்று வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தையே சீரழிக்கும்.

தமிழகத்தில் 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வரும் நிலையில், 37.79 சதவிகித  மக்கள் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்ற செயல்.

இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணைச் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தைப் பொருத்தளவில் கிராமப்புற மக்களில் 62.55 சதவிகிதத்தினரும் நகர்ப்புற மக்களில் 37.79 சதவிகிதத்தினரும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறியுள்ளார். அப்படியென்றால், பொதுவிநியோகத் திட்டத்தில் தற்போது பயன்பெறுபவர்களில் கணிசமானோர் வெளியேற்றப்படுவார்கள். தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை மத்திய அவசரச் சட்டம் சீரழித்துவிடும் ஆபத்து உள்ளது" என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

மேலும், இந்தியாவிலேயே நகர்மயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. விவசாயம் நசிவடைவதாலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும் ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். அதனால் நகர்ப்புறங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக நகர்ப்புற மக்களில் 37 சதவிகிதம் பேர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் உணவுப்பொருட்களைப் பெறுவதற்காகத்தான் பொதுவிநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நகர்மயமாதல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அவர்களில், 37.79 சதவிகிதம் பேர் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல்" என்று முதல்வர் கூறியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் பயனாளிகள் குறித்த வரையறையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கூட்டாட்சி முறையில், மக்கள் நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுவிடுவதுதான் சிறந்தது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல், தவறான வறுமைக்கோட்டு அளவுகோலை அடிப்படையாக வைத்து, பயனாளிகள் யார் என்பதை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக்கேற்ற செயலாக்கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண்டும்" எனக் கருணாநிதி கூறுகிறார்.

தமிழக அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்பு அவசரச்  சட்டம் இலக்கு பொது விநியோகத் திட்டத்தை (Targeted Public Distribution System) முன்வைக்கிறது. இது தமிழகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டியது, குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியம் என்பதை நீக்கிவிட்டு, நபர் ஒருவருக்கு 5 கிலோ என்று மாற்ற வேண்டும். இதன்படி 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 கிலோ மட்டுமே உணவு தானியம் கிடைக்கும். 10 கிலோ உணவு தானியத்தை இழக்க வேண்டியிருக்கும். நகர்மயமாக்கல் உட்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இச்சூழலில், ஒரு நபருக்கு 5 கிலோ என்று வரையறுத்திருப்பது மக்கள் மீதான நேரடித் தாக்குதல். இது, தமிழகத்திற்கான அரிசி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் டன் அரிசி குறைக்கப்பட்டு விடும்" என்பது தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு. ஒரு லட்சம் டன் என்பது மிகப்பெரிய அளவு. அந்த இழப்பை ஈடு செய்வதற்கு கூடுதல் அரிசியை வெளிச்சந்தையில் இருந்து தமிழக அரசு வாங்க வேண்டியிருக்கும். அதனால் ஆண்டுக்கு 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்" என்கிறார் தமிழக முதல்வர்.

தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படாது" என்று மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியிருக்கிறார். ஆனால், அது நடக்காது. அப்படி நடந்தாலும் அது தற்காலிகமானதாக இருக்கும். அவசரச்சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசுகளை சமாதானப்படுத்த அவ்வாறு அமைச்சர் கூறியிருக்கலாம். ஆனால், சட்டத்தில் தெளிவாக இதுபற்றி அறிவிக்காதவரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குத்தான் அரிசி வழங்கப்படும் என்பதுதான் உண்மை. ஆகையால், முதல்வர் கூறுவதுபோல ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறை ஏற்படுமானால் அதை ஈடுசெய்ய முடியுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறையை ஈடுகட்ட மாநில அரசு பல வகைகளில் முயற்சி செய்யும். வெளிச்சந்தையில் வாங்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யலாம். எப்படியிருந்தாலும் தமிழக அரசிற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படும். இன்னொருபுறம்   கள்ளச்சந்தை அதிகரிக்கும்.  ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால், வேறு நலத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை  இதற்குத் திருப்பிவிட வேண்டியிருக்கும். அதனால் மற்ற நலத் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேலும், முதல்வர் கூறியுள்ளதைப்போல், வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வந்தால் பொதுவிநியோகத் திட்டம் பெரும் கேள்விக்குறியாகும்" என்கிறார், உணவுப் பாதுகாப்பு உரிமைக்கான பிரச்சாரத்தைச் சேர்ந்த சு.கண்ணையன்.

மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை 90 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். 82  சதவிகிதம் பேர் அரிசி வாங்குகின்றனர்.  தமிழக அரசு தன்னுடைய நிதியையும் மத்திய அரசிடமிருந்து வரும் நிதியையும் சேர்த்து இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்துவிட்டால், அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், சிறு தானியங்கள் 1 ரூபாய்க்கும்  வழங்க வேண்டியிருக்கும். அதை மீறி இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்பினால், அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டியிருக்கும். தமிழகத்திற்கான மத்திய  அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும். இதனால், தமிழக அரசின் தனித்துவமான உணவுப் பாதுகாப்புத் திட்டம் பாதிக்கப்படும். அந்த வகையில் இச்சட்டத்தை ஏற்க முடியாது" என்கிறார், வழக்கறிஞர் வி.சுரேஷ். இவர் தமிழக அரசுக்கான உணவு ஆலோசகராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.

ஆனால், உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்துக்கு எதிரான விமர்சனங்களை முற்றிலும் மறுக்கிறார், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி.

இது, உலகமே கண்டிராத மிகப்பெரிய நலத்திட்டம். இதன் மூலமாக, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்படவிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அத்திட்டத்தை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். அத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் நியாயமற்றவை. இந்தியாவிலேயே  மத்திய தொகுப்பிலிருந்து அதிகளவில் அரிசியை வாங்குவது தமிழகம்தான். தமிழகத்தில் மாநில ஆளுநர் தொடங்கி, யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்ன நடக்கிறது? நடுத்தர மக்களும், உயர் நடுத்தர மக்களும் தங்களுக்கு உரிய அரிசியை ரேஷன் கடைகளில் வாங்குவதில்லை. அந்த அரிசி  சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. எனவே, தேவையற்றவர்களுக்கு அரிசியை ரத்து செய்ய வேண்டும். உண்மையில் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டும் அரிசி வழங்கப்பட வேண்டும்" என்கிறார் கே.எஸ்.அழகிரி.

இந்த வாதத்தில் நியாயம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை நடுத்தர வர்க்க மக்கள் வாங்கிக் கொள்வது என்பது அவர்களுக்கு உள்ள உரிமை. அதைப் பயன்படுத்துவது என்பது அவர்களது விருப்பம்  சார்ந்தது. அதைப் பயன்படுத்தவில்லை என்று சொல்லி அந்த உரிமையைப் பறித்துக் கொள்ளலாமா? வாக்களிப்பது குடிமகனின் உரிமை. தேர்தல்களில் 40 சதவிகிதம் பேர் வாக்களிப்பதில்லை என்கிற காரணத்தைச் சொல்லி நாளை அந்த உரிமையைப் பறித்துக் கொள்வார்களா?

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை முதல்வரோ, மற்ற கட்சியினரோ எதிர்க்கவில்லை. இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. திருத்தங்கள்தான் கோருகிறார்கள். முதல்வர் 5 திருத்தங்களை முன் வைக்கிறார். மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, எந்தெந்தப் பிரிவுகளில் திருத்தம் வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். கருணாநிதி இதை இன்னும் தெளிவாக விளக்குகிறார். இந்த மசோதாவால் தமிழகத்திற்குப் பாதகம்தான். சாதகம் இல்லை என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப்போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதாவில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங்களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்பவில்லை" என்கிறார் கருணாநிதி.  

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில்  இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை" என்கிறார் அழகிரி.

வறுமைக்கோட்டுக்கு மேல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்று பிரித்துத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்று கொண்டு வரும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை. எல்லோரும் சமச்சீராக வளரும்போதுதான் அதைச் செய்ய முடியும். தற்போதைய சூழலில், அப்படிச் செய்ய முடியாது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு கண்டிப்பாக அரிசி தேவை. எனவே, அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் தோல்வியடைந்து விட்டது. எனவே, அதை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்கிறார் அழகிரி.

அப்படியென்றால், முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் அரிசிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. என்னதான் வெளிச்சந்தையில் வாங்கி, பற்றாக்குறையைச் சமாளிக்க முயற்சித்தாலும் வறட்சி போன்ற சூழலில்  அரிசித் தட்டுப்பாடு ஏற்படலாம். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, உணவு தானியங்களின் விலை அதிகரித்து, அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை தாங்க முடியாமல் பொதுவிநியோகத் திட்டத்தை வெட்டிச்சுருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். அது தமிழகத்தில் பெரிய அளவுக்கு கொந்தளிப்பை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


தேவைப்படும் திருத்தங்கள்

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய முக்கியத் திருத்தங்கள் என உணவு உரிமைக்கான பிரச்சார இயக்கம் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள்:

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோகத் திட்டத்தில் 33 சதவிகித மக்கள் உணவு பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறார்கள். இதனால் நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் விடுபட்டுப் போகிறார்கள். எனவே, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ மட்டும் உணவுப்பொருள் வழங்கப்படும் என்றால், நாளொன்றுக்கு 166 கிராம் கிடைக்கும். அது போதாது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7 கிலோவும் பெரியவர்கள் 14 கிலோவும் உணவு உட்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. எனவே, நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவுப்பொருள் வழங்க வேண்டும்.

அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மட்டுமே வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுப்பொருட்களையும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 2.5 கிலோ பருப்பு, 900 கிராம் சமையல் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள குடும்பத்தினருக்கு அரிசி 3 ரூபாயிலும், கோதுமை 2 ரூபாயிலும் சிறுதானியங்கள் 1 ரூபாயிலும் என மூன்று ஆண்டுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. ஆனால், இந்த விலைகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவுக் கையிருப்பு இல்லாதபோது, உணவு தானியங்களுக்குப் பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.  இச்சட்டத்தின் மூலமாக, பொதுவிநியோகத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற நிலை கொண்டுவரப்படுகிறது. அது கூடாது. பணத்தை நேரடியாகக் கொடுப்பது, ஆதார் அட்டையுடன் இணைப்பது என்கிற அம்சங்கள் அவசரச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.



ஜெயலலிதாவை ஆதரிக்கும் கருணாநிதி

முதல்வரின் கோரிக்கைகள் நியாயமானவை: எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறையினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக்கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவிகித மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவிகித மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசுதான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரிவிக்க முடியும்".

- கருணாநிதி தனது அறிக்கையில் - தினமணி  10 ஆகஸ்ட் 2013

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக