Powered By Blogger

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தமிழகத்தில் ஜாதிய, மதவாத அரசியல் தலைதூக்குகிறதா?


தமிழகம் முழுக்க உள்ளூர ஒரு படபடப்பு ஊடுருவியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நீறுபூத்த நெருப்பாக இருக்கிற ஜாதி, மத அரசியலை ஊதிப் பெருநெருப்பாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அமைதியை கூறுபோட்டு விடுவார்களோ என மக்களின் மனசு மௌனமாகப் பதறிக் கொண்டிருக்கிறது.

தர்மபுரியில் இளவரசன்- திவ்யா காதல் திருமணத்தையொட்டி மூர்க்கமாக மூண்ட ஜாதிய வன்முறை சற்று தணிந்தது போலத் தோன்றும் சூழலில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதன் விளைவு... மத ரீதியான பதற்றம் தமிழகத்தைப் பற்றியுள்ளது. ஜாதியமும் மதவாதமும் தமிழக அரசியல் களத்திற்குள் ஊடுருகிறதோ என்று அச்சப்படும் அளவுக்கு அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.  

சென்ற ஜூலை 1--ஆம் தேதி இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்டார். அவரது ரத்தம் உலர்வதற்குள்ளாகவே, ஜூலை 19-ஆம் தேதி  பாஜக மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவங்களைக் கண்டித்து பாஜக சார்பில் ஜூலை 22-ஆம் தேதி மாநில அளவிலான பந்த் நடைபெற்றது. அன்றைய தினம் ராமநாதபுரத்திலும் கோவையிலும் இரண்டு மசூதிகள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன.  இப்படி இந்தக் கொலைச் சம்பவங்கள் அரசியலாக்கப்பட்டதன் காரணமாக பரபரப்பு அதிகரித்துள்ளது.

கொலையானவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு கொதித்துப் போயிருக்கின்றன பாஜக மற்றும் இந்து அமைப்புகள். 1980-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் 130-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்’ என்றும், தீவிரவாத அமைப்புகளுக்கு அதில் தொடர்பு இருக்கலாம்’ என்றும் பாஜக குற்றம் சாட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மறுப்பு தெரிவித்தன. ஒரு கொலை நடந்தால் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறையுடையது. ஆனால், கொலை நடந்தவுடனே அதற்கு மத ரீதியாக உள்நோக்கம் கற்பிப்பதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அக்கொலைகளுக்கு பாஜக மதச்சாயம் பூசுகிறது" என்று தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு விமர்சித்தது.

ஆனாலும்,இந்தக் கொலைகளுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே காரணம் என்ற தங்களின் நிலைப்பாட்டில் இந்து அமைப்புகள் உறுதியாக உள்ளன.

காரணம், அந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள். அதனால் பாஜகவும் இந்து அமைப்புகளும் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்"  என்கிறார், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன்.

இதே குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைக்கிறார், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

தேசவிரோதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் என்பதாலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அமைப்புகளே அதற்குக் காரணம். ஒரு காலத்தில் ஃபாத்வா அறிவித்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். தற்போது குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஜிகாத் செயல்பாடுகள்  அதிகரித்துவிட்டன. அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று கொந்தளிக்கிறார் அர்ஜுன் சம்பத்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அண்மைக் காலத்தில் ஆளும் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரேசன், கீழ்வேளூர் ஒன்றிய மாணவரணி நிர்வாகி சரவணக்குமார், கூடலூர் ஒன்றிய கவுன்சிலர் தங்கவேல், மேட்டூர் முன்னாள் நகரச்செயலாளர் பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் கொலை செய்யப்பட்டனர். திமுகவின் பொட்டு சுரேஷ், ராமஜெயம், மார்க்சிஸ்ட் கட்சியின் நாவலன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளது நாடறிந்த உண்மை. ஆனால், சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கொலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு காரணம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இந்து அமைப்பினரின் கொலைகளுக்கு ரியல் எஸ்டேட், கந்துவட்டி, பெண் சமாச்சாரம் போன்றவையே காரணங்களென செய்திகள் வெளியாகியுள்ளன" என்று அடித்துச்  சொல்கிறார், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா.

இந்தப் படுகொலைகள் குறித்து அரசும் முனைப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், தமிழகக் காவல்துறை தலைவர் ராமானுஜம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு காரணமாக நாகப்பட்டினத்தில் பாஜக பொதுச்செயலாளர் புகழேந்தியும், பணப்பிரச்சினை காரணமாக வேலூரில் பாஜக மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த் ரெட்டியும், நிலத்தகராறு காரணமாக பாஜகவின் பரமக்குடி நகரச் செயலாளர் தேங்காய்க் கடை முருகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து சிறப்பு புலானய்வுக்குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கொலைகளில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே ஏராளமானோரை குறிவைத்துத் தாக்குவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுவது தவறானது, உண்மைக்கு புறம்பானது" என்றும் கூறியுள்ளார் டிஜிபி.

ஆனால், காவல்துறையின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தேசிய அளவிலான  பிரச்சினையாக மாற்றுவதற்கு பாஜக தயாராகி வருகிறது.

ஆனால் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் கருத்தையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களின் கொலைகள் மிகவும் கவலைதரக் கூடியவை. அதேசமயத்தில், புலன் விசாரணை இப்போதுதான் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை இன்னும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதைப் போன்ற சித்திரத்தைத் தீட்டுவதின் மூலமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதலைத் திருப்புவது எந்த வகையிலும் சமூக நல்லிணக்கத்திற்கு சரியான சூழலை உருவாக்காது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களும் எல்லா மதங்களிலும், எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தையோ குறிப்பிட்ட ஜாதியையோ குற்றம் சாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஒரு நாளும் கொண்டு வந்து சேர்க்க முடியாது. இதை பொறுப்புமிக்க அரசியல் கட்சித் தலைவர்களும் சமயத் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார் தமிழருவி மணியன்.

இதற்கேற்ப, இவ்விவகாரத்தில் காவல்துறையின் சில நடவடிக்கை மற்றும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் விதம் குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

2011-ஆம் ஆண்டு அத்வானி வருகையின்போது திருமங்கலம் அருகே குண்டுவைக்கப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்களை காவல்துறை தற்போது திடீரென வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், அவர்களின் புகைப்படங்களை இப்போது ஏன் வெளியிட வேண்டும்? இது தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகிறது. இதை வைத்து சில ஊடகங்கள் செய்திகளை, ‘சென்சேஷனலைஸ்’ செய்கின்றன. இவர்கள்தான் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தனர்’ என்கிற ரீதியில் சில ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன. முஸ்லிம் தீவிரவாதிகள் காரணம் என்று சில வாரப் பத்திரிகைகள் கட்டுக்கதைகளை எழுதுகின்றன. இது மிகவும் கவலைக்குரியது" என்கிறார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்.

எரிகிற நெருப்பை அணைப்பதற்குப் பதிலாக, எண்ணெய் வார்க்கிற முயற்சிகளும் நடப்பதாக அச்சம் தெரிவிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களின் கொலைகள் கவலைக்குரியவை, கண்டனத்துக்குரியவை. அதேநேரத்தில், இந்து அமைப்பு தலைவர்களின் கொலைகளை மட்டும் தனியாகப் பிரித்து, அதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று சொல்வதன் மூலமாக, சமூகத்தைப் பிளவுபடுத்தி மத ரீதியான பதற்ற அரசியலை உருவாக்குவது நல்லதல்ல. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள ஜாதிய சக்திகள் முனைகின்றன. அத்தகைய போக்கை அனுமதித்தால் அது தமிழக அரசியலை இன்னொரு ஆபத்தான பரிணாமத்திற்குக் கொண்டு சென்றுவிடும். அதற்கு பாஜக இடமளிக்கக்கூடாது" என்கிறார் ரவிக்குமார்.

தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம், திவ்யா - இளவரசன் காதல் விவகாரம், இளவரசனின் துயர மரணம் என எந்தச் சம்பவமாக இருந்தாலும், தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான சில தவறான கற்பிதங்களே அனைத்திற்கும் காரணம். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் இரண்டு சமூகங்களும் இணக்கமாக இருந்தால்தான், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் கெடாமல் வளமான பாதையை நோக்கி அவர்கள் நடைபோட முடியும். எனவே, இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிறார்போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நிலையோடு, ஒருவருக்கு ஒருவர் உயர்வு, தாழ்வு என்ற தவறான பள்ளத்தில் விழுந்துவிடாமல் இணக்கமாக தோளோடு தோள் உரச நடக்க வேண்டும்" என்கிறார் தமிழருவி மணியன்.

ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியலாக்கி அதன் மூலம் குளிர் காய்வதற்கு முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். ஜாதிய அரசியலும் மதவாத அரசியலும் தலையெடுப்பது அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு நல்லதல்ல.


அதிகரிக்கும் கொலைகள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு ஆவண மைய அறிக்கையின்படி 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2012-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைக் காட்டிலும் காவல் துறையினர்-பொதுமக்கள் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகம். எனவே, இதற்கான காரணங்களை ஆய்வு செய்து கொலைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக