Powered By Blogger

சனி, 9 மார்ச், 2013

அன்னமிட்ட ‘அம்மா மெஸ்’


தமிழக அரசு, சென்னையில் ஆரம்பித்திருக்கும் மலிவு விலை உணவகத்திற்கு ஏழை மக்களிடையே நல்ல வரவேற்பு

கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், செக்யூரிட்டிகள், பள்ளி மாணவர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எனப் பல தரப்பினர், ‘அம்மா மெஸ்’ஸில் சாப்பிட நீண்ட க்யூவில் நிற்கிறார்கள். தமிழக அரசு சென்னையில் ஆரம்பித்திருக்கும் மலிவு விலை சிற்றுண்டி உணவகத்தை, ‘அம்மா மெஸ்’ என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள் மக்கள்.

பசிக்காக மட்டுமே என்றில்லாமல், சாப்பாடு டேஸ்ட்டாக இருக்கிறதா என்று பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறது. நாம் சாப்பிட்ட தி.நகர் சிவஞானம் சாலை உணவகத்தில் மட்டும் சராசரியாக காலையில் ஆயிரத்து இருநூறு பேரும், மதியம் ஆயிரத்து ஐநூறு பேரும் சாப்பிடுகிறார்கள்.

காலை : இட்லி ஒரு ரூபாய். மதியம் : சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய். இவ்வளவுதான் மொத்த மெனு. இரவு உணவு இப்போதைக்கு இல்லை.

உணவகம் என்பதாலேயே, டோக்கன் வாங்கும் இடத்தில் நிறைய பேர் ஒரு பிரிஞ்சி, ஒரு லெமன் என்று இஷ்டத்துக்கும் இல்லாததை ஆர்டர் செய்கிறார்கள். மாநகராட்சிப் பணியாளர்கள் பொறுமையாக விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சாப்பிட்டவர்கள் அனைவரும் திருப்தி தெரிவிக்கிறார்கள். அளவு போதும். ருசியும் பிரமாதம். இப்படியே மெயின்டெயின் பண்ணா நல்லாயிருக்கும்" என்கிறார், செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் முருகன்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் (கேன் வாட்டர்) வழங்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு சுகாதாரமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு முடித்த தட்டுகளை உடனுக்குடன் அகற்றி, சுத்தம் செய்கிறார்கள். சமைக்கும் இடம் நேர்த்தியாக இருக்கிறது. மொத்தத்தில் சிறப்பான சேவை.

சாப்பாடு சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களைச்  சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். இதற்கென மாநகராட்சியில் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பெண்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது போன்ற பணிகளை மாநகராட்சி ஊழியர்களே கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

வீட்டுப் பிரச்சினைகளாலே பல சமயங்கள்ல சாப்பாடு எடுத்து வரமாட்டோம். மதியம் வெளியேதான் சாப்பிடுவோம். காசில்லைன்னா, சாப்பிடாம கூட இருந்துடுவோம். இனிமே இங்கேயே ரெகுலரா சாப்பிடலாம்னு முடிவெடுத்துட்டோம்" என்று நம்மிடம் சொன்னார்கள், பள்ளி மாணவர்களான தினகரன், முருகப்பன்.

சென்னை மாநகரில் மொத்தம் 15 உணவகங்கள் அமைந்துள்ளன. இந்த மலிவு விலை சிற்றுண்டி  உணவகத் திட்டத்திற்காக கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதம் 500 டன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்குகிறது. வாரத்தில் 7 நாட்களுக்கும் இந்த உணவகங்கள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏழைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், மிக விரைவில் தமிழகம் முழுக்க செயல்படவேண்டும்’  என்று விருப்பம் தெரிவித்தனர், இங்கே பசியாறிய மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக