Powered By Blogger

வியாழன், 21 மார்ச், 2013

தலைதூக்கும் தண்ணீர்ப் பஞ்சம்!

கோடை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் தென்சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர். மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய பகுதிகளில் 15 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள். மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

ஆனாலும், கடந்த ஆண்டு பருவமழைகள் சரியாகப் பெய்யாத நிலையில், வரும் கோடையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழலில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் சென்னை மாநகருக்கு கைகொடுக்குமா?

சென்னை நகருக்கு நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் அளவு 1,300 மில்லியன் லிட்டர். சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 810 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. காட்டுப்பள்ளியில் இருந்து 100 மி.லி. கிடைத்து வருகிறது. அது மணலியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வடசென்னையின் சில பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெம்மேலியில் இருந்து தினமும் 100 மி.லி.கிடைக்க உள்ளது. அதை தென்சென்னையில் சில பகுதிகளுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும்.

சென்னை நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை குடிநீர்த் தேவைக்கு கைகொடுத்து வரும் வீராணம் ஏரியிலும் தண்ணீர் இல்லை. இந்நிலையில், ஆந்திராவின் தண்ணீரை பெரிதாக நம்பியிருக்கிறது சென்னை. ஆனால், அதிலும் சில சிக்கல்கள்.

1983ம் ஆண்டு ஒப்பந்தப்படி, சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அங்கிருந்து நொடிக்கு 600 கியூசக்ஸ் தண்ணீரை ஆந்திரா திறந்து விடுகிறது. ஆனால், இங்கு வந்து சேருவது 150 கியூசக்ஸ் மட்டுமே. தமிழகத்திற்கு வருகிற தண்ணீரை வழியிலேயே ஆந்திரப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்துக்காகவும் சட்டவிரோதமாக எடுக்கிறார்கள். அங்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக சென்னைக்கு வந்துசேருவதில்லை.

தமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் தலைமையில் இரு மாநில உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டில் 8 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும், 2013-14 ஆண்டு முழுமைக்கும் 12 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும் ஆந்திராவை தமிழகம் கேட்டுக்கொண்டது. ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் விடுவிப்பதற்காக 5 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைக்குமாறு ஆந்திராவை ட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தலைநகர் என்பதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆட்சியாளர்கள் மெனக்கெடுவார்கள். ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் கதி?

வேலூர் மாநகராட்சியில் 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்கப் படாததால், ஆத்திரமடைந்த வேலூர் சலவன்பேட்டை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தது. மேயர் கார்த்தியாயினி, நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

மதுரை
மதுரை மாநகரக் குடிநீருக்கான ஆதாரம் வைகை அணை. அங்கிருந்து குடிநீர்த் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், மதுரையில் குடிநீர்த் தட்டுப்பாடு வரும் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிற மதுரை மாநகராட்சியில் தினமும் 136 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதைவிட குறைவாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல பகுதிகளில் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மே மாதம் இறுதிவரை விநியோகிக்கப் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெல்லை
வடகிழக்குப் பருவமழை, தொடர்ச்சியாக நான்காவது முறையாக நெல்லை மாவட்டத்தை ஏமாற்றியுள்ளது. அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டு 78 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 25 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதனால், இங்கு அசாதாரண சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 26 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் தென்காசி, தோட்டமலையார், கடனாநதி உள்ளிட்ட திட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் கால்வாசி அளவுக்குத்தான் தண்ணீர் இருப்பு உள்ளது. தாராபுரம், வள்ளியூர், நாங்குநேரி, குருவிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் பல அடிகளுக்குக் கீழே போய்விட்டது. கிராமப் பஞ்சாயத்துகளில் ஆற்று நீரையும் போர் மூலம் எடுக்கப்படும் உவர்ப்பு நீரையும் கலந்து விநியோகம் செய்கிறார்கள். கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு மோசமாக இருக்கும்" என்கிறார், தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர் சி.சாந்தகுமார்.

சிவகங்கை
கடந்த ஆண்டு மழை இல்லாததால், வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மிகவும் கீழே போய்விட்டது. வைகை ஆற்றின் கரையோரங்களில் கூட நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மனிதர்களுக்கான குடிநீருக்கே திண்டாட வேண்டியிருக்கிறது. இதில் ஆடு,மாடுகளுக்குத் தேவையான தண்ணீருக்கு எங்கே போவதென்று தெரியவில்லை. கோடை காலத்தில் குடிநீருக்கு திண்டாடப்போவது நிச்சயம்" என்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கூ. சங்கிலி.

கோயமுத்தூர்
தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாக கோவையும், குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள உள்ளது. அந்நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லை. சிறுவாணியின் டெட் ஸ்டோரேஜ் தண்ணீரை குடிநீருக்காக எடுக்க முடியுமா என்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆலோசிக்கத் தொடங்கினர். அது குறித்து சிறுவாணி அணையின் தலைமை பொறியாளருக்கு கடிதமும் எழுதினர்.

இதற்கிடையில், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டத்தில் இருந்து ஏற்கெனவே 30 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து கூடுதலாக 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் 125 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு முழுமையான விநியோகம் செய்யப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறியிருப்பது கோவை மக்களுக்கு ஆறுதல் செய்தி.

நீலகிரி
பருவமழை பொய்த்ததால் நீலகிரியின் நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள 10 நீர்த்தேக்கங்கள்தான், ஊட்டி மற்றும் அதையொட்டிய கிராமங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகின்றன. அவற்றில் 7 நீர்த்தேக்கங்கள் வறண்டு விட்டன. தற்போது  பார்சன்ஸ்வேலியில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அதை வைத்து கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர். அங்கு ஊரகப்பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து சமீபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.

நாமக்கல்
கடந்த 28 ஆண்டுகளில் 2012ம் ஆண்டு மிகக் குறைவான அளவு மழை பெய்தது. இம்மாவட்டத்தின் மழை அளவை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் 1985 முதல் பதிவு செய்து வருகிறது. அதன் புள்ளிவிவரப்படி, ஆண்டுக்கு சராசரியாக 900 மி.மீ. மழை பெய்துவரும் நாமக்கல் மாவட்டத்தில், 2012ம் ஆண்டில் 502 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. அங்கு சிலவாரங்களுக்கு முன்பிருந்தே குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது.

கடுமையான வறட்சி நிலவுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் நெருக்கடியை நோக்கிப் போகிறது. ஆழ்குழாய் கிணறுகள் பொய்த்துப்போகின்றன. ஈரோடு பகுதியில் பனைமரங்கள் கூட காய்ந்து வருகின்றன. பொதுவாக, தமிழகத்தில் கோடை மழையின் அளவு 20 சதவிகிதம். அது சரியாக பெய்துவிட்டால் ஓரளவு சமாளித்துவிடலாம். அதுவும் பொய்த்துப் போனால் குடிநீருக்கு சிரமம்தான்" என்று கவலையோடு கூறுகிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி.

நீர்நிலைகள் எல்லாம் காய்ந்து கிடக்கும் நிலையில், தற்போதைய தண்ணீர் சிக்கலை சமாளிப்பதற்கு நிலத்தடி நீர் கைகொடுக்குமா?

தண்ணீர்த் தட்டுப்பாடு எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நிலத்தடி நீர் கைகொடுத்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஊற்றுநீருக்கு முக்கிய ஆதாரம் ஆற்றுப்படுகைகள். தமிழகத்தில் 34 ஆற்றுப்படுகைகள் உள்ளன. அவற்றில் 18 மிகப்பெரியவை. அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் மணல் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. விதைநெல்லை விற்பது போல, மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. எனவே, ஊற்றுநீர் அளவு மிகவும் குறைந்துள்ளது. காவிரிப் படுகையில் 250 டி.எம்.சி., ஊற்றுநீர் கிடைக்கும். மற்ற ஆறுகளில் 362 டி.எம்.சி.யும், சிறிய ஆறுகளில் 425 டி.எம்.சி,யும் ஊற்றுநீர் கிடைக்கும். மணல் சுரண்டப்பட்டு விட்டதால், இப்போது 200 டி.எம்.சி. கூட கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.  நிலத்தடி நீர் கடுமையாக சுரண்டப்பட்டதால் இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல கடலோரப்பகுதிகளில் உப்புநீர் புகுந்து விட்டது. நச்சு ரசாயனங்களும் கலந்துவிட்டன. அதைக் குடித்தால் வயிறு, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உட்பட பலவித நோய்கள் வருகின்றன. கருக்கலைப்புகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன" என்று கவலையோடு கூறுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.

எதிர்வரும் தண்ணீர் நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக ஆலோசனை ஒன்றை முன்வைக்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் வீரப்பன்.

தமிழக ஆறுகளில் இருந்து ராட்சதக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 50-60 டி.எம்.சி. தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் அதள பாதாளத்தை நோக்கிப் போகிறது. தற்போதைய தண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அதனால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இது, தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓரளவு உதவும்" என்கிறார் வீரப்பன்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, அண்மையில் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்கையில், வரும் கோடையில் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பாடுவதற்கான வாய்ப்பு குறைவு. நீர் ஆதாரங்களில் மே மாதம் வரைக்குமான தண்ணீர் கையிருப்பில் உள்ளது" என்றார்.
காவிரி நடுவர் மன்றம் 2007ல் வழங்கிய இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. எனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதம் 2 டி.எம்.சி. வீதம் மொத்தம்  10 டி.எம்.சி. தண்ணீரை சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கர்நாடகம் திறந்துவிட வேண்டும். காவிரியில் இருந்துதான் ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தண்ணீர் செல்கிறது. ஆகவே, அந்த 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதால் கோடைகாலத்தில் குடிநீர்ப் பிரச்சினை இருக்காது" என்கிறார், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் ஓவுபெற்ற தலைமைப் பொறியாளர் நடராஜன்.

இந்தத் தகவல்களும் வல்லுநர்களின் ஆலோசனைகளும் நம் காதுகளை குளிர்விக்கின்றன. கூடவே, நம் தாகத்தையும் தீர்ப்பதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.


தீர்வுகள் என்ன?
எதிர்கால நலன் அடிப்படையில் செய்தாக வேண்டியவை என வல்லுநர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள் :
தமிழகத்தில் ஏரிகள், கண்மாய்கள் என மொத்தம் 39,702 நீர்நிலைகள் உள்ளன. அவற்றை ஒரு மீட்டர் முதல் ஒன்றரை மீட்டர் வரை ஆழப்படுத்த வேண்டும். இதன் மூலம் 200 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும். இது காவிரியில் வரும் தண்ணீரின் அளவு. தண்ணீர் தேக்குவதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும். வீராணம் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் ஏரி என 116 பெரிய ஏரிகள் உள்ளன. அவற்றையும் இதேபோல ஆழப்படுத்தினால், 150 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம். இவை தவிர, 20-25 அணைகளில் வண்டல்மண் தேங்கிக் கிடக்கிறது. அதை அகற்றினால், 40 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். இப்படியாக சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்."

- பொறியாளர் வீரப்பன்

சென்னையில் சராசரியாக 1,200 மி.மீ. மழை பெய்கிறது. அதை சேமித்தாலே கோடை காலத்தில் தண்ணீர்த் தேவையை முழுமையாக சமாளித்துவிட முடியும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் 1,000 ஏரிகள் காணாமல் போய்விட்டதாக வைத்துக்கொண்டாலும் 2,600 ஏரிகள் மிஞ்சியிருக்கும். அதைப் பாதுகாத்தாலே தண்ணீர்ப் பிரச்சினை இருக்காது. ஆனால், அதற்கான முயற்சி இல்லை. கடல் நீரைகுடிநீராக்கும் திட்டங்களுக்குப் பதிலாக ஏரிகளைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதுமானது. செலவும் குறைவு. புதிதாக 3,000 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரப்போவதாகக் கூறுகிறார்கள். அந்தப்பணத்தில் பாதியை செலவு செய்தாலே ஏரிகள் அனைத்தையும் பாதுகாத்துவிட முடியும்.

அதுதவிர, மறுசுழற்சியில் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்க வேண்டும். சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆகிய ஆறுகளில் ஒவ்வொரு நாளும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீராக கடலுக்குச் செல்கிறது. அதை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் இல்லை என்று ஒப்பாரி வைக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீடுகளில் திட்டங்கள் குறித்து மட்டுமே அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லும் அதிகாரிகளும் பொறியாளர்களும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, தண்ணீரை மறுசுழற்சியில் பயன்படுத்துவது போன்ற நல்ல ஆலோசனைகளை அரசுக்கு சொல்ல வேண்டும்."
- பேராசிரியர் ஜனகராஜன்


தாமதமாகும் 5வது நீர்த்தேக்கம்
சென்னை மாநகரக் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை வீட்டு உபயோகத்துக்காக சப்ளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. அதிகரித்துவரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக தனியார் நிலம், அரசு நிலம் மற்றும் வனத்துறை நிலம் உட்பட 1,495 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. கண்டலேறு-பூண்டி கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் அதில் தேக்கிவைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அது தாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


மதுரையில் ‘நிலைத்தெப்பம்’
இந்த ஆண்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா கொண்டாடுவற்குக்கூட தண்ணீர் இல்லை. பொதுவாக தெப்பக்குளம் வறண்டு போனால், வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவார்கள். இந்தாண்டு தெப்பத்திருவிழாவிற்காக  16 கி.மீ. தொலைவிலுள்ள மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, ‘நிலைத்தெப்பம்’ அமைத்து தெப்பத்திருவிழா கொண்டாடப்பட்டது. வறட்சி காரணமாக  50 ஆண்டுகளுக்கு முன்பாக, இதேபோல் நிலைத்தெப்பம் அமைத்து விழா கொண்டாடப்பட்டது.


கிராமத்தில் மினரல் வாட்டர்
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டநத்தம்பட்டி. சுமார் 1,600 குடும்பங்கள் உள்ள இக்கிராம மக்களின் குடிநீர்த் தேவையை நிலத்தடி நீரே பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் இங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்ததால், குடிநீருக்குத் திண்டாடினர் இக்கிராம மக்கள்.

மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்கள் முன் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். குடிநீர்ப் பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டோம். உடனே, ‘உப்பு நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் நிறுவப்படும்’ என உறுதி அளித்தார். அதையடுத்து, 9 லட்சம் ரூபாய் செலவில் உப்பு நீரைக் குடி நீராக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, அதை இயக்கி வைத்தார். இயந்திரப் பராமரிப்புச் செலவை ஊராட்சியே ஏற்றுள்ளது. மினரல் வாட்டர் என்பதை கேன்களில் மட்டுமே பார்த்து வந்த எங்கள் மக்கள், தற்போது மினரல் வாட்டரைக் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர்" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், கோட்டநத்தம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கந்தப்பன்.

இது தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரம். 18 லிட்டர் மினரல் வாட்டருக்கான விலை 2  ரூபாய்தான். மாதம் 60 ரூபாய் மொத்தமாக செலுத்துபவர்கள், தங்கள் கைரேகையை இயந்திரத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களின் கைரேகை, சென்சாரில் பதிந்தவுடன் 18 லிட்டர் தண்ணீர் தானாகவே கொட்டுகிறது.
இதே தண்ணீரைக் கடையில் வாங்கினால் 25 ரூபாய். ஆனா, நாங்கள் அதை 2 ரூபாய்க்கு வாங்குறோம்" என்று சந்தோஷத்தோடு கூறுகிறார் ராஜேஸ்வரி. கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 கிராமங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக