Powered By Blogger

வெள்ளி, 8 மார்ச், 2013

நீதிக்கான நேரம் இது


நீதிக்கான நேரம் இது

நீதியைப் பெற்றுத் தரும் நேரம் நெருங்கி வருகிறது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுற்று நான்காண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அந்தப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு - வெறும் மீறல்களா அவை? மனிதகுலத்திற்கு எதிரான கோரமான குற்றங்கள்- இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை.

வல்லரசுக்களுக்கு அஞ்சாமல் உலக அரங்கில் அநீதிக்கு எதிராக குரலெழுப்பிய வரலாற்றுப் பெருமை இந்தியாவிற்கு உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பின் (1946), தென்னாப்ரிக்காவில் நிறவெறி தலையெடுத்து தாண்டவமாடியபோது, 1948ல் ஐக்கிய நாடுகள் அவையின் முதல் கூட்டத்திலேயே அதனை விவாதப் பொருளாகக் கொண்டுவந்த நாடு இந்தியா.   அன்று இந்தியா அப்போதுதான் விடுதலை பெற்ற இளம் குடியரசு. இன்றுபோல் உலகம் உற்று நோக்கும் பொருளாதாரப் புலி அல்ல. ஆனாலும் யாருக்கும் அஞ்சாமல் அது குரலெழுப்பியது. தென்னாப்ரிக்கா மட்டுமல்ல, நமீபியா, பாலஸ்தீனம், திபெத், காங்கோ என்று எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அது நீதிக்காகக் குரல் எழுப்பியது. ஏன், இலங்கையிலே இனப் போராட்டம் தீவிரமடைந்தபோது, இந்திரா காந்தி தமிழ்க் குழுக்களுக்கு இந்திய மண்ணில் போர்ப் பயிற்சி அளித்ததும், 1987ல்  யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டபோது, ராஜீவ் காந்தி ஆபரேஷன் பூமாலை என்ற பெயரில் இலங்கை அரசின் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் உணவுப் பொருட்களை வீசியதும் நெடுங்காலத்திற்குமுன் நிகழ்ந்த சம்பவங்கள் அல்ல.

இப்போதும் அப்படி ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டிய தருணம், இந்தியாவிற்கு வாய்த்திருக்கிறது. கடந்த ஆண்டு (மார்ச் 22) நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்று, அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு, ஆதரவாக 24 ஓட்டுக்கள், எதிராக 15 ஓட்டுக்கள், நடுநிலைமை 8 நாடுகள் என்று நிறைவேறியது. இந்தியா அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், ஓராண்டாகியும் அங்கே நிலைமை சீரடையாததால், இப்போது கூடியுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. ஐ.நா.வின் நேரடி மேற்பார்வையில் இலங்கையில் மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா இப்போது கொண்டுவரவுள்ள தீர்மானம் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு வேண்டும். சென்றமுறை தீர்மானம் வெற்றி பெறுமா என்னும் அளவிற்கு நிலைமை கடுமையாக இருந்தது. ஆனால், இந்த முறை அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு சென்றமுறையை விட அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யா, சீனா, க்யூபா போன்ற நாடுகள் சுழற்சி முறையில் கவுன்சிலிருந்து வெளியேறிவிட்டதால், அவை இந்த முறை வாக்களிக்க முடியாது.  அதே நேரம் சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த காங்கோ, ஈக்குவேடர், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, மௌரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், தாய்லாந்து, உகாண்டா ஆகிய 10 நாடுகள் இப்போதும் உறுப்பினர்களாக இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானதாகிறது. இந்தியாவே முன் முயற்சி எடுத்து, இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்ட இந்தியா, ஆதரவாக வாக்களித்து நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

ஏதாவது அற்ப காரணங்களைச் சொல்லி, இந்தியா இந்தக் கடமையிலிருந்து தவறுமானால் அது தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கெதிரான அநீதி.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக