Powered By Blogger

வெள்ளி, 8 மார்ச், 2013

தடைகளைத் தாண்டிய காவிரி


200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது. நீண்ட நெடிய அந்தப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி இங்கே……

பிப்ரவரி 20, 2013 - காலை:

காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் ஒரு இறுக்கமான அசாதாரண சூழல் நிலவியது. காரணம், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த கெடுவின் இறுதிநாள் அது. அரசிதழில் வெளியானால்தான் அவர்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். அவர்களுக்கு அது வாழ்வா, சாவா பிரச்சினை. மத்திய அரசின் கடந்தகாலச் செயல்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதாலும் அரசிதழில் வெளியிடக் கூடாது என கர்நாடக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியும், அரசிதழில் வெளியிடுவதைப் பற்றிய அறிவிப்புகளோ, அறிகுறிகளோ ஏதும் இல்லாமல் அரசு வாயை இறுக்க மூடிக் கொண்டிருந்ததும்  விவசாயிகள் மத்தியில் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

பிப்ரவரி 20, 2013 - பிற்பகல்:

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற தகவல் வெளியானதும்  தஞ்சை நகரமே உற்சாக வெள்ளத்தில் மிதந்தது. ஆங்காங்கே விவசாய சங்கத்தினரும் அரசியல் கட்சிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் இந்த வெற்றியைக் கொண்டாடினர். பயிர்கள் பொய்த்ததாலும்  உயிர்கள் மரித்ததாலும் இந்தாண்டு தஞ்சை விவசாயிகள் பொங்கலைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. ஆனால், இது அவர்களுக்குத் தீபாவளி.

அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. தடைகள் பல தாண்டி பொன்னி, தன் புதல்வர்களை அணைத்துக் கொள்ளவிருக்கிறாள். 200 ஆண்டுகாலமாக நடந்துவந்த போராட்டத்தின் இறுதியில் காவிரியில் நமக்குள்ள உரிமைநிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் எனக் கொக்கரித்தவர்களின் ஆணவம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்திற்குக் கிடைத்த  வெற்றி இது.

200 ஆண்டுகள்? ஆம். காவிரிச் சிக்கலின் நுனி, ஆங்கிலேயர் ஆட்சிக்கால வரலாற்றில் புதைந்து கிடக்கிறது.

முதல் மோதல்

ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த அன்றைய சென்னை ராஜதானிக்கும் மன்னராட்சியின்கீழ் இருந்த மைசூர் அரசுக்குமிடையே  காவிரி குறித்துக் கடிதங்கள் பரிமாறிக்கொள்வது 1807லேயே தொடங்கி விட்டது. அப்போது மைசூர் அரசின் திவான் பூர்ணய்யா, ஏரிகள் அமைக்கவும் சிறு சிறு நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைக்கவும் திட்டங்களைத் துவக்கியிருந்தார்.  அதை ஆட்சேபித்து மதறாஸ் ராஜதானியை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகள், கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மைசூர் அதைப் பொருட்படுத்தவில்லை. 1831ம் ஆண்டு மைசூர் அரசை ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் இங்கிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் எழுதிய கடிதங்களின்படி இந்தப் பணிகளை நிறுத்தியிருக்க வேண்டுமல்லவா? அதுதான் நடக்கவில்லை. மாறாக, 1856ம் ஆண்டு பொதுப்பணித் துறை (public works department-PWD) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்தப் பணிகளை முறைப்படுத்தினார்கள். கர்னல் ஆர்.ஜே.சன்கே என்ற பொறியாளாரைக்கொண்டு ஒரு மாஸ்டர் பிளான் தீட்டினார்கள். ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. காரணம், 1877ல் மைசூரில் கடுமையான வறட்சியும்  பஞ்சமும் ஏற்பட்டன. பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர்கள் பஞ்சத்திலிருந்து மீண்ட பிறகு, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்கள். மறுபடியும் மதறாஸ் ஆட்சேபித்தது. இதற்கிடையில், மைசூர் அரசு மீண்டும் மன்னரிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேய அரசின் பிரதிநிதி ஒருவர்- ரெசிடெண்ட்- அங்கு நியமிக்கப்பட்டார்.

மதறாசின் ஆட்சேபங்கள் தொடர்ந்ததால், 1890ம் ஆண்டு, உதகமண்டலத்தில் இருதரப்பும் சந்தித்துப் பேச ஏற்பாடாயிற்று. மைச்சூர் சார்பில், ஆலிவர் செயிண்ட் ஜான் என்ற ரெசிடெண்ட்டே கலந்துகொண்டார். அவருடன்PWD தலைமைப் பொறியாளராக இருந்த கர்னல் சி.போவன் என்ற ஆங்கில அதிகாரியும், சேஷாத்ரி ஐயர் என்ற திவானும் மைசூரின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். மதராஸ் தரப்பில் ஆளுநரின் குழுவில் இருந்த ஸ்டோக்ஸ் என்ற அதிகாரியும் ஜி.டி.வால்ச் என்ற பொறியாளரும் பங்கேற்றனர். நான்கு ஆங்கிலேய அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. அதன்பின் இரண்டு தரப்பும் யோசனைகளையும் மாற்று யோசனைகளையும் பரிமாறிக் கொண்டன.

ஓராண்டுக்குப் பிறகு, 1891 மே மாதம் மறுபடியும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது மைசூர், காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதற்கான விதிகளை முன்வைத்தது. மதறாஸ் சில திருத்தங்களுடன் அதை ஏற்றுக் கொண்டது. அதன்பின், 7 மாதங்கள் கழித்து 1892 பிப்ரவரியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தைத்தான் இன்றுவரை கர்நாடகா, ஆங்கிலேயே அரசு தமிழ்நாட்டிற்கு சாதகமாக நடந்துகொண்டு எங்களை வஞ்சித்து விட்டார்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், இது குறித்த விவாதங்களில் தமிழ் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை, மைசூர் வகுத்துக் கொண்ட விதிகளைத்தான் மதறாஸ் ஏற்றுக்கொண்டது  என்பதுதான் உண்மை.

இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான ஓர் அம்சம், காவிரி, கபினி, ஹேமாவதி உள்ளிட்ட முக்கிய நதிகளில், மதறாஸ் ஆட்சியாளர்களின் (அதாவது தமிழ்நாடு அரசின்) முன் அனுமதி பெறாமல் புதிதாக பாசனத்திற்கான நீர்த்தேக்கங்களோ, அணைக்கட்டுகளோ கட்டக்கூடாது என்பதுதான்.

இரண்டாம் தடைக்கல்: கிரிஃபின் ஆணை

ஆனால் 1900ம் வருடத்தில், கோலார் தங்கவயலுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய மின்நிலையம் அமைத்துக் கொள்ள, மைசூர் அனுமதி கேட்டது. இதனால் நீர்ப்பாசனத்திற்கு பிரச்சினை வராது என்பதால், மதறாஸ் அதை அனுமதித்தது. பின் 1906ல் அந்த நீர்மின் திட்டத்திற்கு தடங்கல் இல்லாமல் தண்ணீர் கிடைப்பதற்காக கண்ணம்பாடியில் (அதுதான் இன்றைய கிருஷ்ணராஜ சாகர்) முதலில் 11 டி.எம்.சி. தண்ணீர் தேக்கிக் கொள்ளவும் இரண்டாவது கட்டமாக 41.5 டி.எம்.சி. தேக்கிக்கொள்ளவும் ஏதுவாக அணை கட்ட அனுமதிக்குமாறு மைசூர், மதறாசிற்கு திட்டங்களை அனுப்பியது. அந்தத் தருணத்தில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த மேட்டூரில் அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மதறாஸ் நடத்திக் கொண்டிருந்தது.

மைசூரின் திட்டங்களுக்கு மதறாஸ் ஒப்புதல் அளிக்க மறுத்தது. பஞ்சாயத்துப் பண்ண, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிரிஃபின் என்பவரை நியமித்தது. கிரிஃபின் கொடுத்த ஆணை, தமிழகத்திற்கு சாதகமாக இருக்கவில்லை என்பதால், அதை ஏற்க மறுத்த மதறாஸ், மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசிடம் முறையிட்டது. இந்திய அரசு, மதறாஸ் வைத்த வாதங்களை ஏற்கவில்லை. கிரிஃபின் கொடுத்த ஆணையை உறுதி செய்யப்போவதாக 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. அதையடுத்து மதறாஸ், லண்டனில் இந்தியாவிற்குப் பொறுப்பான அமைச்சரிடம் முறையிட்டது. அவர் சுயேச்சையான வல்லுநர்களை அனுப்பி ஆராய்ந்து, மதறாசின் நிலையை ஏற்றார். மைசூர் அரசிற்கு மூன்று சாய்ஸ் கொடுத்தார். 1. அவரது ஆணைக்கு எதிராக மேல்முறையீடு. 2. புதிதாக பஞ்சாயத்து  3. மதறாசிடம் பேசி முடித்து, ஒப்பந்தம் போட்டுக்கொள்வது. மைசூர் அரசு மூன்றாவது சாய்ஸை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதில் உருவானதுதான் 1924ம் ஆண்டு ஒப்பந்தம்.

24ல் இழந்ததும் பெற்றதும்

1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் முக்கியப் பலன்கள் 2:  நாம் மேட்டூர் அணையைக் கட்டிக் கொள்வதற்கும், கர்நாடகம் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டிக்கொள்வதற்கும் கிடைத்த அனுமதி ஒன்று, அதன் பின்விளைவாக விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பு அதிகரித்தது மற்றொன்று.  ஆனால், பொதுவாகப் பார்த்தால் நமக்குப் பின்னடைவுதான். ஏனெனில், அதில் மைசூரின் கை ஓங்கிவிட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள். 1. 44,827 டி.எம்.சி. நீரைத் தேக்கிக் கொள்ளுமளவிற்கு கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டிக்கொள்ளலாம். 2. மைசூர் ஏற்கெனவே பயிர் செய்து வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கருடன் கூடுதலாக 1.10 ஆயிரம் ஏக்கர் பயிர் செய்துகொள்ளலாம். 3. தமிழ்நாடு, மேட்டூர் அணையில் 93.5 டி.எம்.சி. வரை நீர் தேக்கிக் கொள்ளலாம். 3 லட்சத்து ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நீர்ப்பாசனம் செய்துகொள்ளலாம். 4. பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை நதிகளில் மதறாஸ் அணை கட்டிக் கொள்ளுமானால், அவற்றின் கொள்ளளவில் 60 சதவிகிதம் அளவிற்கு மைசூர் அணை கட்டிக் கொள்ளலாம். நாம் மேட்டூர் அணையைக் கட்டிக் கொள்வதற்கும் கர்நாடகம், கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டிக்கொள்வதற்கும் கிடைத்த அனுமதிகள், அதன் பின்விளைவாக விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பு அதிகரித்தது இவையெல்லாம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பலன்கள்.

இதைவிட முக்கியம், கிருஷ்ணராஜ சாகரிலிருந்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படும் என்பது பட்டியலிடப்பட்டு, ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று கறார் மொழியில் பேசியது ஒப்பந்தம்.

அரசியல் சுழல்

ஆனால், இப்போது எண்ணிப் பார்த்தால் தமிழ்நாட்டின் பால், ஆங்கிலேயர்கள் காட்டிய அளவிற்குக்கூட சுதந்திரத்திற்குப் பின் அமைந்த மத்திய அரசு காட்டவில்லை எனத் தோன்றுகிறது. காரணம், சுதந்திர இந்தியாவில் காவிரிப் பிரச்சினை வாக்கு வங்கி அரசியல் முக்கியத்துவம் பெற்றதன் காரணமாக அரசியல் பிரச்சினையாக மாறிப் போனது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் இருந்த அளவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அது இங்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் இல்லை.

சில உதாரணங்கள்:
  • ஹேமாவதியில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு 1964ல் வெளியிட்டது. அப்போது இரண்டு மாநிலங்களிலும் ஒரே கட்சிதான் ஆட்சி செய்துகொண்டிருந்தது. அந்தத் திட்டத்தைத் தடுக்கவோ, இரு அரசுகளும் பேசித் தீர்க்கவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பின்னால், 1990ம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஓர் தீர்ப்பில், மத்தியிலும், கர்நாடகத்திலும் தமிழகத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது மத்திய அரசு தலையிட்டிருந்தால், பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினையைத் தீர்க்க பெறும் வாய்ப்பு இருந்திருக்கக் கூடும் (‘தினமணி’ 7.5.1990) எனக் குறிப்பிடுவது நினைத்துப் பார்க்கத்தக்கது.
  • ஆகஸ்ட் 1968க்கும் அக்டோபர் 70க்கும் இடையே தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கிடையே 6 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைச் சட்டத்தின்படி, பிரச்சினையைப் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க முடியவில்லை என்றால்,அதை நடுவர் மன்றத்திடம் விட வேண்டும். 27.10.1970 அன்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், அந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னிலை வகித்த மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கே.எல்.ராவ், ‘தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் நேர் எதிரான நிலையை மேற்கொள்கின்றன, இனி பேச்சு வார்த்தை சாத்தியமில்லை’ எனத் தெரிவித்தார். 1971ல் கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த இந்திரா காந்தியும் இதையே சொன்னார். ஆனால், நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை.
  • 1971 ஆகஸ்ட் 4ம் தேதி நடுவர் மன்றம் கோரியும், கட்டுமானத்தில் இருந்த கர்நாடக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ்க அரசு வழக்குத் தொடர்ந்தது. 6 மாதத்தில் நடுநிலையான தீர்ப்பு ஒன்றை மத்திய அரசு பெற்றுத் தரும், அதுவரை எந்த மாநிலமும் இப்போதுள்ளதைவிட அதிகமாக தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது என பிரதமராக இருந்த இந்திரா காந்தி சொன்னதன் பேரில் தமிழக அரசு வழக்கை 1972 ஆகஸ்ட்டில் திரும்பப் பெற்றது. ஆனால், இந்திரா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
  • கர்நாடகம் அணைகள் கட்டியபோது அதற்கு மத்திய அரசோ, திட்டக்கமிஷனோ அனுமதி அளிக்கவில்லை என்பதால் அது தன் சொந்தச் செலவில், திட்டமில்லாத செலவாகக் காண்பித்து அவற்றைக் கட்ட ஆரம்பித்தது. ஆனால், 1971ல் கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோது, (அதாவது மத்திய அரசின் ஆட்சி நடந்த போது), இந்திய அரசின் பொதுப்பணத்திலிருந்து எட்டரைக் கோடி ரூபாய் இந்தத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது (இதை அப்போது  கருணாநிதியே சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்).
  • 1975ல் இரு தனிநபர்கள் நடுவர் மன்றம் கோரி வழக்குப் போட்டபோது, நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது என்றே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
  • காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 1983ல் வழக்குத் தொடுத்தது. மத்திய அரசு வாய்தா மேல் வாய்தா வாங்கி, 1990 வரை அதை இழுத்தடித்தது. 1990ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவே பொறுமை இழந்து, நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு இந்தப் பிரச்சினையை விடுவதில் ஏற்பட்ட காலதாமதம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை மேலும் கடினமாக்கி விட்டது. எல்லா மாநிலங்களின் பாதுகாவலன் என்ற முறையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அரசமைப்பு இயந்திரத்தை முடுக்கி விட வேண்டும். நகத்தால் கிள்ளாததைப் பின், கோடரி கொண்டுதான் வெட்ட வேண்டும்.ஒரு தனிநபருக்கு எது உண்மையோ, அது தேசத்திற்கு கூடுதல் உண்மையாக இருக்கும் எனக் கடுமையாகச் சாடியது. உச்ச நீதிமன்றம் கிடுக்கிப் போட்ட பின்புதான் நடுவர் மன்றம் அமைந்தது என்பது வரலாற்று உண்மை.
  • நடுவர் மன்றம் அமைந்து, இறுதித் தீர்ப்பும் வந்தபின்பும் அதை அரசிதழில் வெளியிட 6 வருடங்களாகியும் அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட முன்வரவில்லை. இன்னும் உங்களுக்கு எத்தனை காலம் தேவை எனஉச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டபோது, சட்ட அமைச்சகத்துடன் ஆலோசிக்க வேண்டும் என இழுத்தது. எதற்கு சட்ட அமைச்சகத்தை ஆலோசிக்க வேண்டும், எந்தச் சட்டத்தின்கீழ் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதோ அதே சட்டத்தின் அடிப்படையில் வெளியிடலாமே என உச்ச நீதிமன்றம் அதட்டிய பின்னர்தான் உச்ச நீதிமன்றம் விதித்த கெடுநாளின் கடைசியில் வேண்டா வெறுப்பாக அரசிதழில் வெளியிட்டது.  
நமக்குள் மோதல்

தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சிகளுக்குப் பெயர் வந்துவிடக் கூடாதென்ற குறுகிய பார்வையில் செயல்பட்டன என்பதும் மற்றுமொரு வரலாற்று உண்மை.

திமுக

இந்திரா காந்தியின் வார்த்தையை நம்பி, 1972ல் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் திரும்பப் பெற்றபோது, மீண்டும் வழக்காட வழி வைத்துக் கொண்டுதான் கருணாநிதி அரசு திரும்பப் பெற்றது. ஆனால், மீண்டும் வழக்குப் போட வாய்ப்பிருந்தும் கருணாநிதி அரசு வழக்குத் தொடுக்கவில்லை.

பிப்ரவரி 2007ல் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த போதும், இப்போதும் மத்திய அரசிலே திமுக அங்கம் வகிக்கிறது. ஆனால், அதை அரசிதழிலே வெளியிட போதுமான அளவு மத்திய அரசை அது வற்புறுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் போய்த்தான் அரசிதழில் வெளியிட முடிந்தது.

அதிமுக

அவசரநிலைக் காலத்தில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அப்போது மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம், நாடாளுமன்றத்திலே ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் காவிரிப் பள்ளத்தாக்கு ஆணையம் (Cauvery valley authority) அமைக்கலாம் எனவும் அதை மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் மத்திய அரசின் பொறியாளரும் நிர்வகிப்பார்கள் என ஓர் யோசனையை வெளியிட்டிருந்தார். ஆனால், ஆகஸ்ட் 1978ல் நடைபெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அந்த யோசனையை  நிராகரித்து விட்டார்,

இனி என்ன செய்ய வேண்டும்?

காவிரியில் நமக்குள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், இது முடிவல்ல, துவக்கம். இனி செய்ய வேண்டியவை பல.

வரைமுறையின்றி ஆற்று மணல் அள்ளப்பட்டதால், ஆறுகள் பள்ளமாகி நிலங்கள் உயர்ந்து காணப்படுகின்றன. ஆற்றில் நீர் வந்தாலும் அவற்றை நிலத்துக்குள் பாய்ச்சுவது சிரமமாக இருக்கும். இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது அதிகரித்து வருகிறது. அதனால், அது வேளாண்மைக்குப் பயன்படாமல் போகும் ஆபத்து இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

காவிரியில் இன்னும் கதவணைகள் அமைக்கப்பட வேண்டும். இப்போதுள்ள கதவணைகளின் மதகுகள் செயல்படும் வண்ணம் சீர்படுத்தப்பட வேண்டும்.
பண்ணைக் குட்டைகள் அமைப்பதில் முழுமூச்சாக இறங்க வேண்டும்.

சீனத்தில் ஒரு ஏக்கரில் 6 முதல் 8 டன் நெல் விளைவிக்கிறார்கள். நாம் 2 டன் விளைவித்துக் கொண்டிருக்கிறோம். நீரைக் குறைவாகப் பயன்படுத்தி, விளைச்சலை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும்.

(இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் வெ.ஜீவகுமார் எழுதிய, ‘காவிரி-பிரச்சினையின் வேர்கள்’, எஸ்.குகன் எழுதிய, 'The Cauvery River dispute'  என்ற நூல்களில் இருந்து பெறப்பட்டவை).

குரல்கள்

தஞ்சை அ.இராமமூர்த்தி (மூத்த அரசியல்வாதி)
நான் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை  ஆரம்பத்திலிருந்து கவனிப்பவன் என்ற முறையிலும் அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியவன் என்ற முறையிலும் இந்த நிகழ்வை நமக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகக் கருதுகிறேன்.

இந்த வெற்றியில் தமிழக முதல்வரின் பங்கு மிக மிக முக்கியமானது. விடாமுயற்சியுடனும் விடாப்பிடியுடனும் பின்வாங்காமல், தொடர்ந்து முழுமூச்சாகப் போராடிய தமிழக முதல்வரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்."


பெ.மணியரசன் (தலைவர், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)
காலம் கடந்தாயினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதை செயல் படுத்தும் தன்னாட்சி அதிகாரமுள்ள அமைப்பை உருவாக்கவில்லை என்றால், இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவேண்டுமேயாயின் இப்போது தன்னாட்சி அதிகாரம் கொண்ட இரண்டு மாநிலத்தையும் சேராத அதிகாரிகள் கொண்ட காவிரி நீர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பு, தேர்தல் ஆணையம் போன்ற சுயாட்சிகொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். இந்த நாள் காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மிக மிக உன்னதமான நாள்."


பக்கிரிசாமி (தஞ்சை மாவட்ட செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கம்)
இதுவரை வெறுங்கையுடன் போராடிய நமக்கு, இப்போது போராடுவதற்கு ஓர் ஆயுதம் கிடைத்துள்ளது. இதனை முழுமையாக  கர்நாடகம் நடைமுறைப்படுத்தும் என்று நம்ப முடியாவிட்டாலும் சட்ட ரீதியாக அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இது உதவும்.

இதுவரை தொடையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருந்த மத்திய அரசால் இனி அந்த மாதிரியான வேலையில் ஈடுபட முடியாது.

இந்த நிகழ்வு மிகப் பெரிய திருப்புமுனை. விவசாயத் தொழிலை விட்டே வெளியேறிவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்த பல விவசாயிகளின் எண்ணங்களில் இந்த நிகழ்வு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இனி எப்படி சிக்கன நடவடிக்கைகளுடன் விவசாயம் செய்வது என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்."

வெ.ஜீவக்குமார் (வழக்கறிஞர், முன்னோடி விவசாயி, விவசாய சங்கப் பிரதிநிதி)
இந்த நாள் தமிழக  வரலாற்றில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய நாள். இனிமேல் மத்திய அரசால் பின்வாங்கவும் முடியாது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் முடியாது.

இனி, இப்போது கிடைத்துள்ள 192 டி.எம்.சி. எனும் இந்த குறைந்த அளவு நீரை வைத்து எப்படி நிறைவான விவசாயம் செய்வது என்ற தொழில் நுட்பத்தையும் நாம் கண்டுணர வேண்டும்."
- சு. வீரமணி (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

அரசிதழில் வெளியானதால் என்ன நன்மை?

நடுவர் மன்றத்தின் ஆணை, அரசிதழில் வெளியிடப்பட்ட 90 நாள்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தவுடன்-
  • கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைக்கட்டுகளும் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும். அதாவது எங்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைத்த பின்னர்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் தருவோம் என்றோ, ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் என்றோ கர்நாடகம் சொல்ல இயலாது.
  • இப்போதுள்ள காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவை கலைக்கப்பட்டுவிடும்.
  • அதற்கு பதில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை நெறிப்படுத்தும் குழு என்ற அமைப்புகள் உருவாக்கப்படும். இவற்றில் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.  இந்த இரண்டு அமைப்புகளும் மத்திய நீர்க்கமிஷனின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.
  • இதற்காக, நாடாளுமன்றத்தில் தனியாக ஒரு சட்டம் இயற்றப்படவேண்டியதில்லை. ஆனால், அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். திருத்தங்கள் கொண்டு வருவதோ, வாக்கெடுப்போ நடக்காது. அவைத் தலைவர் அனுமதித்தால் உறுப்பினர்கள் கருத்து சொல்லலாம்.
  • தமிழகத்திற்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி., கேரளத்திற்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., என காவிரித் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என ஆணை சொல்கிறது. வறட்சிக் காலத்தில் இதே விகிதாச்சாரத்தில் இருக்கும் நீர், பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
  • அது மட்டுமல்ல, மாதம் தோறும் எவ்வளவு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.
  • இந்த ஆணை முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டால், வேளாண்மைப் பணிகளைத் திட்டமிட்டு செய்ய முடியும்.
அது சரி, ஆனால். . .

1. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இதை எப்படி நடைமுறைப்படுத்தும்?

அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து, கர்நாடகம் நான்கு அணைகள் மீது அதற்குள்ள அதிகாரத்தை இழக்கிறது. எனவே, அந்த அணைகளைத் திறக்கவோ, மூடவோ அது உத்தரவிட முடியாது. தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமும் பொறுப்பும் மத்திய அரசின்கீழ் இயங்கும் ஓர் அமைப்பின் கீழ் வந்துவிடும். எனவே, இந்தக் கேள்விக்கே இடமில்லை.

2. காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மாற்றம் செய்ய முடியுமா?

தீர்ப்பு, அரசிதழில் வெளியான உடனேயே அந்த அமைப்பு செல்லாததாகி விட்டது. எனவே, அதன் தலைவரும் அதிகாரமிழக்கிறார்.

3. இந்தத்   தீர்ப்பு  எப்படி  நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஓர் அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதைக் குறித்தும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பு வெறும் காகிதம் எனத் தீர்ப்பே சொல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அது, மத்திய நீர்வளக் கமிஷனின்கீழ் இயங்கும். அதில் நான்கு மாநில பிரதிநிதிகளும் இருப்பர்.

இந்த அமைப்பை உடனடியாக உருவாக்க தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது. ஆனால், கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள காவிரி தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை இதை அமைக்கக் கூடாது எனச் சொல்லி வருகிறது. இந்த அமைப்பு ஏற்படுத்துவதை மத்திய அரசு தாமதம் செய்யலாம்  (கர்நாடகத்தில் மே மாதம் சட்ட மன்றத் தேர்தல். அங்கு காங்கிரஸ் முக்கியக் கட்சி). ஜெ, நீதிமன்றத்தை நாடலாம். இவ்வளவு தூரம் போராடியவர், இதை விட்டுவிட மாட்டார் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக