Powered By Blogger

சனி, 5 ஜனவரி, 2013


இவ்வாண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புகிறது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானுக்குப் பிறகு இச்சாதனையை செய்யப்போகும் தனிநாடு நம்நாடுதான்!

சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள் செவ்வாய். நாளை மனிதன் இன்னொரு கோளில் குடியேறவேண்டுமானால், அது பெரும்பாலும் செவ்வாயாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மிக மிகப் பெரியது. அதில் கோடிக்கணக்கான மாபெரும் நட்சத்திரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்று சூரியன். ஒருவிதத்தில் கொஞ்சம் சிறிய நட்சத்திரம் அது என்றுதான் சொல்லவேண்டும். அந்த நட்சத்திரத்தைச் சுற்றி எட்டு கோள்கள். அதில் ஒரு கோள் பூமி. இன்னொன்று, செவ்வாய். அந்த பூமியில் வசிக்கும் ஜந்துக்கள் நாம்.

பூமியில் மட்டும்தான் உயிர்கள் தோன்றுவதற்குச் சிறப்பான சூழ்நிலைகள் இருந்தன. சரியான வெப்பநிலை. நீர் என்ற வஸ்து ஏராளமாகக் கிடைக்கிறது. மேலே ஒரு ஆக்சிஜன் போர்வை. பூமியின் மேற்பரப்பில் கரி தொடங்கி, பல்வேறு தனிமங்கள். கரி, ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய நான்கு முக்கியமான தனிமங்களால்தான் உயிர்கள் சாத்தியமாகியுள்ளன.

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் என்ற துணைக்கோள் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. இந்தியா, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பி அதை ஆராய்ந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயான்-2 என்ற விண்கலத்தை அடுத்து அனுப்பப்போவதாக ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. அதற்கிடையில் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி மங்கல்யான் என்ற விண்கலத்தை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் 2012 ஆகஸ்ட் 15ம் தேதி தில்லி செங்கோட்டையிலிருந்து அறிவித்தார். அதற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வான்வெளிக்குக் கலங்களை அனுப்பி, தூரத்தில் உள்ள கோள்களை ஆராய்வதில் மிகப் பெரும் தாதா அமெரிக்காதான். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அறிவியல் தொழில்நுட்பப் போரிலும் ஈடுபட்டன. விண்ணுக்குக் கலங்களை அனுப்புவதில் சோவியத் யூனியன் முதலில் வெற்றி கண்டாலும், அமெரிக்காவின் பணத்துடனும் ஆராய்ச்சித் திறனுடனும் அவர்களால் நாளடைவில் போட்டி போட முடியவில்லை.

அமெரிக்கா, சந்திரனுக்கு ஆட்களையே அனுப்பியது. பின்னர் அனைத்துக் கோள்களையும் ஆராய, தனித்தனி விண்கலன்களை அனுப்பியது. இன்று நாம் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான விஷயங்கள், அமெரிக்க விண்கலங்கள் அனுப்பிய தகவல்களே.

மங்கல்யான் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்நேரம், அமெரிக்காவின் கியூரியாசிடி என்ற உலாவி, செவ்வாயில் இறங்கி சுற்றிக் கொண்டிருக்கிறது. அற்புதமான படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறது. சனிக் கோளை ஆராய்ந்துகொண்டிருக்கிறது காசினி. வியாழன் வழியாக புளூடோவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது நியூ ஹொரைசன்ஸ். ஆஸ்டிராட்ஸ் எனப்படும் விண்கற்களை ஆராய கிளம்பிச் சென்றுகொண்டிருக்கிறது ஜூனோ.

அமெரிக்கா செய்யாத எதனை இந்தியா செய்துவிடப் போகிறது?

இந்தியாவால் நிறைய செய்யமுடியும். முதலாவதாக, ஒரு கோள் என்பது மிகப் பெரிய பரப்பு கொண்ட ஒன்று. செவ்வாய் என்பது கிட்டத்தட்ட பூமியின் அளவை உடையது. இந்தப் பரந்த பூமியை ஒரே ஒரு காரில் ஏறிச் சென்று பார்த்துவிட முடியுமா? பல கோடி கார்களில் பயணம் செய்தாலும் பூமியின் சிறு பரப்பை மட்டுமே பார்த்திருப்போம். எனவே, செவ்வாயிலும் நிறைய செய்யலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத பலவற்றை இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியும். அப்படிச் சந்திரனில் நம்முடைய சந்திரயான்-1 செய்ததை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அடுத்து, இப்போதைக்கு உலகில் மிகக் குறைந்த செலவில் இதுபோன்ற செயல்களைச் செய்வதில் இந்தியாதான் முன்னணியில் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். எடை குறைந்த செயற்கைக்கோள்களை வானுக்கு அனுப்புவதில் இந்தியாவின் வல்லமையை ஏற்று, தம் செயற்கைக்கோள்களையே இந்தியாவிடம் கொடுத்து வானுக்கு அனுப்புகின்றன.

மங்கல்யானை அனுப்புவதால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் விஞ்ஞானிகளுக்கு வான்வெளிப் பயணத்தில் மேலும் அனுபவம் அதிகரிக்கும். இந்திய தொழில்நுட்பத் திறன் - முக்கியமாக ஊர்திகள் செய்தல், அவற்றை நீண்ட தூரத்திலிருந்து இயக்குதல், அவற்றைச் சரியான சுற்றுப்பாதைக்குச் செலுத்துதல், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம், சோலார் பேனல் தொழில்நுட்பம் எனப் பலவற்றிலும் ஆற்றல் பெருகும். இவை அனைத்தும் பின்னர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருள்களை மேம்படுத்த உதவும்.

இந்திய பல்கலைக்கழகங்களிலும் மத்திய மாநில அரசுத்துறை ஆராய்ச்சிக் கூடங்களிலும் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் பேராசிரியர்களும் இதன்மூலம் பெருமளவு சாதனைகளைப் புரிவர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யும் மாணவர்நிலை திட்டங்களில்கூட வானியல் துறையின் ஆதிக்கம் இருக்கும்.

அனைத்தையும் தாண்டி இந்தியர்களுக்கு மற்றுமொரு விஷயத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசிப் பெருமிதம் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இதற்குக் கொடுக்கும் விலையான 450 கோடி ரூபாய் மிக மிகக் குறைவு.

செவ்வாய்க்கு நாம் அனுப்பும் மங்கல்யான் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கப்போவதில்லை. வானிலிருந்து செவ்வாயை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கப்போகிறது. இதிலிருந்து ஓர் ஊர்தியை செவ்வாயில் தரையில் இறக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. சந்திரயான்-2 மூலமாக சந்திரனில் ஓர் ஊர்தியை இறக்கிப் பார்க்க இந்தியா முயற்சி செய்யும். அதற்கே இந்தியாவுக்கு ரஷ்யா அல்லது அமெரிக்காவின் உதவி தேவைப்படலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இந்தியா, அமெரிக்காவைத் தாண்டி வான்வெளியில் சாதனைகளைச் செய்யப்போவதில்லை. இது ஒன்றும் அமெரிக்காவுடனான போட்டியில்லை. இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஒரு சோதனை. இதுபோன்ற சிறு சிறு முயற்சிகளால்தான் நம் நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் பிற்காலத்தில் பெரும் பாய்ச்சலைப் புரியப் போகிறது.

சந்திரனுக்கோ, கோள்களுக்கோ விண்கலங்களை அனுப்பும் திறன் உள்ள ஒரே நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், ஜப்பான், சீனா, இந்தியா ஆகியவை. ஐரோப்பிய விண்வெளி மையமும் ஜப்பானும் இதுபோன்ற சோதனைகளில் இனி அதிகம் ஈடுபடப்போவதில்லை என்று தோன்றுகிறது. சோவியத் யூனியன் உடைந்தபிறகு ரஷ்யாவும் தனியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமெரிக்காவின் பட்ஜெட்டும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் சீனாவும் இந்தியாவும்தான் இந்தத் துறையில் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கும்.

இரு கரம் தட்டி நாம் வரவேற்கவேண்டிய திட்டம் மங்கல்யான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக