Powered By Blogger

சனி, 12 ஜனவரி, 2013


கூலிப்படையாக மாறிவரும்  இளைஞர்கள்


கூலிப்படைகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், கூலிப்படைகளாக செயல்படுவோர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது

ம் சிறைச்சாலைகள் கிரிமினல்களின் கூடாரங்களாக விளங்குகின்றன. கொலை வழக்கில் குற்றம்  சாட்டப்பட்ட ஒருவர், எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே சிறை அறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், 16 மணி நேரம் திறந்த வெளியில் (open yard)  சுதந்திரமாக உலவுகிறார். அங்கு எல்லா கிரிமினல்களும் சந்தித்துக்கொள்கிறார்கள். குழுக்களாக உருவாகிறார்கள். குற்றங்கள் தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அடுத்து நிகழ்த்தவிருக்கும் குற்றத்திற்கான திட்டங்களை வகுக்கிறார்கள். இத்தகைய சுதந்திரம் நம் சிறைச்சாலைகளில் இருக்கிறது’ -  என்பது அதிர்ச்சிக்கு உரிய செய்தி. இதைச் சொன்னவர் தமிழக காவல்துறையின் தலைவர் என்பது பேரதிர்ச்சிக்குரியது.

தமிழகத்தில் கூலிப்படையினரின் அட்டகா சங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், கூலிப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் மையங்களாகவும், பயிற்சி அளிக்கும் பாசறைகளாகவும் ஆகிவிட்டன சிறைச்சாலைகள். குற்றவாளிகளைச் சீர்திருத்துவதும், அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து நல்வழி காட்டுவதும் சிறைச்சாலையின் முக்கிய நோக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக இருக்கிறது நம்முடைய சிறைச்சாலைகளின் நிலைமை. குற்றச்செயல்களில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் ஒருவன், ஒரு முறை சிறைக்குள் சென்றால், பழுத்துப் போனவனாக வெளியே வருகிறான். அந்தளவுக்கு நம் சிறைச்சாலைகள் படுமோசமாக உள்ளன.

சாதாரண திருட்டு, அடிதடி, அறியாமையால் செய்த சிறு தவறுகள் தொடர்பான வழக்குகளில் (Petty cases),இளைஞர்கள் சிறைக்குச் செல்ல நேர்கிறது. ‘மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்’ என்கிற கோபத்தில் பல பெற்றோர் அவனைக் கைகழுவுகின்றனர்.

‘சிறைக்கு வந்துவிட்டோமே, பெற்றோர் நம்மை கைவிட்டுவிட்டனரே’ என்ற கவலையும் சோர்வும் உள்ளே வரும் இளைஞர்களுக்கு இருக்கும். அச்சமயத்தில் அவனைப் பழைய குற்றவாளிகள் தொடர்பு கொள்வார்கள். அவனிடம் ஆறுதலாகப் பேசுவார்கள். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள். அதெல்லாம் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும். பின்னர் அவனை ஜாமீனில் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வார்கள். ‘அப்பாவோ, அம்மாவோ நம்மை வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனா, நம்மளை ‘அண்ணன்’ ஜாமீன்ல எடுத்துட்டாரேன்னு ரொம்ப சந்தோஷப்படுவான். ஜாமீனில் எடுத்த நபரை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு நினைக்க ஆரம்பிப்பான்" என்கிறார், இத்தகைய சம்பவங்களை தினந்தோறும் பார்த்து வருகிற, திருச்சி மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.

 டிப்ளமோ முடித்த 22 வயதுடைய ஓர் இளைஞன், செல்போன் டவர் அமைக்கும் வேலையில் இருந்தான். அங்கு பேட்டரியைத் திருடி விட்டான் என்கிற குற்றச்சாட்டில் சிறைக்கு வந்தான். இங்கு நல்லபடியாகவே இருந்தான். பிறகு விடுதலையானான். இரண்டு மாதங்களில் அவன் மீண்டும் சிறைக்கு வந்தான். கேட்டதற்கு, தன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டுவிட்டதாகச் சொன்னான். இப்படியாக தொடர்ச்சியாக பொய் வழக்குப் போட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட அவனுக்கு பழைய கிரிமினல்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுக்கு கஞ்சாவைக் கொடுத்துப் பழக்கினர். வெளியே போகும்போது செலவுக்கு நிறையப் பணம் கொடுத்தனர். இப்போது அவன் கூலிப்படையாக செயல்படுகிறான்" என்கிறார், மத்திய சிறை ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர்.

வேறு எப்படியெல்லாம் கூலிப்படைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதை விசாரிக்கும்போது, அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் கிடைத்தன. அதில் ஒன்று...

இளம் வயதில் குற்றம் செய்து, சீர்திருத்தப்பள்ளிக்கு வரும் சிறுவர்களை விசாரணைக்காக சிறுவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம். அங்கு கூலிப்படைகளைச் சேர்ந்த சிலர் இருப்பார்கள். நாங்கள் அழைத்துச் செல்லும் சிறுவர்களை தொடர்ச்சியாக நோட்டமிடுவார்கள். பதினெட்டு வயது நிறைவடைந்தவர்களை பொதுவான சிறைகளுக்கு அனுப்பிவிடுவோம். அவர்களை அங்குள்ள பழைய குற்றவாளிகள் வசப்படுத்திக் கொள்வார்கள்" என்கிறார், கோவை மாவட்டத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.

முதலில் ஆறுதலாகப் பேசி, மூளைச்சலவை செய்கிறார்கள். பிறகு, கஞ்சா போன்ற போதை வஸ்துகளைப் பழக்குகிறார்கள். இவ்வாறு படிப்படியாக தங்கள் வலைக்குள் கொண்டு வந்து, கூலிப்படைக்கு இளைஞர்களைத் தயார் செய்கிறார்கள்.

ஒவ்வொரு கூலிப்படைக்கும் யாரோ ஒரு அரசியல் புள்ளியின் மறைமுக அரவணைப்பு உண்டு. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசியல்வாதிகளின் படுகொலைச் சம்பவங்களைக் கூர்ந்து நோக்கினால், அதில் கூலிப்படையினரின் தொடர்பும், அவர்களுக்குப் பின்னால் யாரோ ஓர் அரசியல் எதிராளிகளின் ஆதரவும் இருப்பது புலப்படும்.

எங்க பகுதியில கருவேல மரங்களை டெண்டர் எடுத்தா, பெரும் பணம் கெடைக்கும். உள்ளூரு அரசியல்வாதிங்கதான் டெண்டர் எடுப்பாங்க. டெண்டர் எடுக்கப் போறப்ப, எதிராளியை மிரட்டுறதுக்காக ஒரு கும்பல் வேணும். கிராமத்துல வேலையில்லாம இருக்கிற இளவட்டப் பசங்களை பத்துப் பதினைஞ்சு கார்கள்ல கூட்டிக்கிட்டுப் போவாங்க. எல்லாருக்கும் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிக் குடுப்பாங்க. இருநூறு ரூபாய் கூலியும் குடுப்பாங்க. டெண்டர் எடுக்கிற எடுத்துல பிரச்சினை வந்தா, அடிதடியில எறங்கணும். சில சமயத்துல கொலையில கூட முடியும். இந்த மாதிரி தொடர்ச்சியா போய்க்கிட்டிருந்த நிறையப் பசங்க, இப்ப கூலிப்படையில சேர்ந்துட்டாங்க" என்கிறார், சிவகங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெ.ராமச்சந்திரன்.

பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் ஃபீல்டுக்குப் போகிறார்கள். முப்பது வயதைக் கடந்தவர்கள் யாரும் ஃபீல்டுக்குப் போவதில்லை. டீல் பேசுவது, ஸ்கெட்ச் போடுவது, சம்பவத்துக்குப் பிறகு கொலையாளிகளைப் பாதுகாப்பது என்பது மாதிரியான வேலைகளை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். சிறைக்குள் ‘ஸ்கெட்ச்’ போட்டு வெளியில் ‘அசைன்மெண்ட்’டை முடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. உள்ளே இருந்துகொண்டு ஸ்கெட்ச் போடுவதன் மூலம் சிலர் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இது ஒரு பெரிய பிஸினஸ்போல நடப்பதாகச் சொல்கிறார்கள்.

தொடர்ந்து ராமச்சந்திரன் கூறுகையில், கூலிப்படையில பெரும்பாலும் ஜாதியாத்தான் ஒண்ணு சேர்றாங்க. அது எந்த ஜாதியா இருந்தாலும் சரி. அந்தந்த ஜாதிக்காரப் போலீசாரோட ஆதரவு இவங்களுக்கு இருக்கிறதாவும் தெரியுது. இன்னொரு பக்கம், ஜெயில்ல ஏற்படுற தொடர்புகள வச்சு பல ஊரைச் சேர்ந்தவங்க ஒரு டீமாக சேர்றாங்க. இந்த மாதிரியான நெட்வொர்க்கை கூலிப்படை தாதாக்களே உருவாக்கித் தர்றதாகச் சொல்றாங்க" என்கிறார்.

தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் விடுதியில் தங்கிப்படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூலிப்படையாகப் போவதாகவும் நமக்குத் தகவல் கிடைத்தது. காரணம். மோசமான விடுதி உணவுக்கு மாற்றாக அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. கைச்செலவுக்குப் பணமும் கிடைக்கிறது" என்கிறார், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் கூலிப்படையில் செயல்பட்ட ஒருவர்.

அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு செல்போனும் கூலிப்படையினருக்கு அத்யாவசியத் தேவையாகிவிட்டது. முன்பெல்லாம், அசைன்மெண்ட் முடிந்தவுடன் ஏற்கெனவே பயன்படுத்திய சிம்கார்டை மாற்றிவிட்டு, பழைய செல்போனையே பயன்படுத்துவார்கள். அதைவைத்துக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால், இப்போது புதிய முறையைக் கையாள்கிறார்கள். அசைன்மெண்ட்டுக்கு முன்பு பயன்படுத்திய செல்போன்கள் அனைத்தையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டு புது செல்போன்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த டெக்னிக்கை, சிவகங்கை அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன் கொலை வழக்கில், கூலிப்படையினர் கையாண்டதால், கொலையாளிகள் யாரென்பதைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசாரே திணறினர்" என்கிறார், சிவகங்கை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.

சமூக அமைதிக்கு உலை வைக்கும் இதுபோன்ற மோசமான நிலைக்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகக் காரணிகள் இருந்தாலும், சிறைச்சாலைகளை சரியாக நிர்வகித்தாலே இளைஞர்கள் திசைமாறிச் செல்வதையும் கூலிப்படை, ரவுடித்தனம் போன்ற சமூகவிரோதச் செயல்களையும் குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

300 கைதிகளைக் கண்காணிக்க ஒரு காவலர், ஒரு தலைமைக்காவலர் என இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். 300 பேரை இரண்டு பேரால் எப்படிச் சமாளிக்க முடியும்? கடந்த சில ஆண்டுகளில் என்னைப் போன்ற டிகிரி படித்த துடிப்பான, நேர்மையான இளைஞர்கள் சிறைப் பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால், நாங்கள் நேர்மையாகப் பணியாற்றுவதற்கு ஏற்கெனவே லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகள் தடையாக உள்ளனர்." என்கிறார், மேற்கு மாவட்ட மத்திய சிறைச்சாலை ஒன்றில் பணியாற்றும் தலைமைக்காவலர் ஒருவர்.

சிறு குற்ற வழக்குகளில் சிறைக்கு வரும் இளைஞர்கள், பழைய குற்றவாளிகளுடன் சேருவதால்தான் பெரிய குற்ற வாளிகளாக மாறுகின்றனர். அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

சிறு குற்றங்களில் தொடர் புடையவர்களை பெரிய குற்றவாளிகளுடன் சேர விடுவதால், கூலிப்படைகளை உருவாக்கும் ‘தொழிற்சாலை’யாக சிறைச்சாலை மாறுகிறது. போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் தனியாக வைக்க வேண்டும், மற்ற குற்றவாளிகளுடன் சேரவிடக்கூடாது என்ற விதி உள்ளது. எனவே, சிறு குற்றங்களை செய்தவர்களை பெரிய கிரிமினல்களுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம் குற்றவாளிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிற குற்றவாளிகளுடன் சந்திக்கவிடக்கூடாது" என்கிறார், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜு தாகூர்.

இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு சமூகக் காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், இக்குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறைக்கும் சிறைத்துறைக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு துறைகளின் செயல்பாடுகளும் சரியாக இல்லை என்பது வருத்தத்துக்குரியது. சிறைகளின் சூழலை முற்றிலுமாக மாற்றியமைத்து, சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். இன்னொருபுறம், குற்ற வழக்குகளின் விசாரணையை வெகு விரைவாக முடிக்க வேண்டும்" என்கிறார், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன்.

அக்கறையோடு ஆவன செய்யுமா அரசு?

ரவுடிகள் கணக்கு இருக்கு; கூலிப்படை கணக்கு இல்லை

சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தமிழக காவல்துறை தலைவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் 16,502 ரவுடிகள் இருப்பதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும் நெல்லை இரண்டாம் இடத்திலும் மதுரை மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில், தமிழகத்தில் செயல்படும் கூலிப்படைகளின் எண்ணிக்கை குறித்த விவரம் காவல்துறையிடம் இல்லை என்று டிஜிபி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக