Powered By Blogger

சனி, 12 ஜனவரி, 2013


புத்தாண்டு பலன்கள்


இந்தப் புத்தாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும். அண்மையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஓர் ஆரூடம்.

டீசல்
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால் டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட, பெட்ரோலிய அமைச்சகம் வழிவகைகளை யோசிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி லிட்டருக்கு 9 ரூபாய் 28 காசு நஷ்டத்தில் விற்கப்படும் டீசல்,  வரும் ஆண்டில்  மாதம் ஒரு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டு, பத்து மாதங்களில் பத்து ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. டீசல் விலையுயர்ந்தால், சரக்கு லாரியின் கட்டணமும் உயரும் என்றும் அதைத் தொடர்ந்து காய்கறி உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களுக்கான விலையும் உயரும் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

பரிகாரம்: காய்கறிகளுக்குப் பதில், ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடப் பழகுங்கள். டாஸ்மாக் நண்பர்களிடம் கேட்டால், ஊறுகாய் தொட்டுக்கொள்வது எப்படி எனச் சொல்லிக் கொடுப்பார்கள்.
 
மண்ணெண்ணெய்
டீசலைப் போன்றே மண்ணெண்ணெய் விலையும் அடுத்த  24 மாதங்களில் 10 ரூபாய் உயர்த்த, பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதுவும் ஏழைகள் பயன்படுத்தும் பொருள் என்பதால்தான் மாதத்துக்கு 42 பைசா வீதம் 24 மாதங்களில் பத்து ரூபாய் உயர்த்தப் படுகிறதாம். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப் படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது பெட்ரோலிய அமைச்சகம்.

பரிகாரம்: அடுப்புப் பற்ற வைக்காமல், சமையல் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.

ரயில் கட்டணம்
ரயில்வே துறையின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது ரயில்வே துறை. பயணிகள் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 5 காசு முதல் 10 காசு வரை உயர்த்தப் போகிறது. இதனால், 100 கி.மீ.க்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயரும். இந்தக் கட்டண உயர்வு மூலம் 4,000 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசு. சரக்கு ரயிலுக்கும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. ஆக, ரயிலில் வரும் சரக்குகளுக்கும் விலையுயர்த்தப்படும். அப்படியானால், அத்யாவசியப் பொருள்களின் விலையுயரும் என்பது நிச்சயம்.

பரிகாரம்: ஊருக்குப் போய் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால், ஒரு வாரத்திற்கு முன்பே பாதயாத்திரை புறப்பட்டு விடுங்கள். உடம்பிற்கும் நல்லது.
 
கேபிள் டி.வி.
தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக, கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக்கூடாது என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது. அதனால், அந்தத் துறையில் ஏகபோகம் தொடர வாய்ப்பிருக்கிறது. அரசு கேபிள் இல்லை என்றால், அவர்கள் வைத்ததுதான் விலை.

பரிகாரம்: அடுத்த வீட்டுக்காரர்களோடு வம்பளக்கப் பழகிக்கொள்ளுங்கள். அது டி.வி. சீரியல்களைவிட சுவாரஸ்யமாக இருக்கலாம்.
 
மின்சாரம்:
இந்த விலை உயர்வுகளையெல்லாம் சமாளிக்க உதவும் வகையில், உங்கள் மின் கட்டணம் உயராது. ஏனெனில், இன்னும் சிறிது காலம் மின்வெட்டு நீடிக்கலாம். மின்சாரமே இல்லையெனில், எலெக்ட்ரிக் பில் குறைவாகத்தானே இருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக