Powered By Blogger

சனி, 12 ஜனவரி, 2013


கருத்துக்கள் முக்கியமா? காலம் முக்கியமா?

‘எனக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்’

- தில்லியில் தேசிய வளர்ச்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீற்றம் மிகுந்த இந்தச் சொற்கள்  மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். ஆனால், அவை நியாயமற்றவை அல்ல.

ஏனெனில்- அவர் பேச முற்பட்ட விஷயங்கள் யாவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பானவை. அவற்றைக் காது கொடுத்துக் கேட்க மறுப்பது தமிழ் மக்களின் நலன்களைப் பற்றி  மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதன் அடையாளம்.

அவர் பேச முற்பட்டது என்ன?
  • Ž‘தமிழ்நாட்டில் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில்  (நெய்வேலி, கல்பாக்கம், வள்ளூர்)  ஆகியவற்றின் மொத்த உற்பத்தி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படலாம். ஓராண்டு காலத்திற்கான இடைக்கால ஏற்பாட்டு முறையாக மட்டுமே இது கேட்டுக் கொள்ளப்படுகிறது.இது நியாயமற்ற கோரிக்கையன்று. ஏனெனில், 1,000 மெகாவாட் உற்பத்தி செய்கிற மத்திய மின் உற்பத்தி நிலையம் ஆந்திரப்பிரதேசத்தில்   சிம்மாத்திரியில்   அமைந்துள்ளது. இதன் மொத்த மின் உற்பத்தியும் ஆந்திரப்பிரதேசத்திற்கே வழங்கப்பட்டு வந்துள்ளது’- இது அவர் வைத்த ஒரு கோரிக்கை.
  • Ž‘காவிரி நீர்த்தகராறு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் உரியவாறு வெளியிடப்படுவதையும், அதன்மூலம் அது செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதில், மத்திய அரசு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளது’ - அவரது குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல், சென்ற ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த மத்திய அரசு, இப்போது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கப் போவதாகச் சொல்லி தட்டிக் கழிக்கிறது. வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்காமலா உச்ச நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தார்கள்?
  • Ž‘தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடல் சார்ந்த  எல்லைப் பகுதியிலிருந்து தாக்கப்படாமல் தடுப்பதில் தோல்வியடைந்ததன் மூலம்  நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது’ - இது அவர் வைத்த மற்றொரு புகார்.

இவையெல்லாமே மத்திய அரசோடு தொடர்புடைய விஷயங்கள். இவற்றைக்கூட காது கொடுத்துக் கேட்க மத்திய அரசுக்கு அவகாசம் இல்லை என்றால், அது தமிழர்கள் நல்வாழ்வின் மீது காட்டப்படும் அலட்சியம் என்பதைத் தவிர வேறென்ன?   

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஆவணங்களை விவாதிக்க ஒவ்வொரு முதல்வருக்கும் பத்து நிமிடங்கள்தான் ஒதுக்கப்படும் என்பது வியப்பளிக்கிறது. அந்தப் பத்து நிமிடங்களில் ஒருவர் எந்தத் தலைப்பைக் குறித்து ஆழமாக அலசி ஆராய்ந்து கருத்து சொல்லிவிடமுடியும்? கூடுதலாக நேரமளித்தால், எல்லோரும் பேசி முடிக்க ஒருநாள் போதாது என்பது உண்மைதான். அப்படியான சூழலில் இரண்டு நாள் நிகழ்வாகக் கூட்டத்தை நடத்தக் கூடாதா? கருத்துக்கள் முக்கியமா? காலம் முக்கியமா?

அபிப்பிராயங்கள் அவசியம் இல்லை, எங்கள் ஆசாமிகள் எழுதிக் கொட்டியிருப்பதற்கெல்லாம் அனைவரும் ஆமாம் சாமி போட்டால் போதும் என எண்ணுகிறது அரசாங்கம். இது எஜமான மனோபாவம். மாநில அரசுகளைவிட மத்திய அரசு உயர்ந்தது என்ற பிரமையில் விளைந்த மமதை. மாநிலங்கள் இல்லை என்றால், இந்தியா என்பது இல்லை. இந்தியா என்பதே மாநிலங்களின் கூட்டமைப்புதான்.

மாநிலங்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டு, இந்தியா வளர்ந்துவிட முடியாது. மலர்கள் இல்லாமல் மாலைகள் இல்லை. நார் மட்டுமே ஆரம் ஆவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக